Yayum Yayum - 26 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 26

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 26

26. பெருங்கதை


திருச்செந்தாழையும் மோகனும் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இருவரையும் மிதக்கிற மாயக் கோளமொன்று ஸ்கேன் செய்து அவர்களை உள்ளே அனுமதித்தது. மயில்வாகனன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான்.


மயில்வாகனனை பார்த்தவுடன் “அந்த மயில் எப்படி இருக்கு சார்?” என்று கேட்டான் மோகன்.


“அவ பேரு மீரா தம்பி, ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றான் மயில்வாகனன்.


“சாரி சார், தெரியாம பண்ணிட்டேன்”


“நானும் தெரியாம பண்ணிட்டேன்” என்றான் மயில்வாகனன்.


“ஓகே சார். பரவாயில்லை” என்றான் மோகன்.


“சரி, வாங்க.” என்று சொல்லிவிட்டு திருச்செந்தாழை விவாத மேஜையை நோக்கி நடந்தான். அவர்கள் நடந்த போது மோகன், அங்கே கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த லில்லிப்புட் மனிதனைப் பார்த்தான். அவன் இவர்களை நோக்கி ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான்.


மோகன் அந்த லில்லிப்புட் மனிதனை பார்த்த போது, ‘இவன் சித்திரக் குள்ளன் இனத்தை சேர்ந்தவன். இவங்க இனமே அழிஞ்சு போச்சு. இவனையாவது பத்திரமா வைச்சிக்கணும்னு இங்க வைச்சிருக்கிறோம். வெளிய விட்டா இவன் இறந்திருவான்’ என்று சொல்லி மயில்வாகனன் அவனை மேஜைக்கு அழைத்து சென்றான்.


மூவரும் அந்த மேஜையில் சென்று அமர்ந்தனர். மயில்வாகனனுக்கும் திருச்செந்தழைக்கும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த முகமூடிகள் மேலெழுந்து வந்தன. ஏற்கனவே மோகனுடைய முகத்தை அவர்களும், அவர்களுடைய முகத்தை மோகனும் பார்த்து விட்டதால், இப்போது முகமூடி வேண்டாமென அவர்கள் முடிவெடுத்தனர்.


“உன் கிட்ட சில கேள்விகள் கேட்கணும். கேட்கலாமா?” என்றான் மயில்வாகனன்.


“சரி” என்றான் மோகன்.


திருச்செந்தாழை கேட்டான், “இங்க ஏன் மறுபடியும் வந்த மோகன்?”


“எனக்குப் புரியல நீங்க தான இங்க வரணும்னு சொல்லி எனக்கு புறா காலுல செய்தி அனுப்புனீங்க?” என்று கேட்டான்.


“நாங்க அதைக் கேட்கலை மோகன். உன்னை அடிச்சி உன்னை உன் விருப்பமே இல்லாம தூக்கிட்டு வந்து மூணு மாசம் உன்னோட நினைவுகளை சிறைபிடிச்சு வைச்ச இந்த இடத்துக்கு ஏன் திரும்ப வந்த மோகன்.” என்று கேட்டான் திருச்செந்தாழை.


“எனக்கு என்னோட அப்பா அம்மாவைப் பத்தின உண்மையை தெரிஞ்சுக்கணும். அதுக்காக தான் வந்திருக்கேன்” என்றான் மோகன்.


“சரி, நாங்க இதை சொல்றோம். ஆனா, நாங்க உண்மையை மட்டும் தான் சொல்லுவோம், ஒரு வேளை உனக்கு இது பிடிக்காம போகக் கூட வாய்ப்பு இருக்கு. சோ, மறுபடியும் நல்லா யோசிச்சு சொல்லு, கண்டிப்பா உனக்கு உன்னோட அப்பா அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கணுமா?”


“ஆமா” என்றான்.


“நீ, நான், உன் அப்பா, அம்மா, அத்தை எல்லோருமே ஒரு பெரிய கதையில இருக்கிற சின்ன சின்ன கதாப்பாத்திரம். நீ உன் அம்மா அப்பாவைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா இந்தக் கதையை முதல்ல இருந்து தெரிஞ்சுக்கணும். இந்தக் கதையை கண்டிப்பா உன்னால ஏத்துக்க முடியாது, நம்ப முடியாது. ஆனா, இதைக் கேட்காம உன்னால எதையும் புரிஞ்சுக்க முடியாது. நம்ப முடியாத இந்தக் கதையை கேட்க நீ தயாரா?” என்று கேட்டான் திருச்செந்தாழை.


மோகன் தலையை ஆட்டினான்.


“இந்தக் கதை ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னாடி தொடங்குது. அப்போ தான் முதன் முதலா இந்திரன் பூமிக்கு வந்தார்.”


“ஒரு நிமிஷம் இந்திரன்னா? சாமி கதை ஏதாவது சொல்லப் போறீங்களா?” என்று இடை மறித்தான் மோகன்.


“இல்லை மோகன். இது சாமி கதை இல்லை. இது நம்பிக்கை பத்தின கதை. கஷ்டத்துல இருக்கிறவனுக்கு யார் உதவுனாலும் அவன் அவங்களுக்கு கடவுள் தான. அப்படித் தான் இந்திரன் இங்க கடவுளா மாறுனாரு.”


மோகன் அவன் சொல்லப் போவதைக் கூர்ந்து கவனித்தான்.


“இந்த நிலத்துல புதுசா எந்த உயிரும் உருவாகாம, இங்க இருந்த எல்லோரும் எல்லாமும் அழிவை நோக்கி போயிட்டு இருந்த காலத்துல இந்திரன் முதல்முறையா பூமிக்கு வந்தார். வந்தவரு இங்க இருந்தவங்களை அழிவுல இருந்து காப்பாத்திட்டு, அவரோட மக்களை காப்பாத்த பூமியில இருந்த நம்ம முன்னோர் கிட்ட உதவி கேட்டாரு. நம்ம முன்னோர்கள் இந்திரனுக்கு உதவ ஒத்துக்கிட்டாங்க. நாம எல்லோரும் நம்ம முன்னோர் வார்த்தைகளை காப்பாத்திட்டு இருக்கோம்.” என்றான் திருச்செந்தாழை.


“எனக்குப் புரியல. நம்ம எல்லோரும் சாதாரண மனுஷங்க நாம எப்படி இந்திரனோட மக்களைக் காப்பாத்த உதவ முடியும்.”


“ஒருத்தனுக்கு உதவணும், கொடுத்த வாக்கை காப்பாத்தனும்னு நினைக்கிற யாருமே சாதாரண மனுஷங்க இல்லை மோகன். அந்த எண்ணமே அந்த சாதாரண மனுஷன அசாதாரண மனுஷனா மாத்திடும். அந்த எண்ணம் தான் நமக்கு இப்போ அதிசயமான சக்திகளை கொடுத்திருக்கு.” என்று சொல்லி திருச்செந்தாழை தனது கையைத் தூக்கினான். அவர்கள் அமர்ந்திருந்த மேஜை ஒரு அடி மேலே வந்து பின் தரையிறங்கியது.


திருச்செந்தாழை சொல்வதை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் மோகன் குழம்பினான்.


திருச்செந்தாழை தொடர்ந்தான், “இந்திரன்கிறது ஒரு தனி நபரோட பேர் இல்லை. இந்திரலோகத்தோட அரசனோட பேர் தான் இந்திரன். இதுக்கு முன்னாடி பல ஆயிரம் இந்திரன்கள் இருந்தாங்க. இதுக்கு அப்புறமும் பல ஆயிரம் இந்திரன்கள் வருவாங்க.


இந்திரலோகத்தில இருக்கிற மக்கள் நம்மல மாதிரி வயல்ல விவசாயம் பண்ண மாட்டாங்க. அவங்க எல்லோரும் கடல்ல விவசாயம் பண்ணுவாங்க. பெரிய பெரிய இயந்திரங்களை கடல் நடுவே கட்டி அந்த இயந்திரம் மூலமா கடல்ல இருந்து அமிர்தம்னு சொல்ற திரவத்தை எடுத்து அதை பிராசஸ் பண்ணி சாப்பிடுவாங்க.


பூமியில நாம பெட்ரோலைப் பயன்படுத்தி இயந்திரங்களை இயக்கிற மாதிரி, அந்த கிரகத்தில அவங்களோட இயந்திரத்தை இயக்க தேவையான பெட்ரோல் தங்கம் தான். ஆனா, ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னாடி அவங்க கிரகத்தில தங்கம் குறைஞ்சு போச்சு. அப்போ தான் அவங்க பூமியில நிறையா தங்கம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு பூமிக்கு வந்தாங்க.


அவங்க வேற கிரகத்தில இருந்து வந்ததுனால, அவங்களுக்கு நிறையா அதிசய சக்திகள் இருந்துச்சு. அந்த சக்தியைப் பயன்படுத்தி தான். அழிவில இருந்த நம்ம பூமியை அவங்க காப்பாத்துனாங்க. அதுக்கு திருப்பி எப்படி நன்றி கடன் செலுத்துறதுன்னு நம்ம முன்னோர்கள் கேட்ட அப்போ தான், பூமியில இருக்கிற தங்கத்தை எடுத்து அவங்களுக்கு தரணும்னு அவங்க கேட்டாங்க. அவங்களுக்கு தேவைப்படுற வரைக்கும் நாம தங்கத்தை எடுத்துத் தருவோம்னு நம்ம முன்னோர்கள் இந்திரனுக்கு வாக்கு கொடுத்தாங்க. தலைமுறை தலைமுறையா நாம கொடுத்த வாக்கை காப்பாத்திட்டு வரோம்.


இந்திரனுக்காக தங்கம் எடுத்துக் கொடுக்க வந்த நம்ம முன்னோர்களுக்கு இந்திரன் சில அதிசய சக்திகளைக் கொடுத்தாரு. அந்த சக்திகள் தலைமுறை தலைமுறையா நமக்குள்ள கடந்து வந்துட்டு இருக்கு. அந்த சங்கிலியில ஒரு கண்ணி உன் அப்பா, இன்னொரு கண்ணி நீ. உனக்கடுத்து உன் பையன்.” என்று சொன்னான் திருச்செந்தாழை.


“இந்தக் கதை அத்தோட முடியல மோகன். இந்திரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துற எல்லா மக்களும் அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்திட்டு அப்படியே அவங்க கடமையையும் செஞ்சிட்டு இருந்தாங்க.


ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நமக்கு எதிரிகள் வந்தாங்க. அவங்க பேரு ஜீயூஸின் வாரிசுகள். ஜீயூஸ் கிரகத்தோட சூரியன் ரொம்ப ஆபத்தான ஊதாக் கதிர்களை வெளிவிடும், அந்தக் கதிர்கள் அந்த மக்கள் மேல பட்டா அவங்களுக்கு பல விதமான நோய்கள் வந்து அவங்க இறந்து போயிடுவாங்க. அந்தக் கதிர்களை தடுக்கிற பாதுகாப்பு திரையை கட்ட அவங்களுக்கு தங்கம் தேவைப்படுது. அதுவும் அவங்க தொடர்ந்து அந்த திரையை புதுப்பிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்கு அவங்களுக்கு மலை மலையா தங்கம் வேணும்.”


“இவ்வளவு ஸ்பேஸ் ஷிப் எல்லாம் உருவாக்குன அந்த ஜனங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கிரகத்திலேயே இருக்கணும்? வேற கிரகத்துக்கு குடி பெயர்ந்து போகலாமில்லை?”


“மனுசங்க மாதிரி எல்லோரும் அவங்க வீட்டை விட்டு போகணும்னு நினைக்க மாட்டாங்க மோகன். அவங்க அந்த கிரகத்துலேயே தொடர்ந்து வாழ இங்கயிருந்து தங்கத்தை எடுத்துட்டுப் போகத் தான் முயற்சி பண்ணிட்டே இருக்காங்க. நாம அதை தடுத்து இந்திரலோகத்துக்கு தங்கத்தை எடுத்திட்டு இருக்கோம்.


நமக்கு இந்த மாதிரி ஒரு எதிரி இருக்காங்கிறதயே நம்மோட முதல் தளபதி பேகன் தான் நம்ம இனத்துக்கு சொன்னாரு. அவரு தான் தனித்தனியா இருந்த நம்ம மக்களை ஒருங்கிணைச்சு இந்திரசேனைன்னு ஒரு படையை உருவாக்குனாரு. அந்தப் படையில தான் உன் அப்பா இருந்தாரு. அப்போ இருந்து இப்ப வரை இந்த தீராத போருல நாம சண்டை போட்டுட்டு வறோம்.”


அனைத்தையும் பொறுமையாக கேட்ட மோகன், “இந்தப் போருல என் அப்பாவுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டான்.