Yayum Yayum - 31 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 31

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 31

31. அன்புள்ள கதிரவனுக்கு…


தனது தந்தையின் கடைசிக் கடிதத்தை கீழே வைத்தான். அவன் கண்களில் இருந்த கடைசி சொட்டுக் கண்ணீர் கீழே விழ முடியாமல் தேங்கி நின்றது. தனது விரலால் அந்தக் கண்ணீரை துடைத்தான்.  


அவனது தந்தையின் விருப்பம் என்னவென்று புரிந்தது. அந்த விருப்பத்தை தன்னுடைய வாழ்க்கை லட்சியம் எனக் கொண்டு அவனது அத்தை அவனுக்காக செய்த தியாகங்கள் புரிந்தது. அனைவருக்கும் ஹீரோ மாதிரியான ஒரு அப்பா கிடைப்பதே அரிது. ஆனால், அவனது தந்தையோ ஒரு சூப்பர் ஹீரோ மட்டுமல்ல, பல சூப்பர் ஹீரோக்களின் குருவாக இருந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் எதற்காக தன் மகனை இந்த விஷயங்கள் எதன் நிழலும் படாதவாறு தன்னைப் பொத்தி வளர்க்கச் சொன்னார். தான் செய்வதற்கு பல உன்னதக் காரியங்கள் இருக்கின்ற போது தனது தந்தை எதற்காக தான் ஒரு சாதாரணனின் வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பினார்?


“உன்னோட எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சதா மோகன்?” என்று கேட்டாள் அத்தை.


“கிடைச்சது அத்தை”


கலைவாணி மெல்ல புன்னகைத்தாள்.


“வெரிகுட். நீ, இனிமேல் எதைப் பத்தியும் யோசிக்காம, உன்னோட படிப்புல கவனமா இருக்கணும். உனக்குன்னு ஒரு நல்ல லைஃப் இருக்குது. அதை நீ நல்லபடியா வாழ்றது தான், எனக்கும் உன்னோட அப்பாவுக்கும் நீ செய்ற மரியாதை” என்றாள்.


“கண்டிப்பா அத்தை. நான் இனிமேல், உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நான் எதையுமே செய்ய மாட்டேன். கண்டிப்பா ஒரு நாள் நீங்களும் என்னோட அம்மா அப்பாவும் ஆசைப்பட்ட மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்குவேன். அன்னைக்கு நீங்க என்னை நினைச்சு கண்டிப்பா பெருமைப்படுவீங்க” என்றான்.


இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு எட்டு மணிக்கு மேலே நேரம் ஆகியிருந்தது. முழுவதும் கொட்டித் தீர்த்த மனநிலையில் இருந்த கலைவாணிக்கு சமைக்கத் தோன்றவில்லை.


“நைட் டின்னர் ஆர்டர் போட்டுக்கலாமா?”என்று கேட்டாள் கலைவாணி.


“ஹ்ம்… சரி.” என்றான் மோகன்.


கலைவாணி அவளது திறன்பேசியை எடுத்து இருவருக்கும் இரவுணவை ஆர்டர் செய்தாள். பின்னர், சோஃபாவில் கலைவாணி அமர்ந்து கொண்டு மோகனுடைய தலையைக் கோதி விட்டாள். அவனுக்கு அப்போது அந்தத் தலைக்கோதல் வேண்டியதாய் இருந்தது.


இரவுணவு வந்தது. இருவரும் அந்த உணவை சாப்பிட்டனர். எப்போதும், இருக்கிற குதுகலம் அந்த உணவு மேஜையில் இல்லாத போதும், அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நிறைவு இருந்தது. உணவிற்குப் பின் இருவரும் எழுந்து அவரவர் அறைக்குக் கிளம்பும் முன், அத்தை அவனது தலையைத் தொட்டு ஆறுதலாய் தடவினாள். பின்னர் இருவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.


மோகன் தனது அறைக்குள் நுழைந்து மின் விளக்கை எரிய வைத்தான். தனது தந்தையின் கடைசிக் கடிதத்தைப் படித்ததில் அவனது தந்தை யார்? அத்தை யார்? அவர்களது நோக்கம் என்ன? என்றெல்லாம் தெரிந்து கொண்டான். ஆனால், அவன் மனதிற்குள் இன்னொரு கேள்வி எழுந்தது. தான் யார் தனக்கு என்ன வேண்டும்?


தான் மிக நிச்சயமாக அப்பா, அம்மா, அத்தையின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் தான். அது தன்னுடைய கடமை என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கடமைகளை செய்வதால் மட்டும் தனக்கு நிறைவு வந்துவிடாது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவன் மனம் நிறையக் கூடிய ஒன்றை அவன் செய்ய விரும்பினான்.


இந்திரசேனையின் தலைமையிடத்தில் திருச்செந்தாழை தனது தந்தையின் மரணத்தை ஒரு விபத்து என்று சொன்னார். ஆனால், தந்தை எழுதிய கடிதத்தில், அவர் தனக்கு வரப்போகிற ஒரு ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்தது போல உள்ளது.


தனது தந்தையின் கடிதத்தில் இருந்த ‘நான் இப்போது என் வேலையில் விட்டு வைத்த மிச்சத்தை தீர்க்கப் போகிறேன். ஒரு வேளை இதில் நானும் உன் அண்ணியும் இறக்க நேரிடலாம்.’ என்ற வரிகளை நினைவு கூர்ந்தான். இந்த வார்த்தைகளை தந்தை எழுதி இருக்கிறார் என்றால், மிக நிச்சயமாக அவரது வேலையின் பொருட்டு தான் அவருக்கும் தனது அம்மாவிற்கும் ஏதேனும் நிகழ்ந்திருக்கும் என்று நம்பினான்.


தாய் தந்தையின் இறப்பு ஒரு விபத்து என்றால், அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து விடலாம். ஆனால், அது ஒரு வேளை அப்பாவின் வேலை காரணமாக நிகழ்த்தப்பட்ட கொலை என்றால், கண்டிப்பாக அந்தக் கொலைக்கான காரணத்தையும் அந்தக் கொலையாளியையும் கண்டறிய வேண்டும். அந்தக் கொலையாளியைக் கண்டறிய வேண்டுமென்றால், தான் மீண்டும் இந்திரசேனைக்கு செல்ல வேண்டுமென நினைத்தான்.


எப்படி அவர்களை அணுகுவது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் தனது ஜன்னலை நோக்கினான். அதில் திருச்செந்தாழை அவனுக்கு கொடுத்திருந்த ஆலா பறவை அமர்ந்திருந்தது.


அந்தப் பறவையை நோக்கி, “விஜிண்ணா, இங்க வா” என்று கையால் சைகை காண்பித்துக் கூப்பிட்டான். அவன் அழைத்த மறுநொடி ஆலா பறந்து வந்து அவனது கை மீது அமர்ந்தது. அந்தப் பறவையை தனது தோள்மீது அமர வைத்து விட்டு, அவன் தன்னுடைய எழுத்து மேஜையில் அமர்ந்தான்.


பின், ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு காகிதத் துண்டைக் கிழித்து, அதில் தான் மீண்டுமொருமுறை இந்திர சேனையினரை சந்திக்க வேண்டும், அதுவும் இந்த இரவே சந்திக்க வேண்டுமென எழுதி, அதை விஜியுடைய காலில் கட்டி,


“விஜிண்ணா இதை திருச்செந்தாழை சார்கிட்ட சேர்த்திடுங்க” என்று சொன்னான். ஆலா அந்த மேஜையிலிருந்து பறந்து ஜன்னல் வழியே வெளியேறி இந்திர சேனையின் தலைமையிடத்தை நோக்கிப் பறந்தது.


பின்னர் மோகன் தனது தந்தையின் கடிதங்களை எடுத்துப் பார்த்தான். அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றும் கால வரிசைப்படி அடுக்கப்பட்டு இருந்தது. அத்தனைக் கடிதங்களும் இதற்கு முன்னர் படிக்கப்பட்டு இருந்தது. அனேகமாக இவையனைத்தையும் அவனது அத்தை பல முறை படித்திருப்பாள். மோகன் முதல் கடிதத்தை எடுத்தான்.


‘அன்புள்ள கதிரவனுக்கு,


இருபதுகளில் வாழ்கிற கதிரவன் எழுதுவது. இன்று நீ எப்படி வாழ்கிறாய்? எதையெல்லாம் நீ நம்புகிறாய்? எவற்றையெல்லாம் நீ மறுக்கிறாய்? எந்த மாதிரி ஆளாக நீ இருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு காலத்தில் நீ நானாக இருந்தாய்.


ஒரு வேளை நடக்கவிருக்கிற போரில் நீ உயிர் தப்பி உன் ஆசைப்படியே நீயொரு பெரிய எழுத்தாளன் ஆகிவிட்டால் இன்றிலிருந்து நான் எழுதுகிற கடிதங்கள் எல்லாம் நீ கதை எழுதுவதற்கு தேவைப்படக்கூடிய மிக முக்கியமான கரு பொருள்கள். ஏன் நீ இவற்றை யெல்லாம் அப்படியே கூட ஒரு புத்தகமாய் பிரசுரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.


ஒரு வேளை நீ உயிர் தப்பி போரில் உனக்குள் இருந்தக் கலைஞன் இறந்துவிட்டால், இந்தக் கடிதங்கள் எல்லாம் உன் ஓய்வு நேரத்தை இனிதாக்கப் பயன்படும்.


எது எப்படியோ, நீ போரில் உயிர் தப்பினாலே அது மிகப்பெரிய வெற்றி, அந்த வெற்றிக்கான என் பரிசு தான் இந்தக் கடிதங்கள்.


நாளை முதல் உன் வாழ்க்கையே மாறப் போகிறது. இன்று வரை கதைகள் வாசித்து, கவிதைகள் வாசித்து, சொற்களின் நதியில் நீந்திக் கொண்டிருந்த நீ, நாளை முதல் இந்திரசேனையின் உறுப்பினன் ஆகப் போகிறாய். பேனா பிடித்து எழுதிக் கொண்டிருந்தவன் நாளை முதல் ஒரு கொலைக் கருவியாக மாறப் போகிறாய்.


உன் போன்ற மென்மையானவனுக்கு ராணுவமும் அது கொடுக்கிற மிடுக்கும் மிக நிச்சயமாக பொருந்தாது. உன் ராணுவ சகாக்களாலேயே நீ இகழப்படுவாய். ஒரு கேளிப் பொருளாக மாறுவாய். ஒரு வேளை உன்னுடைய முதல் வேலையிலேயே இறந்து இந்தக் கடிதங்கள் எல்லாம் பொருளற்ற வெற்றுக் காகிதங்களாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு.


ஆனால், பயப்படாதே வீரர்களை விட நம் போன்ற கோழைகளுக்கு தான் ஆயுள் அதிகம். நீ எப்படியும் தாக்குப் பிடிப்பாய், கரப்பான் பூச்சி போல எங்கேனும் ஓடி ஒளிந்து கொள்வாய்.


அப்படி ஓடி ஒளிந்து பயந்து குறுகி நீ நீண்ட நாட்கள் ஒரு வெற்று வாழ்க்கையை வாழ்ந்து விட்டு நீ இந்தக் கடிதத்தை படிக்கிறாய் என்றால், அதற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும்.


இன்று கூட என்னால் தைரியமாக நமது தந்தையிடம் ‘எனக்கு இந்திர சேனையில் இணைய விருப்பமில்லை. உங்கள் விருப்பத்திற்கெல்லாம் ஆடுவதற்கு நான் ஒன்றும் பொம்மையில்லை’ என்று சொல்ல முடியவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடு.


நம் வாழ்வை நிரந்தரமாக மாற்றக் கூடிய நாளைய நாள் வந்துவிடக்கூடாது என்ற ஆசையுடன் தூங்கச் செல்கிறேன். 


ஆனால், நாளை விடிவதை யார் தடுக்க முடியும்?


பேரன்புடன்,

கதிரவன்.’


மோகன் அந்தக் கடிதத்தை படித்து முடித்த போது, ஆலா திரும்பி வந்தது. மோகன் அதன் காலில் கட்டியிருந்த செய்திக்குறிப்பை எடுத்துப் படித்தான். அதில் முன்பிருந்தது போல சங்கேத குறிப்புகள் இருந்தன. அவன் அதனை குறிவிலக்கம் செய்து வாசித்தான். இம்முறை அவன் நாளை காலை பத்து மணிக்கு அவனுடைய கல்லூரி கழிவறைக்கே வரவழைக்கப்பட்டான்.


தனது தந்தை எப்போதோ தனக்காக எழுதிக் கொண்டவையெல்லாம், இப்போது தனக்கே சொல்வது போல இருந்தது. நாளை முதல் மோகனுடைய வாழ்க்கையும் முழு முற்றாக மாறப் போகிறது. அவன் நாளை காலை தன்னை இந்திரசேனையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தூங்கச் சென்றான்.


‘இந்திரசேனையின் தலைமையிடத்தில் இருந்து வருகின்ற போது, தனது கழிவறையிலேயே, இறக்கிவிட்ட அந்த மாய லிஃப்ட், ஏன் இப்போது தன்னை தன்னுடைய கழிவறையிலிருந்து அழைத்துச் செல்ல வரவில்லை?’ என யோசித்தான்.


அதற்கு பின் வரும் காலங்களில் எப்போதோ ஒருநாள் இந்திர சேனையை சேர்ந்த ஒருவர், “தம்பி, இந்த லிஃப்ட் வழியா இந்திரசேனையில இருந்து எங்க வேணும்னாலும் போகலாம். ஆனால், நினைச்ச இடத்தில இருந்து இந்திர சேனைக்கு வந்துற முடியாது. ஃபார் சேஃப்ட்டி ரீசன்ஸ்” என்றார்.