Yayum Yayum - 40 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 40

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 40

40. கோஸ்ட்

அமெரிக்க மெக்சிகோ எல்லையில் ஒரு வறண்ட நிலம். சுற்றிலும் பெரிய பெரிய மலைகள். ஒரு சொட்டுக் கூட ஈரமில்லாத வறண்ட காற்று, துளி கூட இரக்கமில்லாத கொடும் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. 

அங்கே ஒரு சிறு கோவில் இருந்தது. அந்தக் கோவிலின் அருகே அதற்கு சம்பந்தமே இல்லாமல் நிறைய உயர் வகைக் கார்கள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு காரிலிருந்து இரண்டு மொட்டைத் தலை இளைஞர்கள் இறங்கினர். அவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை அவர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. உடையில் கூட எவ்வித வித்தியாசமும் இன்றி இருவரும் ஒரே மாதிரி பழுப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களுடைய பழுப்பு நிற ஷூவின் முனையில் இரும்பால் செய்யப்பட்ட மண்டையோட்டின் உருவம் இருந்தது. பின்னர், அந்த இரு இளைஞர்களும் அப்படியே அந்த வறண்ட மண்ணில் குப்புற படுத்தனர். பின்னர் தங்களது முழங்கைகளை ஊன்றி ஊன்றி மெல்லத் தவழ்ந்து அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.

அந்தக் கோவிலுக்குள் சென்றவுடன் அந்த இரு இளைஞர்களும் எழுந்து நின்றனர். அவர்கள் முன் தலையில் கிரீடம் தரித்த ஒரு பெண் தெய்வத்தின் சிலை இருந்தது. அந்த தெய்வத்தின் உருவம் ஒரு எலும்புக் கூடை போல இருந்தது. அந்தச் சிலையின் கையில் ஒரு கம்பு இருந்தது. அந்தக் கம்பின் மேல்முனையில் ஒரு நீண்ட வாள் போன்ற ஆயுதமொன்று இருந்தது. அந்த தெய்வத்தை அனைவரும் மரணத்தின் அன்னை என்று அழைத்தனர். அந்த இரு இளைஞர்களும் அந்த தெய்வத்தின் முன் அமைதியாக நின்ற படி வணங்கினர். பின்னர், அந்தச் சிலைக்குப் பின்புறம் சென்று தரையில் இருந்த ஒரு மூடியைத் திறந்தனர். அந்த மூடிக்கு அடியில் படிக்கட்டுகள் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

அந்த இரு இளைஞர்களும் ஒருவர் பின் ஒருவராக அந்தப் படிக்கட்டில் இறங்கினர். அந்தப் படிக்கட்டு முடிகிற இடத்தில் ஒரு பெரிய ரகசிய அரங்கமொன்று இருந்தது. அதன் மையத்தில் ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அந்தப் பெண்ணை எல் டையாப்ளோ என்ற கேங்ஸ்டர், தன்னுடைய சுருட்டைப் புகைத்தபடி விசாரித்துக் கொண்டிருந்தான். கார்ட்டெலின் பிற உறுப்பினர்கள் சூழ்ந்து நின்று அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஜீயூஸ் ஆர்மி. இல்லையா?” என்று கேட்டு விட்டு, புகையை ஊதினான் எல் டையாப்ளோ.

“எனக்கென்னமோ தப்பி வந்த நாய்க்குட்டி மாதிரி தெரியுது. அதுவும் அழகான நாய்க்குட்டி” என்று தனது தங்கப் பல் தெரியும் படி சிரித்தான்.

அவனது பேச்சில் இருந்த அருவருப்பை புறம் தள்ளிவிட்டு, நாற்காலியில் அமர்ந்திருந்த பெண், “நாய்க்குட்டி தான். ஆனா, வேட்டையாடத் தெரிஞ்ச நாய்க்குட்டி. நான் அவங்க கூடயே இருந்திருக்கேன். எனக்கு அவர்களைப் பத்தி எல்லாமே தெரியும். நான் கண்டிப்பா இந்தக் கார்ட்டெல்லுக்கு பிரயோஜனமா இருப்பேன்.”

அப்போது தனது இடது காதை ஏதோவொரு துப்பாக்கிச் சண்டையில் பறிகொடுத்த, கார்ட்டெலுக்கு முக்கியமான இன்னொரு கேங்ஸ்டர் மீகேயில்,

“ஓ வேட்டை நாயா? எனக்கும் ஒரு வேட்டை நாய் தேவைப்படுது. உனக்கு பாம்பு பிடிக்க தெரியுமா?” என்று கேட்டான். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர்.

நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் அதற்கு பதில் சொல்வதை தவிர்த்தாள்.

சுற்றி இருந்தவர்களுடன் சேர்த்து தானும் சிரித்துவிட்டு, எல் டையாப்ளோ தன் விசாரணையை தொடர்ந்தான்.

“நீ ஏன் கார்ட்டெல்ல சேரணும்னு நினைக்கிற?”

“ஜீயூஸ் படையில எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. என்னோட முன்னோர் இருந்ததால நானும் அதுல சேரும் படி ஆயிடுச்சு. எந்த மனுசனும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு சக்திகளை வைச்சிட்டு, எங்கேயோ இருக்குற ஜீயூஸ்க்கு இங்கிருந்து தங்கத்தை எடுத்துட்டு போகணும்னு பைத்தியம் மாதிரி வேலை செஞ்சுட்டு இருக்காங்க. 

எனக்கு அதெல்லாம் வேண்டாம். எனக்கு இங்கேயே ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கணும். நீங்க எல்லோரும் உருவாக்கி வைச்சிருக்கிற மாதிரி. அதனால தான் கார்ட்டெல்ல சேரணும்னு நினைக்கிறேன்.” என்றாள் அந்தப் பெண்.

“நீ இந்த மாதிரி ஜீயூஸ் ஆர்மில இருந்து வெளியில வந்துட்டா, அவங்க உன்னை சும்மா விட்டுருவாங்கனு நினைக்குறியா?”

“இல்லை. நான் அவங்க கூட்டத்துல இருந்து வெளியில வரும் போதே தெரியும், என் சாவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிருச்சுன்னு.”

“அப்புறம் எந்த நம்பிக்கையில, இப்படி ஒரு முடிவெடுத்த?” என்று கேட்டான் எல் டையாப்ளோ.

“எல் ஃபேன்டஸ்மா மேல இருக்கிற நம்பிக்கையில தான். இந்தக் கார்ட்டெல்ல ஒரு மெம்பரா ஆனதுக்கு அப்புறம். அவரைத் தாண்டி என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது.”

“ஆனா, உன்னை எப்படி நாங்க நம்புறது?”

“வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பாருங்க” என்றாள் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்.

அவர்கள் ஜீயூஸ் படையைப் பற்றிய பல ரகசியங்களை அவளிடம் கேட்டனர். அவளும் அதற்கு எவ்வித ஒளிவு மறைவும் இன்றி அனைத்தையும் சொன்னாள். ஏன், ஜீயூஸ் படையினர் இந்தக் கார்ட்டெல்லை மொத்தமாக அழிக்க வைத்திருந்த செயல் திட்டத்தையும் சொன்னாள்.

அவள் மீதிருந்த சந்தேகம் படிப்படியாக குறைந்தது. அவளைக் கார்ட்டெல்லில் இணைத்துக் கொள்ளலாமா என்று கார்ட்டெல்லின் மூத்த உறுப்பினர்கள் தனியே பேசிக் கொள்ளத் தொடங்கினர். அவர்கள் பேசி முடிப்பதற்குள். கார்ட்டெல் பற்றி நான், உங்களுக்கு சில விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

ஜீயூஸ் படையினர் எப்படியாவது தங்கத்தை ஜீயூஸ் கிரகத்திற்கு கொண்டு சென்று விடவேண்டுமென போராடிக் கொண்டிருந்தனர். அதனால் கைப்பற்றுகிற தங்கத்தில் இருந்து தங்களுக்கென எதுவும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஜீயூஸ் படையிலிருந்த சிலருக்கு இந்த அணுகுமுறை பிடிக்கவில்லை. தங்கள் உயிரைக் கொடுத்து ஈட்டிய தங்கத்தை வைத்து தாங்கள் வாழாமல், எங்கோ தூரத்தில் இருக்கிற கிரகத்திற்கு அனுப்பி வைப்பதை அவர்கள் விரும்பவில்லை. 

அதனால், ஜீயூஸ் படையிலிருந்து சிலர் வெளியேறி தங்களுக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டனர். தங்களுக்கென தனியொரு தெய்வத்தையும் வழிபாட்டு முறையையும் உருவாக்கிக் கொண்டனர். அந்த வழிபாட்டு முறையில் நரபலி கொடுத்தல் போன்ற கொடூரமான வழிபாடுகளும் இருந்தன.

தாங்களும் தங்கத்தை தேடிப் போனால், ஜீயூஸ் படையினருக்கும் தங்களுக்கும் வீணாக சண்டை மூளும் என்பதால் தங்கத்தை விடுத்து அதிக பணம் தரக் கூடிய போதைப் பொருள் பக்கம் சாய்ந்தனர். அவர்களுக்குள்ளாக கார்டெல் ஒன்றை உருவாக்கி, அவர்களில் இருந்து ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக போதைப்பொருள் சந்தைக்குள் நுழைந்து, மெல்ல மெல்ல வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரும் போதை பொருள் கார்டெல்லாக உருவெடுத்துள்ளனர். இவர்களது இன்றைய தலைவன் எல் ஃபேன்டஸ்மா.

இத்தனை வருடங்களாக ஜீயூஸ் படையுடன் எவ்வித சண்டையும் இல்லாமல் தங்கள் தொழிலை நடத்தி வந்தவர்கள். இப்போது மொத்தமாக ஜீயூஸ் படையினரை அழித்துவிட முடிவு செய்துவிட்டனர். எல் ஃபேன்டஸ்மாவின் ஆசையை நிறைக்க போதை வியாபாரத்தின் பில்லியன் டாலர் வருமானம் போதவில்லை. இன்னும் அதிக பணம் வேண்டும், அதற்கு இன்னும் அதிக அதிகாரம் வேண்டும், அதற்கு இன்னும் ஆற்றல் மிகுந்த படை தனக்கு வேண்டுமென முடிவு செய்து விட்டான். இந்த பூமியில் இருக்க கூடிய வலிமை கொண்டோர் எல்லாம் தன் படையில் தன் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் அல்லது அவர்கள் இருக்கவே கூடாது, என்கிற முரட்டுத் தனமான முடிவை எடுத்துவிட்டான்.

இத்தகைய ஒரு முடிவை எடுக்குமளவிற்கு *எல் ஃபேன்டஸ்மா ஒரு பெரும் சூரன் தான் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. அவன் பெயருக்கேற்றவாறு அவன் உண்மையிலேயே ஒரு பேய் தான். அவன் தான் இந்த போதை உலகத்தை நடத்துகிறான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அவனை அந்தக் கார்ட்டெல்லின் உறுப்பினர்களை தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை. எல் ஃபேன்டஸ்மா இருக்கிற தைரியத்தில் கார்ட்டெல்லின் உறுப்பினர்கள் இந்திரசேனையை சேர்ந்தவர்களையும் ஜீயூஸ் படையினரையும் தங்கள் பக்கம் வர இழுப்பதையும் அப்படி வர மறுப்பவர்களை கொடூரமாக கொலை செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இத்தகைய கொடூர குணம் பிடித்த கூட்டத்திற்குள் உளவாளி என யாரேனும் பிடிபட்டால், அவனுக்கு கொடுக்கப்படுகிற மரணமே அவர்கள் காட்டக் கூடிய மிகப்பெரிய கருணையாக இருக்கும்.

இந்நிலையில் தான் மாயா அந்தக் கூட்டத்திற்குள் உளவாளியாக நுழைந்திருக்கிறாள். அந்த விசாரணையில் அவள் சொன்ன அனைத்து பதில்களும் கார்ட்டெல் உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது. சான்ட்ரா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மாயாவை அவர்கள் நம்பினர். அவளை தங்களது கார்ட்டெல்லில் இணைத்துக் கொள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.

மாயா கார்ட்டெல்லில் இணையும் சடங்கு தொடங்கியது. பொதுவாக யாராலும் எல் ஃபேன்டஸ்மாவை பார்த்து விட முடியாது. ஆனால், கார்ட்டெல்லின் புதிய உறுப்பினர் இணைகிற நிகழ்விற்கு மட்டும் அவன் நேரில் தோன்றுவான். அந்த ஒரு தருணத்திற்காகவே இவ்வளவு ரிஸ்க் எடுத்து மாயா அந்தக் கார்ட்டெல்லினுள் நுழைந்திருக்கிறாள். அந்தக் கார்ட்டெல்லின் மொத்த உறுப்பினர்களையும் கொன்றால் கூட எல் ஃபேன்டஸ்மா ஒருவன் உயிரோடு இருந்தால் போதும் மீண்டும், புதிதாக இன்னொரு கார்ட்டெல்லை உருவாக்கி விடுவான். அதனால், அவனைக் கொலை செய்வதற்காக மாயாவே களத்தில் இறங்கி இருக்கிறாள்.

அன்று மாலையே அவள் கார்ட்டெல்லில் இணைவதற்கான சடங்கு தொடங்கியது. அனைவரும் கூடியிருந்த அவையில் மாயா தன்னுடைய எதிரி எல் ஃபேன்டஸ்மாவுக்கு மரணத்தைப் பரிசாக கொடுக்க காத்திருந்தாள்.

ஆனால், அவள் சற்றும் எதிர்பாராமல் அவள் முன்பு ஜியூஸ் படையின் நந்தன் நிற்க வைக்கப்பட்டான். தனக்கு எதிராக ஜீயூஸ் படையில் கலகக் குரல்கள் ஒலித்த போது தனக்கு ஆதரவாக பேசிய முதல் ஜியூஸ் வீரன்.

மாயா ஒரு வாரத்திற்கு முன்பு இந்த உளவு வேலைக்கு கிளம்பும் போதே தன்னை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என கட்டளையிட்டிருந்தாள். தன்னிடமிருந்து சிக்னல் வரும் வரை, அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் இருந்த அல்பெர்க்யூ என்ற சிறு நகரில் யாருக்கும் சந்தேகம் வராமல் பதுங்கி இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தாள். ஒருவேளை இரண்டு வாரங்களில் தன்னிடமிருந்து எவ்வித சிக்னலும் இல்லாத பட்சத்தில் அவர்களுக்குள்ளாகவே பேசி அவர்களுடைய புதிய தலைவியை தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டு, தன்னுடைய மரகத கொண்டை ஊசியைக் கழட்டி கொடுத்து விட்டு தான் வந்திருக்கிறாள். 

ஆனால், நந்தனோ மாயாவின் அப்பாவுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, மாயாவைத் தேடி மெக்ஸிகன் பாலை வனத்தில் சுற்றிய போது, அவன் கார்ட்டெல் ஆட்களால் கைது செய்யப்பட்டான்.

*எல் ஃபேன்டஸ்மா என்ற பெயரின் ஆங்கில அர்த்தம் GHOST.