ninaikkatha neramethu - 16 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 16

Featured Books
  • નિતુ - પ્રકરણ 70

    નિતુ માટે જન્મેલ નવીનનું નાનકડું આકર્ષણ દિવસેને દિવસે પ્રબળ...

  • દાદા ભિષ્મ

    પૌરાણિક દ્રષ્ટાંત કથા –                      પિતામહ ભીષ્મની...

  • અધુરો પ્રેમ

    જિગ્નાસુ ખુબ જ સરળ અને શાંત છોકરી.... પરીવાર મા વડિલ અને નાન...

  • વહુના આંસુ

    સવીતા રસોડામાં રસોઈ કરતી હોય છે,  ત્યાં જ છાંયા બહેન જોરથી ચ...

  • ભાગવત રહસ્ય - 164

    ભાગવત રહસ્ય-૧૬૪   પિતાજી નામદેવને કહે છે- કે “સવારે વહેલા જા...

Categories
Share

நினைக்காத நேரமேது - 16

நினைவு-16

"திவிக்கா சிரிக்காதிங்க. ஒரு அக்காவா இந்த எடத்துல என்ன சொல்லணும்?" தோரணையுடன் சதீஷ் கேட்க,

"என்னடா சொல்லணும்?" திவ்யாவும் குறும்புப் பேச்சில் இணைந்து கொள்ள,

"சதீஷ் கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லணுமா... இல்லையா?'' எதிர்கேள்வி கேட்டு அவளின் வாயடைத்தான் சதீஷ்.

"எப்படிடா மனசறிஞ்சு பொய் சொல்லுவாங்க? அப்படி சொன்னா நம்ம மனசே நம்மைச் சுடும்னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்காருல...." என்று தேவி நக்கலடிக்க,

"ம்ம்... அவரே தான் நன்மைக்காக பொய் சொல்லலாம்னும் சொல்லியிருக்கார்." என்றான்.

“பாருங்க க்கா... இவன் இஷ்டத்துக்கு ரெண்டு வரி திருக்குறளை எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கிறான்னு!” தேவி கேலி பேசிய நேரத்தில்,

"அப்படின்னா பொய்யாவாவது நீ அழகன்னு சொல்லச் சொல்றியா?" என்றாள் திவ்யா.

"ஒரு பொய்யாவது சொல் அக்கா… அழகன் நான் தானென்று… அந்தப் பொய்யில்… உயிர் வாழ்வேன்," என்று அவன்‌ பாட ஆரம்பிக்க,

"டேய், போதும்டா நிப்பாட்டு. வரவர உன் இம்சை தாங்கலை." என்று தேவி, அவனை அடக்கினாள்.

பதின்பருவத்தின் தொடக்கத்தில் இருப்பவன். எந்த ஒன்றிலும் ஆர்வக்கோளாறு காட்டும் பருவம். யோசிக்காமல் பேசி முடித்த பிறகு யோசிக்கும் பருவம்.

இப்பொழுதெல்லாம் தனது தோற்றத்தில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பதால், ‘நான் எப்படி இருக்கிறேன்?’ என்று அடிக்கடி கேட்டு உடனிருப்பவர்களை தொல்லை செய்து கொண்டிருக்கிறான்.

"டேய் சதீஷ்... லார்ட் கிருஷ்ணா மாதிரி கருப்பா இருந்தாலும் நீ அழகன்டா!" என்று திவ்யா மெச்சுதலாய் கூற

"ம்க்கும்... நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கண்ணன் கலரால இருக்காரு." என்றான் சோகத்துடன்.

"என்ன என் பேரு அடிபடுது?" என்று கேட்டவாறே சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவன் வெளியே வர,

"திவிக்கா... நானும் ஒரு நாளைக்கு நாலு தடவை குளிச்சு, இந்த கண்ணா அண்ணா மாதிரி கலருக்கு வரல, என் பேரு சதீஷ் இல்ல." என்று தொடை தட்டி சபதம் செய்தான் சதீஷ்.

"ஏன்டா சதீஷ்? நானெல்லாம் உனக்கு போட்டியா? நீ எவ்ளோ பெரிய ஆளு. எதிர்கால எம்எல்ஏ. உன்கூட போட்டி போடுற அளவுக்கு நான் பெரிய ஆளில்லைப்பா!" என்று கண்ணன் கூற,

"அது… அந்தப் பயம் இருக்கணும்." என்று சதீஷ் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

அப்பொழுது தான்‌ திவ்யாவும், கண்ணனைக் கவனித்தாள். முடிதிருத்தம் செய்து, ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் பளிச்சென்று, ஒருகையில் வாக்கிங் ஸ்டிக் தாங்கிய‌ நிலையிலும் தோரணையாகவே தோற்றமளித்தான்.

ஆறடி ஆண்மகனின் வசீகரத் தோற்றம் இளம்பெண்ணவளை அசைத்துப் பார்த்ததை வயதின் கோளாறோ என்று நொடிநேரம் நினைத்து மனதை சமன் செய்தாள் திவ்யா.

இப்பொழுது தான் சதீஷ் பேச்சின் அர்த்தம் புரிந்தது. பதின்பருவத்தில் இருப்பவனுக்கு இவனுடைய தோற்றம் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க‌ வேண்டும். அதனால் தான் இவனைப் போல தோற்றத்தில் நிறத்தில் மாற்றம் கொள்ள வேண்டுமென ஆவல் அவன் மனதில் எழுந்துள்ளது என எண்ணினாள். இது அப்பருவத்திற்கே உரிய ஆசை.

"எப்படி இருக்கீங்க கண்ணன்?" என திவ்யா நலம் விசாரிக்க,

"ரொம்ப நல்லா இருக்கேன் திவ்யா... அன்னைக்கு மட்டும் உங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல்ல சந்திக்கலைனா என் நிலைமையை நினைச்சு பாக்ககூட முடியலை." என்றான், அன்றைய நாளின் நினைவில்.

"முடியாததை செய்யாதிங்க... விட்ருங்க."

"என்ன சொல்றீங்க திவ்யா?" புரியாமல் கேட்க,

"இல்ல… நினைச்சு பாக்க முடியலைனு சொன்னீங்கள்ல கண்ணன்... அதைச் சொன்னேன். முடியாததை செய்வானேன். முடிஞ்சதைப் பண்ணுவோம்." தன்போக்கில் இலகுவாய் சொல்லி விட்டாள்.

"ஆமாண்ணா, திவிக்கா கூட அதைத்தான் பண்ணுவாங்க. இங்க வந்தாலே வேர்க்கடலை பறிச்சு திங்கறது, மாங்கா அடிச்சு திங்கறதுனு இருப்பாங்க.... அவங்கம்மா சரஸ்வதி டீச்சர் கூட உனக்கு என்ன முடியுமோ அதை மட்டும் பண்றேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க!" என சதீஷ் திவ்யாவை கேலி செய்ய,

பிள்ளைகளுடன் கலந்தவள் இப்பொழுது தான் சற்று தன்னிலை மறந்தாள். சதீஷின் பேச்சு பெற்றோரை நினைவூட்ட, மீண்டும் சோர்வாய் கூம்பிப் போனது அவள் முகம்.

அவனின் பேச்சைக் கேட்ட‌ லட்சுமி, "டேய் சதீஷ்!" என அதட்ட, அவனுக்கும் அப்பொழுதுதான் சூழ்நிலை புரிந்தது.

"சாரிக்கா நான் பழைய ஞாபகத்திலேயே பேசிட்டேன். ப்ளீஸ்க்கா... சாரிக்கா… சாரிக்கா!" எனப் பலவாறாக தவிப்புடன் வளர்ந்த சிறுவன் மன்னிப்புக் கேட்க,

"சரி விடுடா... உங்க டீச்சரோட வசவக் கேக்காம நானும் மிஸ் பண்ணினேன். அவங்களுக்குப் பதிலா நீ ஆரம்பிச்சிருக்க..." என்று சூழ்நிலையை அவளே இயல்பாக்கினாள்.

லட்சுமி திவ்யாவிடம் கவனித்த ஒன்று, அவளிடம் முன்பிருந்த சிறுபிள்ளைத் தனம் இப்பொழுது இல்லை என்பதைத்தான். 

அவளின் வாடிய முகம் கண்டு கண்ணனும் வேதனையை உணர்ந்தான். தனது வண்டியை நோக்கிச் சென்றவள் ஒரு கவரை எடுத்து வந்து கண்ணனிடம் நீட்டினாள். 

"என்னங்க இது?" எனக்‌ கேட்டவாறே கவரைப் பிரிக்க, அதில் அவனுக்கான டி-ஷர்ட்ஸ் இருப்பதைக் கண்டவன்,

"உதவிக்கு கையும் கொடுத்து, போட்டுக்க உடுப்பும் கொடுக்கறீங்க. ரொம்ப நன்றிங்க!" மனநிறைவுடன் நன்றியைக் கூறினான்.

அவன் கூறியதை கேட்டவள், "இந்தக் காலோட பேண்ட் போட சிரமமா இருக்கும். லுங்கி தான் இப்போதைக்கு ஈஸியா இருக்கும். அதனால தான் டிஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன்." என்றவள், "அங்கிள் புக்ஸ் நிறைய படிக்கக் கொடுத்தாரா?" எனக் கேட்டாள்.

சண்முகமும் அவனை அழைத்து வந்த மறுநாளே சில புத்தகங்களை அவனிடம் கொடுத்தவர், "எதையும் அதிகமா யோசிக்காதே கண்ணா! முதலில் சிந்தனை அமைதியானால் தான் எடுக்கும் முடிவுகளும் சரியா இருக்கும். நிதானமாக இந்த புத்தகங்களைப் படி!" என்று கொடுத்தார்.

அவனும் அவ்வாறே புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்க, வெற்றுக் குடுவையாக இருந்த அவனது மூளையும் படித்துக் கொண்டு தலைக்குள் போட்டதை தன்னகத்தே நிரப்பிக் கொண்டது.

"ஆமாங்க... அதனால்தான் கொஞ்சம் மனசும் அமைதியா இருக்கு. இல்லைனா யோசிச்சே அடுத்த‌ நிலைக்குப் போயிருப்பேன்." என்றான் தன்னை உணர்ந்தவனாக.

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க கண்ணன்... இதுவும் கடந்து போகும். சீக்கிரம் உங்க குடும்பத்தோட சேந்துருவீங்க."

"ஆமா... நம்பிக்கை தானே வாழ்க்கை. அதானே எல்லாம்." என சதீஷ் இடையில் வந்தான்.

அவனுக்கு இவன் நிலை முழுதும் புரியவில்லை என்றாலும்,‌ ஓரளவுக்கு புரிந்து கொண்டான்.

"இவன் ஒருத்தன் போதுங்க... எப்பவும் நம்ம கவலை நமக்குத் தெரியாம போறதுக்கு."

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சண்முகம் அங்கு வந்தார். "திவ்யா சாப்பிட்டியாமா?" என்று கேட்க,

"இந்தப் வாலுபையன் பண்ணுன கூத்துல நான் கூட கேக்க மறந்துட்டேன் பாருங்க."' என்று லட்சுமியும் வருத்தப்பட,

"நானும் பாப்பாத்தி ஆன்ட்டியும் சாப்பிட்டுத்தான் வந்தோம். நீங்க வருத்தப்படாதிங்க ஆன்ட்டி." என்றாள்.

"அங்கிள், எப்ப கிளம்பணும்? நம்ம சாரதா டாக்டர்கிட்ட தானே!"

"ஆமாம்மா! இப்பவே கிளம்பலாம்," என்றார்.

டாக்டர் சாரதா ஒரு பொதுநல மருத்துவர். சண்முகம் குடும்பத்திற்கு நன்கு பரிட்சயமானவர். அவரிடம் முதலில் கண்ணனைக் காண்பித்து விட்டு, அவர் கருத்துப்படி அடுத்து என்ன செய்யலாம் எனத் தெரிந்து கொள்ளவே இப்பொழுது அங்கு செல்வது.

கண்ணனும், சண்முகமும் ஆட்டோவில் செல்ல, திவ்யா அவர்களை தனது ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தாள்.

ஏற்கனவே ஃபோனில் தகவல் சொல்லியிருந்ததால், மருத்துவரின் அறைக்கு உடனே அழைக்கப்பட்டனர்.

"வணக்கம் டாக்டர்.''

"வாங்க சண்முகம்... எப்படி இருக்கீங்க?" என வரவேற்றவர், "திவ்யா எப்படிமா இருக்க?" என்று அவளையும் விசாரிக்க,

"ஃபைன் டாக்டர்." என்றாள் திவ்யா.

"இவர் தான் நீங்க சொன்ன கண்ணனா?" எனக் கேட்க, கண்ணனும், "குட்மார்னிங் டாக்டர்." எனக் கூறினான்.

சண்முகம் அனைத்து விபரங்களையும் ஏற்கனவே தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்.

"ஆமா டாக்டர்... ஞாபகம் வர்றதுக்கான ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும்." என்று சண்முகம் கூற,

"ஏதாவது ரிப்போர்ட்ஸ் இருக்கா? ஸ்கேன் ஏதாவது எடுத்திருக்கா?"

"இன்னும் எந்த டெஸ்ட்டும் எடுக்கல டாக்டர்."

"ஆக்ஸிடென்ட்ல எந்த அளவுக்கு ஹெட் இன்ஜுரி ஆகியிருக்குனு பாக்கணும் சண்முகம். அதுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனோ, அல்லது சி.டி ஸ்கேனோ எடுக்கணும். நியூராலஜிஸ்ட் கிட்ட பார்த்தால் தான் பாதிப்பு எந்தளவுக்கு இருக்குனு சொல்லுவாங்க."

"நினைவு திரும்ப எந்தளவுக்கு சான்ஸ் இருக்கு டாக்டர்?" என திவ்யா கேட்க,

"அம்னீசியா பொதுவா ரெண்டு வகை, திவ்யா. ஒன்னு நியூராலஜிக்கலா எஃபெக்ட் ஆகிறது. ஆக்ஸிடென்ட், மேல இருந்து விழுகிறது அந்த மாதிரி பாதிப்பு ஒரு வகை. இன்னொன்று சைக்யாட்ரிக் டிஸ்ஸார்டர். மனநிலை பாதிப்பு, வயோதிகம், ஆல்கஹால் இதனால் வருவது.

முதல் வகையில் ப்ரைன் இன்ஜூரி ஹீலாகறதைப் பொறுத்து சீக்கிரமா நினைவு திரும்ப சான்ஸஸ் இருக்கு." என்று நீண்டதொரு விளக்கத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

"ஓகே டாக்டர். ஸ்கேனிங்க்கு எழுதிக் கொடுங்க!" என்று சண்முகம் கேட்க,

"முதல்ல நீங்க போய் நியூராலஜிஸ்ட்டப் பாருங்க. அவரு என்ன சொல்றாரோ அதுப்படி டெஸ்ட் எடுக்கலாம். இப்ப கோவையில பெஸ்ட்டா டாக்டர் நாராயணன் இருக்கார். நானும் ஃபோன் பண்ணி சொல்றேன்" எனக் கூறியவரிடம் மேலும் சிலபல விபரங்களைக் கேட்டுக் கொண்டு வெளியேறி வந்தனர்.

டாக்டரை சந்தித்ததில் இருந்து கண்ணனின் முகம் யோசனையைத் தத்தெடுத்தக் கொண்டது. ஏனோ மனம் சஞ்சலப்பட்டுக் கொள்வதை தவிர்க்க முடியவில்லை.

அதைக் கவனித்த திவ்யா, "என்ன கண்ணன்... ஏதோ பலமா யோசிக்கறிங்க போல?" நர்ஸிங்ஹோம் முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே அவனைப் பார்த்து கேட்டாள்.

சண்முகம் நியூரோ மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ அழைக்க சென்று விட்டார். பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனும் ஆமென்று தலையசைத்து பதிலளித்தான்.

"ஆமாங்க… சார் இருக்க இடம் கொடுத்திருக்கிறார். மேலும் பணச்செலவு வைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு."

"அதெல்லாம் அங்கிள் சமாளிப்பார். அப்படி இல்லைனா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன். இதுக்கு எதுக்கு வருத்தப்படுறிங்க?"

"நீங்களும் இப்பதான் உங்க பெத்தவங்களை இழந்திருக்கீங்க. அவங்க உங்களுக்குனு விட்டுட்டுப் போனதை ஏங்க செலவு பண்றீங்க? அதெல்லாம் வேண்டாங்க திவ்யா!" என்றான். அவர்களுக்கு அதிகப்படியான சுமையாகி விடுவோமோ என்ற எண்ணத்தில்.

"ஒரே ஆக்சிடென்ட் தான் கண்ணன். ஆனா அதுல ரெண்டு பேருமே அவங்கவங்க குடும்பத்தை இழந்திருக்கோம். ஆனா என்னோட பேரன்ட்ஸ மீட்க முடியாது. உங்களப் பெத்தவங்களோட உங்கள சேக்க என்னாலான உதவியைப் பண்ணலாம்னு நினைக்கிறேன்" என்றாள் இழப்பின் வலி அறிந்தவளாய்.

"என்னைப் பெத்தவங்க ஏதோ பெரிய புண்ணியமாப் பண்ணியிருக்காங்க போலங்க... அதுதான் உங்களை மாதிரியானவங்க கண்ணுல பட்டுருக்கேன். இல்லன்னா என்ன ஆகி இருப்பேனோ!" மீண்டும் தனது புலம்பலை ஆரம்பிக்க,

"சரி… சரி… ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க கண்ணன்... ஓவர் ஃபீலிங் உடம்புக்காகாது."

இவர் பேசிக் கொண்டிருக்கையில், சண்முகமும் ஆட்டோ அழைத்து வந்துவிட, மூவரும் வீடு திரும்பினர்.

தேவானந்தனிடம் மகனைப் பற்றி மேலும் மேலும் கேட்டு குடைந்து கொண்டிருந்தார் மங்கையர்க்கரசி. அவரும் தேடுதல் வேட்டையை தொடங்குவதற்கான யோசனைகளை மேற்கொண்டிருந்தார்.

அங்கு தவிப்பாய் பெற்றமனம். இங்கு தகவல் சொல்ல முடியாமல் பிள்ளைமனம். விதியின் விசித்திர விளையாட்டில் அரங்கேற இருப்பவை வாழ்வின் வண்ணக் கோலங்களா? அவலங்களா?!

***