ninaikkaatha neramethu - 9 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 9

Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

நினைக்காத நேரமேது - 9

நினைவு-9

நாட்கள் தன்போக்கில் நகர, நல்லதொரு நாளில் தேவானந்தன், நாதன் அன்ட் கம்பெனியை, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸோடு இணைத்துக் கொண்டு எம்.டி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அன்று, "திவ்யா... வரவேற்புக்கு எல்லாம் ரெடியா இருக்காம்மா?" என்று ராமநாதன் வினவ,

"எல்லாம்‌ ரெடி சர்." என்றாள் திவ்யா.

"தேவானாந்தனுக்கு மஞ்சள் கலர்னா ரெம்ப பிடிக்கும். பொக்கே எல்லோ ஃப்ளவர்ஸ் தானம்மா சொல்லியிருக்க?"

"ஆமா சர்." என்றாள்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது புது எம்.டி.யை வரவேற்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தனர். 

தேவானந்தனின் கார் அலுவலக வாயிலை வந்தடைந்தது. தகவல் ராமநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது. கார் டிரைவர் இறங்கிக் காரின் பின் கதவைத் திறந்து விட, தேவானந்தன் இறங்கினார்.

ஒரு கணம் திவ்யாவின் கண்கள், தாத்தாவோடு சேர்த்துப் பேரனையும் எதிர்பார்த்ததோ என்னவோ? சற்றே சோர்ந்தது.

திவ்யா ஊழியர்கள் சார்பாக பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க, இராமநாதன் தன் நண்பனுக்கு சந்தன மாலை போட்டு வரவேற்றார்.

"என்ன ராமா? அரசியல்வாதிய மாதிரி‌ வரவேற்கிற!" கேலியோடு பேச ஆரம்பித்தார் தேவானந்தன்.

"அரசியல்வாதி மாதிரினா சால்வையும்ல சேர்த்துப் போடணும்," ராமநாதனும் சளைக்காமல் கேலி பேசினார்.

"வேண்டாம்ப்பா… இதுவே போதும்." பெரிதாய் கும்பிடு போட, சிரித்துக் கொண்டே தனது நண்பனைக் கை பிடித்து, தனது அறைக்கு அழைத்துச் சென்றார் ராமநாதன்.

நண்பனைத் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். இருந்தும் நண்பனின் பதற்றம் தேவானந்தனுக்குப் புரிந்தது. எழுந்து வந்து நண்பனைக் கட்டிக் கொண்டார். 

அப்பொழுது திவ்யா கதவு தட்டி அனுமதி கேட்க, ராமநாதன் உள்ளே வரச் சொன்னார். இருவருக்கும் பழச்சாறு அடங்கிய ட்ரேயுடன் உள்ளே வந்தாள்.

"கஷ்டமா இருக்கா ராமா? இப்படிக் கேக்குறது அபத்தம் தான். வேற எப்படிக் கேக்கறதுனு தெரியல."

"சேச்சே... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தேவா, நல்ல சம்பந்தமாப் பாத்துப் பொண்ணுக்குக் கல்யாணம் பேசுவோம். பொண்ணு சந்தோஷமா இருப்பானு தெரியும். இருந்தாலும்‌ முன்ன மாதிரி பொண்ணு மேல நமக்கு உரிமை இல்லைனு நினைப்பு வரும் பாரு... அப்படித்தான் இருக்கு இப்ப!"

"அப்ப, என்னை சம்பந்தினு சொல்ற... வரதட்சணை எவ்வளவு தருவ? உன் கண்ணையே எங்கிட்ட ஒப்படச்சிருக்கேன். மிளகாப்பொடி பாக்கெட் போடுறவங்க கண்ணுல இருந்து கூட கண்ணீர் வராமப் பாத்துக்கிறேன் ராமா!" தன் நண்பனின் மனதை இலகுவாக்கும் பொருட்டு தேவானந்தன் கேலி பேச,

"உன் வாக்கு மட்டும் பழிச்சுதுன்னா... நீ கேக்க வேண்டிய அவசியமே இல்லாம என்ன கேட்டாலும் தருவேன்." என்று சந்தோஷமாகக் கூறினார் ராமநாதன்.

 நண்பனோடு மீண்டும் இணைந்ததில், அவருக்கு மனதில் மேலும் ஓர் ஆசைத் துளிர் விட்டிருந்தது. அதையே நண்பனுக்கு சூசகமாக வெளிப்படுத்தினார்.

தன் மகள் வயிற்றுப் பேத்தியை, நண்பனின் பேரனுக்குப் பேசிப் பார்க்கலாம் எனும் ஆசை மனதில் எழுந்துள்ளது. இருந்தாலும் வெளி நாட்டில் வளர்ந்த பேத்தியும், வெளி நாட்டில் வசிக்கும் தன் மகளும் இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்ற எண்ணமும் இருக்கிறது.

மகன்கள் தான் கொஞ்சம் தேவானந்தனோடு முரண்பட்டவர்களே ஒழிய தன் மகளுக்கு, எந்தவித பேதமும் நண்பனின் மீது இல்லை என்பது தெரியும்.

"திவ்யா... நீ தாம்மா சாட்சி." ஜுஸ் டம்ளரைத் தன்னிடம் நீட்டியவளைப் பார்த்து தேவானந்தன் கூற,

"எதுக்கு சர்?" என்றாள் திவ்யா புரியாமல்.

"என்ன கேட்டாலும் தருவேன்னு ராமன்‌ சொன்னார்ல‌... அதுக்கு தாம்மா!" என்று கூற,

அவர் சொன்ன சம்மந்தி என்ற வார்த்தைக்கு, ராமநாதன் கூறிய பதிலை ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிந்தது

'நான் வேலி போட்டு வச்சுருக்கற நிலத்துக்கு இவங்க பட்டாவே போடுறாங்களே!' என்று நினைத்துக் கொண்டாள்.

‘என்ன பதில் சொல்வது?’ என்று தெரியாமல் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள்.

ராமநாதனும் நண்பனோடு சிறிதுநேரம் உரையாடி விட்டு, அலுவலக ஊழியர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.

 *******

மேலும் சிலநாட்கள் விரைவாகக் கழிய, நாதன் அன்ட் கம்பெனி, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் ஆக மாறியது. தடையின்றி இயங்க ஆரம்பித்தது.

அன்று அலுவலகம் வந்த திவ்யாவை தேவானந்தன் அழைத்தார்.  நாசூக்காக கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.

"வாம்மா... உட்கார்!" என்று அனுமதி அளிக்க,

"தேங்க்யூ சர்!" என்றவாறு இருக்கையில் ‌அமர்ந்தாள்.

"ஆடிட்டிங் இருக்கு திவ்யா... இந்த கம்பெனி அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் எல்லாம், ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் டீடெய்ல்ஸோட இணைக்கணும். கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். செகரெட்டரி இன்டர்வியூக்கு விளம்பரம் கொடுத்துரும்மா."

"ஓ.கே. சர்... விளம்பரம் கொடுத்துறலாம்."

மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு. ‘வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பது என் பேரனுடைய பொறுப்பு’ என்று, அன்று ரெஸ்டாரன்டில் தேவானாந்தன் கூறியது நினைவுக்கு வந்தது.

தாத்தாவுக்கு செகரட்டரி செலக்ட் பண்ண இங்கு வருவாரா? அல்லது அவர் ஆஃபிஸில் இன்டர்வியூ நடத்தித் தேர்ந்தெடுத்து இங்கு அனுப்புவாரா?

தனது சந்தேகத்தை தேவானாந்தனிடம் வெளிப்படையாகவே கேட்க,  "தெரியலம்மா. அவன் எப்ப‌ எதைச் செய்வான்னு அவனுக்கு மட்டும்‌தான் தெரியும். செய்றதுக்கு முன்னாடி தகவல் மட்டும் தெரியப்படுத்துவான். அவ்வளவு தான்.'' என்று கூறினார்.

"ஓகே சர்.... நான் எல்லா டீடெயில்ஸ்ம் ஃபைல் பண்ணி வைக்கிறேன்," என்றவாறு எழுந்து கொண்டாள்.

தனது கேபினில் வந்து அமர்ந்தவளை நந்தினி அழைத்தாள்.

"திவ்யா..."

"ம்ம்... என்ன நந்தினி?"

"நாளைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா... இல்ல முறைப்படி வெத்தலை பாக்கு வைக்கணுமா?"

"ஏன்... வச்சா குறைஞ்சு போயிருவியா? இரு... எங்க அண்ணன் கிட்ட சொல்றேன். உங்க தங்கச்சிய வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம வெறும் வாய் வார்த்தையாக் கூப்பிடுறானு..."

"அம்மா தாயே! உனக்கு என்ன ரெண்டு ரூபா வெத்தலை பாக்கு தானே வேணும். நாளைக்கு வீட்டுக்கு வா... புடவை ஜாக்கெட்டோடு சேத்து தர்றேன்."

"அது... நாத்தனார்னா சும்மாவா? அந்த பதவிக்குனு ஒரு கெத்து இருக்குல்ல."

"எங்களுக்கும் காலம் வரும்… நாங்களும் நாத்தனார்னா யாருன்னு காட்ட வேண்டி இருக்கும்… பாத்துக்கோ ஆமா!"

"அதை அப்பப் பாக்கலாம்… இப்ப பெர்மிஷன் போட்டாச்சா?"

"இல்லப்பா… ரெண்டு பேரும் சேர்ந்தே மெயில் போட்டுருவோம். காலையில ஒன் ஹவர் தானே. இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பும் போது மேனேஜர் கிட்ட சொல்லிறலாம்."

"ம்ம்... சரி நந்தினி." பேசியவாறு இருவரும் வேலையில் கவனமாயினர்.

மறுநாள் அலுவலகத்திற்கு செல்லக் கிளம்பி‌ வந்த திவ்யாவைப் பார்த்த லட்சுமி, கண் எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இளஞ்சிவப்பு வண்ண பார்டர் கொண்ட சந்தன நிற காட்டன் புடவை. இளஞ்சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ். தளரப் பின்னியக் கூந்தலில், நெருக்கக் கட்டிய ஜாதிமல்லிச் சரம். சந்தன நிற முகத்தில் எடுப்பாய் மெரூன் கலரில் நெற்றியில் சிறு பொட்டு. மெலிதாய்த் தீட்டப்பட்ட கண்மை.

"லட்சுமி... என்ன சிலையாகிட்டயா?” செல்லாத்தாள் கேட்ட கேள்வியில் நினைவுக்கு வந்தவர்,

"பாருங்கக்கா, இந்தப் பிள்ளைய... அப்படியே அவங்க அம்மாவப் பாத்த மாதிரியே இருக்குல?" லட்சுமி சிலாகித்துக் கூற, 

"ஆமா லட்சுமி... திவ்யா, அவங்க அம்மா ஜாடை தானே... இன்னைக்கு என்ன விசேஷம்மா? அதிசயமா சேலை கட்டியிருக்க... கெஞ்சுனாக்கூட சேலை கட்ட மாட்டியே?"

"நீங்க வேற ஆன்ட்டி... இந்த புடவையைக் கட்டிட்டு எப்படிதான் வண்டி ஓட்டிட்டு ஆஃபிஸ் போய்ட்டு வரப் போறேனோனு பக்கு பக்குனு இருக்கு." என்று பெரிதாய் சிணுங்கினாள் திவ்யா.

"ஏங்கண்ணு… ஆஃபிஸ்ல விசேஷமா? சீக்கிரமா வேற கிளம்பிட்ட..." என செல்லாத்தாள் கேட்ட கேள்விக்கு,

"இல்லக்கா… இன்னைக்கு வரலட்சுமி நோன்பு இல்லையா... கூட வேலை பாக்குற பிள்ளை சுமங்கலி பூஜைக்குக் கூப்பிட்டிருக்குது. அங்க போயிட்டு அப்படியே ஆஃபிஸ் போயிரும்க்கா..." என்று லட்சுமி பதில் சொன்னார்.

அதைக் கேட்ட செல்லாத்தாளும், திவ்யாவின்‌ கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர், "அடுத்த வருஷமெல்லாம் ஜோடியா பூஜ பண்ணனும்னு வேண்டிக்க கண்ணு!" என்று வாழ்த்தினார்.

"சரிங்க ஆன்ட்டி." என்றவள், இருவரிடமும் சொல்லிக் கொண்டு, தனது ஸ்கூட்டியில் நந்தினி வீட்டிற்குச் சென்றாள்.

நந்தினியின் மாமியாரும், கணவரும்  திவ்யாவை வரவேற்றனர்.

"திவ்யா... எப்படிம்மா இருக்க?" என்று நந்தினியின் கணவன் நலம் விசாரிக்க,

"ரொம்ப நல்லா இருக்கேண்ணா…" என்று உற்சாகமாகப் பதிலுரைத்தாள்.

அங்கு பூர்ண கும்பத்தில், வெள்ளியில் அம்மன் முகம் வைத்து, சிறு பட்டுப் பாவாடை கட்டி, நகைகள் போடப்பட்டு, சடை பில்லைகள் கொண்டு தலை அலங்காரம் செய்து, பூச்சரம் கொண்டு அலங்கரிக்கப் பெற்று, வரலட்சுமி அம்மனை எழுந்தருளப் பண்ணியிருன்தனர். மனைமீது இலை போடப்பட்டு, இலையில் பரப்பிய பச்சரிசி மீது அலங்கார பூஜிதையாக வீற்றிருந்தாள் அம்மன். 

 நந்தினி, அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு, திவ்யாவை மனையில் அமர வைத்தவள், அவளுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுத்தாள். 

குங்குமம் எடுத்து தன் நெற்றி வகிட்டிலும், சேலையூனூடே கை விட்டு தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றில், தன்னவன் தனக்குத் தாலியாக அணிவித்ததின் மீதும் வைத்துக் கொண்டாள்.

மனம் நிறைந்தவனுக்காக, அவனின் நீண்ட ஆயுள் வேண்டி, அவன் நன்மைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவளது மனம் சந்தோஷத்தில் விம்மித் தணிந்தது. இவை அனைத்தும் என்னவனுக்காக என்று நெஞ்சம் பூரித்தது.

குங்குமம் எடுத்துக் கொண்டவளுக்கு, தட்டில் புடவை, ஜாக்கெட், பூ, பழம், வெற்றிலை பாக்கோடு நந்தினி தாம்பூலம் கொடுத்தாள்.

தாம்பூலம் பெற்றுக் கொண்டு, பூஜை அறையிலிருந்து வெளி வந்தவளை, நந்தினியின் மாமியார் ஷோபாவில் அமரச் சொன்னார்.

"ஏம்மா... மஞ்சக்கயிறு ரொம்ப வெளுத்துப் போயிருக்கே? புதுக்கயிறு மாத்திக்கலாம்ல? உங்களுக்கு தாலிச் செயின் போடுற பழக்கமில்லையா?" எனக் கேட்க,

"எங்களுக்கும் தாலிச்செயின் வழக்கம் தான் ஆன்ட்டி... கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே அவருக்கு வெளிநாட்டுக்கு ஆஃபர் வந்து போயிட்டார். அவர் வந்த பின்னாடி தான் தாலி பிரிச்சுக் கோர்க்கணும்னு நான் ஆசப்பட்டதால, இன்னும் அந்த சடங்கு பண்ணல. அவர் வந்ததுக்குப் பின்னாடி தான் தாலிச்செயின்ல கோர்க்கனும் ஆன்ட்டி." என்று திவ்யா கூறினாள்.

'அப்பப்பா... ஆரம்பத்தில் இதைச் சொல்லும் போது‌ இருந்த தடுமாற்றம் என்ன? இப்பொழுதெல்லாம் யார் கேட்டாலும் இதைச் சரளமாகச் சொல்லுவது என்ன?' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

பேச்சினூடே, நந்தினியின் கணவனது பார்வை நந்தினியைச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டு உள்ளூர சிரித்துக் கொண்டாள்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, நந்தினி பிரசாதத்தோடு வர, எடுத்துக் கொண்டவள், பிரசாதம் சாப்பிட்டு முடித்து இருவரும் கிளம்பினர்.

"ஆதி... இன்னைக்கு சேலைல சூப்பரா இருக்க. இவ்ளோ நாளைக்கு உன்னைய இன்னைக்குத் தான் சேலைல பாக்குறேன். ஏன் நீ ஆஃபிஸ்க்கு சேலை கட்றது இல்ல?" தனது ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ‌வந்த நந்தினி திவ்யாவிடம் கேட்டாள்.

"ஏன்னா... க்ளாமரா ட்ரெஸ் பண்ணக் கூடாதுன்னு என்ற வூட்டுக்காரறு... அதான் உன்ற அண்ணன் சொல்லி‌ இருக்காருங்கோ அம்மணி…" என்று திவ்யா கூற,

"அடிப்பாவி... சேலைய எப்போடீ கவர்ச்சி ட்ரெஸ்ஸோட சேத்தீங்க?"

"அது முதல்ல இருந்தே அந்த லிஸ்ட்ல தான் இருக்கு. சேலைக்கு அடுத்தது தான் ஒன் பீஸ், டூ பீஸ் ட்ரெஸ்‌ எல்லாம். எப்பவுமே ஓப்பனா‌ காட்றத‌ விட அங்கங்க காட்றதுல தான்‌ கிக்கே!" என்று கண்சிமிட்டினாள் திவ்யா.

"அடிப்பாவி... இதெல்லாம் தெரியமலேயே நாங்க எல்லாம் ‌பச்சப் புள்ளயாவே இருந்துட்டோம்." பெரிதாய் நந்தினி அங்கலாய்க்க,

"இந்தப் பச்சப்புள்ளய சேலைல‌ எங்க அண்ணன் விட்ட லுக்க நாங்களும்‌ பாத்துட்டு தானே இருந்தோம்.'' என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் திவ்யா.

"ஓ... அதான் இன்னைக்கிக் காலையில‌ இருந்து பார்வை ஒரு மார்க்கமா இருந்ததா?"

"இருந்திருக்கும், எப்படியும் இன்னைக்கி நைட்டு... பார்வையின் ரிசல்ட் தெரிஞ்சிரும். காலையில அவருக்காக நீ சுமங்கலி பூஜை பண்ணுன இல்ல. ராத்திரி அவர் உனக்குத் தேவி பூஜை பண்ணுவார்." கண்ணடித்துச் சொல்லி திவ்யா சிரிக்க,

"ஏய்! அவர் உனக்கு அண்ணன் முறைடி!"

"நீ… நாத்தனார் முறையாச்சே!"

"அடிப்பாவி… பூனை மாதிரி இருந்துட்டு என்னமா பேசுற?"

"என்ன இன்னைக்கு லட்சுமி விரதத்தோட அடிப்பாவி விரதமும் எடுத்திருக்கியா? எத்தனை அடிப்பாவி?" இருவரும் பேசிக் கொண்டே தெரு‌ தாண்டி மெயின்‌ரோட்டிற்கு‌ வர, இருவரது வண்டியும் மெதுவாக வேகம் ‌பிடித்தது.