Yayum Yayum - 18 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 18

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 18

18. அசாதரணமான எதிரி

மோகன் அன்று முழுவதும் அவளுடன் பேசிய நிமிடங்களையே நினைத்தபடி அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். மாலை 7 மணி தான் என்ற போதிலும் அங்கு ஏனோ அளவுக்கு அதிகமான இருட்டு இருந்தது. நகரின் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதனால் அது முழு இருளாக இல்லாமல் ஒரு முக்கால்வாசி இருளாக இருந்தது.

அன்று ராகுல் அன்க்கிள் பேசியதை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

"வஞ்சம் இருக்கிற மனதில் எப்போதும் கவித்துவம் இருக்காது"

அவன் தன் மனதைத் தோண்டிப் பார்த்தான். மாயாவைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் அவன் மனதில் எப்போதும் கவிதை கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஆனால், அவனால் எழுதத் தான் முடியவில்லை. அப்போது அவனுக்குத் தோன்றியது, 'காதல் இருக்கிற மனதில் எப்போதும் கவிதை மட்டுமே இருக்கும். அது மட்டுமல்ல காதலிக்கிற அனைவருமே கவிதை எழுதத் தெரியாத ஒரு கவிஞன் தான்.'

இதையெல்லாம் நினைத்துக் கொண்டு அவன் நடந்துகொண்டிருந்த போது அவனுக்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஊற்று ஊற்றத் தொடங்கியது. மாயாவிடம் இருந்து 'ஹாய்' என்ற மெசேஜ் வருவதற்கு ஒரு வினாடிக்கு முன்பே இது போன்ற ஒரு மெசேஜ் தனக்கு வருமென்பதை மோகன் உணர்ந்து கொண்டான்.

அவனிடம் மாயாவின் கைப்பேசி எண் இருந்தது. ஆனால், அவன் ஒரு போதும் அவளது எண்ணிற்கு அழைக்கவில்லை. ஏனென்றால் ஒருவேளை அவள் அவனை பற்றி தவறாக ஏதாவது நினைத்து விட்டாள் என்ன செய்வது. அவன் அவளுக்கு நண்பனாகவும் விரும்பவில்லை. அப்படி ஒருவேளை அவன் நண்பனாக மாறிவிட்டால் பின்னர் நிரந்தரமாக அவன் ஃப்ரெண்ட் ஜோனில் விழுந்து விட வாய்ப்பிருந்தது. அப்படி இருக்க அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. அவளுடன் இருந்தால் அது காதலனாக மட்டும் தான் வெறும் நண்பனாக பாய் பெஸ்ட்டியாக என எதுவும் இல்லை. அதற்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என அவன் முடிவெடுத்திருந்தான்.

அவளிடமிருந்து அவனுக்கு "ஹாய்" என்ற மெசேஜ் வந்தது. அதைப் படித்து விட்டு அவன் பூமிக்கும் வானுக்கும் சந்தோஷத்தில் குதிக்கத் தொடங்கினான். ஆனால், அது சில நிமிடங்கள் கூட நிலைக்க வில்லை. அந்த இருளில் அவன் நடந்து கொண்டிருந்த சாலையின் பக்கவாட்டில் இன்னொரு சாலை குறுக்காக புறப்பட்ட இடத்தில் இருந்து ஒரு நிழல் தோன்றியது. அந்த நிழலின் முடிவில் ஒரு மர்ம மனிதன் நின்று கொண்டிருந்தான்.

நல்ல பாலீஷ் செய்யப்பட்ட ஷூக்கள். மடிப்பு களையாத நீல நிறப் பேண்ட். அதற்கு மேல் முழுக் கை பட்டன் போடப்பட்ட டக் இன் செய்யப்பட்ட வெள்ளை நிற சட்டை. அவனது இடது கையில் ஒரு பழைய மாடல் அனலாக் வாட்ச், அது சரியான நேரத்தைக் காட்டவில்லை. நொடி முள் மேலும் கீழும் ஆடிக் கொண்டே இருந்தது. வலது கையில் ஒரு வெள்ளிக் காப்பு.

"ஹலோ மோகன். நான் மயில்வாகனன். நான் எங்க வேலை செய்றேன்னு இப்ப நீ தெரிஞ்சுக்க வேண்டாம்." என்றான்.

மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை, "உங்களுக்கு எப்படி என் பேரு தெரியும்?" எனக் கேட்டான்.

"பேரு மட்டுமில்ல மோகன், உனக்கு ஹாக்கி விளையாடத் தெரியாது ஆனா ஹாக்கி டீம்ல இருக்க. நடிக்கத் தெரியாது ஆனா டிராமா டீம்ல இருக்க. உன் அத்தை கலைவாணி தான் உன்னைச் சின்ன வயசுல இருந்து வளர்த்திட்டு வராங்க. உன்னைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். ஏன் உன்னைப் பத்தி உனக்கே தெரியாதது கூட எனக்குத் தெரியும்" எனச் சொன்னான் மயில்வாகனன்.

மோகன் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"உன் கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வா" என்றான் மயில்வாகனன்.

"இல்லை. நான் வீட்டுக்குப் போகணும். அத்தை எனக்காக காத்திட்டு இருப்பாங்க." என்றான் மோகன்.

"உன் அத்தையை விட, உன் வீட்டை விட நிறையா முக்கியமானது இருக்கு. ஒழுங்கா என் கூட வா" என்றான் மயில்வாகனன்.

"ஓஹோ, எனக்கு இப்போ புரிஞ்சு போச்சுங்க அண்ணா நீங்க யாருனு. இந்த நேரத்துல டக் - இன் பண்ணிட்டு பாலிஷ் பண்ணின ஷு போட்டுட்டு நீங்க வரும் போதே எனக்கு தெரிஞ்சிருக்கணும்.

அண்ணா, நீங்க ஏதோ எம்.எல்.எம் பண்ற ஆளு தான? இந்த சோப்பை வாங்கு பாயிண்ட் சேரும், அப்புறம் சொந்தமா தீவு தரேன்னு சொல்லுவீங்க. இல்லாட்டி கூட படிக்கிற நாலு ஃப்ரண்ட்ஸை இதுல சேர்த்து விடுங்க ஒரு நாளைக்கு முப்பதாயிரம் சம்பாதிக்கலாம் னு சொல்லப் போறீங்க கரெக்ட்டா?

சாரிங்க ண்ணா, எனக்கு இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் வரட்டா?" என்று சொல்லிவிட்டு மோகன் அங்கிருந்து கிளம்பினான்.

மயில்வாகனன் அவனது கையைப் பிடித்தான். 

"ண்ணோவ் கையை விடுங்க ணா" என்றான் மோகன்.

அவன் சொல்வதைக் கேட்காமல் மயில்வாகனன் மோகனது கையை பின்பக்கமாக வளைத்து விலங்கைப் போட முயன்றான்.

சராரென்று உதறிக் கொண்டு மோகன் அங்கிருந்து ஓட முயன்றான்.

மயில்வாகனன், "இது வேலைக்கு ஆகாது" என்று முடிவு செய்து ஓங்கி மோகனது வயிற்றில் குத்தினான்.

மோகன் வயிற்றில் கையை வைத்துக் கொண்டு குனிந்து அழுதான். மயில்வாகனன் அவனது முதுகைத் தொட்டான். திடீரென அவன் எதிர்பாராத நேரத்தில் மோகன் மயில்வாகனனது முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

மயில்வாகனன் அவனது தாடையைப் பிடித்துக் கொண்டு மெல்லச் சிரித்தான். மோகன் வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தான். மயில்வாகனன் அவனை நோக்கி ஓடி கொஞ்சம் விலகி நின்று அவன் காலை இடறி விட்டான். பின்னர் கீழே விழுகப் போன மோகனது கழுத்தைப் பிடித்து அவனைத் தலைக்கு மேலே தூக்கினான். மோகன் வேகமாக மயில்வாகனனுடைய முகத்தில் எட்டி உதைத்தான். மோகனுடைய கழுத்தைப் பிடித்திருந்த மயில்வாகனன் அவனைக் கீழே போட்டு விட்டு தள்ளி விழுந்தான். மயில்வாகனனுடைய கண்களில் அதிகக் கோபமும் அவனது வாயில் கொஞ்சம் ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது.

மயில்வாகனன் தனது காலால் ஓங்கி உதைத்தான். மோகன் சற்றுத் தொலைவில் தள்ளி விழுந்தான்.

இனி சண்டை போட்டால் மட்டும் தான் இங்கிருந்து போக முடியும் என்பதை மோகன் உணர்ந்து கொண்டான். மோகன் தரையிலிருந்து எழுந்து நின்றான். மயில்வாகனன் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்து ஓங்கி அவனது முகத்தில் குத்த முயன்றான். மோகன் சடாரென்று குத்த வந்தக் கையைப் பிடித்தான். அந்தப் பிடியிலிருந்த உறுதி மயில்வாகனனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியை அவன் மறைப்பதற்குள் மோகன் அதனைக் கண்டு கொண்டான்.

மயில்வாகனன் சுதாரிப்பதற்குள் மோகன் அவனது கையைப் பிடித்து இழுத்து தனது முழங்கை முட்டியால் அவனது முகத்தில் ஒரு அடி அடித்தான். பின்னர் அவனது காலால் சுழட்டி ஓங்கி மயில்வாகனது காதிற்கு பின்புறம் அடித்தான். அந்த அடியில் மயில்வாகனன் பொத்தென்று கீழே விழுந்தான். அப்போது ஒரு காகம் யாரும் எதிர்பாராத நேரத்தில் மோகனுடைய முகத்தில் வந்து அடித்தது.

மோகன் சற்றுத் தள்ளி நின்றான்.

மயில்வாகனன் எழுந்து நின்று, அந்தக் காகத்தைப் பார்த்து,

"கோபி, நீங்கெல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க இது என்னோட சண்டை நான் பார்த்துக்கிறேன்" என்றான்.

காகம் அப்போது மோகனை விட்டு விலகி மயில்வாகனனுக்கு பின்னால் இருந்த ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்து கொண்டது.

மோகன் எதுவும் புரியாமல் அந்த மரத்தைப் பார்த்தான். அந்த இரவில் சம்பந்தமே இல்லாமல் அங்கு ஏகப்பட்ட காகங்களும், குருவிகளும், சில ஆந்தைகளும் இருந்தன. ஒரு மயில் கூட இருந்தது.

ஒரு அசாதரணமான நேரத்தில் ஒரு அசாதரணமான ஒரு எதிரி என மோகனுக்குத் தோன்றியது. இந்தச் சீனிப்பட்டாசு எப்படி இப்படி வெடிக்கிறது என மயில்வாகனனுக்கு குழப்பமாக இருந்தது.

இருவருமே கண் பார்வையினாலே பரஸ்பரம் சண்டைக்கு ஒப்பந்தம் ஆகி தயாராகினர். மோகன் முதலில் ஓங்கித் தன் காலால் மயில்வாகனனுடைய காதில் அடிக்க முற்பட்டான். அப்போது மயில்வாகனன் அதனைத் தடுத்து மோகனுடைய முகத்தில் குத்தினான். இப்போது மயில்வாகன் குத்த மோகன் தடுத்துக் குத்தினான். மோகன் குத்த மயில்வாகனன் தடுக்க, மயில்வாகனன் குத்த மோகன் தடுத்து அடிக்க சண்டை சரி நிகராக போய்க் கொண்டிருந்தது. மோகன் களைப்படையத் தொடங்கினான்.

மயில்வாகனன் ஓங்கி மோகனுடைய நெஞ்சில் மிதித்தான். மோகன் சிறிது தூரம் தள்ளிப் போய் விழுந்தான். அவனுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அவனுடைய கோபம் அவன் கட்டுப்பாட்டை மீறி அவனுள் பொங்கியது. மோகன் மயில்வாகனனை நோக்கி தனது முஷ்டியை உயர்த்தினான்.அவனது கையிலிருந்து ஒரு மின்னல் ஒளி வெளியேறி வந்து மயில்வாகனனது தலையைத் தாண்டி அந்த மரத்தில் ஓரமாய் அமர்ந்திருந்த மயிலின் மீது போய் விழுந்தது.

அந்த மயில் "க்கௌவுஊண்" என்று ஒரு முறை வலியுடன் அகவி விட்டு அப்படியே கீழே விழுந்தது. மயில்வாகனன் ஓடிச் சென்று அந்த மயிலைப் பார்த்தான்.

"மீரா...மீரா....எழுந்திரு.... கம் ஆன்...எழுந்திரு" என்று கத்தினான். ஆனால், அந்த மயில் மூச்சுப் பேச்சு இன்றி அங்கேயே அசையாமல் இருந்தது. மயில்வாகனனது கண்கள் கோபத்தில் சிவந்தன. இதுவரை நடந்த மொத்த சண்டையிலும் ஒரு இடத்தில் கூட மயில்வாகனன் மோகனை கொல்லவேண்டும் என நினைக்கவில்லை. அவன் மீது பெரிதாக அடிபடாத மாதிரிதான் அவன் இதுவரை மோகனை தாக்கியிருந்தான் ஆனால், இனிமேல் மயில்வாகனனை எந்தவொரு விதியும் தடுக்க முடியாது.

எப்படித் தன் கையிலிருந்து மின்னல் வந்தது. அது எப்படி எதிரே இருப்பவனை விட்டு அங்கிருந்த மயில் மீது பட்டதென குழப்பமாய் இருந்தான். எது எப்படியோ, அங்கு தேவையே இல்லாமல் ஒரு மயிலைக் கொன்று விட்டதை எண்ணி குற்றவுணர்வில் தவித்தான். இப்போது அங்கே அடிபட்டு விழுந்து கிடந்த மயிலைச் சென்று பார்ப்பதா இல்லை. அந்த மர்ம மனிதனை விட்டு ஓடுவதா என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,

மயில்வாகனன் கண்களில் வழியக் கூடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, சிவந்த கண்களுடன் வெறியுடன் மோகனைப் பார்த்தபடி நின்றான். அவன் கண்களாலேயே மோகனை எரித்து விடுபவன் போல இருந்தான்.

தனது வெள்ளிக் காப்பைத் தொட்டபடி "பவர் அப்" என்று சொன்னான். அவனது காப்பிலிருந்து ஒளிரும் வெள்ளை நிறத்தில் ஒரு ஒளி உருவாகியது. பின்னர், அந்த ஒளி மெல்ல வளர்ந்து அவனது உடலை மூடியது. அந்த ஒளி மறைந்தப் பின்னர், மயில்வாகனைது உடலை முழுவதுமாக ஒரு இரும்புக்கவச உடை மூடியிருந்தது. அந்த உடைக்குப் பின்புறம் இரும்பால் ஆன இரு இறக்கைகள் முளைத்தன. அவனது வலது கையில் ஒரு வெள்ளியால் ஆன வேல்க்கம்பு தோன்றியது. அந்த மரத்தில் ஒதுங்கியிருந்த காகங்களும் குருவிகளும் பறந்து வந்து அவனது முதுகுக்குப் பின்னால் அவனைச் சுற்றி வட்டமாக பறந்து கொண்டிருந்தன.

மயில்வாகனன் தனது கவசம் அணிந்திருந்த விரலைச் சொடுக்கினான். உடனே, அங்கிருந்த அத்தனைப் பறவைகளும் மோகனை நோக்கிப் பறந்து அவனைச் சுற்றி வளைத்து. அவனது கைகளையும் கால்களையும் இறுகப் பற்றிக் கொண்டன. இப்போது மோகனால். சிறிதும் அசைய முடியவில்லை.

மயில்வாகனனது கவச முகமூடியின் உள்ளே இருந்த திரையில் எதிரே மோகனது உருவம் தெரிந்தது. மயில்வாகனன் அவனது முகத்தை உற்றுப் பார்த்தான். அந்தத் திரையில் இருந்த குறிச் சின்னம் மோகனது முகத்தை குறிவைத்தது.

பின்னர், மயில்வாகனன் தனது வேல்க்கம்பின் அடிப்பாகத்தை தரையில் ஒருமுறை தட்டி பின்னர் அதை மேலே தூக்கிப் போட்டு அதனை தனது வலக்கையால் பிடித்து மோகனது முகத்தை நோக்கி வீசினான்.

மோகன் அவனது கண்கள் விரிய அவனை நோக்கி வருகிற மரணத்தை அதிர்ச்சியுடன் பார்த்தபடி உறைந்து நின்றான்.