The Flower that Rules Fire - 3 in Tamil Love Stories by swetha books and stories PDF | அக்னியை ஆளும் மலரவள் - 3

The Author
Featured Books
Categories
Share

அக்னியை ஆளும் மலரவள் - 3



 மலர் வாங்கிய அடியில் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க, அனைவரும் அவளை ஏதோ தீண்டத்தகாதவளைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

மகேஷின் கணவரும் மலரைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருக்க, அவனின் மனைவியோ மலரை முறைத்துவிட்டுத் தன் கணவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

அனைவரும் அங்கிருந்து சென்றவுடன் அவள் அருகில் வந்த பிரதீப், “சாரி, சித்தி, வலிக்குதா?” என்று அவளின் காயத்தைத் தன் பிஞ்சு கரங்களால் தொட்டுப் பார்த்து, “என்னாலதான் உங்களுக்கு அடிபட்டுச்சு,” என்று அவளிடம் கொஞ்சும் மொழியில் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது உள்ளே இருந்து அவனின் தாய், “பிரதீப், அங்கே இன்னும் என்ன பண்ற? உள்ளே வா,” என்று சத்தம் வந்ததும், பிரதீப் உள்ளே செல்லாமல் மலரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

 “பிரதீப், நீ உள்ளே போ. உன்னை கூப்பிடுறா அவ! இங்கே வந்தா நீ என்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பார்த்து உன்னைத்தான் திட்டுவாங்க,” என்றாள்.

 “நான் உள்ளே போறேன். நீ ஹாஸ்பிட்டலுக்குப் போ,” என்று பிரதீப் அங்கிருந்து சென்றான்.

பிரதீப் அங்கிருந்து சென்றதும், மலர் எழுந்து தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று அடைந்துகொண்டாள். “இங்கிருந்து சென்று விடுவோமா?” என்று கூட யோசித்தாள். 

அப்படி வெளியே சென்றால் எங்கு தங்குவது, சாப்பிட என்ன செய்வது என்று யோசித்தவள், “இங்கு இருப்பதே தமக்கு பாதுகாப்பு,” என்று நினைத்துக்கொண்டாள். அந்த நினைப்பும் நாளை பொய்யாகப் போகிறது என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டாள். அப்படி நினைத்திருந்தால் பின்னால் அவள் படும் அவமானத்தைத் தடுத்து இருக்கலாம். விதி யாரை விட்டது?

அதே நேரம், இங்கு அக்னி தனது அறையில் வேலையில் மூழ்கி இருக்க, அப்போது கதவைக்கூடத் தட்டாமல் ஒரு அலட்டல் ராணி, முகத்திற்கு அதிகமாக மேக்கப்பைப் போட்டு, லிப்ஸ்டிக் அப்பிக்கொண்டு, முட்டிக்கு மேல் ஒரு கைக்குட்டைத் துணியினை உடுத்திக்கொண்டு வந்து நின்றாள்.

முக்கியமான வேலையில் இருந்தபோது நடுவில் தொந்தரவு செய்வதுபோல் கதவைப் பட்டென்று திறந்த சத்தத்தில் எரிச்சலுடன் நிமிர்ந்தான்.

அங்கே இருந்த வைஷாலியைப் பார்த்ததும் எரிச்சலுடன் சேர்ந்து கட்டுக்கடங்கா கோபத்தில், “துருவா!” என்று அந்த அறையே அதிரும்படி கத்தினான்.

அவன் கத்தியதில் ஒரு நிமிடம் வைஷாலி உடல் நடுங்கவே செய்தது. இருந்தும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் கெத்தாக இருப்பதுபோல் நின்று இருந்தாள்.
அக்னி கத்தியதில் ஆபீஸில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அக்னியின் அறையைப் பார்த்துவிட்டுத் தங்களது வேலையைத் தொடர்ந்தனர். ஏனென்றால் இது எப்போதும் நடப்பதுதான்.

அக்னியின் குரலைக் கேட்டவுடன் துருவனுக்கு ஒரு நிமிடம் அல்லுவிட்டது. ஏனெனில் அவர்களுடைய குடோனைத் தவிர வெளி இடங்களில் அவனின் உண்மை முகத்தினை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். அவனின் கோபத்தை ஒற்றைப் பார்வையில் எதிரில் இருப்பவரை நடுங்க வைத்துவிடுவான். அதனால் “யாருடா அது இவனின் அரக்கனை வெளியே கொண்டு வந்தது?” என்று நினைத்துக்கொண்டே அக்னியின் அறைக்கு வந்து சேர்ந்தான்.

 அங்கு வைஷாலியைப் பார்த்ததும் அக்னி கோபத்திற்குக் காரணத்தைப் புரிந்துகொண்டான். ‘இந்த மேக்கப் ராணி இங்க என்ன பண்றா? எத்தனை தடவை பட்டாலும் புத்தி வர மாட்டேங்குது,’ என்று நினைத்துவிட்டு, “எதுக்கு அக்னி என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்டான்.

 “ஏண்டா, என்னோட அறையில குப்பையா இருக்கு. அதைச் சுத்தம் பண்ண மாட்டிங்களா?” என்று அக்னி அவனிடம் எரிந்து விழுந்தான்.

 “நான் என்ன பண்றது மச்சான்! எத்தனை தடவை விளக்குமாத்தால அடிச்சாலும் அந்தக் குப்பை வந்துகிட்டே இருக்கு,” என்று வைஷாலியைப் பார்த்துக்கொண்டே கூறினான்.

 “ஏய், இப்ப என்ன சொன்ன?” என்று அவனிடம் கோபத்தில் சீறினாள் வைஷாலி.

 “ம்ம்... நான் குப்பையைச் சொன்னேன். உனக்கு எதுக்குக் கோவம் வருது?” என்று சிரிப்பினை அடக்கிக்கொண்டு கேட்டான்.

“ஏய்! ஆஃப்டர் ஆல் எங்க கம்பெனியில வேலை செய்ற நீ என்னைக் கிண்டல் பண்றியா?” என்று அவனிடம் எரிந்து விழுந்தவள்.

 உடனே தன் முகத்தினை மாற்றிக்கொண்டு, “மாமா, நீங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க? உடனே வேலையை விட்டுத் தூக்குங்க,” என்று இளித்துக்கொண்டு பேசினாள்.

அக்னி மெல்ல தனது நாற்காலியில் இருந்து எழுந்து அவளை நெருங்க, வைஷாலி பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய மாமா தன்னிடம் வருகிறான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, தலைக்கு மேல் குருவிக்கூடு பறந்தது, ஏனென்றால் அக்னி விட்ட அறை அப்படி!

 “ஏய்! எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட ஆபீசுக்கு வந்து என்னோட ஃப்ரெண்ட் வேலையை விட்டுத் தூக்கச் சொல்லி என்கிட்டயே சொல்லுவ? ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிரு. இல்லைன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது,” என்று அக்னி கூறினான்.

 “என்ன மாமா, என்னை அடிச்சிட்டீங்க? நான் நீங்க கட்டிக்கப்போற பொண்ணு. எப்படி வலிக்குது தெரியுமா?” என்று பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே தைரியமாகப் பேசினாள்.

 “இப்பதானே சொன்னேன் இங்க நிக்காதேன்னு,” என்று சொல்லிக்கொண்டே அங்கே இருந்த டிராயரில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவளுடைய நெற்றியில் வைத்தான்.

“இங்கிருந்து போகப்போறியா இல்லை என்னோட தோட்டாவுக்கு இறையாகப்போறியா?” என்று கேட்டுக்கொண்டே ட்ரிகரை அழுத்தச் சென்றான்.

அவ்வளவுதான், அவள் முகத்தில் ஈ ஆடவில்லை. பயத்தில் என்ன செய்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

 “என்ன வைஷாலி, உன்னோட முகத்துல வெள்ளையா ஏதோ தெரியுது. என்னது அது? ஓ, உன்னோட மேக்கப்பா? என்னம்மா நீ வாட்டர்ப்ரூஃப் மேக்கப் செட்டு வாங்கக் கூடாது பாரு! உனக்குக் கொஞ்சம் வேர்த்ததுக்கே எப்படி மேக்கப் கலையுதுன்னு,” என்று நக்கலடித்தான்.

 “மாமா, ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நான் இங்கிருந்து போயிடுறேன்,” என்று கெஞ்ச ஆரம்பித்தாள். துருவன் கிண்டல் செய்வதைக்கூட மறந்துவிட்டாள், அந்த அளவுக்குப் பயம் மனதில் கவ்விக்கொண்டது.

அக்னி சிறிது துப்பாக்கியை இறங்கியதும், வைஷாலி அறையை விட்டுப் பயந்து ஒரே ஓட்டமாக அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள்.

இங்கு அறையில் அக்னி அவள் போன பின்பும் கத்திக்கொண்டிருந்தான்.
 “எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என்னோட ஆபீசுக்கு வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறது அவள்தான்னு சொல்லுவா? இதுக்கெல்லாம் என்ன காரணம்?”

“அந்த வீட்டுப் பெரிய மனுஷி கொடுக்குற இடம் தான? அவங்க சொல்லாம எப்படி இவளுக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு? நான் அங்கே போகத்தானே போறேன், அப்ப இருக்கு அவங்களுக்கு,” என்று கத்திக்கொண்டிருந்தான்.

 “அக்னி, அங்கே போய் எதுவும் பிரச்சினை பண்ணிடாதடா. கொஞ்சம் கோவப்படாம பொறுமையா இருடா. பேசிக்கலாம்.”

 “இல்லைடா, நான் இப்பவே அங்கே போகணும். இந்தப் பிரச்சினையை முடிச்சாதான் எனக்குக் கொஞ்சம் கோபமாவது குறையும். நான் கிளம்புறேன்,” என்று அக்னி அங்கிருந்து சென்றான். துருவன் சொல்வதைக் கூடக் காதில் வாங்காமல் சென்றுவிட்டான்.

********

இங்கு மலர், நெற்றியில் அந்தக் காயத்துடன் கொஞ்ச நேரம் தூங்கினாள். அதற்குள் அவளின் பெரியம்மாவிற்குக் பொறுக்கவில்லை போலும் உடனே வந்துவிட்டார்.

 “ஏய், இன்னும் என்னடி தூக்கம்? வந்து வேலையைப் பாரு. மகாராணி இன்னும் தூங்கிட்டு இருந்தா நைட் சாப்பாடு யார் செய்வாங்க? எழுந்திருச்சு வா. சும்மா கொஞ்சூண்டு இரத்தம் வந்ததுக்கு இவ்வளவு சீன் போடுற? வந்து வேலையைப் பாருடி,” என்று கத்திக்கொண்டிருந்தார்.

 “இதோ வர்றேன் மேடம்,” என்று பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்து சமையல் கட்டிற்குச் சென்றாள்.
நைட்டுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை கிரேவி, தக்காளித் தொக்கு, சாம்பார், சட்னி என்று செய்திருந்தாள்.

ஆனால், அதில் ஒன்று கூட அவள் சாப்பிடுவதற்கு இல்லை என்று அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவள் அவர்களுக்கு விதவிதமாய் சமைத்தாள். அவளுக்கு எப்போதும் அந்த வீட்டில் பழைய சாப்பாடுதான். தனக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தால் கூட வெளியே சொல்ல மாட்டாள். அவளுடைய தாத்தா பாட்டி இருந்தபோது கூட அவர்களிடம் வாய் திறந்து எதுவும் கேட்க மாட்டாள்.
கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தி அடைந்துகொள்வாள். அவள் போடும் துணிகள் கூட ஸ்வேதாவின் பழைய துணியைத்தான் கொடுப்பார்கள்.

 “ஏய், அங்கே என்ன இன்னும் பண்ணிட்டு இருக்க? சாப்பாடு ரெடியா இல்லையா?” என்று மலரின் அத்தை கேட்க.

 “இதோ மேடம், எல்லாம் ரெடியாகிடுச்சு. எல்லாரும் வந்தா சாப்பிடலாம்,” என்று சமைத்த உணவை டைனிங் ஹாலில் கொண்டு வந்து வைத்துவிட்டு அவளுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.

இரவு உணவுகளை உண்டுவிட்டு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கிவிட்டனர்.
மலரும் சாப்பிட்டுவிட்டு அவளின் அறைக்குச் சென்று நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள். நாளை வருபவர்களால் அந்த நிம்மதியும் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை.

**********

அந்தச் சென்னை மாநகரத்தில் அவ்வளவு பெரிய வீடு. அதை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்றே சொல்லலாம். ஐந்து அடுக்கு கொண்ட மாடி வீடு. கீழே அந்த வீட்டின் மூத்த பெண்மணி, அக்னியின் பாட்டி அன்னலட்சுமியின் அறை. அதில் வைஷாலி தனது பாட்டியிடம் ஒன்றுக்கு இரண்டாக ஆபீஸில் நடந்ததைப் போட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதை அனைத்தையும் கேட்ட அவளின் பாட்டி.

 “நீ ஒன்னும் கவலைப்படாத கண்ணு. அவன் அப்படித்தான் கோவப்படுவான். நான் பேசிக்கிறேன். என்ன ஆனாலும் என்னோட பேத்திதான் இந்த வீட்டுக்கு மூத்த மருமகள். நான் சொல்றது புரிஞ்சுதா?” என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அக்னியின் கார் அந்த வீட்டின் கேட்டுக்குள் நுழைந்தது. உள்ளே நுழைந்ததும் பழைய நினைவும் சேர்ந்தே அவன் மனதுக்குள் நுழைந்தது. ஒரு நிமிடம் தன் கண்களை இறுக மூடினான்.
அவன் முகத்தில் வேதனை நிரம்பி இருந்தது. கூடவே அவனின் தாய் மீனாட்சியின் நினைவுகளும் சேர்ந்து வந்தது. கார் நின்றது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தான்.
அவனை அப்படிப் பார்ப்பதற்கு ஆதித்யாவுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆதிதான் அக்னியை அழைத்து அவன் நினைவுகளில் இருந்து வெளியே கொண்டு வந்தான். தன்னைச் சமன்படுத்திக்கொண்டு முகத்தினை கடுமையாக வைத்துக்கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினான்.

அந்த வீட்டில் ரொம்ப வருடங்களாக வேலை செய்யும் வேலாயுதம் என்ற ஒரு பணியாளர் அக்னியைப் பார்த்துவிட்டு உடனே அன்னலட்சுமி பாட்டியிடம் கூறச் சென்றார்.
                     

            தொடரும்...