Yayum Yayum - 12 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 12

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 12

12. தியேட்டர்

திருச்செந்தாழை தனது அறைக்கு வந்து பிரம்பு சோஃபாவில் சாய்ந்த படி அமர்ந்து தலையை மேலே பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டான். பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தை திறந்து எழுதத் தொடங்கினான்.

கேள்வி: ஹரீஷ் நல்லவனா?
பதில்: இல்லை

கேள்வி : ஹரீஷ் சாக வேண்டியவனா?
பதில்: அவனோடு சேர்த்து வினோத்தும் சாக வேண்டியவன் தான்.

கேள்வி : எனக்கு இந்தக் கேஸை எடுத்துக்கிறது புடிச்சிருக்கா?
பதில்: இல்லை.

கேள்வி : அந்த நூறுகோடி ரூபாய் பணம் நமக்கு தேவையா?
பதில் : கண்டிப்பா வேணும்.

திருச்செந்தாழை எழுந்து சென்று அவனது புத்தகங்களால் நிறைந்த அறையில் இருந்த ஒரு பேக்கைத் திறந்துப் பார்த்தான். கட்டுக்கட்டாக காந்தித் தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார். விஜயேந்திரன் அவனது அறையைவிட்டு நீங்கிய அடுத்த அரைமணி நேரத்தில் ஒருவன் திருச்செந்தாழையின் வீட்டுக் கதவைத் தட்டி அந்தப் பண பேக்கைத் தந்து விட்டுப் போனான். அவன் இருக்கின்ற அதே ஹவுசிங் போர்டில் பக்கத்து ஃப்ளாட்டில் ஸ்கூல் ஃபீஸ் வெறும் பத்தாயிரம் ரூபாய் கட்ட முடியாமல் கணவன் மனைவிக்கிடையே ஒரு பெரும் சண்டை நடந்தது. இறுதியாக வேறுவழியின்றி அவர்கள் தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வேண்டுமென கேட்டவுடன் அரை மணி நேரத்தில் பணமாக கொடுக்க ஒருவனால் முடிகிறது. அதுவும் ஒரு பொறுக்கியைக் கண்டுபிடிக்க. திருச்செந்தாழை புன்னகைத்து விட்டு அருகே இருந்த பிளாஸ்டிக் நாற்காளியில் அமர்ந்து டேபிள் மீதிருந்த லேப்டாப்பை திறந்தான்.

அந்த லேப்டாப்பில் கூகுள் மேப்பைத் திறந்து, வினோத் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த இடங்களை குறித்துக் கொண்டான். இந்த இடங்களின் ஏதோவொரு இடத்தில் தான் ஹரீஷ் காணாமல் போயிருக்கிறான்.

பிறகு திருச்செந்தாழை தனது சமையலறைக்கு சென்று சட்டென்று செய்யக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட் சட்னி ஒன்றை அரைத்து விட்டு வேகவேகமாய் மூன்று தோசைகளை ஊற்றித் தின்று விட்டு, கருப்பு நிற சட்டையும் காக்கி நிற பேண்ட்டும் அணிந்து கொண்டு கிளம்பினான். இடது கையில் ப்ரெளவுன் லெதர் ஸ்ட்ரேப் கொண்ட வாட்ச் அணிந்திருந்தான். ஆனால் அது சரியான நேரத்தைக் காட்டவில்லை. எந்த முள்ளும் அசையாமல் ஒரே இடத்தில் இருந்தது. வலது கையில் வெள்ளிக் காப்பும் அணிந்திருந்தான்.
இரண்டு கைகளையும் ஸ்டைலாக முழங்கை வரை மடக்கி விட்டிருந்தான். பின்னர், ஒரு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அதை அவனது லேப்டாப் பேக்கில் வைத்தான். அதே பேக்கில் அந்த நோட்டுப் புத்தகத்தையும் வைத்தான். பின்னர், அந்த லெதர் பேக்கை தனது தோள்பட்டையிலிருந்து குறுக்காகப் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

திருச்செந்தாழை தனக்கென ஒரு வேவு பார்க்கும் குழுக்களை வைத்திருந்தான். பிணவறைக் காவலர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், பத்திரிக்கை ஃபோட்டோ கிராஃபர்கள், கல்லூரி மாணவர்கள், அடிமட்ட காவலர்கள் என சிறு சிறு குழுக்கள். தனக்கு வேண்டிய தகவல்களையும் சின்ன சின்ன உதவிகளையும் பெற அவன் அந்தக் குழுக்களை உருவாக்கி இருந்தான்.

அந்த மாதிரி அவன் அமைத்த ஒரு குழு தான், அந்தப் பகுதியின் தூய்மைப் பணியாளர்கள். அனைத்து மக்களையும் அவரவர் வாசல்களுக்குச் சென்று பார்க்கிற வாய்ப்பு அவர்களுக்கு தான் நிறையா இருந்தது.

"அக்கா, இந்த ஏரியாவுல எதாவது வீட்ல ஏதாவது பொண்ணுங்க காணாம போயிருக்கா?"

"அப்படி எதுவும் இல்லை தம்பி. எனக்கு எதுவும் தெரியலயே"

"இல்லைக்கா ஒரு மூணு நாளு நாளைக்கு முன்னாடி எதாவது வீட்ல வித்தியாசமா இருந்ததா? அந்த வீட்டுக்காரங்க ஏதாவது பயந்த மாதிரி இல்லை பதட்டமா இருக்கிற மாதிரி ஏதாவது பாத்தீங்களா?"

"அப்படி எதுவும் இல்லை தம்பி. எப்பவும் போல திமிருத் தனமா தான் இருந்தாங்க. யாரும் பயந்து இருந்த மாதிரி நான் பாக்கல. ஏன்டி நீ ஏதாவது பாத்த?"

திருச்செந்தாழை விசாரித்த கிட்டத்தட்ட பதினொறு தூய்மைப் பணியாளர்களும் இதையே சொன்னார்கள்.

இதே கேள்விகளை அமேசான் டெலிவரி பாய்ஸ், ஃபுட் டெலிவரி பாய்ஸ், கொரியர் காரர்கள், தண்ணிக் கேன் போடுபவர்கள் என அனைவரிடமும் கேட்டுப் பார்த்தான். எல்லோரும் அந்த அக்கா சொன்ன பதிலையே வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

விசாரிக்கிற ஆர்வத்தில் திருச்செந்தாழை அன்று மதியம் சாப்பிடக் கூட மறந்தான். ஒரு பாட்டில் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு தெரு தெருவாக அழைந்து ஒவ்வொருவராக தேடி விசாரித்தான். மொத்த உடலும் களைத்துப் போய் அவனது ஹாலிற்கு வந்து அந்த மூங்கில் சோஃபாவில் அமர்ந்தான். நன்றாக பசித்தது. ஆனால், இரவு உணவு கூட வேண்டாம் பேசாமல் தூங்கி விடலாம் என்று தோன்றியது. அதையும் மீறி இந்தக் கேஸைப் பற்றி யோசிக்க அவனது மூளை நச்சரித்துக் கொண்டே இருந்தது.

எழுந்து கழிவறைக்குச் சென்று முகத்தைக் கழுவி விட்டு சமையலறைக்கு சென்று பால் இல்லாத காஃபியை போட்டு விட்டு அங்கே இருந்த பிரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அந்த சோஃபாவிற்கு வந்தான்.

பின்னர், பிரெட்டை அந்தக் காஃபியில் தொட்டுத் தின்றுகொண்டே அவனது நோட்டை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அன்று நடத்திய விசாரணையின் முடிவில் அவன் அறிந்தது. அந்தப் பகுதியில் குறிப்பிட்ட அந்த நாளன்று எந்தப் பெண்ணுக்கும் எதுவும் தீங்கு நடக்கவில்லை. அப்படி ஏதேனும் நடந்திருந்தாலும் அதற்கும் ஹரீஷுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என்று விளங்கியது.

'வேட்டைக்காரன் வெளியேறிய ஒரு இரவில் யாரும் இரையாகவில்லை என்றால், அந்த வேட்டைக்காரன் தான் வேட்டையாடப் பட்டிருக்கிறான். அந்த வேட்டைக் காரனை வேட்டையாடியது யார்?' என்று யோசித்துக்கொண்டே அவனது நோட்டில் ஒரு பெரிய கேள்விக் குறியை போட்டான். அப்போது, காலை வினோத் சொன்ன மின்னல் அவன் சிந்தையில் விழுந்தது.

வினோத் சொன்ன அந்த மின்னல் இயல்பாக தோன்றியதாக திருச்செந்தாழைக்குப் படவில்லை. ஜூலை ஆகஸ்டு மாதங்களில் இது போன்று மின்னல் விழுகுமென்றால் அதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இந்த இடங்களில் இந்த மாதத்தில் இடி விழுந்ததை திருச்செந்தாழையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இது அவர்களது வேலையாக இருக்குமோ என்று திருச்செந்தாழை யோசித்தான். ஆனால், அது அவர்களாக இருக்கக் கூடாது என அவன் மனம் வேண்டிக் கொண்டது.

எது எப்படியோ, இது மிக நிச்சயமாக மனிதர்களின் வேலை கிடையாது என திருச்செந்தாழை யோசித்தான். எழுந்து அவன் அவனுடைய புத்தக அறைக்கு சென்றான். அங்கே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவல் இருந்தது. அதனை வெளியே எடுத்தான். ஷெல்ஃப்ன் உள்ளே ஒரு சிறுதுளை அளவிற்கு ஒரு கேமரா இருந்தது.அந்தக் கேமராவில் அவன் தனது கருவிழியைக் காட்டினான். மெல்ல அந்த புத்தக அலமாரி திறந்து கொண்டது.

அந்தத் திறப்பின் உள்ளே ஒரு நீண்ட அறை இருந்தது. முழுக்க முழுக்க கருப்பு நிற பளிங்கினால் ஆன அறை. அதனுள்ளே திருச்செந்தாழை நடக்கத் தொடங்கினான். உள்ளே சென்றதும் இடது புறம் இருந்த ஸ்விட்சை ஆன் செய்தான். பின்னர் அவன் உள்ளே நடக்க நடக்க அவன் பக்கவாட்டில் இருந்த ஒவ்வொரு மின் விளக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கியது. அறையின் இறுதியில் தங்கம் போல ஏதோவொன்று ஒளிர்ந்தது.

அவன் அதனருகே சென்றான். அது மாயன் வம்சத்தினர் செய்த போர்ட்டெபிள் ரக புஷ்பக விமானம். திருச்செந்தாழை அதில் ஏறி நின்றுகொண்டு அதனை ஆன் செய்தான். புஷ்பக விமானத்தின் கீழே இருந்த புகை போக்கியில் இருந்து நீல நிற தீ வெளியேறியது. பின்னர் அவனது எதிர்த்திசையில் இருந்த சுவர் திறந்து கொள்ள எதிரே விரிந்து பரவியிருந்த வானம் தெரிந்தது. அந்தத் திறப்பின் வழியே வெளியேறி பறக்கத் தொடங்கியதுமே அவன் விசிப்ளிட்டியை ஆஃப் செய்து விட்டு பறந்தான். இதனால், கீழே இருந்த யாருக்கும் மேலே ஒருவன் பறப்பது தெரியவேயில்லை.

அது நகரத்தின் மத்தியில் இருந்த ஒரு புராதான தியேட்டர். சினிமா முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த போது இந்தத் தியேட்டர் தான் முதன் முதலாக கட்டப்பட்டது. சினிமா காட்டுவதையும் தாண்டி, இங்கு பல திரைப்படங்களை எடுக்கக் கூடிய ஒரு ஸ்டூடியோவாகவும் செயல்பட்டது. பின் நாட்களில் தமிழ் நாட்டையே ஆட்சி செய்த பல முதல்வர்கள் இந்த தியேட்டரில் ஒரு ஆரம்ப நிலை கலைஞர்களாக வேலை செய்துள்ளனர்.

அதன் பின் ஏற்பட்ட கால மாற்றத்தாலும் மக்களின் ரசனை மாறிப் போனதாலும் இந்தத் தியேட்டர் கைவிடப்பட்டு அதன் பின் ஒரு ஸ்பின்னிங் மில்லாக உருவானது. அப்போது கூட அந்த தியேட்டரின் புராதான மதிப்பைக் கருதி அந்தத் தியேட்டர் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் ஆனால் அதே வளாகத்திற்குள் ஸ்பின்னிங் மில் கட்டப்பட்டது. பின்னர் அந்த ஸ்பின்னிங் மில்லும் தொழில் போட்டியால் வீழ்த்தப்பட்டு இப்போது அது வெறும் ஒரு பெயராக மட்டுமேயாகி அந்த நகரில் தேங்கிப் போனது. அந்தத் தியேட்டரின் பேர் அந்தப் பகுதியின் பேருந்து நிலையத்திற்கான பெயராக மாறிப்போனது. ஆனால், அங்கு இருக்கின்ற யாருக்கும் அந்தத் தியேட்டரின் எந்த வரலாற்றைப் பற்றியும் அந்த இடத்தைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை.

அந்த இடம் ஸ்டூடியோவாக இருந்ததற்கு ஆதரமாய் அதன் வாசலில் ஒரு பெரிய தோரணவாயில் இருந்தது. அதன் இரு ஓரங்களிலும் இரு பெரிய சிங்கங்கள் இருந்தன. அந்த தியேட்டர் இப்போது செயலிழந்து போயிருக்கலாம். ஆனால், நகரின் மத்தியில் இருக்கிற அதன் இடத்திற்கு நாளுக்கு நாள் மதிப்பு ஏறிக் கொண்டே இருந்தது. அங்கே, இருக்கின்ற ஸ்பின்னிங் மில் கருவிகளை அவர்கள் நீக்கி விட்டார்கள். ஆனால், அந்தக் கட்டிடத்தை அவர்கள் இடிக்கவில்லை. அந்தக் கட்டிடத்தையும் அந்த இடத்தையும் பராமரிக்கும் பொருட்டு ஒரு வாட்ச்மேனை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருந்தது. கடைசியாக பணியிலிருந்த வாட்ச்மேனின் வேண்டுதலின் பேரில் தற்போது மயில்வாகனன் என்ற ஒருவர் அந்த தியேட்டரின் வாட்ச்மேனாக இருக்கிறார்.

மயில்வாகனனை ஒரு வாட்ச்மேன் என்று சொன்னால், நம்புவது மிகக் கடினம். வாட்டசாட்டமான ஒரு நடு வயது ஆசாமி. அவனது நேர்த்தியான உடை உடுத்தும் தன்மையைப் பார்க்கிற யாருமே அவனை ஒரு மேலாளர் என்றே கருதுவார்கள். நன்கு பாலீஷ் செய்யப்பட்ட ஷூ, கத்தி போன்று விரைப்பாக அயர்ன் செய்யப்பட்ட பேண்ட் மற்றும் ஷர்ட், அதே ஹாஃப் ஸ்லீவ் ஃபோல்ட். இடுப்பில் சுருக்கம் இல்லாமல் டக்-இன் செய்யப்பட்டு, தலைமுடியை நன்கு தூக்கி சீவியிருந்தான்.

மயில்வாகனன் கடந்த ஐந்து வருடங்களாக அங்குள்ள அனைத்துப் பகுதிகளையும் மிக நன்றாக பராமரித்து வருகிறான். அதனால் தான் வாரத்திற்கு ஒரு முறை என்று சோதனைக்கு பார்வையிட வந்து கொண்டிருந்த முதலாளிகள் இப்போது மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வருகிறார்கள். முதலாளிகள் யாரும் தன்னைப் பார்க்காத போதும் அந்தத் தியேட்டரை தனது சொத்துப் போல பார்த்துக் கொள்கிறான்.

அந்தக் தியேட்டரின் அனைத்துப் பகுதிகளும் முறையாகப் பராமரிக்கப்பட்ட போதும். அந்தக் தியேட்டரின் பாக்ஸ் பகுதியில் இடதுபக்கம் இருந்த பாக்ஸ் பகுதி மட்டும் எப்போதும் பராமரிப்பிற்காக மூடியே இருந்தது. முதலாளி உட்பட யாருமே அந்த இடத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை.

அந்த பாக்ஸ் அறைக்கு மேலே தான் திருச்செந்தாழை பறந்து வந்த புஷ்பக விமானம் வந்து நின்றது.

புஷ்பக விமானத்தில் இருந்து இறங்கி பாக்ஸ் அறையின் மேற்தளத்தில் இருந்த இரும்பு மூடியை திருச்செந்தாழை திறந்தான். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மர ஏணியைப் பிடித்துக் கொண்டு அந்த பாக்ஸ் அறைக்குள் நுழைந்தான்.

"என்ன திரு இப்படி திடுதிப்புனு வந்து நிக்குற. ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டான் மயில்வாகனன்.

"என்னால முடிவா எதுவும் சொல்ல முடியல. ஆனா, கண்டிப்பா ஏதோவொரு பெரிய பிரச்சனை மட்டும் நமக்காக காத்திருக்குனு எனக்குக் தோணுது" என்றான் திருச்செந்தாழை.