வானவில்-02
தேனி மாவட்டம் செந்தாளம்பட்டி கிராமம் (கற்பனை ஊர்) நோக்கி பயணித்தது பத்மநாபன் குடும்பம். பொதிகை எக்ஸ்பிரஸ் அவர்களை சுமந்து கொண்டு பயணித்தது. மதுரை சென்று பின்னர் தேனிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தனர் பத்மநாபனும் சுந்தரியும். மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டுத் தான் அடுத்து தேனிக்கு என்று உறுதிபட கூறியிருந்தார் சுந்தரி. வரும் போது திருப்பரங்குன்றம் பார்த்து விட்டு கிளம்புவதாக திட்டமிட்டு கிளம்பியிருந்தனர் குடும்பத்தோடு விடுமுறை கிடைக்கும் போது இப்படி சில கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். மகள்கள் இருவரும் வேலையில் இருக்க அனைவருக்கும் சேர்ந்து விடுமுறை கிடைக்காது. தனியாக விட்டு செல்லவும் மனதிருக்காது. அதிலும் அகிலன் இஞ்சினியரிங் சேர்ந்த திலிருந்து எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் தற்போது கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தி கொண்டனர்.
செல்லும் வழியெல்லாம் இளைய மகன் மகளுக்கு டூரிஸ்ட் கைடை போல இவ்விடம் அப்படி இப்படி என்று விளங்கிக் கொண்டிருந்தார் பத்மநாபன்.
அவர்களும் முதன் முறை கேட்பது போல சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டனர். தந்தையின் ஆசை அதுவெல்லாம் என்று உணர்ந்து எப்போதுமே அவர் கூறுவதை மறுத்து பேசுவதே இல்லை பிள்ளைகள் மூவரும்.
தேஜஸ்வினி எதிலும் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள். முன்பானால் அவளே பத்மநாபனை விவரிக்கச் சொல்லியோ அல்லது புராணக்கதைகளை கூறச் சொல்லியோ கேட்டபடி தான் பயணிப்பாள்.
"ஏங்க கொஞ்சம் சாப்பிட்டு அப்புறம் கன்டினியூ பண்ணுவோம்" என்ற சுந்தரி அவரவருக்கு உண்டான டிஃபன் பாக்ஸை நீட்ட, மறுக்காமல் தேஜாவும் வாங்கிக் கொண்டாள்.
"பாப்பா உனக்கு தொக்கு இன்னும் கொஞ்சம் தரவா? "என்று வினவ
"ஏன் நான் மட்டும் என்ன ஸ்பெஷல்? ,இருக்கிறது போதும். "என்று அமர்த்தலாக கூறியவள் சப்பாத்தியை விண்டு உண்ணத் துவங்க சுந்தரி பெருமூச்செறிந்தபடி டப்பாவை மூடி வைத்தார்.
தக்காளி தொக்கு என்றால் அவள் சப்புக் கொட்டி உண்ணும் அழகேத் தனியாக இருக்கும். கடந்த சில வருடங்களாகவே விருப்ப உணவில் கூட அவளுக்கு நாட்டமில்லை. கொடுத்ததை உண்டு விட்டு உயிர் வாழ்கிறாள்.
"அக்கா இதை சாப்பிட முடியலை வச்சுக்கக்கா ப்ளீஸ்! "என்ற பிரதன்யா அவள் மறுக்கும் முன்பே தொக்கை அப்படியே அவள் சப்பாத்தியில் வைத்துவிட, கடுப்பாய் முறைத்தாள் அவளை.
"ப்ளீஸ் க்கா வேஸ்டா போயிடும்" என்று கண்கள் சுருக்கி கெஞ்ச
"அது வைக்கும் போதே தெரியாதா? "என்று திட்டி விட்டு உண்ண பத்மநாபனுக்கு குறுஞ்சிரிப்பு உதித்தது இதழோரமாய்.
அவள் வேண்டும் என்று தான் வைக்கிறாள் என்று தெரிந்தாலும் எதுவும் கூறவில்லை தேஜா.
இங்கு ப்ரதன்யாவோ, "ம்மா எப்படி?!"என்று புருவம் உயர்த்திச் சிரித்துக் கொள்ள
"என் பட்டுப் பொண்ணு நீயி! "என்று மூத்தவள் அறியாமல் இளையவளைக் கொஞ்சினார் அவர்.
"ம்மா !"என்று தேஜா அழைக்க அவள் பார்த்து விட்டாளோ எனத் திடுக்கிட்டுப் பார்க்க
"இன்னொரு சப்பாத்தி வைங்க" என்றாள். மகிழ்ச்சியில் சுந்தரி முகம் பளீரிட்டது.
"இதோடா" என்று ஆர்ப்பரித்தவர் ரெண்டாய் வைத்தார்.
"ஒன்னு தானே கேட்டேன்." என்றவள் வேறெதுவும் பேசிடாமல் உண்ண, இன்னுமின்னும் சந்தோஷம் அவருக்கு.
"எங்க ஊர் காத்துப் பட்டதுமே என் மக பழைய மாதிரி மாறிட்டா" என உள்ளம் பூரித்துப் போனார்.
**********
"ஏன் மா இப்படி பண்றீங்க? "என்று அலுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் யுகாதித்யன்.
"இப்ப என்ன செஞ்சுட்டாங்க. இந்த காட்டுக் கொரில்லா தாடியை எடுத்துட்டு வாடான்னு சொன்னேன், நீ கேட்கலை. அதான் நீ தூங்கும் போது ட்ரிம்மரைப் போட்டேன்" என்று அசட்டையாக கூறியவர், "ஏதோ பார்பர் ஷாப்பில் உட்கார்ந்த மாதிரி அப்படியே சொரணை இல்லாம தூங்கினா நான் என்ன செய்ய.?"என்றார்.
"என் கிட்ட சொல்லிட்டீங்க தானே, அதை நானே செய்துக்க மாட்டேனா. இங்க பாருங்க குறுக்க கோடு போட்டு வச்சிருக்கீங்க. இப்போ மீசையையும் சேர்த்து எடுக்கணும்" என்று நொந்தவன் முகத்தை மொத்தமாக வழித்தான்.
"நானென்ன பண்ண டிவியில் ஸ்மூத் ஷேவிங்னு காட்டுறானே அது போல வரும் னு இழுத்தேன் அது உன் கெடா மீசையும் சேர்த்து வழிச்சிடுச்சு. ஆக்ஸுவலி எம்மேல தப்பு இல்லை ஆழ்ந்து தூங்கின உன் மேல தான் தப்பு"
"ம்மா, ஸ்லீப்பிங் டேப்லட் போட்டு படுத்தேன்."
"ஓஓஓ அதான் சொரணை இல்லாம தூங்குனியா..?நான் கூட.. "
"அச்சோ !,போதும் போங்க" என்றவன் மொத்தமாய் முகத்தை ஷேவிங் செய்து விட்டு கண்ணாடியில் அந்த பக்கம் இந்த பக்கம் என்று திருப்பிப் பார்த்தான்.
"சும்மா சொல்லக்கூடாது தம்பி இந்த கெட்டப்ல கூட ரன்பீர் கபூர் மாதிரி அம்சமா இருக்க" என்று அவர் சிலாகிக்க
"பேசாம போறீங்களா இல்லை நான் ஊருக்குப் போற டிக்கெட்டை கேன்சல் செய்யவா? "என்று அதட்ட, "ஈஈஈ! "என்று சிரித்து, "ஓஓஓ மாத்தி சொல்லிட்டேன் ரன்வீர் சிங் மாதிரியே இருக்க."என்றதும் ஏகத்திற்கும் முறைத்தான் அவரை.
"இதோ ஓடிட்டேன். "என்றவர், "தம்பி இப்போ தோசை ஊத்துறேன் போற வழியில் பிரியாணி வாங்கித் தந்துடு."
"வீட்டில் சமைச்சு எடுத்து வாங்க."
"முடியவே முடியாது. போறதே திண்டுக்கல் தலப்பாக்கட்டி வேணும்னு தான்."
"அப்படியா...!?நேத்து பெரிய தாத்தா கிட்ட நான் வர்றதே உங்களுக்காக தான் பெரியப்பான்னு சொன்னீங்க. இருங்க போட்டுக் குடுக்கறேன்" என்று சிரிக்க.
"உன் காதுல பெரியப்பான்னா விழுந்தது நான் பிரியாணிப்பான்னு சொல்லி இருப்பேன். யூ ஹியர் ராங் மகனே. யூ க்நோ சொந்தமா சோறா ன்னா... "
"நீங்க சோறு சூஸ் பண்ணுவீங்க போதுமா?,ஹப்பா !உங்களை இந்த பேஸ்புக் ட்விட்டர் பக்கமே விடக்கூடாது ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க" என்று அலுத்தவன், "வாங்கித் தர்றேன். கிளம்புங்க. அதுக்கு பதிலா ஒரு பொடிதோசை" என்றதும், "டபுள் டன் டா "என்று சமையலறைக்கு ஓடினார் அவர்.
அவருக்குத் தெரியும் மகன் எதனால் பொடி தோசை கேட்கிறான் என்று. பொடிதோசை என்றால் தேங்காய் சட்னி அரைத்தால் போதுமானது. தன் வேலையை எளிதாக்கி ஓய்வு தருகிறான் என்று உணராமல் இல்லை அவர்.
அதுவரை சிரித்திருந்த அவன் முகம் சோர்ந்து போனது.
"யுகி... நான் காசியாபாத் ரீச் ஆகிட்டேன் நீ கிளம்பும் போது ஒரு மெசேஜ் போடு ப்ளீஸ்" என்று முத்த எமோஜிகளை தெறிக்க விட்டிருந்தாள் கவிலயா.
அதை நூறாவது முறையாகப் படித்திருப்பான் அன்றைய நாள் துவங்கியதில் இருந்து.
"போடி போட மாட்டேன்" என்று ரிப்ளை வேறு செய்திருந்தவன் அந்த பதிலுக்காக கோடி முறையாவது தன்னை நொந்து இருப்பான். தன்னைத்தானே திட்டியிருப்பான்.
ஹைக்கூ காதலி என்று பெயர் சுமந்த அந்த பெயரின் கீழ் லாஸ்ட் சீன் 2020 என்று காட்டியது.
"ஐ மிஸ் யூ டி" என்றான் மனம் வலிக்க.
"ச்சில் மேன், ஓடு உன் இலக்கை நோக்கி" எங்கிருந்தோ அவள் குரல் கேட்பது போல் அவனுக்கு ஒரு தோற்றம்.
************
"அப்பா கிளம்பிட்டேன். நானும் தம்பியும் தான் வர்றோம். ஹ்ம்ம் ஆமாம்ப்பா. இல்லை எதுவும் பிரச்சினை இல்லை சமாளிச்சுப்பேன் நீங்க போங்கப்பா" என்று இணைப்பைத் துண்டித்தவன், "அகி வாடா! "என்று தன் மகனை அழைத்தான்.
"கமிங் டாட்" என்ற ஐந்து வயது நிரம்பிய சிறுவன் வேகமாய் வெளியே ஓடி வந்தான்.
"போகலாமா தாத்தா வீட்டுக்கு" என்றதும், "ஹ்ம்ம்" என்றான் குதூகலமாக.
"பிரசாத்... கிளம்பியாச்சாப்பா? "
"ஆமாம் அங்கிள், வீட்டில் ஈவ்னிங் மட்டும் லைட் போட்டு விட்டுடுங்க அங்கிள்" என்றான் பிரசாத் என்று அவரால் அழைக்கப்பட்ட அருண் பிரசாத்.
"கட்டாயம் போடுறேன். அகிக் குட்டி பை "என்று கைகாட்ட அவனும் கைகாட்டி விட்டு தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
"அகிக்குட்டி இப்போ நாம எங்க போறோம்? "
"தாத்தா வீட்டுக்கு"
"எதுல போறோம்...? "
"ட்ரெயின்ல போறோம்..."
"எதுல போறோம்? "
"ட்ரென்ல குஜிக் குஜிக்.. ஊஊஊ இப்புடி போறோம்." அவன் குதூகலமாக பேசியபடி வர, பிரசாத்தின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
'எத்தனை வருஷம் கழிச்சு அங்கே போறோம். நம்மளை நினைவு வச்சிருப்பாங்களா.. ஹ்ம்ம் இல்லாம எப்படி போகும். கொஞ்ச சாகசமா பண்ணி இருக்கோம்.' பழைய நினைவுகளை அசை போடும் போதே அத்தனை சிரிப்பு அவனுக்கு.
'இப்பவும் அதையே ஞாபகம் வச்சு அடிக்க வருவானுகளோ. டேய் பிரசாத் எதுவா இருந்தாலும் பீ கேர்ஃபுல் 'என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
கடந்த காலங்கள் எப்போதும் பல உணர்வுகளை தன்னகத்தே கொண்டவை. அது இனிப்பா கசப்பா என்று அவரவருக்கு நடப்பதைப் பொறுத்து.
**********
தேஜா உறங்கும் தன் குடும்பத்தினர் முகத்தைப் பார்த்தவள் பிறகு வேடிக்கை பார்க்கலானாள்.
மரங்கள் பின்னோக்கி நகர்வதைப் போல அவள் நினைவுகளும் பின்னோக்கிச் சென்றது.
சட்டென்று தலையை உலுக்கி அதை நினையாதே மனமே என்று கடிவாளம் போட்டுக் கொண்டாள் நினைவுகளுக்கு.
நினைக்காமல் எப்படி இருப்பது... அவன் எனக்காக இன்னும் காத்திருப்பான் நிச்சயம் எனக்காகக் காத்திருப்பான் என்று உறுதியாக நம்பினாள்.
ஆனால் அவன்...???
... தொடரும்.