28. வாழ்வின் நோக்கம்
நேரம் நாம் இருக்கக் கூடிய இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது பொது சார்புக் கோட்பாடு. மோகன் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து விட்டான் அதனால் அவனுக்கு நேரம் மிக நீளமாக இருக்கிறது. ஆனால், பிறருக்கு கிட்டத்தட்ட இது மாலை முதல் அடுத்த நாள் மதியம் வரைக்கான நேரம் மட்டுமே.
மோகனை மயில்வாகனன் தடுத்த அந்த மாலையில் மாயா முதன் முறையாக அவனுக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தாள்.
மாயா அந்த “ஹாய்” என்ற மெஸேஜையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வயிற்றை ஏதோ பிரட்டுவது போல் இருந்தது. எவ்வளவு எளிமையான, பிரச்சனையற்ற மெசேஜ்? ஆனால், அதற்கு பதில் மெஸேஜ் வராத போது அது எந்த அளவிற்கு கனமாக மாறுகிறது? அதுவும் அந்த ‘ஹாய்’ மெஸேஜை அவன் படித்து விட்டான் என்று வாட்ஸ் அப் ப்ளூ ட்டிக் காட்டுகிற போது அதன் அடர்த்தி இன்னும் கூடி விடுகிறது.
மாலை கொஞ்சம் கொஞ்சமாக பழுத்து இரவாக மாறிக்கொண்டிருந்தது. மாயா தன்னுடைய படுக்கைக்கு சென்று படுத்தும் விட்டாள். ஆனால், அவளுக்கு எவ்வித பதில் மெஸேஜ்ம் வரவில்லை. கைப்பேசியின் திரையில் மயாவின் உருவம் மங்கலாக தெரிந்தது. அவள் அந்த மெஸேஜையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன நடந்திருக்கும்? ஏன், அவன் இன்னும் நமக்கு பதில் செய்தி அனுப்பல? இத்தனை நாளா என்னைச் சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இப்போ நானே ‘ஹாய்’ அனுப்பியும் பதில் இல்லையினா? பின்னால சுத்துன வரைக்கும் போதும் நாம வேற வேலையைப் பார்க்கலாம்னு தோணிறிச்சோ. இல்லை, வேற ஏதாவது பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் மாறியிடுச்சா? இல்லை, என்கிட்ட ஏதாவது குறையிருக்கா?’ என்று கைப்பேசியின் திரையில் தனது முகத்தைப் பார்த்தாள்.
அவளை அசிங்கமாக காட்டக்கூடிய எந்தக் காமிராவையும் இதுவரை உலகம் கண்டுபிடிக்காததால் அந்த கைப்பேசியிலும் அவளது முகம் அழகாகவே தோன்றியது. கைப்பேசி திரையை பார்த்துக்கொண்டிருந்த மாயாவுக்கு திடீரென தோன்றியது.
‘நான் ரொம்ப நேரடியா கேட்டுட்டேனா? இல்லை, நான் ரொம்ப அலையுறேன்னு நினைச்சிட்டானா?’ என்று யோசித்தாள்.
பின்னர், ‘சே, என்னது இது ஒரே ஒரு ஹாய்க்கு ரிப்ளை வராததுக்கு ஏன் நான் இப்படி யோசிட்டு இருக்கேன். இந்த சாதாரண விஷயத்துக்கு நான் ஏன் இவ்ளோ குழப்பமா இருக்கேன்? நான் எடுத்துக்கிட்ட வேலையைவிட இது எனக்கு அவ்ளோ முக்கியமா?’ என்று அவளை அவளே பல கேள்விகள் கேட்டுக்கொண்டாள். எந்தக் கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் அப்படியே தூங்கி விட்டாள்.
*
தேவதேவனின் கவிதையில் வருவது போல, அதுவொரு சிறிய வீடு தான், ஒரு இரண்டு செண்ட்டிற்குள் கட்டப்பட்ட ஒரு தரைத்தள வீடு. ஆனால், என்ன வானம் வரை விரிந்திருந்தது அதன் மொட்டை மாடி.
அந்த வீட்டிலிருந்து எப்போதும் போல இன்றும் சிரிப்பொலி வந்து கொண்டிருந்தது. பத்து வயது மாயா சிரித்துக் கொண்டே இருந்தாள். அவளது சிரிப்பு சத்தம் அந்தச் சுவர்களில் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவள் ஒவ்வொரு முறையும் “பறக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டு குதித்த போதும் அவளது சுருள் சுருளான கேசம் மேலும் கீழுமாக குதித்துக் கொண்டிருந்தது. இவையனைத்தையும் முத்துக்குமரனும் அவளது தாய் அனன்யாவும் கண்களில் சந்தோசம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு சப்தம் கேட்டது. பின்னர், அது ஒரு பேரிரைச்சலாக கேட்டது. முத்துக்குமரனின் சிரிப்பு ஒரு நொடியில் மறைந்தது. அந்தச் சத்தம் அவர்கள் இருந்த தரையை உடைத்துக் கொண்டுவருவது போல இருந்தது. முத்துக்குமரன் பாய்ந்து மாயாவைப் பிடித்துக் கொண்டு, “கோட் ரெட்” எனக் கத்தினான். அதைக் கேட்டு அனன்யா சுதாரிப்பதற்குள் அவர்கள் வீட்டிற்குள் ஒரு பெரும் வெள்ளம் நுழைந்தது.
வந்த வெள்ளம் சட்டென்று அனன்யாவை அடித்து சுவற்றில் மோதியது. சுவற்றில் மோதிய அனன்யா ஒரு வழியாக எழுந்து நின்றாள். முத்துக்குமரன் துரிதமாக செயல்பட்டு மாயாவைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கும் வழியை நோக்கிச் சென்றான்.
அதற்குள் அந்த வெள்ளம் அந்த வீட்டை முழுக்க மூழ்கடித்து விட்டது. செந்நிறமான வெள்ள நீரால் மூழ்கடிக்கப்பட்ட அந்த வரவேற்பறை ஒரு ரத்தக் கடல் போல காட்சியளித்தது. அதில் மூழ்கி மூழ்கி மாயாவும் முத்துக்குமரனும் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அனன்யா ஒரு நொடியில் தனது கையிலிருந்து நெருப்பை வரவழைத்தாள். அடர் ஆரஞ்சு நிறத்தில் எரியத் தொடங்கிய நெருப்பு அங்கிருந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்தியது.
இதற்குள்ளாக முத்துக்குமரன் அந்த வீட்டிலிருந்து ஆபத்து நேரங்களில் தப்பிப் போவதற்கான சுரங்கப் பாதை அருகே சென்று விட்டான். அது ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்வதற்காக அமைக்கப்பட்ட மிகக் குறுகலான சுரங்கப்பாதை. மாயாவைக் கையில் பிடித்த படி அந்தக் குறுகிய பொந்தில் நுழைந்த படி முத்துக்குமரன், அனன்யாவை அழைத்தபடி நின்றான்.
கிட்டத்தட்ட வெள்ளத்தை நிறுத்தி விட்ட நிலையில் அனன்யாவும் அந்தச் சுரங்கத்தின் வழியே தப்பிக்கச் சென்றாள். அப்போது திடீரென, அவளது கால்கள் அசைய மறுத்தன. அவளது கால்களை யாரோ இறுகப் பற்றி இருப்பது போல இருந்தது. அனன்யா கீழே குனிந்து காலைப் பார்த்தாள். யாருமே அவளது காலைப் பிடிக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற போது, ஒரு அறிவிப்பு வந்தது.
“நீங்க, இனிமேல் இங்கயிருந்து தப்பிக்க முடியாது. உங்களுக்கு வேற வழியே இல்லை. நீங்க சரணடைஞ்சுருங்க.” என்று யாரோ சொன்னார்கள்.
“சரணடையறதுக்கு பதிலா நாங்க செத்தே போறோம்.” என்று சொல்லி விட்டு, முத்துக்குமரனைப் பார்த்துக் கையால் “தப்பித்துப் போ” என்று சைகை காட்டினாள் அனன்யா.
முத்துக்குமரன் அனன்யாவை விட்டுச் செல்ல மனமில்லாமல் சுரங்க வாசலிலேயே நின்றான்.
“நீங்க வீரமா சாகணும்னு முடிவு பண்ணிட்டா, நாங்க அதுக்கு கண்டிப்பா உதவுறோம். ஆனா, சண்டை தான் போடனும்னு முடிவு பண்ணிட்டா, அப்புறம் உங்க குழந்தைக்கும் வீர மரணத்தை கொடுக்க வேண்டிய நிலைக்கு நாங்க போயிருவோம்.
ஆனா, சரணடைஞ்சவங்கள கொல்லக்கூடாதுங்கிறது எங்களோட விதி. நீங்க சரணடைஞ்சா, விசாரணைக்கு பின்னாடி உங்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து. உங்களோட அடையாளத்தை மாத்தி, உங்களோட சக்திகளை எடுத்துட்டு, சாதாரண மனிதர்களா, எந்த விதமான போரும் பிரச்சனையும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாங்க உங்களுக்கு அமைச்சுத் தருவோம்” என்றது அந்தக் குரல்.
அனன்யா, “விசாரணைக்கு ஒத்துழைக்கறோம்னு சொல்லி, எங்க மக்களுக்கு துரோகி ஆகுறத விட நாங்க சந்தோஷமா இங்கேயே சாகுறோம்” என்றாள்.
ஆனால், ஒரு கையால் அவர்களை அங்கிருந்து தப்பித்துப் போகும்படி சைகைக் காட்டிக் கொண்டே இருந்தாள். இதுதான் தன்னுடைய கடைசி நாள் என்பதை அனன்யா உணர்ந்து கொண்டாள். அதனால், தான் இறந்தாலும் மகளும் கணவனும் தப்பித்து போக வேண்டுமென அவள் நினைத்தாள்.
அதற்குள் முத்துக்குமரன் “நாங்க சரணடையறோம். ஆனா, நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கணும்” என்றான் முத்துக்குமரன்.
“ஏன்” என்பது போல கைகளை விரித்து பார்வையால் கேட்டாள் அனன்யா.
“உன்னை இங்க சாவுக்கு தூக்கிக் கொடுத்துட்டு நாங்க எப்படி வாழுவோம் அனன். இந்தப் போரெல்லாம் போதும். எனக்கு உன் கூட வாழணும். உன் கூட வாழ்ந்து பாப்பாவை நல்லபடியா வளர்த்துனா மட்டும் போதும். ப்ளீஸ் விட்டுரு” என்றான்.
அனன்யா, என்ன சொல்வதென்று தெரியாமல், ஒரு நிமிடம் அப்படியே நின்றாள். ஆனால், அவள் கையிலிருந்து நெருப்பு வந்து கொண்டே இருந்தது.
“ப்ளீஸ்… போதும் அனன், விட்டுறு” என்றான் முத்துக்குமரன்.
அனன்யா, தனது கையில் இருந்த நெருப்பை அணைத்தாள். அடுத்த நொடி ஒரு மாபெரும் அலையொன்று சடாரென்று அவளை அடித்தது. அவள் மூக்கு, காது, வாய் என அனைத்திற்குள்ளும் வெள்ளம் நுழைந்து, அவளது நுரையீரலை உடைத்து வயிற்றை நிரப்பி நொடியில் மரணித்துப் போனாள். அந்த வெள்ளத்தில் மிதந்தபடி இறக்கின்ற போதும், “போ” என சைகை காட்டிய படியே இறந்து போனாள்.
“அனன்…” என்று தன் குரல் வளை உடைய முத்துக்குமரன் பெரும் ஓலமிட்டான்.
“அம்மா…அம்மா…” என்று மாயா கதறி அழத் தொடங்கினாள்.
சில நிமிடங்கள் முன்பு சிரிப்பால் நிரம்பியிருந்த அந்த வீடு, இப்போது பெரும் ஓலத்தில் மூழ்கி இருந்தது. அழுகை. சோகம். வெறுமை மட்டுமே அங்கு இருந்தது.
அவர்களை இத்தனை நாட்களாக அரவணைத்து வைத்திருந்த கதகதப்பு இன்றோடு முடிந்து போனது.
அப்போது அந்த சுரங்கத்தின் பொந்தில் சிக்கியிருந்த மாயாவின் அருகே, உயரமான ஒரு மனிதன் வந்து நின்றான். அவன் கைகளில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் மாயாவைப் பார்த்து தனது பற்கள் தெரிய புன்னகை செய்தான். அந்தச் சிரிப்பில் உலகின் அத்தனைக் கீழ்மைகளும் இருந்தன.
*
மாயா தன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். அவளது முகம் வியர்த்திருந்தது. சிறு வயதில் அந்த நிகழ்வு நடந்த போது இருந்த அதே பயமும் அழுகையும் அப்படியே இன்றும் அவளது கனவில் இருந்தது. அது கனவு அல்ல. நினைவு. எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நினைவு. வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்காக வருந்தும் போது தன் வாழ்க்கையின் நோக்கத்தை தனக்கு தானே நியாபகப்படுத்துகிற நினைவு. மாயாவுக்கு தான் என்ன செய்ய வேண்டுமென ஒரு தெளிவு பிறந்தது.
மாயா எழுந்து சென்று அம்மாவின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு, முத்துக் குமரனின் அறைக்குச் சென்று, அம்மாவின் புகைப்படத்தைக் கட்டி பிடித்தபடி அவர் அருகே படுத்து தூங்கி விட்டாள்.