Avataram in Tamil Drama by Jeraath Mass books and stories PDF | அவதாரம்

Featured Books
Categories
Share

அவதாரம்


கதைச் சுருக்கம்:
மும்பையின் பரபரப்பான இதயமாகத் திகழும் தாராவி. அங்குள்ள நெருக்கடிகளுக்கு நடுவே, "வி குட்" என்ற பெயரில் ஒரு சிறிய, ஆனால் பிரபலமான ரெஸ்டாரண்ட்டை நடத்தி வருபவர் அர்ஜுன். அவருக்கு வயது 45 என்றாலும், பார்ப்பதற்கு 30 வயது இளைஞனைப் போலத் தோற்றமளிப்பவர். உடலால் இளமையாக இருந்தாலும், மனதால் அவர் மிகவும் மென்மையானவர். வன்முறை, சண்டை, சச்சரவு என்றாலே அவருக்குக் காத தூரம் அலர்ஜி. அமைதியை மட்டுமே விரும்பும் ஒரு சாதுவான மனிதர் அவர்.
அர்ஜுனின் இந்த அமைதியான வாழ்க்கையில் ஒரே ஒரு பெரிய கனவு இருந்தது. அது அவருடைய அன்பு மகள் ரியா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ரியா மீது அவர் உயிரையே வைத்திருந்தார். தன் மகள் இந்த உலகின் மிகச்சிறந்த சமையல் கலைஞராக  உருவாக வேண்டும், அவளது கைவண்ணத்தில் உலகம் சுவைக்க வேண்டும் என்பதே அர்ஜுனின் வாழ்நாள் லட்சியம். அந்தக் கனவை நனவாக்க, தன் சக்திக்கு மீறியும் முயற்சி செய்தார். இறுதியில், சமையல் கலையில் மேல் படிப்பு படிப்பதற்காக, அமெரிக்காவில் செட்டில் ஆன தன் மச்சான் விக்ரமிடம் ரியாவை அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்.
விக்ரம், அர்ஜுனுக்கு நேர் எதிர் துருவம். முன்னாள் ராணுவ வீரரான அவர், அமெரிக்காவில் ஒரு பிரபலமான ஃபைட்டிங் கிளப்பை  நடத்தி வரும் ஒரு அதிரடி ஆசாமி. வன்முறையைக் கண்டு அஞ்சுபவர் அர்ஜுன் என்றால், வன்முறையையே தொழிலாகக் கொண்டவர் விக்ரம்.
அமெரிக்கா சென்றடைந்த ரியாவை, மாமா விக்ரம் பாசத்தோடு வரவேற்றார். "உங்க அப்பா உன்னை பெரிய சமையல் ராணியாக்கச் சொன்னாரு... உனக்கு உண்மையிலேயே என்னம்மா ஆசை?" என்று அன்போடு கேட்டார். அந்த நொடியில் ரியா கொடுத்த பதில், ஒரு பூகம்பத்தையே உண்டாக்கியது. அவள் சைகையில், "எனக்குக் கரண்டி பிடிக்க இஷ்டம் இல்ல மாமா, துப்பாக்கி பிடிக்கத் தான் இஷ்டம்!" என்று ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள்.
விக்ரம் ஒரு கணம் திகைத்துப் போனார். "வாய் பேச முடியாத உன்னால எப்படிம்மா போலீஸ் ஆக முடியும்? அது சாதாரண வேலை இல்லையே?" என்று தயங்கினார். ஆனால், ரியா தன் சைகையிலேயே அதற்கு ஒரு நெத்தியடி பதில் கொடுத்தாள்: "வாய் இருக்கிறவங்க தான் மாமா வார்த்தையில ஏமாத்துவாங்க... வார்த்தை வராத எனக்கு, என்னோட செயல் தான் பதில்! என் மௌனம் தான் என்னோட பலம்."
ரியாவின் கண்களில் இருந்த அந்தத் தீர்க்கத்தையும், வெறியையும் கண்ட விக்ரம், அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு போராளியை அடையாளம் கண்டுகொண்டார். அன்றிலிருந்து விக்ரமின் கடுமையான பயிற்சியின் கீழ் ரியா தன்னை ஒப்படைத்தாள். சாதாரண மனிதர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடினமான உடற்பயிற்சிகள், தற்காப்புக் கலைகள், துப்பாக்கி சுடுதல் என அனைத்திலும் வெறித்தனமாகத் தேர்ச்சி பெற்றாள். இறுதியில், அமெரிக்கப் போலீஸ் படையில் ஒரு அதிகாரியாக இணைந்தாள்.
அதுவரை அமைதியாக இருந்த ரியா, களத்தில் இறங்கியதும் ஒரு புயலாக மாறினாள். அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த ஒரு சர்வதேசப் பெரும் மாஃபியா கும்பலைத் தனி ஆளாக நின்று அலற விட்டாள். அவளது அதிரடி நடவடிக்கைகளால் அந்த மாஃபியா சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டது. ரியாவின் வீர தீரச் செயல்கள் அமெரிக்க ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.
இந்தச் செய்தி கடல்கள் கடந்து மும்பையில் இருக்கும் அர்ஜுனுக்கு எட்டியது. சந்தோஷப்பட வேண்டிய அந்தத் தந்தை, உடைந்து போனார். தான் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாக, தான் வெறுக்கும் வன்முறைப் பாதையைத் தன் மகள் தேர்ந்தெடுத்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கனவு சிதைந்த வலியில், மகளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் ரியாவிடம் பலத்த அடி வாங்கி, அவமானப்பட்ட மாஃபியா கும்பல், அவளைப் பழிவாங்கத் துடித்தது. அவளை உயிரோடு விடக்கூடாது என்று முடிவெடுத்த அந்தக் கும்பல், அவளைப் பின்தொடர்ந்து மும்பைக்கே வருகிறது.
தந்தையைப் பார்த்து சமாதானம் செய்ய வந்த ரியாவும், அப்பா அர்ஜுனும் தாராவியில் இருக்கும்போது, அந்த மாஃபியா கும்பல் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. தப்பிக்க வழியில்லாத சூழல். அந்த ரவுடிகள் சாதுவான அர்ஜுனைத் தாக்கத் தொடங்குகிறார்கள். தன் கண் முன்னே, தன் உயிரான தந்தை தாக்கப்படுவதைக் கண்ட ரியா, அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த கோபத்தையும் வெளிப்படுத்தினாள்.
"எங்க அப்பாவுக்கு வன்முறை பிடிக்காதுதான்... ஆனா அவர் வெறுக்கிற அந்த வன்முறையே, இன்னைக்கு அவரோட பொண்ணு உருவத்துல வந்து நிக்குறது அவங்களுக்குத் தெரியாது!" என்ற ரியாவின் மனக்குரல், ஒரு யுத்த அறிவிப்பாக ஒலித்தது.
அமைதியாக இருந்த ரியா, ருத்ரதாண்டவம் ஆடத் தயாரானாள். மகளைக் கொல்ல வந்த கும்பலைத் துவம்சம் செய்யத் தொடங்கினாள். அவளது ஒவ்வொரு அடியும் இடிகளாகவும், மின்னல்களாகவும் மாறி அந்த மாஃபியா கும்பலை நிலைகுலையச் செய்தது. தாராவியின் சந்துகளில் ஒரு மௌன யுத்தம் வெடித்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போக, ஆபத்தான நேரத்தில், அமெரிக்காவிலிருந்து புயல் வேகத்தில் வந்திறங்கிய விக்ரமும் களத்தில் குதிக்க, தாராவியே அதிர்ந்தது. மாமாவும் மருமகளும் இணைந்து நடத்திய அந்த வேட்டை, உச்சகட்ட பரபரப்பு!
இது கதையின் ஒரு பகுதி மட்டுமே. இன்னும் பல எதிர்பாராத திருப்பங்களும், அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் இந்தக் கதையில் நிறைந்துள்ளன. ரியாவின் இந்த மௌன யுத்தம் எப்படி முடிவுக்கு வருகிறது? வன்முறையை வெறுக்கும் அர்ஜுன், தன் மகளின் இந்த மறுபக்கத்தை ஏற்றுக்கொண்டாரா? மாஃபியா கும்பலின் இறுதி முடிவு என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, முழுக் கதையையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.