Nirangal Puzhangum Oviyam in Tamil Short Stories by Prasanna Ranadheeran Pugazhendhi books and stories PDF | நிறங்கள் புழங்கும் ஒவியம்

Featured Books
Categories
Share

நிறங்கள் புழங்கும் ஒவியம்

இருவரும் இருவேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் கசிந்தது. மெள்ள மெள்ள கசிந்து ஓடி அந்த திருச்சபையின் சிவப்புகம்பளத்தில்
தெரித்து விழுந்தது. தெரித்த கண்ணீர் துளிகள் கம்பளத்தின் இடுக்குகளில், சிலுவையில் அறையப்பட்டு கிடந்த இயேசுவின் பாதங்களை நோக்கி படர்ந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலங்க பார்த்து கொண்டனர் இப்போது இவர்கள் கண்களில் காதல் மெல்ல கசிந்தது. கசிந்த கண்களில் நிகழ்ந்த சம்பாஷனையின் உரையாடல்கள் மிக நிளமானது அது ஆளமானதும் கூட.

அந்த நொடிகள் மெள்ள கடக்கையில் திருச்சபை ஆர்ப்பரித்தது,

"வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் துணையாயிருந்து, தன் வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் இந்த தம்பதியர்கள் கடவுளின் முன்னிலையிலும், திருச்சபை முன்னிலையிலும் வாக்களிக்கின்றனர். மேலும் எவ்வித வற்புறுத்தலுமின்றி, முழு மனதுடன் இவ்வாக்குறுதி அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்." என புனித சேவியர் சொல்லி முடிப்பதற்குள் அற்புத ராஜ்க்கு அப்படி ஒரு ஆனந்தம்.

"அற்புத ராஜ் ஆகிய நீ கயல்விழியை திருமணம் செய்ய சம்மதமா?"

"அற்புத ராஜ் ஆகிய நான் கயல்விழியை திருமணம் செய்ய சம்மதம்"

"கயல்விழியாகிய நீ அற்புத ராஜ் ஆகிய இவரை திருமணம் செய்ய சம்மதமா?"

"கயல்விழியாகிய நான் அற்புத ராஜ் ஆகிய இவரை திருமணம் செய்ய சம்மதம்?" என்று கயல்விழி கூற அவர்கள் இருவருக்கும் கண்ணீர் துளிகள் மேலும் பெருக்கெடுத்து ஓடியது.

அற்புத ராஜ் மற்றும் கயல்விழி இருவரும் ஒருவரை ஒருவர் உதட்டோர புன்னகையுடன் பார்த்த மாத்திரமே, மெள்ள திரும்பினர். ஓடிய ஜீவ நதி இப்போது ஆழ்கடல் அலை போல அவர்கள் கண்களில் பொங்கியது.

ஆதாமுக்கு இருப்பு கொள்ளவில்லை, சரட்டென திருச்சபையை விட்டு வெளியேறினான். நீண்ட நிசப்தம் நிலவியது. பூங்குழலி சொல்வதறியாது திகைத்து நின்றாள் அவளுக்கு வாய்வரவில்லை, சென்றவனை அழைக்க. அற்புதமும் கயலும் பூங்குழலியை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர். அந்த திருச்சபையும் தான்.

படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், 'ஆணுக்கு பெண்ணுமாக பெண்ணுக்கு ஆணுமாக அவர்களைப் படைத்தார். அவர்கள் கணவன் மனைவி சகிதமாக வாழவேண்டும் என மனிதன் எத்தனித்தான். பண்டைய காலத்தில் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உயிராய் இரு உடல்களாய் இருப்பார்கள்.' மனிதன் தனக்கு தானே சில சாஸ்த்திரங்களையும் சம்பிரதாயங்களையும் வளர்த்து கொண்டான் அது தன் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் நீக்க மற கலந்திருக்க முடிவு செய்தான். சாதிகளையும் சமயங்களையும் பிரித்தான். குலங்களையும் கோத்திரங்களையும் பிரித்தான். கடவுளையும் தொழிலையும் கூட பிரித்தான். இறைவனுக்கு சாதி மதம் வைத்து அழகு பார்த்தான். இன்னாருக்கு இன்னார் என்று வகுத்தான் அதை ஆழ வேரூன்றி புதைத்தான். அது ஆழ மரமாய் வளர்ந்து நின்றது. ஆனால் இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் வகுத்த கணக்கை எந்த தேட்ரம் கொண்டும் பகுத்தறிய முடியாது.

இருவரும் நகர்ந்தார்கள். ஆதாமை தேடி அற்புத ராஜ் செல்ல பூங்குழலி மனக்குழப்பத்தை தீர்க்க வீட்டுக்கு வந்தாள் கயல் விழி. ஆராத்தி எடுக்க அவள் வருவாளா என்று காத்திருப்பதைப் போல வாசலிலே சிறிது நேரம் யோசித்தாள் 'இது என நமக்கு புதுசா என்று சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
அற்புத ராஜூக்கு என்வென்று புரியவில்லை தன் மகன் தன் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்த போதும் அவனுக்கு கயல்விழியை மிகவும் பிடித்திருந்தது.


ஆனால் கயல் விழிக்கு ஒருவாறு விளங்கியது. தன் மகளிடம் நெருங்கி வந்தாள். அருகில் அமர்ந்து அவள் கையை இறுக பிடித்து கொண்டாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது பூங்குழலிக்கு. விழுந்த கண்ணீர் துளிகள் கயல்விழியின் திருமண மோத்திரத்தின் தங்கத்தை பரிசுத்தமாக்கியது.

கயல் விழி மெள்ள ஆரம்பித்தால். "ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு சொல்லமுடியாத வெறுமை என்ன சூழ்ந்து என்ன கொன்றுச்சு தெரியுமா...

தற்கொலைலாம் சொஞ்சுக்க பார்த்தேன்...

ஏன் எதுனாலனு எனக்கு இன்னி வரைக்கும் தெரில

அதுக்கு வெறுமைனு நானா கூட பேரு வச்சுருந்துருக்கலாம்...

தெரில..."


"தெரில! நான் ஏன் அவள பார்த்தேன் அவள ரசிச்சேன், அவ மேல ஆசப்பட்டேன் இன்னமும் தெரில...

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அவள நான் மொத மொதல்ல பார்த்தேன்

'பெயின்டிங் கேலரில'...

பெய்ன்டிங்ஸ்கு நடுவுல ஒரு பெய்ன்டிங்கா நின்னுட்டு இருந்தா...

ஷி இஸ் எ பெயின்டர் டாடி எ வன்டர்புள் பெயின்டர்

அவ பாஷையில சொல்லனும்னா வண்ணங்கள தேடி பிடிச்சு சிறை பிடிக்கிற ஓவியை...

என் வாழ்க்கையில சில மெமரபுள் மொமன்ட்ஸ்ல அதுவும் ஒன்னு..." என்று டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியத்தை பார்த்தபடியே கண்களில் நீர் கசிய அற்புத ராஜிடம் சொன்னான் ஆதாம். அந்த கண்ணீர் மேரி மேக்டலின் முகத்தை ஈரமாக்கியது.

"என் வாழ்க்கையில சில தருணங்கள எப்போதும் என் மனசுல இருக்கும்

எனக்கு இன்னைக்கும் நல்லா ஞாபகம் இருக்கு

அன்னிக்கு லைபிரேரில நான் ஜெயகாந்தனோட சிறுகதை ஒன்னு படிச்சிட்டு இருந்தேன்

'தேவன் வருவாரா'

கடைசி பக்கத்தோட கடைசி வரி

'உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது.'

அப்ப ஒரு குரல் 'அந்த குழந்தைக்கு இயேசுவயே அப்பா ஆக்கியிருக்கலாம் ஜெயகாந்தன்! இல்ல'னு

அது அவர் தான் அன்னிக்கு தான் முதல் தடவை அவர பார்த்தேன்.

அன்னைக்கு என்ன சொல்றதுனு தெர்ல சட்டுன்னு புத்தகத்த மூடிட்டு கிளம்பிட்டேன்.

அப்புறம் கொஞ்ச நாளா அவர நான் பாக்கல" சுவற்றின் மீது சாய்ந்து கிடந்த பூங்குழலியிடம் இதை அட்சர சுத்தமாக சொன்னாள் கயல்விழி.

"நான் அன்னிக்கு அத எதிர்பாக்கல, அந்த ஓவியம் அதுல இருந்த வீரியம் அவளோட மொத்த தைரியத்தையும் சொல்லுச்சு.

ஒரு பெண்ணா அந்த ஓவியத்த எப்படி வரஞ்சானு இன்னும் எனக்கு புரில.

ஆனா அது அவனால மட்டும் தான் முடியும்.

அந்த ஓவியம் என்னானு சொல்லலல.

வால்ரியஸ் மாக்சிமஸால் ரோமன் கதையோட பெயிண்டிங்க் டாடி.

உங்களுக்கு தெரியும் டாடி ...
பார்த்துருப்பீங்க ! பெரோ தன்னோட அப்பா சிமோனுக்கு தாய்ப்பால் கொடுக்குற பெயிண்டிங் தான்.

இதுவரைக்கும் எத்தனையோ பேர் வரைஞ்சுருகாங்க ஆனா அவ வரைஞ்சது 'இட்ஸ் பியாண்ட் எவரி திங் டாடி.'

'யு நோ அந்த பெயின்டிங்க அன்னைக்கு எத்தனையோ பேர் கேட்டாங்க. ஈவன் ஃபார் லாக்ஸ் டாடி.'

பட் அவ ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னா 'திஸ் இஸ் நாட் ஃபார் சேல்'"

"'திஸ் இஸ் நாட் ஃபார் சேல் மேடம்'னு அன்னைக்கு அந்த கடக்காரன் சொன்னப்போ...

எனக்கு சரியான கோபம் வந்துச்சு. அவன அடிக்குற அளவுக்கு போயிட்டேன் அப்ப தான் அவரு வந்து தடுத்து அத வாங்கி கொடுத்தாரு.

எங்க இருந்து வந்தார்னே தெரில தெரியுமா...

அந்த புக் பேரு கூட ம்ம்ம்ம்ம் அந்த புக் பேரு.....

ம்ம் ம்ம் ம்ம் ஆஆஆன் 'பிரிவோம் சந்திப்போம்' இதுவரைக்கும் ஏழே எட்டு தடவ படிச்சுருக்கேன் இன்னைக்கு டக்குனு ஞாபகம் வரல பார்த்தியா!."

"சுத்தமா ஞாபகம் இல்ல, அவள ரெண்டாவது தடவை எங்க பார்த்தேனு...

முத தடவ பார்த்தப்பயே 'ஐயம் இன் லவ் வித் ஹர்'..

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், எனக்கு அதுல நம்பிக்கை இல்லை ஆன அவள பத்தியே நினைச்சுட்டு இருந்தேன்

அப்புறம் நிறைய தடவ நாட் சூர் ஷாப்பிங் மால், தியேட்டர்னு பார்த்தேன்.

அவ கிட்ட பேச நிறைய டிரை பண்ணேன், யு நோ ஒரு தடவ பெயிண்டிங் எக்ஸிபிஷன்ல அவளே வந்து பேசுனா...

அவளோட பெயிண்டிங் போட்டோ எடுக்குறதுகாக...

என்னோட லென்ஸ்ல அவளோட நிறங்கள் விழனும்னு எழுதிருக்கு போல...

போட்டோகிராபர் அன்ட் எ பெய்ண்டர் 'வாட்ட எ பேர் டாடி'

அதுக்கப்புறம் அவளோட எல்லா பெயின்டிங் கேலரிலயும் என்னோட புகைப்படங்கள் இடம் பெற்றது.

நாங்க ஒரு நல்ல நண்பர்களானோம்"

" நட்பு தொடங்குவதுமில்ல முடிவதுமில்ல. அப்படி தான் நாங்க நண்பர்கள் ஆனோம்.

அப்ப தான் எனக்கு தெரியும் அவர் ஒரு இசை கலைஞர்னு...
புல்லாங்குழல் வாசிப்பாருனு....

ஒரு மகத்தான மெலிந்த கலைஞன்

ஹா ஹா...

இன்பாக்ட் அவரோட புல்லாங்குழல் கத்துக்கிட்ட கதையை கேட்டினா விழுந்து விழுந்து சிரிப்ப...

ம்ம் சிவரஞ்சனி இராகத்துல குறையொன்றுமில்லை துக்கடாவா இசைப்பாரு கேக்கவே செமயா இருக்கும்...

நீயும் ஒரு வாட்டி கேட்டு பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்..."


"நான் கேட்டேன்...

நான் கேட்டதுகாகவே ஒரு ஓவியம் வரையுரேன் சொன்னா...

அத கல்யாணத்தப்ப கல்யாண பரிசு கொடுக்க போறதா சொன்னா...

காதல் அறிகுறிகள ஒன்னு சேர்த்து ஒரு குறியீடா அத நான் அவள வரைய சொன்னேன்

நட்பு காதலா மாறுன தருணம் அது தான்ப்பா

'ஒரு காதலி காதலனுக்கு வரையப்பட்ட ஓவியமா இருக்கனும்னு ' என் காதல சூசகமாக அவ கிட்ட சொன்னேன்

அழகான சிரிப்பு சிரிச்சா

'ஷாஜகான் தன் மனைவிக்கு கொடுத்ததவிட அழகாவே இருக்கும்னு சொன்னா'

அந்த ஒவியதுல பல வண்ணங்கள் சேர்க்கனும்னு நான் ஆசப்பட்டு கேட்டுக்குட்டேன்

அதுக்கு 'அந்த ஓவியத்துல நிறங்கள நிரப்புரது என் பொறுப்பு ஆன இந்த ஓவியத்துல வண்ணங்கள நிரப்புரது உன் பொறுப்பு' சொன்னா...

அந்த வார்த்தை அவ காதல் உறுதி செஞ்சது...

உரையாடல்களும் ஊடல்களும் எங்க காதலுக்கு தீனி போட்டது

நாங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்டுல சொல்லி இரண்டு பேர் சம்மதத்தோட கல்யாணம் செஞ்சுகனும்னு ஆசைப்பட்டோம்"

"ஆசைப்பட்டதலாம் கிடச்சுட்டா வாழ்க்கை எப்படி சுவரசியமா இருக்காதோ அதே மாறி ஆசைப்பட்டது கிடைக்காத போது பத்தோடு பதினொன்னா அத விட்ற முடியாது...

விட்றவும் கூடாது...

என்னோட கவிதைகளுக்கு இசை தேவைப்பட்டது.

என்னோட ஹைக்கூகளுக்கு சிந்துபைரவியோ காம்போதியோ அவர் இசைக்கனும் ஆசைப்பட்டேன்.

எனக்கு உறுதியா தெரியும் அது புனிதமான காதல் இல்ல அது தீர்க்கமான புரிதல்னு.

எங்க புரிதலுக்கான தேடல தொடர நாங்க ஒன்னு சேர நினைச்சோம்

நினைச்சோம் தவிர முடிவு செய்யல.

அப்ப தான் அவர பத்தி நான் உன்கிட்ட சொன்னேன்

எங்க முடிவு உன் சம்மதமானது.

நீ கூட 'உனக்கு என்னைக்கா இருந்தாலும் ஒரு ஆண் துணை தேவைபடுனு, உனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து சொல்லிட்டு இருந்தல...

துணை என்ன துணை...

துணை இருந்தா, உன்ன இவ்ளோ வளர்த்து ஆளாக்கிருக்கேன்?

சொல்லு!!

இது சத்தியமா ஒரு ஆண் துணைக்காகவோ இன கவர்ச்சிக்காகவோ அவர நான் கல்யாணம் செஞ்சுக்கல

வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்குவதுகாகவும் என்னோட தேடலுக்காகவும் தான் இந்த கல்யாணத்த உன் சம்மததோட செஞ்சுகுட்டேன்"

"உங்க சம்மதத்த கேட்க தான் அன்னைக்கு உங்கள தேடிட்டு வந்தேன்...

அப்ப தான் நீங்க உங்க விருப்பத்த சொன்னீங்க. அப்ப அவங்க தான் பூங்குழலி அம்மானு தெரியாது...

தெரிஞ்சாலும் அதுக்கான பதில் என்கிட்ட இல்ல

ஆனா அவ கிட்ட இருந்தது. அந்த பதிலுக்கு என்னால மறுப்பு சொல்ல முடியல.

அவகிட்ட காதலை தாண்டி ஒரு புரிதல் இருக்கு.

அந்த புரிதல் தான் அவள இப்படி ஒரு முடிவு எடுக்க வச்சது. அந்த முடிவுக்கு நானும் கட்டுப்பட்டேன்.

எங்க காதல் இப்ப முழுமை பெற்றுருக்கு

இத தியாகமா நாங்க நினைக்கல எங்க காதலோட நீட்சியா தான் பாக்குறோம்.

காதல்கள் அப்ப அப்ப சில பரிணாமங்கள் அடையும் அப்படி பரிணாமமடைந்த காதல்ல எங்க காதலும் கண்டிப்பா இருக்கும்...

ஆனா எல்லாத்தையும் கடந்து போற மாதிரி காதல என்னால கடந்து போக முடியல...

வலிக்குது பா!!

அம்மா இறந்தப்ப நீங்க எப்படி கஷ்டப்பட்டீங்களோ அத விட இப்ப நான் கஷ்டப்பட்றேன்"

"ஆனா இப்ப நீ கஷ்டபடுறத என்னால பாக்க முடியல

ஆதாமும் நீயும் உயிருக்கு உயிரா காதலிச்சுருகீங்க

இத ஏன் நீங்க எங்க கிட்ட சொல்லல

அவ்ளோ பெரிய மனுஷி ஆகிட்டியா??

சொல்லு!!

உங்க காதல விட்டு கொடுத்து எங்கள சேர்த்து வைக்கிறீங்களோ" என கயல்விழி பூங்குழலியை பார்த்து கேட்டபோது மெல்லிய புன்னகை மட்டுமே அவளிடம் இருந்தது கண்களில் கண்ணீரும் கூட.

அவள் மவுனத்தில் பல அர்த்தங்கள் புதைந்து கிடந்தது. ஜென் இசட் கற்பனையும் அல்லாது லேமூரியா காலத்து சிந்தனையும் அல்லாது அவளது சித்தாந்தம் ஆழ் கடல் அமைதியை போல வான்முகில் வண்ணம் போல தெளிவாக இருந்தது.

அவள் மவுனம் கலைப்பதாக இல்லை. அப்படியே ஒரு பதிலை கூறுவதாயினும் அவர்களுக்கு புரிய போவதுமில்லை. ஆனால் ஆழ் கடல் அமைதியை கூலாங்கற்கள் உடைக்கும். வான்முகில் வண்ணங்களை அன்றில் பறவைகள் துடைக்கும்.

கயல்விழி விடுவதாக இல்லை பூங்குழலியின் தாய் அல்லவா!
அவள் மவுனத்தை கலைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை வீசினாள்.

"வாழ்க்கையில சில விஷயங்கள் சில சமயங்கள்ல புதிரா இருக்கும் மிஸ் எப்படி மிஸ்ஸர்ஸ் ஆனா மிஸ்ஸர்ஸ் மிஸ் ஆகி மறுபடியும் மிஸ்ஸர்ஸ் ஆன மாதிரி

மிஸ்க்கும் மிஸ்ஸர்ஸ்க்கும் நடுவுல சத்தியமா அப்ப அந்த தாலியோ இப்ப இந்த மோதிரமோ கண்டிப்பா இல்ல

அது இரண்டுக்கும் நடுவுல என் மனசு மட்டும் தான் இருக்கு.

மனசு தான் எல்லாதுக்குமே காரணம்.

பாஞ்சாலி அஞ்சு புருஷன்களோட வாழ்ந்ததுல எவ்ளோ பரிசுத்தம் இருக்கோ அந்த பரிசுத்தம் உன்கிட்டயும் இருக்கு.

என்னைக்கா இருந்தாலும் சீதை தீக்குளிக்க தான் வேண்டும் அது இராமன் கூட இருந்தாலும் சரி இராவணன் கூட இருந்தாலும் சரி.

உன் மனசாட்சிய கேளு அது உனக்கு என்னைக்கும் துரோகம் செய்யாது. உன் அம்மாவும் கூட...

உன் ஓவியங்கள் கருப்பு வெள்ளையா இருக்குறதும் நிறங்கள் புழங்குறதும் உன் கையில தான் இருக்கு. உன்னோட தூரிகைய அடுத்தவங்க கிட்ட கொடுத்துறாத..." என்று கூறி அவள் கையை இறுக பிடித்தவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டாள் கயல்விழி. அவள் முத்தமிட்ட தருணம் கண்ணீர் துளிகள் அவள் கைகளில் தவழ்ந்த ஓவியத்தில் தீட்டப்பட்டது.

புங்குழலிக்கு தனிமை தேவைப்படுவதை உணர்ந்து நகர்ந்தாள் கயல்விழி. ஆதாமுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தான் அற்புதராஜ்.

ஆதாமுக்கு இருப்பு கொள்ளவில்லை அவளை காண ஓடோடி வந்தான், வந்தவன் அவளை பார்த்த வண்ணம் கதவின் அருகே நின்றுகொண்டான்.

பூங்குழலியோ தான் வரையப்பட்ட ஓவியத்தை பார்த்த வண்ணம் இருந்தாள்.

அது அவனுக்காக தீட்டப்பட்ட ஓவியம்.

எங்கிருந்தோ வந்த குழலிசையின் தென்றல் காற்று கயல்விழியின் புத்தக இடுக்குகளை தாண்டி பூங்குழலியின் குழலை அசைத்து சென்றது.

இருவரும் இரு வேறு துருவங்களாய் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த ஓவியமோ நிறங்கள் புழங்க மட்டும் காத்திருந்தது.

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி