8. யூரோப்பா
5000 வருடங்களுக்கு முன்பு, கிரேட்டா தீவில் ஒருநாள்,
யூரோப்பா தன் அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டை விட்டு வந்து ஆறு மாதங்கள் ஆகிப் போனதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்போதும் அவளிடம் துடுக்குத் தனமாக பேசும் அண்ணனிடம் பேசி ஆறு மாதங்கள் ஆகிறது. கேட்பதையெல்லாம் கேட்பதற்கு முன்னரே தரும் தந்தையைப் பார்த்தே ஆறு மாதங்கள் ஆகிறது. இவர்களுக்கு கூட தான் எப்படி அவர்களை விட்டு நீங்கினாள் என்பது தெரியும் ஆனால், அவள் மாளிகையில் அவள் வளர்த்துக் கொண்டிருந்த அன்னப் பறவை அவளது இன்மையை எப்படி புரிந்திருக்கும்.
இந்த அரண்மனைக்கும் இந்த தீவிற்கும் அவள் தான் அரசி, ஆனால், அது அவளுடையதைப் போல அவளால் உணர முடியவில்லை. இந்த இடமும் இந்த அரண்மனையும் அவளது கணவன் ஜீயூஸுடையது. அவன் தான் அவளைக் காதலிப்பதாக சொன்னான். அவன் தான் அவளை தான் திருமணம் செய்து கொள்வதாக சொன்னான். இந்த தீவிற்கு அரசியாக மாற்றினான். வயிற்றில் இப்போது அவனது குழந்தை வளர்கிறது. இவையனைத்தையுமே அவன் தான் கொடுத்தான். ஆனால், தனக்கு இது வேண்டுமா என்று அவன் ஒருமுறை கூட கேட்கவில்லை.
தன்னைத் தேடி தன் அண்ணன் ஒவ்வொரு தீவாக ஒவ்வொரு தேசமாக அழைந்து கொண்டிருக்கிறான். ஆனால், அப்படி அழையும் போது கூட உடன் கவிஞர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறான். இந்த ஆறு மாதத்தில் அவன் பல புதிய நிலங்களை கண்டறிந்திருக்கிறான். அதைப் பற்றிய பல பாடல்களை அவள் ஏற்கனவே கேட்டு விட்டாள். ராஜ வம்சத்தினர் குசு போட்டால் கூட அதைப் பாடுவதற்கும் அங்கொரு புலவன் இருப்பான்.
ஒருவேளை தன்னைத் தேடி வருகின்ற போது, அவன் கண்டறிந்த நிலங்களுக்கு தன் பெயரை அவன் வைக்கக்கூடும் என்று அவள் எண்ணிய போது, அவளையும் மீறி அவள் உதட்டில் புன்னகை வந்தது. அவள் எதிரே இருந்த கடல் நிதானமாக அடித்துக் கொண்டிருந்தது.
திடீரென அவள் வாழ்வை முழுவதுமாக மாற்றிய அந்த நாள் நினைவிற்கு வந்தது. ஃபீனிஸியா நாட்டின் அரசன் ஏகனாரின் செல்லப் புதல்வியாக அவளுடைய நாட்டில், அவளுடைய கடற்கரையில் தன் மெய்க்காப்பாளர்கள் அவளைச் சூழ்ந்திருக்க அன்று அவள் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். மதியத்தின் வெயில் கடலில் பட்டு மின்னியது. கடற்கரை முழுக்க சுற்றி புதுப்புது மலர்களை சேகரித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த தென்னை மரத்திற்கு அடியில் இருந்த புதரில் ஒரு கடல் ரேஜா பூத்திருந்தது. அதைப் பறிக்கலாமென்று அவள் சென்ற நேரத்தில் அவளது தோழிகள் கூச்சலிடுவது கேட்டது. அவள் திரும்பி பார்த்த போது, ஒரு அழகிய வெள்ளை நிற எருது நின்று கொண்டிருந்தது. அந்த மதிய வெயிலில் அது ஒளிர்வது போலத் தோன்றியது. அனைவரும் அந்த எருதைத் தடவிக் கொண்டிருந்தனர்.
யூரோப்பா அந்த எருதின் அருகே சென்றாள். வழக்கமாக எந்தவொரு எருதின் உடலிலும் வருகிற வியர்வை வாசனையோ சாணி வாசனையோ அந்த எருதின் மீதிருந்து வரவில்லை. அந்த எருதின் உடலிலிருந்து நல்ல சுகந்தமான வாசனை வந்தது. அவள் அதை ஆசையாக தடவிப் பார்த்தாள். அவள் அதைத் தொட்டதும், அது அவள் பக்கம் தலை சாய்த்து தன் நாவால் அவளை நக்கியது.
“இந்த மாட்டுக்கு உங்களைத் தான் பிடிச்சிருக்கு இளவரசி.” என்று சொன்னாள் ஒரு தோழி.
“மாட்டுக்கு கூட இங்க இருக்கிறதுல்ல யாரு அழகுன்னு தெரிஞ்சிருக்கு பாரேன்.” என்று சொன்னாள் அந்த நாட்டின் தலைமை அமைச்சரின் மகள். ராஜ வம்சத்தினரிடம் எப்படி பேசுவதென்று அவள் தன் தந்தையிடமிருந்து கற்றிருந்தாள்.
“ச்சீ…சும்மா இருடீ” என்று சொன்ன படி அந்த மாட்டின் திமிலைத் தடவிக் கொடுத்தாள் யூரோப்பா.
அவள் கொஞ்ச நேரம் அந்த மாட்டைத் தடவியதும், அந்த மாடு அவளை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்று தாவிக் குதித்தது. அது அவளை மகிழ்விக்க விளையாட்டு காட்டுகிறதென்பதை அவளும் அவளது தோழிகளும் புரிந்து கொண்டனர். அது அவர்களுக்கு இன்னும் வேடிக்கையாய் இருந்தது. அந்த மாடு அவர்களது இளவரசியை தாக்காமல் இருக்கும் பொருட்டு அவளது மெய்க்காப்பாளர்கள் அவளுக்கு மிக அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். ஒருவேளை அந்த மாடு இளவரசியை தாக்க நினைத்தால், ஒரே ஒரு ஈட்டி வீச்சில் அந்த மாட்டைக் கொன்று விடத் தயாராக இருந்தனர்.
“இளவரசி இந்த மாட்டின் மீது அமர்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டாள் ஒரு தோழி.
“உட்கார்ந்து பார்க்கலாம். வேடிக்கையாக இருக்கும்” என்றாள் இன்னொரு தோழி.
“அப்படியென்றால் முதலில் நம் இளவரசி தான் அமர வேண்டும்.” என்றாள் அந்த அமைச்சரின் மகள்.
“நான் மாட்டேன். எனக்கு பயமாக இருக்கிறது.” என்றாள் யூரோப்பா.
“ஒன்றும் பயப்படாதீர்கள் இளவரசி. உங்களைச் சுற்றி இத்தனைப் பேர் இருக்கிறோம். போதாக் குறைக்கு இத்தனை வீரர்கள் இருக்கிறார்கள். தைரியமாக இந்த மாட்டின் மீது ஏறி அமருங்கள்.” என்று சொன்னாள் அமைச்சரின் மகள்.
“இல்லை. நான் ஏற மாட்டேன்.” என்றாள் இளவரசி.
அப்போது அமைச்சரின் மகள், இளவரசியின் அருகே சென்று, “இளவரசி நாளை நீங்கள் பேரரசியாக ஆகப் போகிறவர். இப்போது, நீங்கள் இந்த காளை மாட்டைப் பார்த்து பயப்பட்டதை இங்கிருக்கிற நம் தோழிகள் வேறு யாரிடமாவது சொல்லிவிட்டால், பின் உங்கள் வார்த்தைகளுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள். உங்களுக்கு எதுவும் ஆகாமல், நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக இந்தக் காளை மாட்டின் மீது ஏறுங்கள்” என்று சொன்னாள்.
எதிர்காலத்தில் தன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற பயந்ததாலும், இப்போது அவளைக் காப்பாற்ற ஆள் இருப்பதாலும், அவள் தைரியமாக அந்தக் காளை மாட்டின் முதுகின் மீது ஏறி அமர்ந்தாள். அவள் ஏறிய சில நிமிடங்களுக்கு அந்தக் காளை மாடு மிகுந்த சாதுவாக நடந்து கொண்டது. அங்கும் இங்கும் மெல்ல நடந்து காட்டியது. யூரோப்பா அந்தக் காளை மாட்டின் கொம்பைப் பிடித்துக் கொண்டாள். அந்தக் காளை மாடு மெல்ல தாவித் தாவிக் குதித்தது. யூரோப்பா தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காளை மாட்டால் எந்த பயமும் இல்லையென்று எல்லோரும் சற்று தளர்வாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அந்தக் காளை மாடு, வேகமாக கடலை நோக்கி ஓடத் தொடங்கியது. வீரர்களும் தோழிகளும் சுதாரிப்பதற்குள் அந்த மாடு கடலில் இறங்கியது. கடல் நீர் பட்டு யூரோப்பாவின் ஆடைகள் நனையத் தொடங்கின. அவள் பயத்தில் அந்தக் காளை மாட்டின் கொம்புகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அந்தக் காளை தொடர்ந்து கடலுக்குள் ஓடியது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தாள். இனி அவ்வளவு தான், தான் மூழ்கப் போகிறோம் என்று அவள் நினைத்த நொடியில், அவள் முழுவதுமாக மூழ்காமல் அந்தக் கடலில் மிதக்கத் தொடங்கினாள். அப்போது தான் அவள் ஒன்றைக் கவனித்தாள் அந்தக் காளை மாடு கடலில் நீந்திக் கொண்டிருந்தது.
அவர்களைத் துரத்திக் கொண்டு அவளது மெய்க்காப்பாளரும் அவளது வீரர்களும் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினர். ஆனால், அதற்குள் அந்தக் காளை மாடு நீண்ட தூரம் சென்று விட்டது. அந்த வீரர்களால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை. யூரோப்பா பயத்தில் அந்தக் காளை மாட்டின் கொம்புகளைப் பிடித்தபடி மயங்கி விட்டாள்.
அவள் கண் விழித்துப் பார்த்த போது, அவள் இந்தத் தீவில் இருந்தாள். அவள் முன் அவளைக் கடத்தித் தூக்கி வந்த அந்த வெள்ளை நிற எருது நின்று கொண்டிருந்தது. அவள் என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் அந்த எருது சட்டென மனித உருவத்திற்கு மாறியது.
அந்த எருது இரண்டு கால்களில் எழுந்து நின்றதும், அதன் முன்னங்கால்கள் இரண்டும் கைகளாகவும், பின்னங்கால்கள் இரண்டும் கால்களாகவும் மாறின. அதன் வால் மறைந்து, அதன் தலையிலிருந்த கொம்புகள் இரண்டும் அதன் தலைக்குள் மறைந்த பின்னர் தான், மனித உருவில் இருப்பவன், எப்படிப்பட்ட பேரழகன் என்பதைப் பார்த்தாள்.
பார்த்தவுடன் வசீகரிக்கும் சதுர வடிவ முகம், மெல்ல அரும்பிய மீசை. ஆறாடிப் பளிங்கை எடுத்து பார்த்து பார்த்து செதுக்கியது போல அடுக்கடுக்காய் முறுக்கேறிய உடல். அவன் முகம் இப்போதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவள் தன் தலைமுடியில் வழியும் தண்ணீருடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“யார் நீ? எதுக்காக நீ என்னை இங்க தூக்கிட்டு வந்த?”
“யூரோப்பா என் பேரு ஜீயூஸ். நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ இல்லாம என்னால வாழவே முடியாது. அதனால உன்னை என் மனைவியா மாத்திக்கவும், இந்த தீவுல என்னோட அரசியா வைச்சுக்கவும் தான் உன்னைத் தூக்கிட்டு வந்தேன்.”
‘ஆகா, எப்பேற்பட்ட காதல் மொழிகள்? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்கலை, உன் வீட்டை விட்டு இந்தத் தீவுல இருக்க நீ தயாரான்னு கேட்கலை, அதுக்குள்ள என்னை மனைவியாக்கனும்னு சொல்றான். அவ்வளவு பெரிய அரண்மனையில இளவரசியா இருந்த என்னை இந்த தீவுல அவனுக்கு அரசியா இருக்கணும்னு கேட்கிறான். எவ்வளவு இனிமையானவன்? இவனைக் கொன்னுட்டு இங்க இருந்து தப்பிக்க முடியுமா’ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்,
‘இவளுடைய கிரகத்தில் ஆண்கள் எல்லோரும், தங்களுக்குப் பிடித்த பெண்ணை தலையில் அடித்து குகைக்கு தூக்கிச் செல்வதைப் பற்றி தானே படித்திருக்கிறோம். ஒருவேளை தான் இவ்வளவு இனிமையாக இருப்பதை இவள் விரும்பவில்லையா?’ என்று அவன் யோசிக்கத் தொடங்கினான்.
அங்கிருந்து தப்பிக்க வேறு வழியின்றி அவள் அவனுடனேயே வாழ ஒத்துக் கொண்டாள். அவள் கருவுற்ற மூன்றாவது மாதம், ஒரு முக்கியமான வேலையாக தான் அந்த தீவை விட்டுப் போக வேண்டுமெனவும் விரைவிலேயே வீடு திரும்புவேன் என்றும் கூறிவிட்டு ஜீயூஸ் அவளை நீங்கிச் சென்றான். அவன் சென்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்காக கடலைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்தாள். காதல் இல்லையென்ற போதும், அவனிடம் கேட்க வேண்டிய கேள்வியொன்று அவளிடம் இருந்தது. அந்தக் கேள்விக்காகவே அவள் அவனுக்காக காத்திருந்தாள்.
அவள் அவனுக்காக காத்திருந்த அன்று அவர்களது தீவை நோக்கி பெரும் வெள்ளைப் பாய் மரங்களை விரித்த படி, ஒரு கப்பல் வருவதைக் கண்டாள். தூரத்திலேயே அந்தக் கப்பலில் ஜீயூஸ் வருவதை அவள் கண்டு கொண்டாள். ஜீயூஸும் அவளைக் கப்பலிலிருந்தபடி பார்த்தான். அந்தக் கப்பலில் இருந்தபடியே சட்டென்று கழுகாக மாறி கப்பலிலிருந்து எழுந்து வானில் பறந்து அவளை நோக்கி வந்தான். மாடத்தில் நின்று கொண்டிருந்த அவளிடம் வந்து, கழுகிலிருந்து மீண்டும் மனிதனாக மாறி அவளைக் கட்டிக் கொண்டான்.
“போன வேலை முடிந்ததா?” என்று கேட்டாள் யூரோப்பா.
“நல்ல படியாக முடிந்தது. உன்னைப் பார்க்காமல் தான் மிகவும் ஏங்கி விட்டேன்” என்றான் ஜீயூஸ்.
“என் விரதம் முடிக்க நீ தான் என் விருந்து.” என்று சொன்னபடி அவளைக் கட்டியணைத்துக் கொண்டு படுக்கைக்கு சென்றான்.
அந்த அறைக்குள் சென்றதும், அவர்களது கட்டிலில், ஜீயூஸுடைய விண்வெளி கவச உடைகளை அவள் பரப்பி வைத்திருந்தாள்.
தான் இத்தனை நாளாக மறைத்து வைத்திருந்த உண்மையை அவள் கண்டு விட்டதை எண்ணி ஜீயூஸ் பதறினான். இப்போது, இதற்கு எப்படி அவளிடம் பதில் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போது,
“நீங்கள் எப்போதும் என் விருப்பம் பற்றி கவலைப் பட்டது கிடையாது. பூமியில் இருக்கிற அத்தனைப் பெண்களைப் போலவே நானும் அதைப் பற்றி கவலைப் பட்டது கிடையாது.
நீங்கள் இந்த பூமியை சேர்ந்தவர் இல்லை என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. நீங்கள் இந்த தீவை நீங்கிய பின்பு உங்கள் அறையை சுத்தம் செய்த போது, நீங்கள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த இந்த ஆடையை நான் கண்டறிந்தேன்.
என்னை நீங்கள் உங்கள் துணை என்று நினைத்தாள் உங்களைப் பற்றிய உண்மையை சொல்லுங்கள். இல்லை, உங்களது விந்தை கொட்டுகிற ஒரு உடல் மட்டும் தான் நான் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். என்னை இப்போதே நீங்கள் விருந்தாக்கிக் கொள்க.” என்று சொன்னபடி யூரோப்பா தன் ஆடைகளை அவிழ்த்தாள்.
அவள் அவிழ்க்கத் தொடங்கிய ஆடையைப் பிடித்த படி ஜீயூஸ் தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அவளிடம் சொன்னான்.