Yayum Yayum - 24 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 24

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 24

24. சாப்பாட்டு மேஜை


மோகன் குழம்பியபடி அந்தத் தெருவில் நின்று கொண்டிருந்தான். தொடர்ச்சியான எண்ணங்களால் அவனது மனம் துவண்டு போயிருந்தது. தான் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் பொய் என்று ஒருவன் தன் முன் நின்று சொல்லி விட்டுப் போயிருக்கிறான். இவையனைத்தும் ஒரு கனவாக இருக்குமோ என்றுத் தோன்றியது. அமெரிக்காவில் யாரோ ஒருவன் தான் ஒரு ரியாலிட்டி ஷோவில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்து, பின்னர், மனநல காப்பகத்தில் சேர்ந்தது போல தனக்குத் தானே ஏதோ இல்லாததை கற்பனை செய்து கொண்டிருக்கிறோமா என்று யோசித்தான். ஆனால், நடந்தது எல்லாம் நிஜம் என்பதை அவனது உடற்சோர்வு அவனுக்குக் காட்டியது. முதலில் வீட்டிற்கு போவோம் பின்னர் எதுவாக இருந்தாலும் யோசித்துக் கொள்ளலாம் என நினைத்து அந்தச் சாலையில் நடக்கத் தொடங்கினான்.

அவன் வீட்டை அடைந்ததும் அவனது அத்தை கலைவாணி வந்து கதவைத் திறந்தாள். 

“ஏன்டா, இவ்ளோ நேரம் லேட்” என்று கேட்டாள்.

மோகன் அவளது கண்களைப் பார்த்தான். அவளது கண்களில் கொஞ்சம் கூட பாசாங்கு இல்லை. அக்கறை மட்டுமே இருந்தது.

“ஒன்னுமில்லை, அத்தை இன்னைக்கு டிராமா ரிகர்சல்ல கொஞ்சம் லேட் ஆயிருச்சு” என்றான்.

கலைவாணி அவனை கவனித்து விட்டாள். அவன் இன்று ஏதோ சரியில்லை. ஆனால், என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவனது கல்லூரியில் ஏதேனும் நடந்திருக்கும். காலை விடிந்தவுடன் அவன் சரியாகி விடுவான் என்று அவள் நம்பினாள்.

“வாடா சாப்பிடலாம்” என்று அவள் கூப்பிட்டாள்.

மோகனுக்கு சாப்பிட வேண்டாம் என்று தான் தோன்றியது. ஆனால், அவன் மனதளவில் மூன்று மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறான். அவனுக்கு இப்போது சாப்பிட வேண்டும், தண்ணீர் குடிக்க வேண்டும், பாத்ரூம் போக வேண்டும் என்றெல்லாம் தோன்றியது.

“ஒரு நிமிஷம் அத்தை, நான் குளிச்சிட்டு வந்தர்றேன்” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றான். தன்னுடைய பாத்ரூமிற்கு சென்று, ஹீட்டரில் சுடுதண்ணீரை வரவழைத்து நன்கு தேய்த்துக் குளித்தான். அவனது உடலில் எந்த அழுக்கும் இல்லை. மயில்வாகனனுடன் சண்டைபோட்டதால் ஏற்பட்ட சிறு கசகசப்பு மட்டும் தான் இருந்தது. 

‘அத்தையிடமே இதனை நேரடியாக கேட்டுவிடலாமா? ஆனால், எப்படிக் கேட்பது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

‘வேண்டாம், எதுவும் கேட்க வேண்டாம். நாம அத்தையை சந்தேகப்படுறோம்னு அத்தைக்கு தெரிஞ்சதுன்னா, அப்புறம் அவங்க ரொம்ப உடைஞ்சு போயிடுவாங்க” என்று முடிவெடுத்து, பின்னர், உடை மாற்றி அவன் கீழே வந்தான்.

இருவரும் சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்தனர். எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் சாப்பிடத் தொடங்கினர். இப்படி எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருப்பது இருவருக்கும் ஏதோ சங்கடமாய் இருந்தது. கலைவாணி தான் எப்போதும் இது போன்ற நேரங்களில் மௌனத்தை உடைத்து பேசத்தொடங்குவாள். ஆனால், இன்று அவளுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. இப்போது ஏதாவது பேசினால் அது ஏதோ மோசமான ஒன்றை உருவாக்கிவிடும் என்று அவளுக்குள் ஏதோவொன்று சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால் அவள், பேசாமல் தனக்கும் மோகனுக்கும் உணவைப் பரிமாறிவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“அத்தை, நீங்க ஏன் எப்பவும் என்னோட அம்மா அப்பா பத்தி எதுவுமே பேசுறது இல்லை?” என்று சட்டென்று கேட்டான் மோகன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கலைவாணி பட்டென்று தட்டில் வைத்தக் கையுடன் உறைந்து நின்றாள். அங்கே முன்பிருந்ததை விட அதிகமான மௌனம் வந்து குடியேறியது. கடிகாரத்தின் டிக் டிக் ஒளியை விட வேறெதுவும் கேட்கவில்லை.

அத்தை பேசத் தொடங்கினாள், “ஏன் மோகன் இன்னைக்கு திடீர்னு அவங்களைப் பத்தி கேட்குற?” என்று கேட்டாள்.

“சும்மா தான் அத்தை. கேட்கணும் போல இருந்துச்சு. அதன் கேட்டேன்” என்றான்.

“சும்மா” என்ற வார்த்தைக்குள் தன் நிம்மதியை குழைக்கக் கூடிய ஏதோவொன்று ஒளிந்திருப்பதை கலைவாணி உணர்ந்து கொண்டாள். அவர்களது சுவற்றில் கருப்புச் சட்டமிட்டு மாட்டியிருந்த மோகனுடைய அப்பா அம்மாவின் புகைப்படத்தை ஒரு நிமிடம் பார்த்தாள். அந்த ஃபோட்டோவில் சுற்றிலும் நீல பச்சைக் கடலும் தெளிந்த நீல வானமும் சூழ்ந்திருக்க. கடல் காற்றில் களைந்த கூந்தலை அவனது அம்மா மேக்னா தன் கைகளால் ஒதுக்கிக் கொண்டே இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அவங்களைப் பத்தி பேசுறது, எனக்கு ஒன்னும் ஈஸி இல்லை மோகன். அவங்க ரொம்ப நல்லவங்க. அவர்களைப் பத்தி நினைச்சாலே எனக்கு கஷ்டமா இருக்கு. அவங்க ஏன் நம்மள விட்டுட்டுப் போனாங்கன்னு கோவமா இருக்கு. அதனால தான் நான் எதுவும் பேசுறது இல்லை. இதெல்லாம் உனக்கு இப்போ சொன்னா புரியாது.” என்று சொல்லிவிட்டு தன் கண்ணின் ஓரத்தில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

அவள் சொன்னது எதுவும் அவனைப் பாதிக்க வில்லை. அவன் அவள் சொல்வதை மனதால் கேட்கவில்லை, அறிவால் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அவங்களைப் பத்தி ஏதாவது சொல்லுங்க அத்தை. கேட்கணும் போல இருக்கு” என்றான்.

“நீ கேட்கிறதுனால சொல்றேன் மோகன். உன்னோட அப்பா அம்மா மாதிரி ஒரு கப்புள்-அ யாரும் பாத்திருக்க மாட்டாங்க. ஒருத்தர் மனசுல என்ன நினைக்குறாங்கன்னு இன்னொருத்தர் சொல்லாமலே புரிஞ்சுக்கு வாங்க. ரொம்ப நல்ல மனுஷங்க.

அப்போ, நீ குட்டிப் பையன். ஒரு ஆறு மாசம் இருக்கும். நான் அப்போ தான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். சம்மர் ஹாலிடேல்ல நீ, நான், அண்ணன், அண்ணி எல்லோரும் கோவளம் பீச் போயிருந்தோம்.

நான் அப்போ லைட் ஹவுஸ் மேல நின்னு பார்க்கணும்னு சொன்னேன். 

உங்கம்மா, “அடப் போடி, என்னால யெல்லாம் அத்தனை படி ஏற முடியாது. நீ வேணும்னா, உங்கண்ணனை கூட்டிட்டு போயிட்டு வா” ன்னு சொன்னாங்க.

நான், “அதெல்லாம் முடியாது. ஃபேமிலியா வந்திருக்கோம் ஃபேமிலியா தான் போகணும்” சொல்லி அடம் பிடிச்சேன். 

அதனால உங்கப்பா கதிரவன், “சரி, நீ எங்க குழந்தையை தூக்கிக்கோ. நான் என் குழந்தையை தூக்கிக்கிறேன்னு சொல்லி, உங்கம்மாவை உப்பு மூட்டை தூக்கிட்டு லைட் ஹவுஸ் படி ஏறுனாரு. அந்தப் படில ஒரு நேரத்துல ஒருத்தர் மட்டும் தான் ஏறவோ இறங்கவோ முடியும். ஆனா, உங்கப்பா அந்தப் படியிலேயே உங்கம்மாவை தூக்கிட்டுப் போறதப் பார்த்து எங்க கூட வந்த மத்த டூரிஸ்ட் எல்லாம் எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு போனாங்க.

ஆனா, உன் அப்பாவும் அம்மாவும் எப்பவும் மத்தவங்க சிரிக்கிறதப் பார்த்து சங்கடமே பட மாட்டாங்க. அப்படியொரு லவ் பேர்ட்ஸ். எனக்கு தான் கூச்சமா இருந்துச்சு. நான் உன்னைத் தூக்கிட்டு லைட் ஹவுஸ் மேல போனேன். அங்க தான் உன்னோட அம்மாவும் அப்பாவும் இந்த ஃபோட்டோவை எடுத்தாங்க என்று சுவற்றில் மாட்டியிருந்த ஃபோட்டோவைக் காட்டினாள்.

லைட் ஹவுஸ் மேல நின்னிட்டு எல்லோருமே ஜாலியா வேடிக்கை பார்த்துட்டு இருந்தோம். அப்போ திடீர்னு உன் அப்பா திரும்பி கடலைப் பார்த்தாரு. அங்க ஒரு சின்னப் பொண்ணு கடல்ல தத்தளிச்சிட்டு இருந்துச்சு. மூழ்கி மூழ்கி எழுந்துட்டு இருந்துச்சு. கீழ கரையில் இருந்த யாருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. அப்போ பார்த்து அங்க லைஃப் கார்டு யாருமே இல்லை.

உடனே, உன் அப்பா அந்த லைட் ஹவுஸ்ஸ விட்டு வேகமா குதிச்சு. கடல்ல இறங்கி அந்தப் பொண்ண காப்பாத்துனாரு. அவங்க ஏதோ ஜப்பானீஸ் குடும்பம் போல வெக்கேஷன் க்கு வந்திருப்பாங்க போல. வந்த இடத்தில அந்தப் பொண்ணு தெரியாம கடல்ல ஆழம் அதிகமா இருக்கிற இடத்துக்கு போயிருச்சு.

அப்புறம் உன்னைக் கைல வைச்சிட்டு நானும், உன் அம்மாவும் கீழ இறங்கி வந்தோம்.

வந்ததும் உங்கம்மா உன் அப்பாவைப் பார்த்து, “ஏன்டா, இப்படித் தான் உன்னை நம்பி வந்தா பாதியில விட்டுட்டுப் போவியா? மேல தூக்கிட்டுப் போனியே கீழ யாரு தூக்கிட்டு வருவா?” ன்னு சொல்லி உங்கம்மா சிணுங்கிட்டு இருந்தாங்க.

“சரி சரி, கோவப்படாதக் குட்டி. நான் உனக்கு பிரியாணி வாங்கித் தரேன்”னு சொல்லி உங்கப்பா உங்கம்மாவை சமாதானப் படுத்திட்டு இருந்தாரு.

அப்போ அந்த ஜப்பான் குடும்பமே எங்க கிட்ட வந்து நன்றி சொல்லிட்டுப் போகும் போது அந்த சின்னப் பொண்ணு, உன் அப்பாகிட்ட ஒரு பேப்பர்ல பண்ணுன வெள்ளைக் கொக்கை கொடுத்திட்டு போச்சு. உன் அப்பா அந்தக் பேப்பர் கொக்கை ரொம்ப நேரம் பாத்திட்டு இருந்தாரு.”

கலைவாணி ஒரு பெரு மூச்சை விட்டாள், “அன்னைக்கு தான் உன் அம்மா அப்பாவை கடைசியா உயிரோட பார்த்தது.” என்று சொல்லிவிட்டு கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்தாள்.

இது மோகன் அவர்களைப் பற்றி பலமுறைக் கேட்ட கதை தான். எப்போதும் அவனுக்கு இதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், இன்று நடந்த நிகழ்வுகள் அவனை ஏதோ பதட்டமாகவே வைத்திருந்தது. அவனுக்கு அவனுடைய தந்தையின் பால்யத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தான். அதை விட முக்கியமாக கலைவாணி தான் அவனுடைய உண்மையான அத்தையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான். உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதே நேரம் அத்தை மனதும் காயப்படக் கூடாது. அதற்கு இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று தோன்றியது.

மோகன், “அத்தை அழுகாதீங்க. நான் சும்மா தான் கேட்டேன். நாம வேற ஏதாவது ஜாலியா பேசலாம். அப்பாவும் நீங்களும் சின்ன வயசுல எப்படி இருந்தீங்க? உங்க ரெண்டு பேருல யாருக்கு உங்க வீட்ல செல்லம் அதிகம்? நீங்களும் அப்பாவும் சின்ன வயசுல நிறையா சண்டை போடுவீங்களா? அப்பா உங்களுக்காக என்னென்னவெல்லாம் பண்ணியிருக்காரு?” என்று கேட்டுக்கொண்டே அவன் அத்தையின் முகத்தை உற்று கவனித்தான். அவன் கேட்க கேட்க அத்தை எதையோ நினைவு கூற முயன்று அது முடியாமல் தவிப்பது போல இருந்தது.

திடீரென, “போதும் மோகன், நாம இந்த விஷயத்தை இதுக்கு மேல பேச வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு நாற்காலியில் இருந்து எழுந்தாள்.

“நீ சாப்பிட்டு போய் தூங்கு” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அவளது அறைக்கு சென்றாள்.

அத்தையின் தடுமாற்றம் அவனுக்கு இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவனும் சாப்பிடாமல் தட்டை வைத்துவிட்டு கை கழுவி விட்டு தன் அறைக்குச் கிளம்பினான். என்றுமில்லாமல் அன்று அந்த சாப்பாட்டு மேஜை தன் மகிழ்ச்சியை இழந்து போயிருந்தது.

மோகன் தனது அறைக்கு வந்து கதவை மூடிவிட்டு அவனது கட்டிலில் அமர்ந்தான். ஜன்னலில் ஒரு வெள்ளை நிறப் புறா அவனுக்காக காத்திருந்தது.