Nizhal Tharum Vasantham - 1 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | நிழல் தரும் வசந்தம் - 1

Featured Books
Categories
Share

நிழல் தரும் வசந்தம் - 1

அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து 2 வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் எல்லோரையும் போல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை. குடும்ப சூழ்நிலை பரவாயில்லை. தம்பி வேலைக்கு போகிறான். அவன் பார்த்து கொள்கிறான். அவன் டிப்ளோமா முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது. தானும் அளவாய் படித்திருக்க வேண்டும் என எண்ணினான்.ரொம்ப படித்தவர்களால்தான் நாட்டில் தொல்லை.சௌமியா வேலைக்கு போகிறாள். அவள் அப்பா பெரிய காண்ட்ராக்ட் கம்பெனி நடத்துபவர். அவர் நினைத்தால் வேலை கிடைக்கும் ஆனால் அதை அவன் விரும்பவில்லை.
தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட எவ்வளவோ முயன்றும் அது நேர்முக தேர்வில் வெளிப்பட்டு விடுகிறது.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் . எடுக்கவில்லை. அவள் வாழ்க்கையும் சேர்த்து கெடுக்கிறோமோ என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. காதல் அது ஒன்றுதான் குறைச்சல். இன்னும் இரண்டு நாட்களில் அவள் பிறந்த நாள் வருகிறது. அவளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும்.

மதியம் ஆகிவிட்டது இந்த வாரம் இன்டர்வியூ கூட இல்லை. ஊருக்கு போய் அப்பா,அம்மாவை பார்த்து வரலாமா என யோசித்தான். அதற்கு முன் சௌமியாவிடம் பேசி விட வேண்டும். இதை முடித்து விடலாம் என எண்ணினான். அவளும் இவனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சென்னையில் வேலை இல்லாமல் தாக்கு பிடிப்பது சிரமம் என்பதை அவளும் அறிவாள் . எங்கோ சுற்றிவிட்டு மாலை 5 மணி போல ரூமுக்கு வந்தான். சௌமியா கீழ் வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள் . இவனை பார்த்ததும் வெளியே வந்தாள் . என்னடா ஃபோன் எடுக்கலை என்றாள். சரி வா எனக்கு டிரஸ் எடுக்கணும் போகலாம் என்றாள். அதெல்லாம் வேண்டாம். நாம் பிரிந்து விடலாம் என்றான். என்னால சிரிப்ப அடக்க முடியலடா இதையும் நீ ரெண்டு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க. என்னை விட்டா உனக்கு யாரு கிடைப்பா ?

அது பெரிய மால் ஆக இருந்தது . சௌமியா மனதில் பெரிய கவலை ஏதுமில்லை. ஆனால் அப்பாவை நினைத்தால் கொஞ்சம் பயமாயிருந்தது. இருவருக்கும் தேவையான உடைகள் எடுத்தனர். அவன் நான் ஊருக்கு போலாம்னு இருக்கேன் என்றான். போயிட்டு வாயேன் என்றாள். இல்லே ஊருக்கே போயிடலாம்னு பார்க்கிறேன். இதெல்லாம் தப்பு. இப்போ என்ன உனக்கு வேலையில்லை அதனால எல்லாத்தையும் விட்டு போறேன்னு சொல்றது தப்பு. நீ போயிட்டு வா . நான் உனக்காக எப்பவுமே இருப்பேன் என்றாள். ஃபோன் பண்ணு அடிக்கடி என்றும் சொன்னாள் . இவன் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டே இருப்பவள் சௌமியாதான்.

இவனுடைய ஊர் ரொம்ப பெரிதும் கிடையாது ரொம்ப சின்னதும் கிடையாது. அது ஒரு டவுன். தேவையான வசதிகள் உள்ள ஊர். பிரேம் வீட்டுக்கு போன பொது இரவு 11 ஆகி விட்டிருந்தது. தம்பி தூங்கி கொண்டிருப்பான். அப்பா அம்மாவிடம் தகவல் சொல்லியிருந்ததால் முழித்து கொண்டு இருப்பார்கள். வாப்பா எப்படி இருக்க என்றாள் அம்மா. இருக்கேன்மா என்றான். ஏதாவது சாப்பிட்டாயா இரு தோசை ஊத்துகிறேன் என்றாள். நான் குளித்து விட்டு வருகிறேன் என்று உள்ளே போனான். அப்பா அவனை பெருமூச்சுடன் பார்த்தார். எப்படியெல்லாம் பார்த்து படிக்க வைத்தோம் என்றார். குளித்து விட்டு வந்த தோசையை சாப்பிட்டான். ரமேஷ் தூங்கிட்டானா. ம் அவனுக்கு வேலை அதிகம் என்றாள் .

சௌமியாவிடம் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. ஃபோன் பண்ணினான். என்னாச்சு போய் சேர்ந்து விட்டாயா என்றாள். ம் வந்து சேர்ந்து விட்டேன் நீ சாப்பிட்டாயா என்றான். ம் எப்பவோ ஆச்சு .. உன் பர்த்டே அப்போ என்னால நேர்ல விஷ் பண்ண முடியல சாரி என்றான். அதனால பரவாயில்ல. நீ என்ன வேணும்னா பண்ணினே இட்ஸ் ஓகே என்றாள். எப்போ திரும்பி சென்னை வருவே என்றாள். இன்னும் ஒரு வாரம். அப்போ ஓகே . வெளிநாடு போகலாம்னு ஒரு யோசனை என்றான். அதெல்லாம் வேண்டாம் நீ இங்கே இருக்கப்பவே என்னை அடிக்கடி மறந்து விடுகிறாய் வெளிநாடு போய் விட்டா இன்னும் சுத்தம் என்றாள். குட்நைட் சௌமியா லவ் யு என்றான். லவ் யு பிரேம் என்றாள்.


அவனுடைய அறை அதுதான் எவ்வளவு கலகலப்பாக இருக்கும் . ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரர்கள், அவனுடைய சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் இப்போது வளர்ந்து நல்ல வேலைக்கு போய் விட்டார்கள். இவன் தன்னுடைய அதிர்ஷ்டமின்மையை நினைத்து கொண்டான். தானும் முயற்சிகள் செய்யாமல் இல்லை எனவும் நினைத்து கொண்டான். சின்ன சின்ன வேலைகள் செய்தும் பார்த்தும் விட்டான். கொஞ்ச நாட்களிலேயே இவனுடைய படிப்பு அந்த வேலைக்கு உகந்ததில்லை என்று தெரிந்து போகிறது. ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இப்போது இல்லாமல் போய்விட்டது. ஊரில் இவனுக்கு பிடித்த இடம் லைப்ரரி தான். அது தரும் அமைதியை போல வேறேதும் அவனுக்கு தரவில்லை. அப்பா பெட்டி கடை வைத்திருந்தார்.இப்போதும் வைத்திருக்கிறார் பழையபடி வியாபாரம் இல்லையென்றாலும் ஒரு விதத்தில் குடும்பம் நடத்த அதன் வருமானம் உதவுகிறது.

அடுத்து வரும் சில நாட்களில் ஊரில் திருவிழா என்று பேசிக்கொண்டார்கள். தேர் திருவிழா ரொம்பவும் விசேஷம் . ஊரில் இருந்து சுபா வருவாள். அவளுக்கு போன வருடம் தான் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை பெங்களூர் தான். ஐ டி கம்பெனி யில் வேலை. அங்கேயே செட்டில் ஆகி விட்டாள். சுபாவோடு அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவள் அவ்வப்போது ஃபோன் செய்வாள். கோவிலுக்கு போய் வந்தான். கோவிலை சுற்றி சுற்றி போட்டோக்ரபி என்று அலைந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. அவனுடைய ஃப்ரெண்ட் கதிரேசன் உள்ளூர் செய்தி நிருபராக இருக்கிறான். அவன் இவன் வந்திருப்பது தெரிந்தால் சந்தோஷப்படுவான். அவன் நம்பர் இவனிடத்தில் இருந்தது.கதிரேசன் கொஞ்சம் பிஸியான ஆள் கூட.

சாயங்காலம் போல சுபாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தான். அவள் ஒரு மணி நேரம் கழித்து கால் பண்ணினாள் . என்னடா ஏன் நினைப்பு இப்போதான் வந்ததா?நாளைக்கு நான் ஊருக்கு வறேன்னு இன்னைக்கு கால் பண்ணுறியா ? அப்படியெல்லாம் இல்லை.. மதன் எப்படி இருக்காரு அவர் டூர் லேயே இருக்காரு.. என்னாச்சு உன் வேலை ? பெங்களூர் வாடா அப்படின்னா தயங்குற.. நாளைக்கு நேர்ல வந்து பேசிக்குறேன் என்றாள். அப்புறம் சௌமியா எப்படி இருக்கா ரொம்ப நாளாச்சு பேசி .. அவ நல்லாத்தான் இருக்கா. என கூட சேர்ந்து கஷ்டபடணும்னு அவ விரும்புறா என்றான்.ம் சரி நாளைக்கு மீட் பண்ணுவோம் என்றாள்.

பேசாமல் பெங்களூர் போய் பார்த்தால் என்ன என்று கூட தோன்றியது. சுபாவுக்கு வீணாய் தொந்தரவு என நினைத்தான். மணி இரவு 11 இருக்கும் கதிரேசன் ஃபோன் செய்திருந்தான். என்ன மச்சி இன்னும் நீ ஊரோடு ஒட்டாம இருந்தா எப்படி ரெண்டு ரவுண்டு போட வரலாம் ல என்றான் கதிரேசன். அதெல்லாம் வேண்டாம்பா நீ வேலை பாக்குற சேனல் எப்படி ? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. நெறைய படுத்துவானுங்க . எப்படியோ என் பிழைப்பு பொறுமையா இருக்கிறதுனால ஒடுது .சரிடா நாளைக்கு வீட்டுல வந்து பார்க்குறேன் என்றான். கதிரேசனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தன .

சுபா காலையிலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். மதியம் அவள் வீட்டுக்கு லஞ்ச்க்கு வந்து விட வேண்டுமென்று கட்டாயம் சொல்லிவிட்டாள். மதன் இந்த முறை திருவிழாவிற்கு வரவில்லையாம். ஏதும் குழந்தை விசேஷம் உண்டா என அம்மா கேட்டாள் . அவருக்கு அவரை பார்க்கவே நேரம் இல்லை இதுல என்னை எங்க பார்க்க நேரம் இருக்கு என்றாள்.தேர் திருவிழாவில் சுபாவுடன் உற்சாகமாக பங்கேற்றான் பிரேம்.இடையில் கதிரேசனையும் பார்க்க
தவறவில்லை. மதியம் சுபா வீட்டுக்கு போனான் . சுபா நீயும் உட்கார சாப்பிடு வா என்றான். இருக்கட்டும் எப்போ உன் கல்யாண சாப்பாடு போட போகிறாய் என்றாள். எனக்கே வேலையில்லை இதில் எங்கே ? என்றான். நான் மதன் கூட இப்போ இல்லை என்றாள். இவன் அதிர்ந்து போனான். என்னாச்சு சுபா ?அவள் முகம் வாடி போயிருந்தது.

அவன் வொர்க் டைமிங் ஒத்து வரல. நான் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேக்கல விவாகரத்து கேட்டிருக்கேன். நானும் வேலை தேடிட்டு இருக்கேன். இப்போ நீ அவன் கூட இல்லையா ? அவன் கூட சேர்ந்து இருக்க முடியாது . இப்போ நீ வந்தா நாம சேர்ந்து வேலை தேடலாம் என்றாள். சரி சுபா எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடு சௌமியாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன் என்றான். நீ சென்னைக்கு வாயேன் என்றான்.விவாகரத்து கேஸ் பெங்களூர்ல நடக்குரதால என்னால எங்கேயும் வார முடியாது. நீ தைரியமா இரு. நான் வேணா மதன் கிட்ட பேசி பார்க்கட்டுமா .. அதெல்லாம் வேண்டாம் அவன்கிட்ட நிறைய பேசி ஆச்சு. அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா. ம் தெரியும். மனசே சரியில்லை சுபா. மதன் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல. சரி சுபா நான் அப்புறமா ஃபோன் பண்ணுறேன் என்றான்.

வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம் சுபா விஷயத்தை சொன்னதும் அவளும் ரொம்ப வருத்தப்பட்டாள். சௌமியா எதுவும் நினைக்க மாட்டாள் ஆனால் அவளை பிரிந்து பெங்களூர் போவதென்பதற்கு ஒத்து கொள்வாளா ?கொஞ்ச நாள் தானே சுபாவிற்கு ஒரு வேலை கிடைத்தவுடன் சென்னை வந்து விடலாம் என நினைத்தான். மதனிடம் இருந்து ஃபோன் வந்தது. என்ன பிரேம் எப்படி இருக்கீங்க ? நான் நல்லா இருக்கேன் நீங்க என இழுத்தான். எல்லாம் சுபா சொல்லி இருப்பா .. அவ சொல்லுறா அப்படின்னு உங்க நேரத்தை வீணாக்காதீங்க.. உங்களுக்கு வேணும்னா வேலை அரேஞ்ச் பண்ணி தரேன் என்றான். அதெல்லாம் பரவாயில்லை மதன். நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து இருந்தா போதும். அதுக்கு வாய்ப்பில்லை.. நான் அப்புறம் பேசறேன் என போனை வைத்து விட்டான்.

சுபாவும் இவனும் பெங்களூர் செல்ல டிக்கெட் புக் செய்தனர். சௌமியா நானும் பெங்களூர் வருவேன் என அடம் பிடித்தாள் . ஒரு 3 மாசம் டைம் குடு சௌமியா அதற்குள் நிலமை சரி ஆகிவிடும். நாம் கல்யாணமே செய்து கொள்ளலாம் என்றான். நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது . சரி பிரேம் 3 மாதம் தான் அதற்கு மேல் என்னால் உன்னை பிரிந்திருக்க முடியாது. பெங்களூர் இவனுக்கு அறிமுகமில்லாத ஊர். சுபாவுக்கு கன்னடம் தெரியும். அவளுக்கு எளிதில் வேலை கிடைத்து விடும். எப்படியும் இந்த பயணம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான் பிரேம். ஆனால் விதி அவனுக்காக காத்து கொண்டிருந்தது.