9. திருச்செந்தாழை
அன்று ஒட்டுமொத்த நகர காவல்துறையும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தது. காற்றில் அங்கு பரபரப்பு பரவியிருந்தது. அதற்கு காரணம் திரு. விஜயேந்திரப் பிரசாத்.
விஜயேந்திரப் பிரசாத் அந்த நகரில் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே பெரிய தொழிலதிபர். தனக்கென சொந்தமாக சுரங்கங்கள், மின் நிலையங்கள் எல்லாம் வைத்திருப்பவர். இது போதாது என்று தனக்கென சொந்தமாக ஒரு துறைமுகம் வேண்டுமென தனது நண்பர்களான அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி எத்தனையோ அடையாளங்கள் இருப்பினும், இரண்டாம் அத்தியாயத்தில் மாயாவை தொட நினைத்து சிலையாக மாறிப் போன அயோக்கியனின் தந்தை என்று சொன்னால் நமது வாசகர்களால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் திடீரென அவர் நகரின் கமிஷ்னர் ஆஃபிஸ்ஸிற்கு வந்தார்.
"கமிஷ்னர், என் பையன் ஹரீஷைக் காணோம். நேத்து நைட்டுல இருந்து அவன் வீட்டுக்கு வரல. எங்க போனாலும் அவன் எனக்கு ஃபோன் பண்ணாம இருக்க மாட்டான். ஆனா, அவனை நைட்டுல இருந்து ரீச் பண்ண முடியல. யாராவது கடத்தி இருப்பாங்களோன்னு பயமா இருக்கு. அவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க" என்றார் விஜயேந்திரன்.
விஜயேந்திரனின் பேச்சில் பயம், படபடப்பு, பாசம், தவிப்பு இவையெல்லாம் சேர்ந்து ஒரு 60% இருந்தது. ஆனால், அதிகாரம் மட்டும் தனியாக 40% இருந்தது. ஆனால், கமிஷனரால் அந்த அதிகாரத்தை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. அது போக விஜயேந்திரன் நினைத்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் தற்போதைய கமிஷ்னரின் பதவி உயர்வை இன்னும் சில காலத்திற்கு தள்ளிப்போட முடியும். அதனைக் கமிஷனர் விரும்பவில்லை. அதனால், அவர் நகரில் உள்ள மொத்த காவல் படையையும் ஹரீஷைத் தேட முடுக்கி விட்டார்.
ஆனால், அவர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து தேடியும் அவர்களால் ஹரீஷைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு இருக்கிற போதைப் பழக்கத்திற்கும் பெண் சகவாசத்திற்கும் அவன் எங்கு போயிருப்பான் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை.
"இவன் போடுற போதைக்கும் ஊசிக்கும் இவன் மட்டும் காணாம போகாம இருந்திருந்தான்னா, இவனே ஓவர் டோஸ்ல ஒரு நாள் செத்துப் போயிருப்பான். போதைத்தாய்ளி எங்கேயோ தொலைஞ்சுப் போயி நம்ம தாலியை அறுக்கிறான்." என அடிமட்டக் காவலர்கள் இருவர் பேசிக்கொண்டனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து தேடுதல் நடந்தும், ஹரீஷின் நண்பர்கள், எதிரிகள், அவன் போய் வந்தப் பெண்கள் என பலரிடம் விசாரித்தும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. கவலை பூசிய முகத்துடன் விஜயேந்திரன் கமிஷ்னர் முன் அமர்ந்திருந்தார். ஆனால், இப்போது எந்த அதிகாரமும் இல்லை வெறும் பரிதவிப்பு தான் இருந்தது.
கமிஷ்னர் இன்டர்காமில் அழைத்து இரண்டு கோப்பை காஃபியை வரவழைத்தார். விஜயேந்திரன் எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட காஃபியை தான் அருந்துவார். ஆனால், அன்று புத்திர சோகத்தில் அந்த லோக்கல் காஃபியை குடிக்கத் தொடங்கினார்.
கமிஷ்னருக்கும் அப்போது அந்தக் காஃபி மிகவும் தேவையாய் இருந்தது. இந்த வழக்கை அவர் எப்படியாவது முடிக்க வேண்டும். ஆனால், அவரது அதிகாரிகளின் ரிப்போர்ட்டின் படி இது பணத்திற்காகவோ அல்லது தொழிற் போட்டிக்காகவோ நடந்திருந்தாலோ, அல்லது விஜயேந்திரனை மிரட்ட அல்லது பழி வாங்க அவரது மகனைக் கடத்தியிருந்தாலோ, இந்நேரத்திற்கு ஒரு சின்ன தொலைபேசி அழைப்பேனும் வந்திருக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் வரவில்லை. எனவே, இந்தக் கடத்தல், ஹரீஷை பழிவாங்க அல்லது தண்டிக்க நடந்திருக்க வேண்டும். யாரோ ஒரு பொது ஜனம் தான் இதனைச் செய்திருக்க வேண்டும்.
ஆக, ஹரிஷை அவன் செய்த பாவங்களுக்காக யாரேனும் கடத்தியிருந்தால், அவர் யாராக இருப்பினும் அவனது முழு உடலையும் சிதைக்காமல் தர மாட்டார்கள். எனவே, ஹரீஷை இனி கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே அவன் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் உயிரோடு இருக்க கொஞ்சம் கூட வாய்ப்பில்லை.
இதனைக் கமிஷ்னர் விஜயேந்திரனிடம், எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார்.
விஜயேந்திரன் ஏதோ இப்போது அவரது அதிகார முகமூடியை கழட்டி வைத்திருக்கிறான். ஆனால், எப்போது வேண்டுமானாலும் அதனை மாட்டிக்கொண்டு கமிஷ்னருக்கு குடைச்சலைக் கொடுக்கத் தொடங்குவான்.
அதனால், கமிஷ்னர் ஒரு சூழ்ச்சியைக் கையாண்டார். விஜயேந்திரப் பிரசாத் ஒரு அதிகார வெறி பிடித்த சைக்கோ, அவனுக்கு இணையான சைக்கோ போலீஸ் டிபார்ட்மெண்ட்லேயே இல்லை. அதனால், அவனை வேறு விதமாக கையாள முடிவு செய்தார்.
"சார், டிபார்ட்மெண்ட் சைட்ல இருந்து என்ன பண்ணனுமோ,பண்ணிட்டு தான் இருக்கோம். மொத்த போலீஸ் ஃபோர்ஸ்ம் உங்க பையனைத் தான் தேடிட்டு இருக்கு.
ஆனா, இப்போ வரைக்கும் ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கலை. உங்க பையனோட ஃப்ரண்ட்ஸ், எதிரிகள்ன்னு நிறையா பேர் கிட்ட விசாரிச்சுட்டுத் தான் இருக்கோம். ஆனா, அந்தப் பசங்களும் உங்க பையனை மாதிரியே பெரிய இடத்து பசங்க. அதனால அவங்கள ரொம்ப விசாரிக்க முடியல. அந்தப் பசங்கள நெருங்க நெருங்க எங்களுக்கு ப்ரஷர் கொடுக்குறாங்க. ஆனா, போலீஸ்ங்கிறது ஒரு ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்குள்ள வர சிஸ்டம். அதனால, ஒரு அளவுக்கு மேல போலீசால ரூல்ஸை மீறி எதுவும் பண்ண முடியாது. சார். "
"என்ன, கமிஷ்னர் இப்படி சொல்றீங்க? அப்போ என் பையனை கண்டுபிடிக்க முடியாதா?"
"ஐயோ, சார் நான் அப்படி சொல்லல. போலீசால கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு தான் சொல்றேன்."
விஜயேந்திரன் புரியாமல் கமிஷ்னரைப் பார்த்தார்.
"சார், இங்க உள்ள போலீஸ்ல பல பேரு வெறும் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்றவங்க. இந்த மாதிரி கேஸை விசாரிக்க ஒரு அசாத்திய பேஷன் வேணும். எந்த ரூல்ஸையும் மதிக்காத ஒரு முரட்டு ஜீனியஸ் தனம் வேணும்.
அதுக்கு எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆள் இருக்கான்"
"யார், கமிஷ்னர் நான் உடனே அவரைப் பாக்கணும் வரச் சொல்லுங்க."
"அதுல ஒரு பிரச்சினை இருக்கு சார். அவன் யாரையும் போய்ப் பாக்க மாட்டான். நாம தான் அவனைப் போய் பாக்கணும்."
"நான் கூப்டா கூடவா?" என்றான் விஜயேந்திரன்.
"சி.எம். ஏ கூப்டாக் கூட அவன் போய்ப் பாக்க மாட்டான் சார்."
"அப்படி யார் கமிஷ்னர் அவ்ளோ திமிர் பிடிச்சவன்?"
"சார், அவன் திமிர் பிடிச்சவன் தான், ஆனா, அவன் ரொம்ப எஃபிசியன்ட் ஆன ஒரு போலீஸ் ஆஃபிசர். நான் தான் அவனை ட்ரெயின் பண்ணுனேன். அவனோட ஆட்டிட்யூட்னாலயே வேலையை விட்டுட்டு இப்போ ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ்வா வொர்க் பண்ணிட்டு இருக்கான். நீங்க வேணும்னா அவனை அப்ரோச் பண்ணிப் பாருங்க" என்று சொன்னபடி ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதில், திருச்செந்தாழை துப்பறிவாளன் என்று மினிமலிஸ்ட் ஃபாண்டில் பிரிண்ட் ஆகி இருந்தது.
விஜயேந்திரனுக்கு இணையான சைக்கோ டிபார்ட்மெண்டில் இல்லை தான். அதனால், தான் அவனை விட பெரிய சைக்கோவான திருச்செந்தாழையிடம் கோர்த்து விட்டார் கமிஷ்னர். எப்படியோ, அவருடைய ஒரு தலைவலி பிடித்த பொறுப்பை வெற்றிகரமாக கை மாற்றி விட்டார்.
*
திருச்செந்தாழையின் ஃப்ளாட் அந் நகரின் ஒதுக்கப்பட்ட ஒரு ஹவுசிங் போர்டில் இருந்தது. விஜயேந்திரன் அந்த ஹவுசிங் போர்டை அடைந்த போது மாலையாகி விட்டிருந்தது. அங்கிருந்த இளவட்டங்கள் வாலிபால் ஆடிக்கொண்டிருந்தனர். கூலி வேலைக்கு சென்று திரும்பிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஹவுசிங் போர்டிற்கு வந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அந்தச் சிறிய இடத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே சற்றுச் சிரமமாகத் தான் இருந்தது.
ஆனால், விஜயேந்திரனுக்கு அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்த ஜனங்களை எல்லாம் பார்ப்பதற்கே அவனுக்கு ஒவ்வாமையாக இருந்தது. அவர் வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அங்கிருந்த மைதானத்தில் நிறுத்த முயன்றார் அந்தக் காரின் டிரைவர், ஆனால் அங்கு வேறு சில பையன்கள் வந்து தாங்கள் அங்கு கிரிக்கெட் விளையாட வேண்டுமெனவும் அதனால், அந்தக் காரை சற்றுத் தள்ளி நிறுத்தும் படியும் கூறினர். இதனால் வேறு வழியின்றி அந்தக் காரை அங்கிருந்த ஒரு பெரும் குப்பைக் குவியல் அருகே நிறுத்தி விட்டு அந்தக் கார் கதவைத் திறந்து கொண்டு விஜயேந்திரன் வெளியே வந்தான். குப்பை மலையின் துர்நாற்றமும் அந்த இடத்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட வெறுப்பும் விஜயேந்திரனின் கண்களில் வெளிப்படையாக தெரிந்தது. இவையனைத்தையும் ஐந்தாவது தளத்தில் இருந்த தனது அறையின் ஜன்னலருகே அமர்ந்த படி பார்த்துக் கொண்டிருந்தான் திருச்செந்தாழை.
விஜயேந்திரனும் அவரது டிரைவரும் அங்கேயிருந்த லிஃப்ட் அருகே சென்று மேலே போவதற்கான பொத்தானை அழுத்தினர். பொதுவாக விஜயேந்திரன் எங்கு சென்றாலும் டிரைவரை விட்டு தான் செல்வார். ஆனால், இந்த இடத்தில் தனியாக செல்ல அவர் விரும்பவில்லை. ஆனால், லிஃப்ட் வேலை செய்யவில்லை. விஜயேந்திரன் முகம் வெறுப்பில் சிவக்க ஆரம்பித்தது. உடன் வந்த டிரைவர் அவரது வெறுப்பை புரிந்துக் கொண்டு உடனே மெயின்டெனன்ஸ் அறையை நோக்கி ஓடினான். மெயின்ட்டெனன்ஸ் அறையில் லிஃப்ட் ரிப்பேர் ஆகிவிட்டது எனவும், இன்னும் இரண்டு நாட்களுக்கு வேலை செய்யாது என்றும் படிக்கட்டில் தான் மேலே செல்ல வேண்டுமென கூறிவிட்டனர்.
இதனை எப்படி சொல்வது என்று தெரியாமல் டிரைவர் தயங்கியபடி வந்து சொன்னார். ஒரு வினாடி இந்த டிடெக்டிவ்விடம் எந்த உதவியும் கேட்க வேண்டாம், பேசாமல் திரும்பி சென்று விடுவோமா? என்று ஒரு கணம் யோசித்தார் விஜயேந்திரன். ஆனால், பிள்ளைப் பாசம் அவரை அதைச் செய்ய விடவில்லை. படியேறுவது என முடிவெடுத்தார்.
அவர்கள் படி ஏறிக்கொண்டே இருந்தனர். ஆனாலும் ஐந்தாவது தளம் வரவேயில்லை. விஜயேந்திரனுக்கு உடல் வேர்த்துக் கொட்டியது. அவர் அணிந்திருந்த அவரது காஸ்ட்லி சூட்டே அவருக்கு பாரமாக இருந்தது. தன்னுடைய கோர்ட்டைக் கழட்டி டிரைவரிடம் கொடுத்து விட்டு மேலே ஏறினார். ஆனாலும் முடியவில்லை, அதனால் டக் இன் செய்யப்பட்டிருந்த தனது சட்டையை எடுத்து விட்டார், அதுவும் அவருக்கு உதவவில்லை. அவர்கள் அந்தப்படிகளை ஏறிக்கொண்டே இருந்தார்கள். இன்னும் ஐந்தாவது தளம் வரவே இல்லை. ஆனால், அவர்களுக்கு ஏதோ நூறு மாடி ஏறுவது போல இருந்தது. உடன் வந்த டிரைவர் இதற்கு மேல் படி ஏற முடியாது உட்கார்ந்து விடலாமா என்று நினைத்தான். ஆனால், முதலாளியே படியில் ஏறுகிற போது தான் உட்கார நினைத்தால் அதனால் தனது வேலைக்குப் பிரச்சினை ஏற்படுமென அவன் அவனுடன் பேசாமல் நடந்தான்.
இறுதியாக, விஜயேந்திரன் திருச்செந்தாழையின் ஃப்ளாட் கதவைத் தட்டிய போது வியர்வையால் குளித்து, தனது சட்டைக் கையை மடித்து விட்டபடி நின்றுகொண்டிருந்தார். திருச்செந்தாழை கதவைத் திறந்ததும், விஜயேந்திரன் திருச்செந்தாழையிடம்,
"தண்ணீ வேணும். ப்ளீஸ்." என்று இறைஞ்சினார்.
அதன் பின் திருச்செந்தாழைக்கும் விஜயேந்திரனுக்கும் இடையே நடந்த உரையாடல் அடுத்த அத்தியாயத்தில்.
பேசி முடித்த பின்னர் விஜயேந்திரனும் டிரைவரும் அங்கிருந்து கிளம்பினர். அப்போதும் அங்கே லிஃப்ட் வேலை செய்யவில்லை. விஜயேந்திரனும் டிரைவரும் படிகளில் இறங்கி காரை அடைந்தனர். ஏறுவதை விட இறங்குவது சற்று எளிமையாக இருந்தது. அவர்கள் அந்தக் காரில் ஏறி அங்கிருந்து செல்வதை மீண்டும் தனது அறை ஜன்னலின் அருகே அமர்ந்தபடி திருச்செந்தாழை பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நீங்கிய பிறகு, திருச்செந்தாழை தனது கைப்பேசியில் ஒருவரை அழைத்து,
"ப்ரோ, லிஃப்ட் ஆன் பண்ணிருங்க" என்றான்.
அதன் பின் அந்த லிஃப்ட் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.