19. பேகன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்…
பொதினி மலையின் தென்றல் காற்று மெல்ல அந்த அரண்மனையின் மாடத்தை தழுவிச் சென்றது. வையாவிக் கோப்பெரும் பேகன் கையில் வைத்திருந்த சுரக்காய் குடுவையில் இருந்த ஐவகைக் கள்ளை ஒரு மிடறுக் குடித்து விட்டு தூரத்தில் இருந்த ஒரு மலை முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"எந்த *விரலியரை நினைத்து இப்படி ஒரு ஆழ்ந்த சிந்தனையோ?" என்று கேட்டபடி பேகனின் மனைவி கண்ணகி அந்த மாடத்தில் நுழைந்தாள்.
"இப்பிறவியில் என் சிந்தை கூட இன்னொரு பெண்ணைத் தொடாது, என்று தெரிந்தும் கூட இப்படி ஒரு கேளிப் பேச்சு தேவைதானா?" என்றான் பேகன்.
"ஆஹ், போதும் போதும். இந்தப் பேச்செல்லாம் மாதவி என ஒருத்தி வரும் வரை தான். அதன் பின் உங்கள் கண்களுக்கு நான் பழைய மனைவி தானே? ஆண்கள் புத்தி எனக்குத் தெரியாதா?"
"அடடா, ஒரு ஐந்து நிமிடம் கணவன் எதையாவது தீவிரமாக சிந்தித்தால் உடனே அது இன்னொரு பெண்ணைப் பற்றி தான் இருக்க வேண்டுமா? நீ மட்டுமா அல்லது அனைத்துப் பெண்களுமே இப்படியா?"
"ம்... கணவன் மீது காதல் கொண்ட அத்தனைப் பெண்களும் அப்படித்தான்." என்றபடி கண்ணகி பேகனது இடுப்பைக் கிள்ளினாள்.
"ஐய்யோ கிள்ளாதே கண்ணகி. நான் ஒன்று சொல்கிறேன் அதனைக் கேள். நீ கண்ணகி தான், ஆனால், நான் ஒன்றும் கோவலன் கிடையாது. மனைவி என்று இருக்கிற ஒரு பெண்ணை சமாளிப்பதே இங்கு பெரும் வேலையாக இருக்கிறது. இதில் இன்னொரு பெண் வேறா?"
"ஓஹோ, அப்படியென்றால் நான் உங்களை அந்த அளவு கொடுமை செய்கிறேன் என்கிறீர்களா?"
பெரும்படை கொண்டு மூவேந்தர் வருகிற போதிலும் பெரும்பகை கொண்டு வான் திறந்து வருகிற போதும் கழல் அணிந்து களிறு மீதேறி பகை முடிக்க முடியும். ஆனால், ஊடல் கொண்ட காதலியின் கண்களை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் பேகன் குழம்பினான். அதனால், ஆண்டாண்டு காலமாக ஆண்கள் கையாளுகிற உத்தியைக் கையாண்டான்.
மெல்ல கண்ணகியை இறுக அணைத்து அவளது கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கலியில் இருந்த மயில் முகப்பைத் தொட்டு அதை வருடினான்.
"என்ன புதிதாகப் பார்ப்பது போல பார்க்கிறீர்கள்?" என்றாள் கண்ணகி.
"இல்லை இது என்னவென்று பார்க்கிறேன்"
"நீங்கள் தானே பொற்கொல்லரிடம் சொல்லி அறுவடை நாளுக்காக இதனைச் செய்து எனக்கு அணிவித்தீர்கள்?"
"இல்லை. நான் அதைச் சொல்ல வில்லை. ஒரு மயில் தன்னைத் தானே மயில் என்று சொல்லிக் கொள்ள வரைந்து கொண்ட அடையாளச் சின்னம் போலவே இருக்கிறது." என்றான் பேகன்.
"போதும்... போதும்... பேசிப் பேசியே இந்தப் பேதையை மயக்கி விடுகிறீர்கள்" என்று சொல்லி அவள் கன்னம் சிவந்தாள்.
பெண் போதுமென சொன்னதும் உடனே நிறுத்துபவன் ஒரு மிகப்பெரிய தோல்வியாளன். போதும் போதும் என்று சொன்ன பின்பும் அள்ளி அள்ளிக் கொடுப்பவன் தான் ஒரு கவிஞனாகவோ அல்லது காதலனாகவோ இருக்க முடியும்.
பேகன் கொட்டத் தொடங்கினான், "நான் மொழியில் வைத்த சிறு மையிலேயே மயங்கி விட்டேன் என்கிறாயே, நீ உன்விழியில் வைத்த மையில் நான் எப்படி மயங்கிக் கிடக்கிறேன் தெரியுமா?"
"உங்களிடம் பேசி வெல்ல முடியுமா?, இப்போதாவது சொல்லுங்கள். எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தீர்கள்?"
"சொல்கிறேன். என் ஆராய்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. எனக்குத் தேவையான அனைத்தும் எனக்குக் கிடைத்து விட்டன. இன்னும் ஒரே ஒரு பொருள் மட்டும் தான் தேவை" என்றான் பேகன்.
"ஹ்ம்..." ஒரு பெருமூச்சு விட்டாள் கண்ணகி.
"இன்னும் எத்தனை நாளுக்கு இந்த ஆராய்ச்சி? ஒரு நாளின் பாதியை குடிகளின் பிரச்சனைகளை தீர்க்க எடுத்துக் கொள்கிறீர்கள். மீதி நாள் முழுக்க ஆராய்ச்சிக்காக, இதில் எனக்கான நேரமென்பது எங்கே இருக்கிறது? சொல்லுங்கள்."
"அன்பே, என்ன இது சிறு பிள்ளைப் பேச்சு? அன்னைக் குழந்தையை கொஞ்சும் போது என்னை ஏன் அணைக்கவில்லை என கணவன் கேட்பது போலுள்ளது.
என் குடிகள் என் மகவுகள் இல்லையா? என் மகவுகள் என்றால் அவர்கள் உனக்கும் பிள்ளைகள் தானே?
என் உளமும் காதலும் உனக்கே உனக்கு மட்டும் தான். ஆனால், அறிவும் உழைப்பும் இந்த மக்களுக்கானது இல்லையா?
நான் என்ன தரையில் வாழ்கிற அரசனா? மந்திரியிடம் மாதம் மும்மாரி பொழிந்ததா என்று கேட்டு விட்டு அந்தப்புறத்தில் சென்று நேரம் கழிக்க? நான் இந்தக் குடிகளின் தலைவன். என்னுடையது பதவி அல்ல. பொறுப்பு. எல்லாம் தெரிந்த உனக்கு இதனை நான் சொல்ல வேண்டுமா?" என்றான் பேகன்.
"எனக்குப் புரிகிறது. ஆனால், நான் அனைத்து நேரமும் அன்னையாகவே இருக்க முடியாது தானே. சில நேரங்களில் காதலியாக இருக்க ஆசைபடுவது ஒன்றும் தவறில்லை தானே?
அதுவும் நம் குடிகளுக்காக நீங்கள் வேலை செய்வது எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த ஆராய்ச்சி எதற்காக?" என்று கேட்டாள் கண்ணகி.
"அதுவும் நம் குடிகளுக்காகத் தான்"
"அதற்கு இப்போது என்ன தேவை வந்தது?"
பேகன் தனது தங்கக் காப்பை தனது முழங்கைக்கு ஏற்றி விட்டபடி "ஒற்றுச் செய்தி வந்திருக்கிறது. போர் நம்மை எப்போது வேண்டுமானாலும் சூழலாம். அப்படிச் சூழ்ந்தால் நம்மால் ஒரு வீரனைக் கூட இழக்க முடியாது."
"எனக்குப் புரியவில்லை அது எப்படி உங்களால் மரணத்தை வெல்ல முடியும்?"
"இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை யாராலும் மரணத்தை வெல்ல முடியாது. நான் நடக்க இருக்கிற இந்தப் போரில் அதனை நம் பக்கம் கொஞ்சம் வராமல் தடுக்கப் போகிறேன் அவ்வளவு தான்."
"ஆனால், எதற்காக இங்கொரு போர் வர வேண்டும்?" என்றாள் கண்ணகி.
"பேராசை" என்றான் பேகன்.
"சிறிது நேரம் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தேன். ஆனால், நீங்கள் ஏதேதோ சொல்கிறீர்கள். தரைவாசிகள் நகரில் மாட மாளிகைகள், தங்கம் கொழிக்கும் நகர வீதிகள், அரபு தேசக் குதிரைகள், யவனத் தேறல்கள் என சுகத்தில் ஊறி திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேராசைப் படுமளவிற்கு இந்தக் கானகத்தில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள் கண்ணகி.
"கண்ணகி, இந்தக் கானகம் நம்முடைய அன்னை. நமக்குத் தேவையான அனைத்தையும் இந்த நிலம் நமக்கு அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
நான் என் கால் விரலால் இந்த நிலத்தை கொஞ்சம் கிளறுகிறேன். நீ அதில் ஒரு தானியம் இடுகிறாய். நிலம் நமக்கு அந்த தானியத்தை நூறு மடங்காக திருப்பித் தருகிறது. நாமும் நம் குடிகளும் வயிறாற உண்கிறோம். யாரும் இதற்காக நிலத்தைக் கட்டிக் கொண்டு இங்கேயே இருப்பதில்லை. காட்டுக்குள் திரிகிறோம். அருவியோடு அருவியாய் விழுகிறோம். மானோடு மானாக ஓடுகிறோம். அவ்வப்போது அவற்றையே கொஞ்சம் வேட்டையாடுகிறோம். அப்படி வேட்டையாடுவதையும் அனைவருக்கும் சமமாக கூறு பிரித்து அன்றே தின்று முடிக்கிறோம். இங்கிருக்கிற மிருகங்களுக்கும் இந்தக் காட்டில் பங்கு உள்ளது என நாம் அனைவரும் உணர்கிறோம். நம்முடைய ஏழாவது தலைமுறை வாழ வேண்டுமென இன்றிருக்கிற ஒரு சக மனிதனின் உணவை நாம் பறித்து சேமித்து வைப்பதில்லை.
ஆனால், கீழே தரையில் நடப்பதே வேறு. அவர்கள் தங்கள் நிலத்தை கலப்பை கொண்டு கீறுகிறார்கள். உரத்தை அள்ளிக் கொட்டி அதிகம் கொடு அதிகம் கொடு என அன்னையிடம் சண்டை இடுகிறார்கள். தானாக சுற்றித் திரிந்த கோழியையும், ஆடுகளையும், மாடுகளையும் பண்ணை விலங்குகள் என ஆக்கி சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் செய்து கிடைத்த உணவை நிம்மதியாக உண்டு மகிழ்ச்சியாக இல்லாமல் அந்த நிலத்தைக் கட்டிக் கொண்டு அதனை யாரும் பிடிங்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எங்கேயும் செல்லாமல் அதே நிலத்தில் இருந்து அவர்களுடைய சுதந்திரத்தையும் இழந்து ஒரு நாள் இறந்தும் போகிறார்கள்.
அப்படிச் சேர்த்த உணவையும் அவர்கள் அனைவரும் சமமாக பிரித்து உண்பதில்லை. மக்களில் ஒரு பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களை சாதி என்ற பெயரால் அடிமைகள் ஆக்கி, அவர்களுடைய உழைப்பைத் திருடி. அந்த மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உணவில் ஒரு சிறு பகுதியை மட்டும் ஊதியம் எனக் கொடுத்து ஒருவரை ஒருவர் மாமிசமென தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னேனே பண்ணை விலங்குகள் அதை விட மோசமாக இந்த மக்களை அவர்கள் நடத்துகிறார்கள். இந்த மக்கள் சுரண்டுபவர்களை எதிர்த்து கலகம் செய்வதை தடுப்பதற்காகவே அரசன் என ஒருவனை வைத்திருக்கிறார்கள்.
இதனை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் அன்னை பூமியின் மாரிலிருந்து பால் குடிக்கிறோம். ஆனால், அவர்கள் அன்னையின் மாரைப் பிளந்து ரத்தத்தைக் குடிக்கிறார்கள். இப்போது அவர்களது கண் நம் நிலத்தின் மீது விழுந்துள்ளது."
பேகன் இதனைப் பேசிக் கொண்டிருந்த போது, அந்த மாடத்தில் ஒரு பெரும் தென்றல் வந்து வீசியது. ரத்தம் கொதிக்கப் பேசிக்கொண்டிருந்த பேகனுக்கு அது மிகுந்த இளைப்பாறலைக் கொடுத்தது.
பின்னர் தன்மையான தொணியில் தொடர்ந்தான்.
"தரைவாசிகள் முழுக்க முழுக்க வியாபாரமயமாகி விட்டார்கள். இனி வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரைக் கூட விற்கும் நிலைக்கு வருவார்கள். அவர்கள் வியாபாரத்தை பெருக்க கப்பல்கள் தேவை. அதற்கு தேவையான மரங்களை எடுத்துச் செல்ல அவர்கள் இங்கு வருவார்கள்.. மரங்களை வெட்டி எடுத்துச் சென்ற பின் அங்கே முட்டையிட வருகிற வலசைப் பறவைகள் மரம் எங்கே என்று கேட்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் பட மாட்டார்கள். சதுரங்கக் காய்க்களை செய்ய யானைத் தந்தம் வேண்டுமென ஆசைப்படுபவர்கள். அதற்காக ஒரு யானை கொல்லப்படுவதைப் பற்றி அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. அவர்கள் ஒரு நாள் நிச்சயம் நம் கானகம் நோக்கி வருவார்கள்.
அந்தப் போரில் காயம் படுகிற நாம் வீரர்கள் அனைவரையும் உடனே குணப்படுத்தக் கூடிய ஒரு ஒளடதத்தை தான் நான் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
அது ஒரு மாய மான் போல நான் பிடித்து விட்டேன் என்று நினைக்கிற போதெல்லாம் என்னை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறது. ஆனாலும், நான் துரத்திக் கொண்டு தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட அதனை நான் நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். எனக்குத் தேவை ஒரே ஒரு பொருள் தான்." என்றான் பேகன்.
"அது என்ன பொருள் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டாள் கண்ணகி.
"இதோ, நம் முன்னால் தான் இருக்கிறது" என அவர்கள் முன் இருந்த மலையைக் காட்டினான் பேகன்.
கண்ணகி வியப்புடன் அந்த மலையைப் பார்த்தான். அந்த மலை அத்தனை ரகசியங்களையும் தன்னுள் புதைத்து அமைதியாக நின்று கொண்டிருந்தது.
* விரலியர்- பாணர் குலத்தைச் சேர்ந்த பெண்கள். பாடுவதில் சிறந்தவர்கள்.