அங்க போயிட்டு 15 நாள் கழிச்சு வந்த ஸ்வாதி கண்டிப்பா நான் ஊருக்கு போகும்போது இருந்த ஸ்வாதி இல்லை என்று எனக்கு தோன்றியது. பெருசா பேசலைனாலும் நான் வீட்டுல இருந்தா என்ன சுத்தி சுத்தி வருவா. ஆனா வந்ததுல இருந்து விலகி விலகி போக ஆரம்பிச்சா. அப்புறம் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போக ஆரம்பிச்சா. எங்க அம்மாவோ இந்த சமயத்துல அப்படித்தான் இருக்கும் நீ ஒன்னு கவலை படாதனு சொன்னாங்க. ஒரு கட்டத்துல அவங்க அம்மா வீட்டுலயே இருந்துகிட்டா.
நானும் அடிக்கடி அங்க போய் அவளை பார்த்துட்டு வந்தேன். அங்க அவ என்கூட பேசுனதை விட அவளோட தங்கச்சியும், அப்பாவும் தான் அதிகமா பேசுனாங்க. ஒருகட்டத்துல நான் அங்க போகுறத நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் நான் அவளை டெலிவெரிக்கு உள்ள போறதுக்கு முன்னாடி தான் பார்த்தேன், அப்ப அவ என்னோட கையை பிடிச்சுக்கிட்டு சொன்னது இன்னும் என்னோட காதுல கேட்டுகிட்டே இருக்கு.
இங்க பாருங்க இந்த குழந்தை பிழைச்சு உங்ககிட்ட வந்தாலும், இல்லை வராமலே போயிட்டாலும் என்ன நடந்தாலும் என்னோட குடும்பத்தோட எந்த உறவும் நீங்க வெச்சுக்காதீங்க. நான் உங்களுக்கு நிறைய பாவம் செஞ்சுட்டேன் முடிஞ்சா என்ன மன்னிச்சுடுங்க இதுதான் ஸ்வாதி என்கிட்ட கடைசியா பேசுனது. அவ எதுக்கு அதை சொன்னான்னு எனக்கு புரியவேயில்லை, அவ சரியாகி வரட்டும் அவகிட்டயே கேட்டுக்கலானு வெளியில காத்துகிட்டு இருந்த எனக்கு அவ இறந்துட்டாங்குற செய்திதான் கிடைச்சுது.
யாழினிக்காக சந்தோசபடுறத, தொலைஞ்ச என்னோட வாழ்க்கைக்காக அழுகுறதான்னு எனக்கு தெரியல. அப்ப அங்க வந்த ஸ்வாதியோட அப்பாவும், தங்கச்சியும் எங்களோட பொண்ண கொன்னுட்டு பொறந்த இந்த குழந்தைக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு சொல்லி எங்ககூட சண்டை போட்டு ஸ்வாதியோட பாடிய வாங்கிட்டு போயிட்டாங்க. எல்லாம் அதிர்ச்சியில இருந்தும் வெளியில வந்து நான் திரும்ப ஆபீஸ் போக ஆரம்பிச்சேன். ஸ்வாதி இறந்து 2 மாசம் இருக்கும் ஒரு நாள் ஸ்வாதி தங்கச்சி என்ன பாக்க வந்தாள், நல்ல மேக்கப் போட்டு ஏதோ பேஷன் ஷோக்கு போறமாதிரி வந்திருந்தாள். அவளை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருந்துச்சு.
வந்தவள் மாமா ஏதோ அன்னைக்கு அக்கா இறந்த வருத்தத்துல உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டோம் சாரி. நீங்க எதுக்கு யாழினி வெச்சுகிட்டு கஷ்டப்படனும் பேசாம என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க உங்களையும், யாழினியையும் நான் நல்ல பார்த்துகிறேன் என்றாள். எனக்கு வந்த கோவத்துக்கு எப்படி அவளை கொல்லாம விட்டனு எனக்கு தெரியல.
என்னோட பொண்ண பாத்துக்க எனக்கு யாரு உதவியும் தேவை இல்ல, இனி என்ன பார்க்க வராத உன்னோட முகத்துல முழிக்கவே எனக்கு பிடிக்கல என்று சொல்லி அவளை செக்யூரிட்டியை விட்டு வெளியில் அனுப்பினேன். அக்கா இறந்து ரெண்டு மாசம்தான் ஆகுது அக்கா கணவர் கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேக்குற இவ என்ன மாதிரி பொண்ணுன்னு எனக்கு வெறுப்பா இருந்துச்சு.
இதெல்லாம் ஒண்ணுமே இல்லை இவ எதுக்கும் துணிஞ்சவன்னு அந்த வாரத்துலயே நான் தெரிஞ்சுகிட்டேன். ஸ்வாதி தங்கச்சி வந்துட்டு போனதுக்கு அப்புறம் அந்த வாரத்துலயே அவங்க அம்மா என்ன பார்க்க ஆபீஸ்க்கு வந்தாங்க. பொண்ணுதான் அப்படினா அம்மாவுமா, அவங்ககிட்ட கோவமா எதுவும் பேசிட கூடாதுனு நினச்சுகிட்டே அவங்கள வர சொன்னேன்.
வந்தவங்க நான் லைப்ல எவ்வளோ பெரிய முட்டாளா இருந்திருக்கனு எனக்கு புரியவெச்சாங்க. தம்பி, நான் சொல்ல போறது கண்டிப்பா உங்களுக்கு மன கஷ்டத்தை குடுக்கும் ஆனா இப்பாவது நீங்க இதை தெரிஞ்சுக்கிட்டுதான் ஆகனும். என்னோட ரெண்டு பொண்ணு வாழ்க்கையும் நல்ல இருக்குனு நினைச்சுதான் என்னோட வீட்டுக்காரரும், சின்ன பொண்ணும் செஞ்ச எல்லாத்துக்கு அமைதியா இருந்தேன் கடைசியா ரெண்டு பேரும் சேர்ந்து என்னோட ஸ்வாதிய கொன்னுட்டாங்க என்று முகத்தில் அறைந்து கொண்டு அழ தொடங்கினார். அவர் சொன்னதைக் கேட்டு ஹை வோல்ட் மின்சாரம் தாக்கியது போல இருந்தது எனக்கு. என்ன சொல்ரீங்க தெளிவா சொல்லுங்க என்று கிட்டத்தட்ட கத்தினேன்.
உங்களுக்கு முதல இருந்து சொல்றேன் தம்பி, என்னோட சின்ன பொண்ணுக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்கனுனு ஆசை, அதுக்கு முதல்ல விளம்பர படத்துல நடிச்சு பிரபலம் ஆகனுன்னு சொல்லி அதுக்காக ஆட்களை தேடி வாய்ப்பு கேட்டுகிட்டு இருந்தாள். அந்த சமயத்துல நாங்க ஸ்வாதிக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்தோம். அதுக்காக வந்த தரகர் கிட்ட உங்க போட்டோ பார்த்து உங்களை பத்தி விசாரிச்சா என்னோட சின்ன பொண்ணு, நீங்க செய்ற வேலைய கேட்ட உடன் எப்படியாவது உங்களுக்கு ஸ்வாதிய கல்யாணம் பண்ணிவெச்சுட்டா அக்கா வாழ்க்கையும் நல்ல இருக்கும் இவ நினைக்குறதும் நடக்கும்னு சொல்லி அவங்க அப்பா உதவியோடு உங்க ஜாதகத்தை வாங்கி ஸ்வாதி ஜாதகத்தை அதுக்கு ஏத்தமாதிரி மாற்றி இந்த கல்யாணத்தை முடிச்சாங்க.
கல்யாணத்துக்கு அப்புறம் ஸ்வாதி அப்பா பணம் வேணும் உங்கவீட்டுல இருந்து கொண்டுவானு போன்ல ஸ்வாதிகிட்ட கேட்டுகிட்டே இருந்தாரு, அதுனாலதான் அவ எங்கவீட்டுக்கு வராம இருந்தா. தான் கர்ப்பமா இருக்குறத சொல்லத்தான் வீட்டுக்கு வந்தாள் அதை கேட்ட என்னோட சின்ன பொண்ணு, அடிப்பாவி நீ நல்லா இருக்கனுனு உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கொடுத்தேன், அந்த நன்றியோட நீ என்னோட ஆசையை நிறைவேத்துவனு நம்புனா நீ என்ன பற்றி கவலை படமா உன்னோட சந்தோசம் முக்கியம்னு இருந்துட்டல என்று கத்தினாள். என்னடி சொல்ற நான் என்ன பண்ணுன என்று கேட்ட ஸ்வாதியை, உன்னோட புருஷனை தள்ளி வெச்சு என்னோட தங்கச்சி நடிகை ஆகனும் அவனாலதான் நம்ப கல்யாணம் நடந்துச்சு முதல நீங்க அவளை நடிக்கவைங்க அப்புறம் நாம்ப குழந்தையை பற்றியெல்லா யோசிக்கலாம்னு சொல்லி இருக்கனும்.
உன்ன நம்புனன் எனக்கு துரோகம் பண்ணிட்டியே என்று அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். தான் தங்கச்சிக்கு ஏதோ பெரிய துரோகம் பண்ணிட்டதா நினைச்ச ஸ்வாதி அவங்க அப்பா கேட்ட மாதிரி உங்க வீட்டுல இருந்து நீங்க அவளுக்கு வாங்கிகொடுத்த நகையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தாள். தங்கச்சிக்கு செஞ்ச துரோகத்துக்காக தனக்கு தண்டனை கொடுத்துக்குறதா நினைச்சு உங்களை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டாள் முட்டாள் பொண்ணு.
உங்கள விட்டுட்டு வந்து எங்க வீட்டுல அவ சந்தோசமாவே இல்லை எந்த நேரமும் உங்கள நினைச்சுகிட்டு தான் இருந்தாள். என்னோட வீட்டுக்காரரும், சின்ன பொண்ணும் ஸ்வாதி கொண்டுவந்து குடுத்த எல்லா நகையையும் வித்து பணம் வாங்கி யார் யார் கிட்டயோ கொடுத்து ஏமாந்துட்டாங்க. திரும்ப நடிக்க நீங்கதான் கடைசி வழின்னு நினைச்சு அப்பாவும் பொண்ணும் ஒரு திட்டம் போட்டாங்க அதை ஸ்வாதி கேட்டுட்டா.
அப்பா மாமாவ விட்ட வேற வழி இல்லை, என்ன செய்யலாம், கண்ணு உங்க அக்கா டெலிவரி முடியட்டும் குழந்தையை வெச்சு மாப்பிள்ளையை வழிக்கு கொண்டுவர பார்க்கலாம். அப்படியும் இல்லையா உங்க அக்காவ முடிச்சுட்டு நீ அவரை கல்யாணம் பண்ணிக்கோ என்றார் ஸ்வாதின் அப்பா, அதை கேட்டு ஸ்வாதி அதிர்ந்து போனாள். அதுவும் சரிதான் ஆன அப்பா குழந்தையை என்ன செய்வது, அதை ஒரு ஹாஸ்டல் இல்லனா ஆசிரமத்துல சேர்த்துவிட்டுடலாம் என்று சொன்னதை கேட்டு ஸ்வாதி பொறுமை இழந்து கத்தினாள்.
த்து,, அசிங்கமா இல்லை, உங்களையெல்லாம் அப்பா தங்கச்சின்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு இப்பவே நான் எல்லாத்தையும் என் வீட்டுகார்கிட்ட சொல்லி என்ன செய்றேன் பாருங்க என்று வேகமாக வெளியில் போனவளை தடுக்க எண்ணி என்னோட சின்ன பொண்ணு கை பிடித்து இழுக்க அவளிடம் இருந்து திமிறிய ஸ்வாதி அருகில் இருந்த பெஞ்சில் மோதி கீழ விழுந்துட்டா.
அவங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் வரலைன்னு சொல்லிட்டாங்க நானே ஆட்டோ வெச்சு ஸ்வாதியை ஹாஸ்பிடலில் சேர்த்தேன். எங்க நீங்க சந்தேகப்பட்டு போஸ்ட் மார்டம் பண்ண சொல்லிடுவீங்களோனு பயந்து உங்ககிட்ட சண்டை போட்டு அவளோட பாடியை வாங்கி எரிச்சுட்டாங்க.
இப்ப நீங்க என் சின்ன பொண்ண கல்யாணம் செஞ்சுக்க ஒதுக்கலைனா யாழினியை உங்களால வளர்த்த முடியாது குழந்தை எங்களுக்கு வேணுன்னு சொல்லி கேஸ் போடுறத பேசிக்கிட்டாங்க. இப்ப கூட உங்ககிட்ட உண்மையை சொல்லலனா என்னோட ஸ்வாதி ஆன்ம சாந்தி அடையாது என்று என்னோட வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை எனக்கு சொல்லி முடிச்சார் ஸ்வாதி அம்மா.
சொன்னவர் வந்த வேலை முடிந்ததுனு கிளம்பி போயிட்டார், கேட்ட என்னால எதையும் நம்ப முடியல. அன்னைக்கு வீட்டுக்கே போகாம இதே கடற்கரையில் நைட் எல்லா உக்காந்து யோசிச்சேன் யாழினிய காப்பாத்தணும் அவங்க யார் நிழலும் அவ மேல விழ கூடாதுனு நினச்சேன். ஸ்வாதி தங்கச்சியை நானே போய் பார்த்தேன்.
என்ன மாமா நீங்க என்ன தேடி வந்திருக்கீங்க, என்று உதட்டை சுழித்தவளை கொல்லுமளவுக்கு வெறி அவளை கொன்னு எந்த பிரயோஜனமும் இல்லை. வந்த வேலைய முடிக்கனுனு நினைச்சு அவகிட்ட பேச ஆரம்பிச்சேன். இங்க பாரு உனக்கு நடிக்கனும் அதுதான் உன்னோட பேராசை, நீ என்னையோ என்னோட பெண்ணையோ தொந்தரவு செஞ்ச உன்னால ஒரு ஸ்டேஜ் ட்ராமால கூட நடிக்க முடியாத மாதிரி செஞ்சுடுவேன், இந்த பீல்ட்ல நேம் ரொம்போ முக்கியம் உன்னோட நேம் எங்கயும் இல்லாத மாதிரி செஞ்சுடுவேன் என்று அவளை மிரட்டினேன். மாமா எனக்கு நடிக்கனும் உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல எனக்கு சிபாரிசு பண்ணுங்க உங்களை நான் தொந்தரவு செய்யல என்றாள்.
அவள் கேட்டதை செஞ்சேன், அதுக்கு பதில் ஒரு வக்கீல் முன்னாடி எப்பவும் என்னையும் என்னோட பொண்ணையும் தொந்தரவு செய்ய மாட்டேன், யாழினியை கேட்டு வர மாட்டேனு எழுதி வாங்கிக்கிட்டேன். அதை எழுதி கொடுத்தவ போகும்போது ஒன்னு சொன்னா, மாமா நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டா உங்க வாழ்க்கையில நான் திரும்ப நரகத்தை காட்டுவேன், இது என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னதுக்கு தண்டனை, கல்யாணம் பற்றி யோசிச்ச யாழினி நிம்மதி போய்டும் பாத்து இருந்துக்கோங்க என்று சொல்லிட்டு போயிட்டாள்.
அர்ஜுன் சொல்லியவற்றை கேட்டு தன்னை மீறி அழுதுகொண்டு இருந்த நந்தனாவைப் பார்த்து அந்த ஸ்வாதியோட தங்கச்சியை உனக்கு தெரியும் என்றான். ஒரு நிமிடம் அவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் துர்கா என்று மெல்ல சொன்னாள் ஒரு கசந்த புன்னகையோடு தலை அசைத்தான் அர்ஜுன் .