You are the rainbow of my sky - 1 in Tamil Love Stories by Devi Kanmani books and stories PDF | என் வானின் வானவில் நீ - 1

Featured Books
  • پاپا کی سیٹی

    پاپا کی سیٹییہ کہانی میں نے اُس لمحے شروع کی تھی،جب ایک ورکش...

  • Khak O Khwab

    خاک و خواب"(خواب جو خاک میں ملے، اور خاک سے جنم لینے والی نئ...

  • پھٹے کپڑے

    زندگی بس یہی ہے۔   جینا تو یہی ہے، یہ نصیحت بھی لکھی ہے...

  • رنگین

    سفر کا مزہ سفر سے لطف اندوز ہوتے رہیں۔ اپنے دل کے مواد سے لط...

  • ادھورے رشتے، مکمل سچ

      .ادھورے رشتے، مکمل سچ اوصاف، ایک متمول بزنس مین ارمان کا ا...

Categories
Share

என் வானின் வானவில் நீ - 1

என் வானின் வானவில் நீ

வானவில்-01
காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல் எழுந்து கொண்டாள் கண்களைச் சுருக்கியபடி.

கண்ணெல்லாம் எரிந்தது. இரவு தனது அலுவலக வேலை முடிந்து வரவே அத்தனை நேரம் கடந்து விட்டிருந்தது. 

தன் இடை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டவள் வெளியே வரவும், அவளைப் போலவே இன்னொரு ஜீவனும் வெளியே வந்து நின்று தன் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை அவளது தம்பி தான்.

"என்னக்கா, தூக்கம் போச்சா?" என்று சிறு புன்னகை அவனிடத்தில். ஏனோ அவள் தூக்கமும் கலைந்ததில் இன்ஸ்டன்ட் திருப்தி அவனுக்கு.

"போடா அகில்,இந்தம்மா எப்போ பார்த்தாலும் இதைத்தான் செய்றாங்க" என்று அலுத்துக் கொண்டவள், நொடியும் தாமதிக்காமல் சமையலறைக்குள் புகுந்தாள்.


"ஏ எருமை, குளிக்காம பல்லு விளக்காம எதுக்குடி கிச்சன் வர்ற?" என்று தோசைக்கரண்டியை ஓங்க


"ம்மா, காலையிலையும் எந்த ஆஃபிசருக்கு இவ்வளவு வேகமா சமைக்கிற? ஏன் மா இப்படி பண்ற?"சலித்துக் கொண்டாள் தலையை சொறிந்தபடி.

அவரிடத்தில் வழக்கமான அக்மார்க் புன்னகை. 

"இன்னிக்கு உன் கொள்ளுப்பாட்டி அதான் உங்கப்பாவோட பாட்டி வீட்டில் இருந்து வர்றாங்கடி அதான் ஸ்பெஷல் சமையல்..."என்றார் புன்னகையுடன்

"தன்யாக்கா,மாமியார் வீட்டில் இருந்து வர்றதை இவ்வளவு சந்தோஷமா வரவேற்கிற ஒரே ஜீவன் நம்ம க்யூட்டி பியூட்டி மம்மி ஸ்ரீமதி திரிபுரசுந்தரி மட்டும் தான்.பாரேன், எவ்வளவு பெரிய ஸ்மைல்?!" என்று அக்காவின் தோளில் கையைப் போட்டபடி கிண்டலடித்தான் அகிலன்.

"பின்ன என் மாமியார் வீடாச்சே?!" என்று சிலாகித்துக் கொண்ட திரிபுரசுந்தரி," போய் குளிச்சுட்டு வாங்க.வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று விரட்ட

"ஹ்ம்ம், வர்றோம் வர்றோம்." என்றவர்கள் அன்னையின் பேச்சைத் தட்டாது குளிக்கச் சென்றனர்.

அவர்கள் சென்ற திசையைப் பார்த்தவர்,சமையலறையில் இருந்து வெளியே வந்து பக்கத்து அறையை எட்டிப் பார்த்தார்.அது திறக்கப்படாமல் கிடந்தது. இத்தனை நேரம் பாத்திரத்தை உருட்டியதற்கு பலன் இல்லாமல் போனதை நினைத்து வருத்தம் அவருக்கு.

"என்னம்மா எந்த பலனும் இல்லையா?"அவ்வளவு நேரமும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரின் கணவர் பத்மநாபன் கேட்க

"அது என்றைக்கு இருந்திருக்கு?" பெருமூச்சு அவரிடத்தில்.

பத்மநாபன் திரிபுரசுந்தரி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதலாவது தேஜஸ்வினி இரண்டாவது ப்ரதன்யா மூன்றாவதாய் ஒரு மகன் அகில். 

தேஜஸ்வினி எஸ்எம் திருமண மண்டபத்தின் மேனேஜர் இருக்கிறாள். பத்மநாபனின் தூரத்து சொந்தத்தில் ஒருவரின் திருமண மண்டபம் தான் அது. தேஜாவை சிறுவயதில் இருந்து பார்த்தாலோ என்னவோ அவள் எம்காம் படித்து முடித்தவுடனேயே மண்டபத்தை பார்த்து கொள்ளும்படி கூறினார் அவரது உறவினர். அத்தனை பொறுப்பாளி, தாய் தந்தை சொல் மீறாதவள், சிறு வயதில் இருந்தே தெரிந்த அவளின் குணம் எல்லாம் தான் அவள் கேட்காமலேயே இந்த வேலையைப் பெற்று தந்தது. 

பிரதன்யா ஐடி வாசி. படித்து முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தேர்வாகி உடனே வேலையில் சேர்ந்து விட்டாள். 

அகிலன் இப்போது தான் பிஈ எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் கடைசி வருடத்தில் இருக்கிறான். 

அக்மார்க் நடுத்தர வர்க்கத்தின் உறுப்பினர்கள் இவர்கள். 

***********
"டால் இன்னும் எவ்வளவு நேரம் என்னைப் பிடிச்சு வச்சிருப்ப எப்படி இருந்தாலும் நான் கிளம்பியாகணும்!"என்ற அந்த ஆண்மகனின் குரலில் தாடையை அவன் நெஞ்சில் குத்தியபடி, அவனை நிமிர்ந்து பார்த்தாள் பாவையவள். 

"என்னையும் கூடவே கூட்டிப் போறேன்னு சொல்றவரைக்கும்" இடையைக் கட்டிக் கொண்டு அவனோடு இழைந்தாள் அந்தக் காரிகை. 

"இது நடைமுறையில் சாத்தியமா நீயே சொல்லு? "என்று அவன் பதிலுக்கு வினவ

"இல்லை தான்... ஆனா இந்த தடவை உன்னை விடவே எனக்குத் தயக்கமா இருக்கு. "என்று வெளிப்படையாகவே அவளின் பயத்தை வெளிப்படுத்தினாள். 

"டால் ப்ளீஸ்! இந்த வார்த்தை எல்லாம் என்னை நம்பாதது போலவே இருக்கு." என்றான் இறைஞ்சுதலாக. 

"உன்னை நான் நம்பறேன், ஹன்ட்ரட் பர்சன்ட் நம்பறேன். பட் உன் ஃபேமிலியை என்னால நம்ப முடியாது. " என்று சற்று விசும்பி விட்டாள் அவள். 

"அப்போ ஒன்னு செய், நீயும் என் கூடவே வா. இந்த ஃபங்ஷன்லயே எல்லோருக்கும் நம்ம லவ் பத்தி சொல்லிடலாம்" என்றான் அவன். 

"கொஞ்ச நேரம் முன்னாடி சாத்தியம் இல்லை'னு சொன்ன...? "

"இப்பவும் இல்லை தான். ஆனா ரிஸ்க் எடுக்கிறேன் உனக்காக நம்ம லவ்க்காக போதுமா?!"என்றதும் அவளது முகம் மலர்ந்தது. 

"நிஜமாவா?!"என்றவள், அவனின் வதனத்தை இதழொற்றல்களால் நிரப்பியிருந்தாள். 

"போதும் போதும் டால் இன்னிக்கே இவ்வளவா...?"என்று சிரித்தாலும் முத்தத்தால் எழுந்த சிலிர்ப்பை தலைக்கோதி அடக்கினான். 

"டெம்ட் ஆனாலும் காட்டிக்க மாட்டியே" என்று அவன் வயிற்றில் குத்த, முகத்தைச் சுருக்கி சிரித்தான். 

"போடா டேய்! "என்றவள் அவனின் உடைகளை பேக் செய்தாள். 

"சீரியஸா டிக்கெட் போடுறேன் யுகி. மாத்திப் பேசக் கூடாது" என்ற கட்டளையைப் பிறப்பித்தபடி அவன் ஊருக்கு இரண்டு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்தாள். 

அவன் யுகாதித்யன். அவளுக்கு யுகன். அவளின் யுகன். 

"கவி,எதுக்கும் உன் பேக்கில் சாரீஸ் எடுத்து வச்சுடு சரியா? எதிலும் நாம கேர்லஸா இருந்திடக் கூடாது" என்று காதலியை எச்சரித்தான். 

"கண்டிப்பாக கேர்லஸா இருக்கவே மாட்டேன். " என்று சொல்லியவள், அவனிடம் கேட்டு கேட்டு அனைத்தும் செய்தாள். 

"சரி உன் வீட்டில் என்னடி சொல்வ,நான் வந்து பர்மிஸன் கேட்கவா? "என்று வினவ

"அது பிரச்சினை இல்லை.உன் கூட போகிறேன்னா,ஓகே தான் சொல்வாங்க. அவங்களுக்கு மத்தவங்க கூட அவுட்டிங் போனா தான்டா பயம், உன்னோடு போனா எல்லாம் இல்லை" என்று புன்னகைத்தாள் கவிலயா. 

"இது கூட த்ரில்லிங்கா இருக்குடி டால். முதல் முதலாக என் காதலியை என்னோட டோட்டல் ஃபேமிலிக்கும் இன்ட்ரோ தரப் போறேன்" என்று மகிழ்ந்தவன் அவளுக்கு உதவியும் செய்தான். 

எல்லாம் பேக் செய்து யுகாதித்தியனின் கிராமத்திற்கு கிளம்பினர். 

கவிலயா... அவனுக்கு அவள் டால்,கவி எப்போதாவது லயா. 

யுகாதித்தியன் கவிலயா இருவரும் மும்பை ஐஐடியில் இளங்கலையில் இருந்து ஒன்றாக பயில்கிறார்கள். இருவரும் ஒரே வகுப்பு ஒரே பிடித்தம் என்றதில் துவங்கி நட்பாகி பின் காதலாகி அத்தோடு சேர்த்து மேற்படிப்பு வேலை என்று இணைந்தே பயணிக்கும் காதல் பறவைகள். நிதர்சனம் புரிந்த காதலர்கள். பொதுவெளியில் தங்களை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொதுவான காதலர்கள் போலன்றி எப்போதாவது தனியாக சந்திக்கும் போது அணைப்பையும் இதழொற்றலையும் பரிசளித்துக் கொள்ளும் காதலர்கள். 

தேனி மாவட்டத்தின் ப்ரஜை நம் யுகாதித்யன். அவனின் பூர்வீகம் அது என்றாலும் வளர்ந்தது எல்லாம் சிங்காரச் சென்னையில். பின்னர் அப்படியே மும்பை, ஐடி வேலை, காதல் என்று அவன் நாட்கள் அழகாய் நகர்கிறது. 

என்ன தான் நகரத்தில் பிறந்து வளர்ந்தாலும் இன்னும் கிராமத்து மண் வாசம் ஒட்டிக் கொண்டு இருக்கும் மனிதர்கள் அவனின் குடும்பத்தினர் அவனுமே அப்படித்தான். ஆனால் அவனது படிப்பு வேலை காரணமாக பெரும்பாலும் குடும்பம் ஒன்றாக கலந்து கொள்ளும் விசேஷங்களில் இணைய முடிவதில்லை. இம்முறை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவன் தனது காதலியோடு பயணிக்கப் போகிறான். 

"அம்மா நான் நேரா அங்கே வந்திடுறேன். நீங்க முன்னாடி எல்லார் கூடவும் கிளம்புங்க" என்று தாயிடம் சொல்லி விட்டுத் தான் இப்பயணத்தை மேற்கொள்கிறான். இன்னும் அவருக்கே கவிலயாவுடன் அவன் அங்கே வருவது தெரியாது. ஏனெனில் அவர் வேண்டாமென மறுப்பார் என்று அவனுக்குத் தெரியும். 

யுகாதித்யனோடு கவிலயாவும் சேர்ந்து செல்வாளா...? 
********
"தேஜு புளிக் காய்ச்சல் தக்காளி தொக்கு நாலு நாளைக்கு ஆகறப் போல மாவு, இன்ஸ்டன்ட் பருப்பு பொடி அப்புறம் நாளைக்கு வச்சுக்கற மாதிரி காரக் குழம்பு எல்லாம் பண்ணி வச்சிருக்கேன். அதுக்கு அப்புறம் நீயா மேனேஜ் பண்ணிப்ப தானே? "என்று திரிபுரசுந்தரி மகளிடம் சற்று தவிப்புடன் கேட்டுக் கொண்டிருக்க

சிறிது நேரம் வரை அமைதியாக இருந்த தேஜஸ்வினி ஃபங்ஷனுக்கு நானும் வர்றேன் என்றாள். 

அவளைக் மொத்தக் குடும்பமும் வியப்புடன் பார்க்க, "டென் டேஸ் லீவ் இருக்கு" என்றவள் சற்று நிதானித்து பின்னர், " நான் கேட்கவில்லை,அங்க்ள் லீவ் அவரேத் தந்துட்டாரு" என்றாள். 

'அதானே பார்த்தேன். நீயாவது லீவ் கேட்கிறதாவது! 'என்று நொடித்துக் கொண்டார் திரிபுரசுந்தரி. மனதினுள் தான். நேரடியாக மகளைப் பார்த்துக் கூறும் தைரியம் அவருக்கு வரவில்லை. 

"சரிடாம்மா அப்போ சேர்ந்தே கிளம்பிடுவோம்" என்றார் பத்மநாபன் வாஞ்சையாக. 

தேஜஸ்வினி தலையாட்டியவள், தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். 

குடும்பமே தேனி மாவட்டத்திற்கு பயணித்தது. 

"ஐம் ஸோ ஹாப்பி அக்கா" என்று தமக்கையை கட்டிக் கொண்ட ப்ரதன்யா, அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விட்டாள். 

திரிபுரசுந்தரியும் பத்மநாபனும் மகளின் வருகைக்கு ஆயிரம் கணக்குப் போட்டு எண்ணங்களை சுழல விட்டனர். 

திரிபுரசுந்தரி ,"இந்த முறை எப்படியாவது என் மகள் வாழ்க்கையை சீர் பண்ணிடனும்ங்க" என்றிருந்தார் கணவனிடம். 

"அதெல்லாம் கண்டிப்பாக நடக்கும் நீ வேணுன்னா பாரேன். இத்தனை நாளும் எங்கேயும் போகாதவ இப்போ, தானே வர்றேன்னு சொல்லி இருக்காளே அதிலேயே தெரியலை இனி நல்ல காலம் தான் நமக்கு. "என்று உற்சாகம் பொங்க கிளம்பினார் பத்மநாபன். 


'இந்த முறை கண்டிப்பாக என் லைஃபில் இருக்கும் அந்த வேண்டாத உறவை முறித்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்தபடி தயாரானாள் தேஜஸ்வினி. 


யாரின் எண்ணம் ஈடேறும். எந்த உறவை சீர் செய்ய வேண்டும் என்று திரிபுரசுந்தரி நினைக்கிறார் யார் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று தேஜா நினைக்கிறாள் ஒளிரும் வானவில் . 

.... தொடரும். 

********