Nandhavanam - 9 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 9

Featured Books
Categories
Share

நந்தவனம் - 9

அர்ஜுன் கூறியதைக் கேட்டு அவனையே பார்த்த நந்தனா பேச தொடங்கினாள், நீங்க ரொம்போ திறமையான நிர்வாகி, உங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா உங்க சொந்த வாழ்க்கையில எல்லாமே தப்பாதான் முடிவெடுத்திருக்கீங்க, உங்களோடு உணர்வு போராட்டத்துக்கு ஒரு சின்னப் பொண்ண பலி குடுத்திருக்கீங்க. வெறும் அஞ்சு வருஷம் வளர்த்த உங்க பெண்ணுக்காக இவளோ பேசுறீங்களே, உங்கள முப்பது வருஷம் வளர்த்த உங்க அம்மா, தன் பையன் வாழ்க்கை இப்படி இருக்கேனு நினைச்சு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா. நீங்க மட்டும் யாழினிதான் உங்க சந்தோசம்னு அவங்களுக்கு புரியவெச்சிருந்தா உங்கள விட அவள அவங்க நல்ல பார்த்திருந்திருப்பாங்க, சரி அதைத் தான் செய்யல. டெல்லி போனதுக்கப்புறம் அவங்க வரப்போக இருக்கட்டுனு விட்டிருந்தா எல்லாரு இருந்தும் தனக்கு யாரு இல்லைங்குற எண்ணம் யாழினிக்கு வந்திருக்காது. டாக்டர் சொன்னாங்கனு இங்க கூட்டிட்டு வந்தீங்க, வந்து என்ன செஞ்சீங்க உங்க தம்பிகிட்ட யாழினிய விட்டுட்டு நீங்க வேலை வேலைனு ஓடிட்டு இருக்கீங்க. யாழினிக்கு தேவ குடும்ப சூழ்நிலை இப்படி நீங்க இருந்தா அவங்க இல்ல, அவங்க இருந்த நீங்க இல்லங்குற நிலமை இல்ல.

நந்தனா சொன்னதைக் கேட்ட அர்ஜுனிற்கு அவள் சொல்வது சரி என்றே தோன்றியது. யாழினி பிறந்ததிலிருந்து தான் முன்னுக்கு பின் முரணாகத்தான் அனைத்தையும் செய்திருக்கிறேன் என்று எண்ணினான். அவன் தளர்ந்து போய் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான், அவன் நிலைகண்டு, அவனை தோளோடணைத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்த தன் மனதை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனம் செய்தாள் நந்தனா. அவளை மீறி கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீர் யாழினியை நினைத்தா, அர்ஜுனை நினைத்தா, கேள்விக்குறி ஆகிவிட்ட  தன் காதலை நினைத்தா? என்று அவளுக்கே புரியவில்லை. அர்ஜுனைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தவள், தூரத்தில் வந்த தன் தாயையும், அண்ணனையும் கண்டாள். என்னோட அம்மாவும், அண்ணனும் வராங்க என்று அர்ஜுனிடம் கூறியவள் முன்னே நடக்கத்தொடங்க, அவனும் அவளை பின் தொடர்ந்து யாழினி இருக்கும் அறைக்கு முன்பாக வந்து நின்றான்.

வேகமாக வந்த சாவித்ரி தன் மகளிடம் என்ன ஆச்சு நந்தனா, யாழ் குட்டிக்கு உடம்பு சரி இல்லனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து இருக்கீங்கனு  கதிர் போன் பண்ணி சொன்னான், என்ன  ஆச்சு அவளுக்கு என்று பதட்டத்தோடு கேட்ட தாயை சமாதானப்படுத்தி, யாழினிக்கு வலிப்பு வந்ததைக் கூறினாள். என்ன நந்து சொல்ற அவ சின்ன பொண்ணு எப்பவும் துறு துறுனு விளையாடிட்டு இருப்பா அவளுக்கு எப்படி என்று கேட்ட விக்ரமிடம், அவளுக்கு ஏதோ நியூரோ பிரச்சனை அண்ணா என்று பொய் சொன்னாள், ஏனோ அர்ஜுனிற்கு அது இதமாக இருந்தது, அதிக ஸ்ட்ரெஸ் தான் வலிப்புக்கு காரணம் என்று சொல்லி அதுக்கு விளக்கம் கொடுக்க அவனுக்குமே விருப்பம் இல்லை.

தன் பொண்ணு மேல நந்தனா குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் பாசத்தைப் பற்றி யோசித்து கொண்டிருந்த அர்ஜுனிடம் தன் தாயையும், சகோதரனையும் அறிமுகம் செய்துவைத்தாள் நந்தனா.  யாழ் குட்டிக்கு ஒன்னும் ஆகாது தம்பி நீங்க பயப்படாதீங்க, என்று சாவித்ரியும், எந்த உதவி வேணுனாலும் சொல்லுங்க, யாழினிய எங்க எல்லாருக்கு ரொம்போ பிடிக்கும், அவ சீக்கிரம் சரியாகி வீட்டுக்கு வந்துடுவா என்று விக்ரமும் அர்ஜுனிற்கு ஆறுதல் கூறினர்.

தன் மகளுக்காக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதே அர்ஜுனிற்கு மன தைரியத்தை கொடுத்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அண்ணி தனியாக இருப்பார்கள் என்று கூறி சாவித்ரியையும், விக்ரமையும் கிளம்ப சொன்னாள் நந்தனா, யாழினி கண் திறக்கும் வரை இருக்க எண்ணினாலும் சந்தியா தனியாக இருப்பது நல்லதல்ல என்று எண்ணி அவர்களும் புறப்பட்டனர். கதிரிடம் நந்தனாவை பார்த்துக்க சொல்லிவிட்டு, காலை அவர்களுக்கு உணவு கொடுத்துவிடுவதாகச் சொல்லி சென்றார் சாவித்ரி. அனைவரும் அவர் அவர் எண்ணத்தில் மூழ்கி இருக்க, சட்டென நினைவுக்கு வந்தவளாக உங்க அம்மா, அப்பா எங்க என்று அர்ஜுன், அரவிந்த் இருவரிடமும் பொதுவாக கேட்டாள் நந்தனா. அவங்க ஒரு கல்யாணத்துக்காகக் காஞ்சிபுரம் போயிருக்காங்க, நாளைக்கு வந்துடுவாங்க வெளியூர்ல இருக்கவங்ககிட்ட சொல்லி பதட்டப்படுத்த வேண்டான்னு நினைச்சு சொல்லலை என்றான் அரவிந்த். அவன் கூறியதைக் கேட்டு தலையை மட்டும் அசைத்தவள் மீண்டும் தன் சிந்தனைக்குள் சென்று விட்டாள்.

மிட் நைட் வரையிலும் யாழினி கண் திறக்கவில்லை, ஊரில் உள்ள எல்லா கடவுள்களிடமும் வேண்டியபடி நின்றிந்தனர் நால்வரும். அனைத்து வேண்டுதல்களுக்குப் பதில் உண்டு. இரவு 2 மணிக்கு யாழினி கண் திறந்தாள், கண் திறந்தவள் முதலில் தேடியது நந்தனாவைத் தான். நர்ஸ் வந்து யாழினிக்கு சுயநினைவு வந்துவிட்டதாகக் கூறியவுடன் அர்ஜுன், அரவிந்த் முன்னதாக அறைக்குள் செல்ல, அவர்களைத் தொடர்ந்து நந்தனா உள்ளே சென்றாள். தான் எங்கிருக்கிறோம் என்று  கண்களை சுழற்றி பார்த்துக் கொண்டிருந்த யாழினி, அறைக்குள் வந்த நந்தனாவைக் கண்டதும் தோஸ்த் என்று அவளை நோக்கி கையை நீட்டினாள், யாழினியின் கைகளை பற்றி கொண்ட நந்தனா அவள் அருகில் அமர்ந்து, யாழ்மா இப்ப எப்படிடா இருக்கு என்றாள். தோஸ்த் எனக்கு தலையெல்லாம் வலிக்குது இங்க பிடிக்கல வீட்டுக்கு போகலாம் என்றாள் யாழினி.  கண்டிப்பா வீட்டுக்கு போகலாம் ஆனா இப்ப இல்ல நாளைக்கு போகலாம் சரியா இப்ப நீ சமத்தா ரெஸ்ட் எடுக்கனும் என்று அவளது தலையை கோதி விட்டாள் நந்தனா. அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருந்த அர்ஜுனிற்கு, நந்தனா, யாழினிக்கிடையில் உள்ள ஆழமான அன்பு புரிந்தது, அது அவனுக்கு ஏனோ பயத்தைக்கொடுத்தது.

யாழினிக்கும் நந்தனாவுக்குமான அன்பைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுன், யாழினி தன்னை அழைக்கும் குரல் கேட்டு நினைவுலகத்துக்கு வந்தான், வேகமாக யாழினி அருகில் சென்றவன் அவள் தலைகோதி முன் நெற்றியில் முத்தமிட்டான். அப்பா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல வீட்டுக்குப் போலாம் என்று நந்தனாவிடம் சொன்னதையே அவனிடமும் சொன்னாள். யாழ் குட்டி உன்னோட தோஸ்த் சொன்னமாதிரி நீ நல்ல பொண்ண ரெஸ்ட் எடுத்தா நாளைக்கு வீட்டுக்கு போலாம் என்றான், கண்டிப்பா கூட்டிட்டு போகணும் என்று அவனிடம் 2 முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, நந்தனாவிடம்  தன்னை விட்டு எங்கேயும்  போகவேண்டாம் என்ற கோரிக்கையோடு தூங்கிபோனாள். அவளை பரிசோதித்த டாக்டர் பயப்பட எதுவும் இல்லை நாளை ஒரு ஸ்கேன் பார்த்துவிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்றார். தூங்கும் யாழினியை தொந்தரவு செய்யாமல் மூவரும் வெளியில் வந்தனர்.

யாழினிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதே அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. கதிரும், அரவிந்தும் கோழி தூக்கம் தூங்கிக்கொண்டிருந்தனர், மாலையில் இருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகள் நந்தனாவின் தூக்கத்தைத் தள்ளி நிறுத்தியிருந்தது. எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவள் அருகில் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பினாள், அர்ஜுன் கைகளில்  இரண்டு கப் காபியோடு நின்று இருந்தான்.

அவளிடம் ஒரு கப்பைக் கொடுத்தவன் தான் ஒன்றை குடிக்க தொடங்கினான், நந்தனா இருந்த மனநிலைக்கு அவளுக்குமே அது தேவையாக இருந்தது. காபி குடித்து முடிக்கும் வரை அங்கு மௌனமே ஆட்சி செய்தது. யாழினிக்கு சரி ஆகிட்டா அவ உன்கிட்ட என்ன சொன்னான்னு சொல்றனு சொன்ன, இப்ப சொல்லு யாழினி உங்கிட்ட என்ன சொன்னா, என்று திடீரென அர்ஜுன் கேட்க, அவன் கோவப்படாத மாதிரி எப்படி விஷயத்தைச் சொல்வது என்று யோசித்தாள், என்னனு சொல்லு என்று அவன் மீண்டும் கேட்க, அதுக்கு முன்னாடி நான்  ஒன்னு கேக்குறன் அதுக்கு பதில் சொல்லுங்க. என்ன கேட்கப்போற என்று பார்வையாலே கேட்டான் அர்ஜுன், நீங்க ஏன் உங்க அம்மா சொல்ற மாதிரி ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது, என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் லூசு மாதிரி பேசாத நந்தனா என்னோட கல்யாணங்குறது இனி நடக்காத விஷயம், ஏன்னா எனக்கு வரபோற மனைவி யாழினிக்கு அம்மாவாவும் இருக்கனும், இன்னைக்கு இருக்க காலகட்டத்துல அவங்க குழந்தையவே பார்த்துக்க முடியாம எல்லாம் ஆள் வெச்சு பாத்துக்குறாங்க, இதுல யாரோ குழந்தை மேல வரபோற பொண்ணுக்கு என்ன அக்கறை இருந்துட போகுது. யாழினி பிரச்சனைக்கு கண்டிப்ப என்னோட கல்யாணம் தீர்வு கிடையாது, அது மேலும் பிரச்னையை தான் கொண்டுவரும் என்று வேகமாக சொல்லி முடித்தான்.

இவன் இருக்கும் மனநிலையில் அர்ஜுன் அம்மா பேசியதைச் சொல்வது முட்டாள் தனமாக பட்டது, எனவே நந்தனா அதை சொல்லாமல் மறைத்தாள். யாழினி என்னதான் சொன்னாள் என்று மீண்டும் கேட்ட அர்ஜுனிடம், யாழினி ஸ்கூலில் எல்லாரும் அம்மா பற்றி பேசுவதை கேட்டு வருத்தப்பட்டதாகச் சொல்லி சமாளித்தாள். அங்கேயே நின்றால் மேலும் எதாவது கேட்பான் என்று எண்ணி அவசரமாக கதிர் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

சிறிதுநேரத்தில் கதிர் மீது தலை சாய்த்து தூங்கவும் தொடங்கினாள், தனியாக அமர்ந்திருந்த அர்ஜுன் அவனையும் அறியாமல் நந்தனாவை பார்க்கத் தொடங்கினான். அவளை பார்த்த நாள்முதல் அவள் காட்டும் வேறு வேறு பரிமாணங்களை நினைத்துப் பார்த்தான், யாருனே தெரியாம அவனைத் திருப்பி அனுப்ப நினைத்த அவளோட துடுக்குத்தனம், சவால் விட்டு வேலையை முடித்த அவளோட திறமை, சீட்டு குலுக்கி போட சொன்ன அவளோட குழந்தைத்தனம், தன்னை ஒருவன் தவறாகப் பார்த்தப் பார்வையில் அவளுக்குள்ளயே சுருங்கி போன பெண்மை, கதிரிடம் எந்தநேரமும் வளவளத்துக்கொண்டே இருக்கும் தோழமை, இன்று யாழினிடம் காட்டிய  பரிவு, என்று நந்தனா பற்றிய எண்ணங்கள் அவனது முகத்தில் குறுநகையை தோற்றுவித்தது. அந்த இதமான மனநிலையில் நந்தனாவைப் பார்த்த வண்ணம் தூங்கிப் போனான்.

மறுநாள் காலை எழுந்த யாழினி நந்தனாவிடம் அவள் பள்ளி கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள், அவளுக்கு சரியாக நந்தனாவும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் டாக்டரிடம் பேசிவிட்டு உள்ளே வந்தான் அர்ஜுன். தான் வருவது கூட தெரியாமல் தனி உலகில் பேசிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்து அவன் முகத்தில் புன்னகை அரும்பியது, உள்ளே வந்த தன் அண்ணனிடம் ஏதோ சொல்லவந்த அரவிந்த் அர்ஜுன் முகத்தில் இருந்த புன்னகைக் கண்டு அமைதியானான், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு தன் அண்ணன் முகத்தில் அவன் சிரிப்பைப் பார்க்கிறான் அதற்கு காரணம் நந்தனா தான் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அந்த நிமிடம் அவன் நந்தனா மீது இருந்த காதலைத் தனக்குள்ளயே புதைத்தான்.

எப்படியாவது நந்தனாவிடம் பேசி தன் அண்ணனிற்கு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று நினைத்தான். உன் காதலையே சொல்லவே  உனக்குத் தைரியம் இல்ல. நீ எப்படி உண் அண்ணனுக்குப் பேசப் போற, என்று அவன் மனசாட்சி அவனை கேலி செய்தது. அது முடிந்த கதை இனி நடப்பதைப் பார்ப்போம் என்று மனசாட்சியை அடக்கியவன் எப்படி தன் அண்ணனை இதற்குச் சம்மதிக்க வைப்பது என்று யோசிக்கத் தொடங்கினான்.