Kadhalkaaran in Tamil Short Stories by Prasanna Ranadheeran Pugazhendhi books and stories PDF | காதல்காரன்

Featured Books
  • चुप्पी - भाग - 2

    क्रांति की हॉकी खेलने की चाह को महसूस करके और उसकी ज़िद को हद...

  • छिनार

    बसंत बाबू, ये ही बोलते थे लोग, 23 साल का खूबसूरत युवक, 6 फिट...

  • बन्धन प्यार का - 33

    और नरेश,हिना और मीरा स्वामी नारायण मंदिर के लिये निकल लिये थ...

  • I Hate Love - 12

    जिसे देख जानवी ,,,,एक पल के लिए डर जाती है ,,,,,क्योंकि इस व...

  • आशा की किरण - भाग 3

    अब जो ठीक समझो, करो,’’ बेटे ने कहा, ‘‘सेना के एक कप्तान से म...

Categories
Share

காதல்காரன்

"ஐ ஹேட் யூ"

காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை 'பளார்' என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட வென பொறிந்தாள்.

"உனக்கு புரியலயாடா???

நீ எனக்கு வேணாம்" திரும்பி போக வேகம் எடுத்தவள் மறுபடியும் அவனை பார்த்து சொன்னாள்.

"ஐ ஹேட் யூ" இந்த வார்த்தை இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான்கு வருடங்கள் கடந்து இன்றும் அந்த வார்த்தைகள் ரகுவரன் நெஞ்சத்தை குடைந்து தமனிகளை ஊடுருவி கொண்டிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான் அந்த வார்த்தைகளை அவள் பரிசாக கொடுத்தாள். சஞ்சீவினியை தூக்கிய அனுமனும் கூட அன்று அதை கேட்டிருப்பான். அந்த பரிசினை இன்றும் தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டு ரகுவரன் நடனமாடிக் கொண்டிருக்கிறான்.

அன்று வழக்கத்தைவிட கோவிலில் கூட்டம் காணாது இருந்தது. ஜானகி தேவியுடன் ஸ்ரீராமசந்திரமூர்த்தி சாஷ்டாங்கமாக நின்று வைத்த கண் வாங்காமல் அவனே பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இருவரும் கொள்ளை அழகு இருவரையும் வைத்த கண் வாங்காமல் யுக யுகமாய் நாம் காணலாம் அத்துனை அழகு.

சூரியன் மெள்ள சுட்டெரிக்க வெயில் தாளாமல் "'இன்ஷா அல்லாஹ்' என்னா வெயிலு யப்பா....

என்னடா இன்னிக்கு கோயில்ல கூட்டத்தயே காணோம்

சரி நீ சாமி கும்பிட்டு வா!" ஃபகத் சொன்ன வார்த்தைகள் எதுவும் ரகுவரன் காதில் விழவில்லை. இன்னும் அந்த சொற்கள் தான் அவன் மனவோட்டத்தில் முழுவதுமாக ஆட்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

"நான் அந்த பிரசாத ஸ்டால்ல லட்டு வாங்கி வைக்கிறேன்

என்ன டேஸ்ட்ங்குற !!!" என்று ஃபகத் கூறி முடிக்கும்போதே " இந்தாங்க பகவான் பிரசாதம் என்று அக்காரவடிசலை அள்ளி எடுத்து கொடுத்தார் சுதர்சனம் அய்யங்கார். ஃபகத் பவ்யமாக வாங்கி கொண்டு ரகுவரனையும் வாங்க செய்தான். அவனுக்கு எவ்விதமான ஈடுபாடுமில்லை தேமேவென பார்த்தான்.
அவன் வடிசலையும் வழித்தெடுத்து வேகமாக நகர்ந்தான். ஆனால் ரகுவரனின் கால்கள் நகர மறுத்து மாமல்ல சிற்பம் போல் நின்றது.

அப்போது தான் அவள் வந்தாள் உத்தேசமாக அவள் எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. சட்டென ரகுவரன் முன்னம் தோன்றினாள். அடை மழைக்கு முன்பே கண்களை வெட்டும் மின்னலை போல.

"'ஓய்' நான் தான் உன் ஆளு...

கடவுள் அனுப்பி வச்சார்" என்று இடக்கண் புருவம் உயர்த்தி சீதாராமனை கைக்காட்டினாள். அப்படி அவள் சொல்லும் போது அவனுக்கு தேகம் சிலிர்த்தது.

சிறிது நேரம் அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் ரகுவரன்.

"ஓய் என்ன பார்த்துட்டே இருக்க" என இரு புருவங்களும் நெற்றி சுருக்கங்களில் சிக்கி தவிக்க கேட்டாள். நிற்க அப்படி அவள் சினுங்கையில் ஆஹா! என்ன அழகு!. மிதிலை சுயம்வரத்தில் ஜானகி இராமனிடம் கொண்ட வெட்கத்தின் சிவப்பின் அளவீடை விட மிஞ்சி அல்லவா இருந்தது.

"அழக இரசிச்சிட்டு இருக்கியா?" கன்னங்குழியில் புன்னகை தவழ கேட்டாள்.

வானத்து தேவதை வந்திறங்கி வாழ்த்துமடல் வாசிப்பதை போல கண்கள் கிறங்கி பார்த்து கொண்டிருந்தான் ரகுவரன்.

"என்ன ரகு அப்டி பாக்குர" என்றாள் அவள்.

"ஏய் நில்லு நில்லு நில்லு....

டேய் லவ் பெயிலியருனு சொன்ன
இங்க என்னடான்னா இந்த பொண்ணு என்னனமோ சொல்லுது..." இருவரையும் பார்த்து கேட்டான் ஃபகத். அவன் பார்வையில் ஏகாந்த குழப்பம் குடிக்கொண்டிருந்த பாவனையில் வைக்கப்பட்டிருந்தது.

அதே குழப்பம் தான் அவனுக்கும் தொண்டை குழியில் விழ மறுத்த எச்சிலை வேகமாக விழ செய்து,
அவளிடம் கேள்விகளை கேட்டான். அதற்கு முன் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சையும் விட்டுக் கொண்டான் .

"நீங்க யாரு...

வேற யாரோயோ நினைச்சுட்டு என்கிட்ட பேசிட்டுருங்கீங்கனு நினைக்கிறேன்" ரகுவரன் குழப்பத்துடன் கேட்டான் அதில் கொஞ்சம் எரிச்சலும் தூக்கலாக இருந்தது.

"நான் வேற யாரோனு நினைச்சுட்டு பேசல...

நீ தான் வேற யாரோ மாறி பேசற..

ம்ம்ம்ம்ம்" என உதடுகள் பிதுங்க நாடிக்குழியில் மச்சம் மூழ்க கோவித்தாள்.

"எக்ஸ் கீயுஸ் மீ

நீங்க நினைக்கிற ஆள் நான் இல்ல

சாரி" கூறி சட்டென்று நகர்ந்தான் ரகுவரன்.

ரகுவரனை பின் தொடர்ந்த ஃபகத் கண்ஜாடையில் அவளை பின்னே தொடர்ந்து வா என்றான்.

அவளும் அவர்கள் பின்னே தொடர்ந்து வந்து அவர்களை முன்னே சென்று தடுத்தாள்.

"நில்லுங்க

நான் தான் உன் லவ்வர்னு சொல்லிட்டே இருக்கேன்

நீ போயிட்டே இருக்க" பொறிந்து தள்ளினாள் அவள். அப்போதும் புன்னகை அவள் உதட்டை வாடகைக்கு வாங்கி தங்கியிருந்தது.

"எத்தன தடவ சொல்றது உங்கள எனக்கு தெரியாது

ப்ளிஸ் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று மறுதலித்தான் ரகுவரன். இயேசுவை பேதுரு மறுதலித்ததில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம் ஆனால் ரகுவரன் அவளை மறுதலிப்பதில் எவ்வித காரணமும் கூறி விடமுடியாது. ஏனென்றால் அது தான் முதல் முறை அவளை ரகுவரன் பார்ப்பது.

ரகுவரன் பின்னே நின்று ஃபகத் கைகளை உயர்த்தி அசைத்து பேசு பேசு என்று ஜாடை காட்டினான்.

நகர முற்பட்டவனை மீண்டும் தடுத்தவள்.

"நான் டிஸ்டர்ப் பன்றேனா?

நான் உன்ன லவ் பன்றேன்" கெஞ்சலுடன் கொஞ்சி சொன்னாள். கெஞ்சல்கள் கொஞ்சம் மிஞ்சிவிட்டால் கொஞ்சல்கள் ஆகிவிடும் என்பது கூடவா அவளுக்கு தெரியாமல் இருக்கும்.

"இங்க பாருங்க

நான் செம டென்ஷன்ல இருக்கேன்

தயவு செய்து போய்டுங்க" கடுகடுத்தான் ரகுவரன். அவன் முகத்தில் நுனியளவு கடுகை அள்ளி தெளித்து இருந்தால் கருகி கரைந்திருக்கும் கடுகு.

"நான் போகமாட்டேன்" என்று சொல்லி விலகி சென்றவனின் கையை பிடித்தாள்.

சட்டென்று அந்த சம்பவம் நடந்தேறியது அது யாரும் எதிர்ப்பார்க்காதது தான். ஃபகதும் கூட ஆடித்தான் போனான்.
கையை பிசைந்து கொண்டே சென்ற ரகுவரனையும். கன்னத்தை பிடித்து கொண்டு நின்ற அவளையும் பார்த்த வண்ணம் அதிர்ச்சியில் உறைந்து இருந்தான். அவனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை கோபத்தில் சென்ற ரகுவரனை பின்தொடர்ந்தான் ஃபகத்.

"டேய் நில்ரா" அவன் நிற்கவில்லை அவன் செவிகளில் அவன் குரல் கேட்கவுமில்லை.

"டேய் சொல்லிட்டே இருக்கேன்ல நில்ரா"
தாவி இறுகிப் பிடித்து நிறுத்தினான் ஃபகத்.

"லூசாடா நீ

எதுக்குடா அந்த பொண்ண அடிச்ச

சொல்றா...

யாரோ மேல இருக்குற கோபத்த ஏன்டா அந்த பொண்ணு மேல காட்ற" ரகுவரன் சட்டையை பிடித்து தோளை தள்ளி கேட்டான் ஃபகத். ஃபகதுக்கு அதைவிட பல உரிமைகள் உண்டு இருந்தும் தோளோடு நிறுத்திக் கொண்டான் தோழனாக இருப்பதாலோ என்னவோ.

"யாரவ

லூசு மாறி வந்து பேசிட்டு இருக்கா" குழப்பத்துடன் கேட்டான் ரகுவரன்.

"நீதாண்டா லூசு

உன்ன போய் லவ் பண்ணா பாரு

லூசு

சைக்கோ" மனது தாங்காமல் கோபத்துடனே கேட்டான் ஃபகத்.

"டேய்

சத்தியமா!

அவள எனக்கு யாருனே தெரியாது" குரலின் டெசிபல் கிழிறங்கியது ரகுவரனுக்கு. குற்றவுணர்ச்சியினால் நிகழ்ந்திருக்க கூடும்.

"உனக்கு தெரியாது

எனக்கு தெரியும்" என்றான் ஃபகத் கம்மிய குரலில்.

அவன் அடிமனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்க்க மனசு அடியாய் அடித்து கொண்டது.

வானத்தை பார்த்து வெறித்தவன் இப்போது ஃபகதை மெள்ள நோக்கினான்.

"உனக்கு தெரியுமா!?" ரகுவரன் கேட்ட கேள்விக்கு ஆச்சரிய குறி இடுவதா இல்லை கேள்விக் குறி இடுவதா என்று குறிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

"ஆமா!!"

"எப்படி"

"அவ யாருன்னு தெரியுமா??

உன்ன நாலு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கா

கல்யாணம் பண்ணா உன்ன தான் பண்ணுவேன்னு சுத்திட்டு இருக்க

அவள போய் அடிச்சுடியேடா

போடா" வார்த்தைகளுக்கு வரையறை போட்டுக் கொண்டான் ஃபகத். கொஞ்சம் யோசித்தவன் வார்த்தைகளை அதோடு கத்தரித்து நிறுத்தி விட்டு அவளை தேடி சென்றான். அவளை எங்கும் காணவில்லை. அவள் தன்மானம் அங்கிருக்க இடம் கொடுக்காத பட்சத்தில் அவள் அங்கு இருப்பதில் நியாயமில்லை தானே.

ஃபகத், ரகுவரனின் இரத்தமும் சதையுமாக அவனோடு ஒன்றோடி ஒன்றாக இருக்கும் ஆருயிர் நண்பன். இராமனின் இலக்குவனை போல ரகுவரனின் முகமது என்ற சொல்லாடல் பொறுத்தமாக இருக்கும். இருவரும் தத்தம் இன்பம் துன்பம் நன்மை தீமை என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழர்கள். இருபத்தெட்டு ஆண்டு மானுட வாழ்கையில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இளம் முதுதோழர்கள்.

அன்றைய இரவு ரகுவரனுக்கு மிகவும் நீண்டதாய் இருந்தது அவனுக்கு ஏனோ இருப்பு கொள்ளவில்லை. அவளை அறைந்ததிலிருந்து அவன் மனம் ஏகத்துக்கும் என்னவோ உண்டு பண்ணியது. உடனே கைப்பேசியை எடுத்து ஃபகத்தை அழைத்தான். அந்த நள்ளிரவில் அப்போது மணி கடிகார வலப்பக்கத்தின் நடுவே சுழன்று கொண்டிருந்தது.

"டேய் ஃபகது"

"என்னடா"

"ஒன்னுலடா"

"ஒன்னுலயா

டேய் மணி மூனுடா"

"நான் தப்பு பண்ணிட்டேனோனு ஒரே கில்டியா இருக்குடா"

"என்ன எனக்கு தெரியாம சரக்கடிச்சியா?"

"அது இல்லடா

அந்த பொண்ண அடிச்சத சொல்றேன்டா"

"ம்ம்ம் ச்ச்

அதுக்கு இப்ப என்னடா"

"அவகிட்ட சாரி கேட்டாதான் சரியாகும் நினைக்கிறேன்..."

"ஓஓ"

"ஆமா அவ பேரு என்னடா"

"ஆஆஆன் அவகிட்டே போய் கேளுடா
இப்ப போன வைடா" படக்கென்று போனை கட் செய்து நித்திரையின் வாசற் கதவை தட்டினான் ஃபகத்.

ரகுவரனுக்கோ நித்திராதேவியின் தரிசனம் ரொம்பா காலமாக கிடைக்கவில்லை. அனுதினமும், எப்போது விடியும் என்று இரவை கடிந்து கொண்டு ரகுவரன் காத்துக் கொண்டிருப்பான். தலையனைகள் நனைந்த வண்ணம் இருக்கும். கண்கள் கருவளையங்களின் நடுவே சொருகி கிடக்கும். அந்த கருவளையங்களே சொல்லும் அவன் கண்ணீர் துளிகளின் அளவுகளை.

அன்று சீக்கிரத்திலேயே ஃபகதிடம் இருந்து வந்தது அழைப்பு.

"டேய் இன்னைக்கு காலைல ஒரு பதினோரு மணிக்கு இபாகோ வந்துரு

அந்த பொண்ணு கிட்ட சாரி கேக்கனும் சொன்னீல" பொய் கோபத்துடன் சொன்னான் ஃபகத்.

"ஆமாடா

அவ வருவாளா" உற்சாக தொனியில் கேட்டான் ரகுவரன்.

"கெஞ்சி கூத்தாடி வர சொல்லிருக்கேன்

வந்துரு"

நேர தாமதங்களை வெகுவாக ரசிப்பான் ரகுவரன். நேரங்கள் எப்போதும் வாழ்க்கையை தீர்மானிக்காது என்பது அவனுடைய அபிப்பிராயம். அது சரி நேரம் பார்த்து செய்தவை எல்லாம் வரலாற்று பக்கங்களாக இருக்கின்றனவா என்ன?. நேரம் என்பது சூரிய சந்திரனின் வருகை பதிவேடுகள் தானே .

தாமதித்தாலும் சரியாக வந்துவிட்டான் ரகுவரன். ஃபகத்தை பார்த்து கையசைத்தபடி அவளை பார்த்தான். அவளை பார்த்தவுடன் ஒரு வித தயக்கம் அவனுள் குடிக்கொண்டது. அவளை நேருக்கு நேர் பார்ப்பதற்கே ரகுவரனுக்கு சங்கோஜமாக இருந்தது. அவளும் அவனை பார்த்து பார்க்காதது போல் பாவனை காட்டி தன் கைப்பேசியை வருடி கொண்டிருந்தாள்.

"உன்ன அடிச்சதுக்கு
ரகு கில்டியா பீல் பண்ண
ஆரம்பிச்சுட்டான்

இதான் சேன்ஸ்

அவன சாரி மட்டும் கேட்க விட்றாத

அப்படியே மெயின்டெய்ன் பண்ணு" என்று அவள் காதண்டை கிசுகிசுத்தான் ஃபகத்.

"வந்துட்டான்" கண்ஜாடையில் அவளை சமிக்ஞையிட்டான் ஃபகத்.

"டேய் இவ்ளோ நேரமாடா

நாளைக்கு உன் கல்யாணத்துக்கு கூட இப்படி தான் லேட்டா வருவியா" நக்கலாகவே கேட்டான் ஃபகத்.

"என்னது" ரகுவரன் முகபாவங்கள் ஃபகதை அச்சுறுத்தும் விதமாக இருந்தது.

"இல்லடா சும்மா கேட்டேன்"

"என் கல்யாணம் தான

என் இஷ்டம் போல தான் வருவேன்" அவளை பார்த்துக் கொண்டே ரகுவரன் பதில் சொல்ல அவள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

"உன் இஷ்டம் தான்...

உன் இஷ்டப்படி என்ன வேணாலும் செய்

ஆனால் அடுத்தவங்க மனச கஷ்டபடுத்தாத" பொடி வைத்து பேசினான் ஃபகத். அந்த பொடிக்கு பதில் கூற ரகுவரன் விரும்பவில்லை.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டே அமைதியாக தன் கைப்பேசியை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

"பேசுடா" அவன் தொடையை தட்டி ஃபகத் சொல்லும் போது அவனுக்கு சர்வமும் அடங்கியது போல மூர்ச்சையாகி இருந்தான். எதில் இருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்று ஒரு பட்டிமன்றம் பாப்பையா இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

தைரியத்தை முழுவதுமாக வரவழைத்து கொண்டு தன் இஷ்ட தெய்வமான இராம நாமத்தை மனதுக்குள் ஜபித்து கொண்டு.

"ஹ்ஹ்ஹாய்" என்றான் ரகுவரன் ஓசைகள் ஆடம்ஸ் ஆப்பிளின் தோட்டத்தில் சிக்கி வர மறுத்தது.

"ம்ம்ம்" என்ற அந்த குரலில் மறுபடியும் இலங்கை யுத்தத்தில் ஆயுதங்கள் இழந்து நிராயுதபாணியாக நின்ற இராவணனை போல மனம் கலங்கி போனான்.

"நேத்து நடந்த...." என்று ரகுவரன் வாயெடுக்கும் போதே "சார் யுவர் ஆர்டர்" அந்த குரல் இடைமறித்ததை கண்டு சிரிக்க முடியாமல் உதடுகளுக்குள்ளே தன் புன்னகையை புதைத்தாள்.

"ம்ம் ச்ச்

இவன் வேற நடுவுல" என்ற ரகுவரனின் மனக்குமுறல் இருவர் செவிகளுக்கும் விழவில்லை.

"புரோ எனக்கு நல்லா அந்த சாக்லேட் அப்புறம் வென்னிலா இரண்டுலயும் இரண்டு இரண்டு ஸ்கூப் வச்சு எடுத்துட்டு வாங்க" ஃபகத் சொல்வதை வழிமொழிவதைப் போல

"எனக்கும் அதேயே கொண்டு வாங்க" என்றான் ரகுவரன்.

அவள் இடைமறித்து "இல்ல அவருக்கு

பட்டர் ஸ்காட்ச் பிளிஸ் அன்ட் எலக்ட்ரிக் பிளாக்கரன்ட் வித் சாக்லேட் பட்டன்ஸ் அன்ட் கிரிம் ஸ்டிக்ஸ்

எனக்கு

ஒரு காட்டன் கேன்டி லேன்ட் வித் அசார்ட்டடு நட்ஸ் அன்ட் கேரமல் சாஸ்" சிறிதும் யோசிக்காமல் படபடவென சொன்னாள்.

ஒரு நிமிடம் இங்கு என்ன நடந்தது என்று அவனால் துளி கூட யுகித்து கொள்ள முடியவில்லை. தனக்கு பிடித்தவற்றை ஒன்று மாறாமல் அவள் கூறும் பொழுது அவனுக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது.

"உங்களுக்கு எப்படி தெரியும்"

"உன்ன பத்தி எனக்கு எல்லாம் தெரியும்"

"என்ன பத்தி

எல்லாம் தெரியுமா

என்ன தெரியும்????"

"ஆமா

அடைமழை, அரபிக்கடல், மேற்கு தொடர்ச்சி மலை, கன்னூர் பீச், அதிரப்பள்ளி ஃபால்ஸ், சிக்மக்லூர் டிரக்கிங், மெரைன் டிரைவ் சன் செட், அலப்பி ஹேங்அவுட்ஸ், ஸ்ரீரங்கம் கோயில், அம்மா சமையல்..."

அவளை விட்டு கண்கள் எங்கும் செல்லவில்லை. இதை அவள் கூறும் அழகே ஓர் கவிதை போல இருந்தது ரகுவரனுக்கு. அந்த கவிதை இன்னும் தொடர்ந்தது. வாலியின் வரிகள் போல அவள் சொல்லாடலில் அவ்வளவு நேர்த்தி .

"அப்புறம்

நெய்மர் கிக்ஸ், டேவிட் ஃபின்சர் மூவிஸ், யுவன் மியுசிக், ஷாஷா திரிபாதி வாய்ஸ், நா முத்துக்குமார் கவிதைகள், ஜும்பா லஹரி சிறுகதைகள்....

ம்ம்

கொஞ்சம் கார்ல் மார்க்ஸ் நிறைய கண்ணதாசன்"

"ம்ம்ம்" கொட்டி அவளை ரசித்தான். அவள் காதுகளில் தஞ்சாவூர் தலையாட்டியை போல அசைந்தாடும் அந்த ஜிமிக்கியையும் நாடியின் தெற்கு அரைக்கோள வட்டத்தில் சிக்கி தவிக்கும் மச்சத்தையும் அவன் கண்கள் அவ்வபோது கண்டு நெரியமங்கல மழைச்சாரலில் நனைந்தது போல சிலிர்த்தது.

"தென்

ஆலிவ் கிரின், நேவி புளூ, ரே பான் ஏவியேட்டர்ஸ், பிளாங்பேய்ன் வாட்ச், லூய்ஸ் பிலிப்பி ஷர்ட்ஸ், நைக் ஷூஸ் ஆப்பிள் கேட்ஜட்ஸ்...

பைனலி உன் ஃபேவரைட்ஸ் காக்டியேல் ஜட்டு அன்ட் ரிட்ரிவர் குகி"

"அவ்வளவு தானா இன்னும் இருக்கா?" அந்த வார்த்தைகளில் காதல் இல்லையென்றாலும் அதில் கொஞ்சம் கனிவு இருந்தது.

"டெய்லி கிங்க்ஸ் எப்பயாவது டுபர்க், பர்காடி அன்ட் டக்கிலா"

இதை அவள் கூறும் பொழுது அவள் முகத்தில் ஒரு நமட்டு சிரிப்பு.

அதை மறுக்க மனமில்லாமல் ஃபகதை பார்த்த ரகுவரன் பின்பு தலையை ஒருவாராக இடப்பக்கம் அசைத்து கொண்டே அவளை பார்த்தான். அவள் முகம் இப்போது இன்னும் பிரகாசமாக இருந்தது.

அவள் இன்னும் தொடர்ந்தாள்.

"உன் பைக்கோட பேர் கூட தெரியும்....

கோதண்டம்" அவள் அதை சொன்னவுடன் ஃபகத் வாயில் கையை வைத்து மறைத்தபடி சிரித்தான்.

"உன் வேல தானா..." என்று ஃபகதை பார்த்து முறைத்தபடி தொடர்ந்தான் ரகுவரன்.

"மார்கோ போலோ

மார்கோ

அதான் என் பைக்கோட பேரு"

"அப்ப கோதண்டம்" கண்கள் விரிய ரகுவரனை பார்த்து கேட்டாள்.

"அது நான் சொல்றேனே

நானும் இவனும் அடிக்கடி பைக் ரைடு போவோம்.

அப்படி ஒரு தடவ திருச்சூர் எடுத்துட்டு போயிட்டு இருந்தோம்

அப்ப பாரு...

நம்ம மார்கோ

அதான் கோதண்டம்...

பாலக்காடுலே பல்ப் ஆயிபோய்

அப்புறம் உருட்டிட்டே தான் திருச்சூர் போனோம்

என்னடா மச்சான்"

அதுவரை ஃபகத் ரகுவரன் முகத்தை பார்க்கவில்லை. 'என்னடா மச்சான்' இப்படி சொல்லி அவன் பார்த்த போது புருவத்தை உயர்த்தி கொண்டு உதட்டில் சிறு புன்னகையை தாங்கி கொண்டிருந்ததை பார்த்தவுடன். எதையாவது சொல்லி நகர நினைத்தான் ஃபகத்.

"சரி மச்சான், உன் மொபைல கொடு

கொஞ்சம் நேரம் விளாண்டு தாரேன்" என்று ஃபகத் சொல்லி நகர்ந்தான்.

மும்முரமாக எதிரிகளை பந்தாடி கொண்டிருந்தான். அப்போது ஒரு அழைப்பு வந்தது அந்த கைப்பேசியில். அந்த அழைப்பில் ரகுவரனின் தங்கை பார்கவி. போர்களத்தில் இருப்பவனுக்கு இடையூறுகளும் சத்ருகள் தான் அவை எதிரியை விட அதிக காயம் காணும். மறுபடியும் அழைப்பு வந்தது மறுபடியும் காயம் கொண்டது.

பிறகு சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி மேலே வந்து நிற்க அதையும் வெட்டி வீசினான். மறுபடியும் மறுபடியும் குறுஞ்செய்திகள் குறுக்கிட கடுப்பாகி ரகுவரனை அழைத்தான் ஃபகத்.

"டேய் உன் தங்கச்சிக்கு வேற வேலையே இல்லையா"

"என்னடா"

"சும்மா கால் பண்ணிடே இருந்துச்சு...

இப்ப மெசேஜா அனுப்புது

இந்தா" என்ற ஃபகதை ஏறிட்டு பார்த்த ரகுவரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பரபரப்பு அவனை என்னவோ செய்ததனால்.

"டேய் நீயே எதாவது அனுப்பு" என்றான்.

"என்ன அனுப்ப"

"என்ன தான் சொல்றா"

"எதோ ஃபோட்டோவா அனுப்பிட்டு ஒகே வானு கேட்குது பா"

இதை பார்த்து கொண்டிருந்தவள் சற்று இடைமறித்து "ஏய் நீ போய் பேசிட்டு வா

எதாவது முக்கியமான விஷயமா இருக்க போது"

"இல்ல

அவ சும்மா எதனா டிரஸ் அனுப்பிட்டு செலக்ட் பண்ண சொல்லுவா...

ஃபகத் நீ ஓகேனு போட்டு விடு" சொல்லிவிட்டு பரபரப்புடன் அவளை பார்த்தான்.

"ம்ம்...


நிஜமாவே ஓகே வானு கேக்குறாப்பா உன் தங்கச்சி"

ரகுவரன் புருவங்கள் உயர்ந்த உயரத்திலே அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அந்த ஃபோட்டோக்களை தரவிறக்கம் கூட செய்யாமல் 'டபுள் ஒகே' என்று அடித்து தள்ளிவிட்டான்.

போர்க்களத்தில் இருந்தவன் கன நேரத்தில் "டேய் மச்சான் தண்ணி கேன் ஹூசைன் பாய் வந்துருகாரு

இந்தா உன் போன்...

ஒரு சின்ன வேள

நான் அவர் கூட அப்படியே போய்றேன்

நீ அந்த பொண்ண பத்திரமா வீட்ல டிராப் பண்ணீறு

ஒகே வா

வரேன் மா!

பாய் டா" என்று மொபைலை அவன் கையில் தினித்தான் ஃபகத்.

"டேய் டேய்" என்று அவனை திரும்பி பார்த்த வண்ணமே இருந்த அவனுக்கு அவள் பக்கம் திரும்ப நாணம் தடுத்தது. ஆண்களுக்கும் அவ்வப்பொழுது நாணம் வந்து சில சச்சரவுகள் செய்வதுண்டு. அந்த நீண்ட நிசப்தம் அவளுக்கு பிடிக்கவில்லை. இந்த மௌனம் இந்த நாள் முழுவதும் தொடரக்கூடும் என்று நினைத்தவள்,

"போலாமா?

இல்ல

பேசலாமா" என்றாள்.

சட்டென்று மறுமொழி கூற ரகுவரனால் முடியவில்லை. அவள் அடுக்கு மொழியின் அழகை ரசிக்க அவன் மனம் தடுமாறியது. முன்னே சொன்ன வார்த்தை மட்டும் காதில் பலமாக கேட்டது ரகுவரனும் தயங்கி கொண்டே 'உம்' கொட்டினான்.

அவள் முகத்தில் அப்படியொரு அளப்பரிய புன்னகை. அவள் உதட்டில் வெட்கம் தாளவில்லை. கன்னங்கள் சிவக்க சிவக்க ஸ்ட்ராபெரி பழம் போல நிறம் மாறியது.

மார்கோவை அள்ளி எடுத்து அமர்ந்து தட்டிவிட்டான். உறுமிக் கொண்டே கிளம்ப எத்தனித்தது.

"தேங் காட்" வாய்க்குள் முனுமுனுத்தாள்.

"வாட்"

"ஒன்னுல"

மார்கோவின் வேகத்தை அவள் அதுவரை பார்த்ததில்லை எடுத்த இரண்டாவது நிமிடத்தில் தூரத்தை நேரம் அறுபதில் வகுத்து கொண்டிருந்தது. அது என்பதை தொடும் பொழுது அவள் கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் தோள்களை பிடித்து கொண்டாள்.

"உங்க வீடு எங்க" சற்று வேகத்தை குறைத்து கொண்டு கேட்டான்.

"எல்லாம் உனக்கு தெரிஞ்ச இடம் தான்....


ராம் நகர்" அந்த வார்த்தைகளில் கொஞ்சம் இறுக்கம் காணப்பட்டது.

"ராமர் கோவில், ராம் நகரா??"

"ஹலோ கோயம்புத்தூர்ல ஒரு ராம் நகர் தான் இருக்கு"
பயணத்தின் தூரம் என்னவோ குறைவு தான். ஆனால் அவள் மனதின் பயணம் மிகவும் நீண்டதாய் இருந்தது.

"அதோ லெப்ட்ல நாலாவது வீடு

இங்க தான் இங்க தான்" என்றவளுக்கு இறங்க மனமே இல்லை இப்படியே தேசாந்திரி போல சுற்றி திரிந்திட தான் அவளுக்கு ஆசை. அவனை ஓரக்கண்ணால் ஏற பார்த்தவள் சட்டென மார்கோவை பார்த்து "நைஸ் பைக்...

உங்க கோதண்டம்

சாரி சாரி

மார்கோ" என்றாள்.

அவன் கால்கள் தரையில் படவேயில்லை எப்படியாவது நகர வேண்டும் என்றே துடித்தான். அவள் கண்களை அவனால் அரை நாழிகைக்கு மேல் பார்க்க முடியவில்லை. இதை வஞ்ச புகழ்ச்சி அணியாக இங்கு குறிப்பிட முடியாது; அப்படி குறிப்பிடவும் கூடாது. நிச்சயமாக புகழ்ச்சி வஞ்ச அணியாக குறிப்பிட வேண்டி இருக்கிறது அவள் கண்களுக்காக.

"ஈவ்னிங் ஷாப்பிங் போனும்,

ஒரு ஃபைவோ க்ளாக் என்ன வந்து பிக்கப் பண்ணிக்கோ" அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

"ஆன்ன்"

அதற்கு அவன் என்ன கூறுவான் என்று முன்னமே தெரிந்திருந்தாள். மௌனம் குடி கொண்ட அவனை பார்த்து கண் சிமிட்டியபடி "பாய்" என்று சொல்லி உள்ளே போனாள்.

கொஞ்ச நேரம் எதுவும் புரியாதவனாய் நின்றவன். மார்கோவை கிளப்பும் போது தடால் என நிறுத்தி தலையில் கை வைத்தபடி பின்னே திரும்பி
"ச்ச சாரி சொல்ல மறந்துட்டேன்" என்றான் அவள் போன திசையை பார்த்தபடி.

அவள் அவள் என்று அவளாதிகாரமாகவே இருக்கின்றதே அவளுக்கு பெயர் இல்லையா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. பெயரில்லாத பாதகத்தியாக இருப்பாளோ?. சிலபெயர்களை அவர்கள் வாயால் அவர்களே கூறும் போது தான் அந்த பெயருக்கு இன்னும் ஓர் அழகு சேரும். ஆகையால் அவள் பெயரை அவள் கூறுவது தான் அழகு அது தான் நியாயமும் கூட. அதுமட்டுமல்லாமல் வல் மெல் இடையினங்கள் அவள் பெயரில் தவமிருப்பதால் அவள் பெயரை தவறாக சொல்லி வீணாக அவள் பேச்சை வாங்கி கொள்வானேன்.

ஆனால் அவளை பற்றி கூறிட அவள் தேவையில்லை. தாயையும் தந்தையையும் தன் பதின் வயதில் இழந்தவள் இரட்டை அண்ணன்மார்களும் ஒற்றை தம்பிமாரும் தான் அவள் வீடு உலகம் எல்லாம். தங்கையின் மீது புடம் போடாத தங்கத்தின் மதிப்பை அளிக்கும் பாசத்தை வைத்திருந்தனர் சகோதரர்கள். அவளும் அவர்களை தன் உலகமாக சுற்றி வருகிறாள். தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது அந்த சகோதரர்களின் ஆசை. எத்தனையோ ஜாதகங்கள் எத்தனை எத்தனையோ ஆண்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. ஒருமுறை நிச்சயத்தாம்பூலம் மாற்றிய பிறகு மாப்பிள்ளை மாறிய கதை எல்லாம் அவள் வாழ்க்கையில் உண்டு. ஒரு கட்டத்தில் திருமணம் எனும் சுவாரஸ்யத்தை முற்றிலுமாக இழந்தாள். ரகுவரனை பார்க்கும் வரை காதல் என்ற வார்த்தையைக் கூட வெறுத்தாள்.

அந்த மஞ்சள் வெயில் மாலை வேளையில் நேரம் தவறாமல் வந்தான் ரகுவரன். வானம் கொஞ்சம் கோடை மழை பொழிய எண்ணி மனதை பிசைந்து கொண்டிருந்தது. அவளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ரகுவரன். அவனுக்காகவே காத்திருந்தவள் ஜன்னல் வழியே அவனை பார்த்து வெளியே வந்து
"ஹே ஒரு டூ மின்டு" என்று சொல்லி உள்ளே போனாள். வீட்டில் யாரும் இல்லை, அவள் பதின் வயது தமையன் மட்டும் வீட்டு வாசலில் வந்து நின்று ரகுவரனை பார்த்து சிரித்தான். அவன் தந்த அந்த மாயச்சிரிப்பின் அர்த்தங்கள் பிடிபடாமல் புன்னகையை உதிர்த்தான் ரகுவரன்.

எப்படியாவது மன்னிப்பு கேட்டு கிளம்பிவிடத்தான் அவன் உள்ளம் துடித்தது.

"பரவால்ல கரக்ட் டைம் வந்துட்ட

ம்ம் குட்

ஹேய்

ஒரு கப் காஃபி சாப்பிட்டு போலாமா

லவ்ல காஃபி இல்லாமா எப்படி" நல்ல பங்கனபள்ளி மாம்பழ நிறத்தில் ஆங்காங்கே தங்க மயில்கள் தோகைகள் விரித்தாட அவள் அளவிற்கேற்ப கச்சிதமான கட்டமைப்பில் இடது பக்கம் சால்வையை முன்னழகு மறையும் மட்டும் வந்து கேட்டாள்.

"ஆன்ன்ன்" அதைத் தாண்டி வார்த்தைகள் விழவில்லை ரகுவரனுக்கு. இத்தனைக்கும் அவள் முகத்தை தாண்டி வேறெதையும் அவன் பார்க்கவில்லை.

"இல்ல ஈவ்னிங் டைம் சோ

காஃபி

சாப்ட்டு

போலாமானு சொன்னேன்" புருவங்களின் மயிரிழைகள் காற்றில் அசைய உயர்த்தி கேட்டாள்.

"காஃபி டேவா"

"ஹய்யடா

ம்ம் ஏன் சார் அங்க தான் காஃபி சாப்புடுவீங்களா"

"இல்ல

பொன்னுங்க பேசிக்கா அங்க தான போவீங்க" எதையோ எதையோ பேசி உளறுகிறோமோ என்று வாய்க்கு பூட்டு போட நினைத்தான் ரகுவரன் ஆனால் அவள் விடுவதாக இல்லை.

"ம்ம்"

"பொன்னுங்களும் ரோடுசைடு கடைல காப்பி சாப்டுவோம்

நீ...

ரேஸ் கோர்ஸ் ரோடு போ" என்றாள்.

"ரேஸ் கோர்ஸ் ரோடா

ஏங்க அது ரொம்ப தூரம்ங்க"

"ஆமா போ"

"நாலு கிலோமீட்டர் ங்க"

"ப்ச்

போயா....." அந்த சிணுங்களில் அவனுக்கு மேற்கொண்டு எதுவும் மறுப்பு கூற தோன்றவில்லை.

எதோ பிறவி பயனை அடைந்தது போல அந்த பயணத்தை எண்ணி களித்திருந்தாள். ரகுவரனின் முகத்தில் அவ்வபோது அவள் சால்வையின் நுனி முடிச்சுகள் பட்டு சென்றது. அவன் தோளை பிடித்து எதோ கூன்பாண்டியனின் உள்ளங்கவர்ந்த மணிமுடி சோழன் மகள் மானியை போல பெருமிதம் கொண்டிருந்தாள்.

என்என்னவோ பேச அவள் வாய் முனுமுனுத்தது. பாவாடை சட்டையில் தாயின் கைபிடித்து நடந்த கதைகள், தந்தையின் மார்மீது அமர்ந்து வேடிக்கை பார்த்த கதைகள் தொடங்கி தினமும் அள்ளி சூடும் பூக்கடையும், விரும்பி சாப்பிடும் பானிபூரி கடையும், தான் படித்த பிஷப் கல்லூரி நினைவுகளும், தன் கம்ப்யூட்டர் தோழிகளுடன் சுற்றி திரிந்த நாட்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

அந்த நீண்ட பயணத்தில், கால்களிலே இடறி விழும் காற்றை கிழித்து வேகத்தை எழுப்ப கியர்களை மாற்றும் அந்த சப்தம் தான் அவன் பயணத்தின் போது கேட்டிடும் மெல்லிசை. அந்த சப்தத்தில் லயித்து கொண்டிருந்தவனுக்கு
அவள் உரையாடல்களின் ஓசைகள் ஏனோ ஈர்க்கவில்லை.

"நிறுத்து...

இந்த கடை தான்" கடையை பார்த்து கொண்டே வேண்டா வெறுப்பாக மார்கோவை புங்கை மர நிழலில் நிறுத்தி விட்டு வந்தான்.

"அண்ணா! ஒரு காஃபி ஒரு டீ"

"இல்ல எனக்கு எதும் வேணாம்"

"ஏன் தம்மடிச்சா தான் டீ இறங்குமா"

"அப்படில்லாம் இல்ல"

"பின்ன எப்புடி

அண்ணா! ஒரு கிங்ஸ்"

இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாளோ என்று அவன் மனம் ஏகத்துக்கும் பதைபதைத்து.

"இந்தா...

என்ன ??"

அவன் பார்வையில் ஓராயிரம் கேள்விகள் இருந்தது. அவள் பெயரை போல அவளும் புரியாத புதிராகவே ரகுவரனுக்கு தோன்றினாள்.

"இந்தா புடி..

கூட கம்பெனி கொடுக்க ஆள் வேனுமா

நான் வேன தம்மடிக்க வரவா" என கேட்டது தான் தாமதம்.

"ம்ம்" என்றான் ரகுவரன் .

"ஓய் இன்னா

சும்மா தான் கேட்டேன்"

"இல்ல நீங்களும் அடிபீங்ளோனு நினைச்சேன்"

தள்ளி நின்றவள் எட்டி வந்து அவனை பார்த்து "நினப்பு தான்

பட் அடிச்சதில்லனு பொய்லாம் சொல்ல மாட்டேன்

காலேஜ் படிக்கும் போது டிரை பண்ணிருக்கோம்"

சிகரெட்டை மெள்ள பற்ற வைத்து விட்டு அதன் நுனி இலைகள் தீப்பிடிக்க மட்டும் காத்திருந்து சின்னதாக ஒரு இழு தன் உதடுகளின் வழியாக இழுத்தான். தொண்டைக்குழியில் மையம் கொண்ட புகையை மெதுவாக உதடுகளை குவித்து படறவிட்டான். அது மெல்ல அவள் காதோரம் உரசி அவள் கூந்தலில் படர்ந்தது. ஏதேதோ எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொண்டது தூரத்து மரக் கிளைகளின் இடுக்குகளில் மறைந்த சூரியனை பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் புகை விடும் அழகை முதன் முறையாக அருகில் நின்று பார்க்கிறாள். நன்கு அடர்ந்து படர்ந்திருந்த பிளாட்டோவின் தாடியை போல் இருந்த அந்த கூந்தல் குழந்தையை மீசையுடன் பற்றி அவன் வருடியது, அவளுக்கு தன் நெஞ்சாங்கூட்டின் நடுவே ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்கும் மயிர்க்கூச்சத்தை உடலில் உண்டு பண்ணியது.

இவ்வளவு காதல் கொண்டவள் அவனை புகைபிடிக்க வைத்து அழகு பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை தான். புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை காதலின் நடுவே ஸ்டேடுவரி வார்னிங்காக போட்டு கொண்டு இருக்க முடியாது, காதலுக்கு அது தேவையும் இராது. காதல் நன்மைகளையும் தீமைகளையும் கடந்த ஓர் முக்தி நிலை அது தரும் இன்பதுன்பம் எந்த வகையறாக்களுக்குள்ளும் அடக்கி விட முடியாது. இந்த வியாக்கியானத்திற்கு குறைச்சல் இல்லை என்று சொன்னாலும் அது தான் தீர்க்கமான உண்மை.

டீடோட்லரான முகலாய மன்னன் ஔரங்கசீபும் கூட இந்த விஷயத்தில் விதி விலக்கல்ல தன் காதலி ஹீரா பாய் ஆசையாக கொடுத்த மதுக்கிண்ணத்தை அவன் ஏற்க மறுத்ததாக வரலாறும் இல்லை. காதல் அப்படி தான் அது தீயவைகளை கூட நல்லவைகளாக காட்டும் வல்லமை படைத்தது. காதல் ஒருவனை என்னவெல்லாமோ ஆக்கும். குழந்தையாக்கும், மிருகமாக்கும், தெய்வமாக்கும், ஞானியாக்கும் அது எவனை எதுவாக ஆக்கும் என்று யாராலும் ஊகிக்க முடியாது.

அவ்வப்போது நெற்றியை தேய்த்து விட்டு உதட்டை பிடித்து குவித்து நிறுத்தி வைக்கும் அவன் செய்கையை அவள் சலிப்பு தட்டாமல் ரசித்து கொண்டிருந்தாள்.

கண்ணாடி குடுவையில் உள்ள காஃபியை வாஞ்சையுடன் எடுத்து தன் சால்வையில் அனைத்து கொண்டு அவனை வெகுவாக ரசித்தவள். சிகரெட் முழுவதும் தன்னை சாம்பலாக்கிய பிறகு மண்ணில் இட்டு ரகுவரன் அவளை பார்த்த போது சட்டென்று தன் பார்வையை மறைத்தாள். காமத்துப்பால் குறிப்பறிதலின் நான்காம் குறள் நிகழ்ந்து கொண்டிருந்தது. வள்ளுவனின் கோட்பாடுகளை தாண்டி எந்த காதலும் நிகழ்ந்திடுமா என்ன?.

சூடாக ஆவி பறக்க காத்திருந்த லெமன் டீயை எடுத்து கொண்டு சில நிமிடங்கள் தாடியை வருடியபடி அங்குமிங்குமாக நெளிந்தான். இரண்டாவது சிகரெட்டுக்கு தான் இவ்வளவு சலசலப்பும்.

"ஒரு நாளைக்கு எவ்ளோ சிகரெட் அடிப்ப "

"என்ன ஒரு நாலு"

"நாலு பாக்கெட்டா???'

"நாலு பாக்கெட் இல்ல நாலு சிகரெட்" மீண்டும் ஒரு புகைமண்டலத்தில் திளைக்க ஆயத்தமானவன் அவளிடம் விலகி புங்கை மர நிழலில் இருந்த மார்கோவின் மேல் சாய்ந்து அவன் இடக்கையை தன் வலக்கையுடன் இறுக்க பிடித்துக் கொண்டான். அப்போது தான் முதன் முறையாக எதிரே வந்த அவளை கேசாதி பாதம் வரை பார்த்தான். நல்ல உயரம் தான், சிறிய இடை, கயல் போன்று அகண்ட விரிந்த கருகரு கண்கள், கூரிய மூக்கு, துருக்கிய தேனியின் தேனொழுகும் இதழ்கள், அவள் வருகையை எக்காளமிட்டு சொல்லும் அம்புஜ வாசம். ஆரண்ய காண்டத்தில் நாயகனின் வர்ணிப்பை விட சற்று அதிகமாகவே அவளை வர்ணித்துவிட்டிருந்தான்.

'செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும் நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன'

பாதம் நோகாமல் அடி மேல் அடி வைத்து வந்தவளை கருவிழிகள் களவாடியது. அவன் கருவிழிகள் தன்னை களவாடிக் கொண்டிருப்பதை கவனித்தவள் தன்னை முழுவதும் களவாடட்டும் என்று நினைத்தாளோ என்னவோ. சட்டென சீரிய இடைவெளியில் நின்றவள். விலாகாத சால்வையை கொண்டல் காற்றில் கொஞ்சம் விலக வைத்து அழகாக எடுத்து வைத்தாள். மொத்தமும் அடங்கி ஒடுங்கியது போல தான் நின்றிருந்தான் ரகுவரன். அவள் வருகைக்கு அழகு சேர்க்க இயற்கையும் லஞ்சம் வாங்கியோதோ தெரியவில்லை தளிர் கொடிகள் பார்த்தால் நோகும் அவளுடைய பஞ்சு போன்று மென்மையான பாதங்கள் மண்ணில் மாசடைய கூடாதென்று கொண்டல் காற்றில் மையல் கொண்ட தங்க அரளிகள் அவள் சிவந்த பாதம் நோகாத வண்ணம் விழுந்தது.

மயிலின் நடையழகும் அன்னத்தின் வடிவழகும் தோற்று போகும் அவள் நடையில். சிறுது நேரத்தில் அவள் காலணிகளை வாடகைக்கு வாங்கி குடித்தனம் நடத்திட தோன்றியது போல அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.'சண்டாளி !கண்ணில் வசியம் வைக்கும் வஞ்ச மகள் இவளோ' என்று மனதுக்குள் நினைத்திருப்பான் போல. நெருங்கி வந்தவள் காப்பியை குடித்ததும் புரையேறிவிட்டது. அதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. 'பார்த்து' என்று மட்டும் பார்த்து சொன்னான்.

அவள் அழகை பாட ஆறு காண்டங்களும் நூற்றி இருபத்தி மூன்று படலங்களும் பத்தாது. ஏழாம் காண்டத்தை எழுத ஒருவனை கடன் வாங்கி கூப்பிட்டு எழுதும் அளவுக்கு அவன் குலோத்துங்கனும் அல்ல. ஏதோ கண்கள் இருக்க மட்டும் ரசித்து கொண்டான்.

அவள் கூந்தலுக்கும் தான் ஆசை போல அவன் உள்ளத்தை பந்தாட. சில்லிட்டு பறந்த கிளியோபாட்ராவின் மார்பை போல தூய்மையான கரிய நிறம் கொண்ட கேசத்தை அவள் அள்ளி எடுத்து ஒதுக்குகையில் செத்தே தான் போனான். 'யாத்தே' ஒரு கணம் கண்ணீரை பரிசளித்தவள் அல்லவா வந்து போனாள்.

"பொதுவா பசங்க ராயல் என்ஃப்ல்டு டுயூக் இந்த மாதிரி பைக் தான் வாங்குவாங்க

பட் நீ மட்டும் என்ன டிப்ரண்டா" தன்னை களவாடியாது போதும் என்பது போல கேட்டாள்.

மார்கோவை பற்றி கேட்டதும் உள்ள கிளர்ச்சி அடைந்தவனாய்

"டிப்ரண்ட்லாம் ஒன்னுல

ஆக்சுவலி இட் இஸ் மை பைனல் இயர் பிராஜக்ட்

இன்ஜினியரிங் படிக்கறப்ப நானும் என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டிஸைன் பண்ணது

எல்லா பைக்குக்கும் பிரைஸ் டேக் இருக்கும்

இந்த பைக்குக்கு இல்ல

இட் இஸ் பிரைஸ் லெஸ்

டேஷ்பேனல், சைடுபேனல், ப்ரன்ட் ஃபென்டர், ரேர் ஹக்கர், ஸ்விங்கிராம் கவர், பிரன்ட் ஃபேரிங், ரேர் ஃபேரிங், கேலிபர், த்ராட்டில், ஸைலன்சர் அன்ட் ஸஸ்பென்சன் எல்லாமே எக்ஸ்க்ளூசிவ்லி டிஸைன்ட் இன்குளுடிங் த ஹார்ட்

ஐ மீன் த இன்ஜின் சிக்ஸ் ஸ்ரோக், டிவென்டி வால்வ், செவன்ஹன்ரட் சிசி

இட் இஸ் ஆல்வேஸ் க்ளோஸ் டு மை ஹார்ட்"

"போதும் போதும்

சத்தியமா நீ சொன்ன எதுமே எனக்கு புரில

பட் ரியலி நைஸ்" அந்த பைனரி கண்களுக்கு மார்கோவை அவன் சொன்னது போல பார்க்க தெரியவில்லை.

ஆர் பி என்று மார்கோவின் மார்பில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சின்னத்தை அவள் மெள்ள வருடி கொண்டே சொன்னாள்.

தேனீர் தீர்ந்த பின்பும் தொடர்ந்தது அந்த மெக்கானிக்கல் உரையாடல், அவளும் காத்திருந்த தருணங்களை முழுவதுமாக அனுபவித்து கொண்டிருந்தாள். ஒரு வழியாக மார்கோவின் பெருமைகளை பேசி முடித்தாகி விட்டான். இப்போது அவனே கேட்டான்.

"போலாமா"

"ம்ம் போலாமே

ப்ரூக்ஃபீல்ட்ஸ்"

"அங்க இருந்து தான வந்தோம் அங்கே டீ குடிச்சிருக்கலாமே"

"சும்மா சின்னதா ஒரு பைக் ரைடு உன் கூட

அதுக்கு தான்" அந்த வார்த்தைகளை
கேட்டதும் 'நல்லா வந்து மாட்டிகிட்டோம்' என்று கண்டிப்பாக அவன் நினைத்திருப்பான் ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருப்பதையும் அவள் கண்டிப்பாக அறிந்திருந்தாள். சின்ன சின்ன ஊடல்கள் தானே காதலின் சுவாரஸ்யங்கள்.

உள்ளே நுழைந்ததும் கண்ணுக்கு தெரிந்தவரை சுமார் நாற்பது கடைகள். கண்களுக்கு புலப்படாமல் எத்தனையோ யார் கண்டா. கோடை மழையின் சாரலில் நனைந்த இருவரும் பரஸ்பரம் தங்களை உலர்த்தி கொண்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்த ரகுவரன் இன்று எத்தனை கடை ஏறி இறங்க போகிறோமோ என்ற பீதியிலேயே சாரலில் தோய்ந்த வெண்ணிலவை இரசிக்க மறந்துவிட்டான். அவளுக்கு எந்த வித சஞ்சலமும் இல்லை 'வா' என்று சொல்லி மூன்றாவது மாடியின் நான்காவது கடைக்குள்ளே நுழைந்தாள்.

கடை கிடைத்துவிட்டது அதற்கு விடை கிடைக்குமா என்ற பேராவலுடன் உள்ளே நுழைந்தான். நேரே சென்றவள், ஏதோ சம்பாஷனைகள் செய்தாள். திடிரென மறைந்துவிட்டாள், எங்கே என தேடித் தேடி அவன் கண்கள் சுருங்கிப்போனது. படார் என கொய்சகத்தை சரித்து செய்து கொண்டே வெளியே வந்தாள். நல்ல ஐந்து முழப் புடவை, தசார் பட்டின் ஜாதி, மயிலின் கழுத்துக்கும் அலகுக்கும் நடுவே விரவிக் கிடக்கும் நிறம், சாயம் போன அவுரிநெல்லி நிற பார்டர், பார்டருக்கு ஏத்தாற்போல் முழங்கை அகல ஜாக்கெட், முந்தானை எங்கும் கிளோனிங் செய்யப்பட்ட கதிரவன்கள், பிளீட்ஸில் வின்மீன் துள்ளல்கள் என அவள் புடவை கட்டி வந்தது தான் தாமதம். ஒவியன் வண்ணங்களை தொட்டுத் தொட்டு ஓவியத்தை தீட்டுவது போல அவன் கண்கள் அவளையும் நிலத்தையும் தொட்டுத் தொட்டு சென்றது.

பெண்கள் பார்ப்பது அவர்களை தவிர யாருக்கும் தெரியாது ஆனால் ஆண்கள் பார்ப்பது அவனை தவிர எல்லோருக்கும் தெரியும். அப்படி தான் அவன் அசடு வழிந்தது அந்த கடைத் தெருவுக்கே தெரிந்தது. எதுவும் பேசாமல் தொண்டைக் குழியில் எச்சிலை முழுங்க முடியாமல் முழுங்கி கொண்டு நகர்ந்தான் . சும்மா நகர்ந்தவனை சும்மா விடுவாளா என்ன?. அவள் கண்களே கேள்வியை கேட்க கேள்விக் குறியை புருவங்கள் இட்டது. அவனும் கிழக்கும் மேற்குமாய் தலையசைவை பதிலாக கொடுத்தான்.

அவள் அதோடு விடவில்லை, தேடல்கள் தொடர்ந்தன. புடவை கட்டுக்கே ஒரு மணித்தியாலம் செலவிட்டவள் இதற்கு எவ்வளவு நேரம் செலவழிப்பாளோ என்று மணி பார்ப்பதை கூட வெறுத்து நின்றான். அவள் அதிக நேரம் பிடிக்கவில்லை ஒரு சிவப்பு லெகங்காவை மட்டும் பேக் செய்ய சொல்லி விட்டு வந்தாள். அதையும் போட்டுப் பார்த்திருக்கலாம், ஏமாந்து தான் போனான் அவளும் ஏமாற்றி தான் வந்தாள்.

"எனக்கு பசிக்குது" கீழ் உதடு மேல் உதடை மறைக்கும் மட்டும் சொன்னாள்.

"ஒ...

என்ன பண்ண" ஒன்றும் தெரியாதவனை போல கேட்டான்.

"நைட்டு பத்து மணிக்கு ஒரு பொண்ணு பசிக்குதுனு சொல்றா!!!

நீ....

என்ன பண்ணனும் கேக்குற

டின்னர்க்கு கூட்டிட்டு போ"

'டீ சாப்ட ரேஸ்கோர்ஸ் கூட்டிட்டு போனா இப்ப எங்க கூட்டிட்டு போக போறாளோ' அவன் கண்கள் சொல்லியது தெள்ளத் தெளிவாக.

"பயப்படாத பக்கத்துல தான்" முதன் முறையாக அவளை பார்த்து புன்னகை செய்தான் அது போதும் இந்த ஜென்மத்திற்கு என்பதைப் போல பின்தொடர்ந்தாள்.

இரவு பத்து மணி, குளிருக்கு வஞ்சனை இல்லை. பதமாகவே படர்ந்திருந்தது. குன்னூரின் வாடைக் காற்று. இருவரும் அமர்ந்த பின்பும் மௌனம் அமர காணோம். நிசப்தம் நிலவியது, இருவரது கண்களையும் இருவரும் பார்த்துப் பார்த்து கிறங்கி போனார்கள். அப்போது சலித்துக் கொண்டவன் இப்போது எவனாவது வந்து தடுப்பானா என்று ஏங்கி கொண்டு இருந்தான் ஆனால் அவள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

"இப்ப சொல்லு

என்ன கல்யாணம் பண்ணிக்கிருயா" காதலுடனே கேட்டாள்.

" உன் பேர் என்ன" ஓர் நீண்ட உரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டான்.

"ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிருயானு வந்து கேட்டா

உன் பேர் என்னனு கேக்குற....

ஃப்ர்ஸ்ட் டைம்

ம்ம்ம்"

"நீ இன்னும் உன் பேர் சொல்லவே இல்ல"

"மிருதுளா...

மிருதுளா ஜெகநாதன்" நல்ல வேளை அவளே சொல்லிவிட்டாள்.

"உன்ன மாறி உன் பேரும் அழகா இருக்கு...

உன்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ், சாய்ஸ் ஆஃப் கலர், லூஸ் ஹேர், குட்டி ஜிமிக்கி, ஐ லாஷ், வலது கைல இருக்குற வாட்ச், இடது கை கட்டவிரல்ல துள்ளி ஓடுற புள்ளிமான் டாட்டூ, காதோரம் விழற முடிய கோதுர ஆட்டிட்டுயுட், கழுத்துல இருக்குற செயின்ன கடிக்குற மேனரிசம்...

நைஸ்

ஐ டோன்டு நோ இது உனக்கு தெரியுமானு

யு ஆர் மெலோபில், டாக்கோபோஃப்யன், அன்ட் ஃபேஷனிஸ்டா

எல்லாத்துக்கும் மேல

நாடில இருக்குறத விட கழுத்துக்கு கிழ இருக்குற மச்சம்...

ம்ம்ம்

காட் ஹேஸ் கிவன் தி பெஸ்ட் டாட்டூ ஃபார் யூ...

ஐ லைக் இட்" என்னவென்று சொல்வது மிருதுளாவின் முகத்தில் எத்தனை எத்தனை பாவனைகளும் ரசங்களும் வந்து போனதென்று. அவளுடைய ஸ்பெசிபிகேஷன்ஸ் அதோடு நிற்பதில்லை அவள் அதையும் தாண்டி பல ரகசியங்களை உள்ளடக்கிய லாகு ரேங்க் கன்ஜக்சர்.

"ஆர் யு பிளஷ்ங்"

"ஐ டூ"

"ம்ம் இட் ஹாப்பன்ஸ்"

"என்ன நீ முழுசா பார்த்து ஒரு சிக்ஸ் ஆர்ஸ் இருக்குமா...

ம்ம்ம்

நீ நிஜமாலே காதல்காரன் தான்.

இப்ப புரியுது அவள நீ எப்படி லவ் பண்ணிருப்பனு"

"சோ என்ன பத்தி உனக்கு எல்லாம் தெரியும்

ரைட்

ஃபகத் எல்லாம் சொல்லிருப்பான்

பட் சில விஷயங்கள் அவன் கண்டிப்பா உன்கிட்ட சொல்லி இருக்கமாட்டான்."

"அவ தான் போய்டாளே!
இன்னும் எத்தனை நாள் உன் லைஃப் வேஸ்ட் பண்ண போற...

நவ் ஷீ இஸ் மேரிட், ரகு"

"மிருதுளா

நீ நல்ல பொன்னு

உனக்கு கண்டிப்பா நல்ல பையன் கிடைப்பான்

என்ன மறந்துரு

நான் உனக்கு செட் ஆகமாட்டேன்"

"எப்பா டேய் கலிகாலம்

பொண்ணுங்க பேச வேண்டிய டயலாக்கலாம் நீ பேசிட்டு இருக்க" அவளும் எவ்வளவு தான் பொறுப்பாள் ஒரு கட்டத்துக்கு மேல் அதை சலிப்புடன் தான் சொன்னாள்.

"உனக்கு புரியலயா

அவளுக்காக ஒரு நாய் மாறி தெரு தெருவா சுத்திருக்கேன்

அவளுக்காக போலிஸ் கிட்ட அடி வாங்கிருக்கேன்

அவளுக்காக ஜெய்லுக்கு போய்ருகேன்

அவளுக்காக பெத்த அப்பாவ அடிச்சு தள்ளிவிட்டுருக்கேன்

அவள நினச்சு தவிச்சு கஞ்சா அடிச்சிருக்கேன்

அவள மறக்க தண்ணி அடிச்சு ஆக்ஸிடென்ட் ஆகி ரெண்டு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்துருகேன்

இப்ப புரியுதா

என் காதலுக்கு நானே வில்லனா இருந்துருக்கேன்" என் படபடவென வெடித்து சிதறினான். ரகுவரனுக்கு பேச தெரியுமா என்பதை போல பார்த்தாள். கடையில் உள்ள அத்தனை பேரும் பார்த்தார்கள். தனக்காக வீட்டைவிட்டு பெற்ற தாய் தந்தையை விட்டு வந்தவளை தூரத் தேசத்தில் தொலைத்துவிட்டு பரிதவித்த அந்த தருணங்களை நினைத்தால் இன்னும் கூட அவன் கண்களில் நீர் சுரக்கும்.

இதையெல்லாம் கேட்டு விட்டு நிதானமாகவே கேட்டாள் "என் பேர கேட்டியே

நான் யாருன்னு கேட்டியா!

தெரியுமா இல்ல கேட்க மறந்துடியா" அதற்கு மௌனத்தை தவிர என்ன பதில் அவனால் கூறிவிடமுடியும்.

"நாலு வருசத்துக்கு முன்ன நீ சென்னைல ஆக்ஸிடென்ட் ஆகி இருந்தப்ப உனக்கு ஒரு பொண்ணு பார்த்தாங்க நியாபகம் இருக்கா...

எப்படி இருக்கும் பொண்ணு போட்டோ கூட வாங்கி பாக்க புடிக்கலல உனக்கு...

அந்த பொண்ணு யார் தெரியுமா??

நான் தான்"

சர்வமும் அடங்கியது ரகுவரவனுக்கு. இது என்ன மாதிரியான விளையாட்டு என்று அவனுக்கு புரியவில்லை புரிந்துவிட்டாலும் கூட அதை ஏற்க முடியாதவனாய் இருந்தான். அவள் மேல் காதல் கொண்டானோ இல்லையோ தெரியவில்லை ஆனால் நிச்சயமாக அவள் மேல் அளவுகடந்த மரியாதை உண்டாயிற்று. ஒரு பெண்ணின் மேல் ஒருவன் எப்போது அளவு கடந்த மரியாதையை தருவிக்கிறானோ அப்போதே காதல் சங்கமமாக தொடங்கிவிடும். கண்ணுக்கு தெரிந்தவளை காதலிப்பது என்ன காதல். தான் காதலிக்கபடுகிறோம் என்று ஒருவனுக்கு தெரியாமலே காதலிப்பது தானே காதல்.

இப்போது இவளுக்கு என்ன சமாதானம் பெரிதாய் ரகுவரனால் கூறிவிட முடியும்.

"இங்க பாரு மிருதுளா

எனக்கு இந்த கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அத வளர்த்து ஆளாக்கி பேரன் பேத்தி எடுத்து அறுபது எழுபது வருஷம் வாழனும்ங்குற ஆசைகள்லாம் இல்ல

அதலாம் அவளோட போயிடுச்சு.

நவ் ஐ ஹேவ் எ டிரீம்

நான் அத நோக்கி போகனும்னு ஆசபடுறேன்"

"எனக்கு தெரியும்...

ஒரு டிராவலாக் எழுதனும்

'ஃபுட் ஸ்டெப்ஸ் ஆஃப் ராமா'

அதான

என்ன கல்யாணம் பண்ணிக்கோ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம் அயோத்தில இருந்து நுவரெலியா வரைக்கும்"

"உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது"

"நீ எதுவும் சொல்ல வேணாம்...

நாளைக்கு என் ப்ர்த்டே...

நம்ம ரெண்டு பேரும் முதல் தடவ மீட் பண்ண இராமர் கோயிலுக்கு பத்து மணிக்கு

நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்

உனக்காக..."

"வர மாட்டேன்னு மட்டும் சொல்லிறாத

நீ கண்டிப்பா வருவ" சொல்லிவிட்டு அவனை திரும்பி பார்த்தாள் "உன் காதலுக்கு நீ வில்லனாய்ட்ட என் காதலுக்கும் நீ வில்லனாகிறாத" என்று சொல்லி விறுவிறு வென நடந்தாள். அவள் பின்னழகை கண்டானோ என்னவோ பேசாமல் வெறித்து போய் அவளேயே பார்த்து கொண்டிருந்தான். கண்களை கூட அசைக்கவில்லை காட்சிப் பிழையாகி விடும் என்று நினைத்திருப்பான் போல.

மறுநாள் காலை விடிந்தும் விடியாமல் இருந்தது. தாய், தந்தை, தங்கையின் நினைவுகள் கொஞ்சம் வந்து சென்றது. அவர்களை ஒதுங்கினாலும் அவர்கள் நினைவுகள் ஒதுங்குவதாய் இல்லை. எல்லாம் தெரிந்து தான் வந்திருப்பான் போல, ஃபகத் எட்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். ரகுவரனை கிளப்ப எத்தனித்த ஃபகதுக்கு ரகுவரன் இடம் கொடுக்கவே இல்லை. கருப்பு சட்டையும் நீல பேன்டுமாய் போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் இன்னும் அவன் மனதை அரித்து கொண்டிருந்தது.

ஃபகத்திடம் எதுவும் பேசாமல் மார்கோவை எடுத்தான். ஃபகத்தும் எதுவும் பேசாமல் அவன் பின்னே அமர்ந்தான். நேரே மார்கோ இராமர் கோயில் வாசலை அடைந்தது. நேற்று முன்தினம் பார்த்ததை போல அல்லாமல் இன்று கோலாகலமாக இருந்தது கோயில் சீதா நவமி என்று அங்கிருந்தவர்கள் சொல்லி கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

கூட்டத்தை இடித்து தள்ளிவிட்டு ஜானகிராமனை பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது. பச்சை நிற புடவையில் சீதாதேவியை அவன் பார்த்த போது அவனுக்கு நிலைக் கொள்ளவில்லை.

வேகமாக வெளியே வந்தவன் அங்கே இருக்க முடியாமல் கோயில் வாசற்கதவருகே சென்றவனை தடுத்தான் ஃபகத்.

"எங்கடா போற

அவ வர்ற நேரம் ஆச்சு"

"அவளுக்கு நான் பொருத்தமில்ல"

"டேய் நீ என்ன பெரிய காதல்காரனா...
இன்னும் அவள நினச்சுட்டு இவள வேனாங்குறியா!. டேய்! சீதைக்கு தான்டா இராமன புடிக்கனும் சூர்ப்பனகைக்கு இல்ல. இவ தான் உன் சீத இவள தான் நீ கட்டிகனும்"

"இல்லடா இது சரி வராது

நான் போறேன்"

"போடா போ! உனக்கு இரத்தம் கொடுத்த அவ வேணாம்
ம்ம்
அவ சரி பண்ணி கொடுத்த அந்த பைக் மட்டும் வேணும்"

"என்னடா சொல்ற"

"ஆமாடா நீ அடிப்பட்டு கிடந்தப்ப அவ தான் இரத்தம் கொடுத்தா.

உன் பைக் சல்லி சல்லி நொறுங்கி கிடந்தப்ப அவ தான் காசு கொடுத்தா" துவார பாலகன் மீது சாய்ந்தவன் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சைவிட்டான். "இத ஏன்டா சொல்லவே இல்ல" என்று சொல்லி முடிக்கையில் பார்கவி அலைப்பேசியில் வந்தாள். "டேய் ! நீ ஒகே சொன்னீல அந்த பொண்ணு உங்கிட்ட பேசனுமாம் உன் போன் நம்பர் கொடுத்தேன்.. பேசு சரியா"

"பொண்ணா எந்த பொண்ணு"

"அதான் முந்தா நேத்து வாட்சப் பண்ணேனன்ல

நீ கூட ஓகே சொன்னியே

அந்த பொண்ணு தான்.." சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

நேரமும் சரியாக பத்தை நெருங்கிவிட்டது. ஃபகத் வாசலை பார்த்து கொண்டு இருந்தான். அதோ தூரத்தில் அவள் தான் அவளே தான் மிருதுளா மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தாள் ரகுவரனை நோக்கி. ரகுவரனின் அலைப்பேசியில் ஒரு அழைப்பு அவன் இருதயத்தை நோக்கி.

ஃபகத்தும் மிருதுளாவை பார்த்துக் கொண்டு இருந்தான். எங்கிருந்தோ ஒரு குரல் மட்டும் வந்தது ஃபகத்தின் காதுகளுக்கு அருகே. அது ஏதோ ஒன்றை பாராயணம் செய்து கொண்டே இருந்தது இப்படி

'தீயோர் செய்கைதானும், இராமன் ஒரு தேவித் தாயாள் துன்பும், மாருதி கண்டே தளர்வு எய்தி, மாயாது ஒன்றே அன்றி, மனத்தே மலி துன்பத்து ஓயாது உன்னிச் சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். '

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி