தன் தாயின் குரலைக் கேட்டவுடன் பிரேக் போட்டது போல் நின்ற சர்வேஸ்வரன் தன் தாயிடம் பதில் சொல்வதற்கு முன்பாக எதேச்சையாக முல்லையின் முகத்தை பார்க்க அதில் பதட்டம் கூடி இருந்தது….
அவள் பதட்டத்தையும் தன் தாயின் அழைப்புக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளது என்பதை நொடியில் புரிந்து கொண்டவன்…
“அம்மா ஒரு முக்கியமான ஃபைல் என்னோட ரூம்ல இருக்கு… அத மட்டும் பாத்துட்டு வந்துடறேன்..” சர்வேஸ்வரன் அவசரமான குரலில் பதிலளிக்கவும்,
இந்த நேரத்தில் இந்தப் பிரச்சனையை கூறினால் அது வேறு மாதிரியான விளைவை தரும் என்ற உணர்ந்த அவனின் அம்மா “சரிப்பா பாத்துட்டு வா…”
ஒரு நிமிடம் தன் தரையை ஆழ்ந்து பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றான்…
அவன் பார்வைக்கான அர்த்தம் அவன் அன்னைக்கு புரியாமல் போனாலும் முல்லையால் உணர முடிந்தது…
இவ்வளவு நேரம் கழித்து வேலையில் இருந்து வரும் பிள்ளையிடம் சாப்பிட வலியுறுத்தி ஒரு வார்த்தை கூட கூறவில்லை…
தான் கூற வந்ததை மட்டும் பேச நினைத்து, அதற்காக காத்திருப்பதாக தெரிவித்தது ஒரு மகனாக எவ்வளவு வலியை கொடுக்கும்…
முல்லைக்கு அந்த குடும்பத்தின் மீது இருக்கும் எரிச்சலும், கோபமும் அதிகரித்த வண்ணம் இருந்தது…
தங்கள் அறைக்குச் சென்று பார்க்க இருட்டான வெளியை வெறித்தவாறு நின்றிருந்த சர்வேஸ்வரனின் உருவம் கண்களில் பதிய,
அந்த நிமிடமே அவனை நெருங்கி அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று உள்ளம் மத்தளம் கொட்டியது…
ஆனால் தங்கள் திருமணத்தின் மேல் இருந்த வெறுப்பினால் அவனை மனதளவில் நெருங்க முடியாமல் விலகி நின்றாள்.
சர்வேஸ்வரனிடம் சென்று எவ்வாறு இந்த பிரச்சனையை பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் சில நொடிகள் தயங்கி விட்டு,
மெதுவாக தொண்டையை கனைத்தாள்.. சர்வேஸ்வரன் முழுவதுமாக அவளை திரும்பி பார்க்க,
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” அவள் வார்த்தைகள் காதில் விழுந்ததற்கு அடையாளமாக அவனிடம் எந்த அசைவும் இல்லை…
ஏன்? எதற்கு? என்ற ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை…
இத்தனை நாட்களாக தன்னை ஒதுக்கி வைத்திருந்தவள்…
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே தன் மேல் பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிக்காட்டியவள்…
இன்று அவளாக பேச வரவும், நிச்சயமாக ஏதோ பெரிய விஷயம் என்பது புரிந்தாலும்,
இயல்பாக கலந்துரையாட முடியாமல் ஏதோ ஒரு தடுப்புச் சுவர் இருவருக்கும் இடையில் இருந்தது.
அவன் இப்போதைக்கு எதுவும் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்த முல்லையும்,
“நான் இப்ப சொல்றத நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியல.. இவ்ளோ நாளா உங்ககிட்ட பேசாதவ திடீர்னு இப்படி ஒரு விஷயத்த சொல்றத நீங்க நம்புவீங்களானு கூட தெரியல…
“இருந்தாலும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சத உங்ககிட்ட மறைக்க கூடாது, அதனால நீங்க ஏமாற கூடாதுன்னு நினைச்சேன்.. அதனால…”
அவளின் பலமான பீடிகை ஏதேதோ எண்ணங்களை தோற்றுவித்தாலும்,
முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் “நீ சொல்ல வந்ததை சொல்லி முடி.. நான் நம்பறது, நம்பாதது அடுத்த விஷயம்.. நீ என்கிட்ட எந்த விஷயத்தை பத்தி வேணாலும் பேசலாம்..”
இதை விட தெளிவாக தன் மனதை ஒருவனால் திறந்து காட்ட முடியுமா என்று தெரியவில்லை…
தன் மனைவி தன்னிடம் எது வேண்டுமானாலும் பேசலாம்..
அதற்கு எந்த தடையும் இல்லை… தான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்..
அவள் மேல் அவனுக்கு அன்பும், அக்கறையும் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவந்தது…
அவன் வார்த்தைகளை காதில் வாங்கினாலும் அதை பற்றி ஆராய்ச்சி புரிய நேரமின்றி தான் கூற வந்ததை மடமடவென்று கூறி முடித்தாள்…
“உங்க ரெண்டாவது தம்பி ஏதோ தப்பு பண்ணிட்டாரு.. எனக்கு தெரிஞ்சு ஏதோ சூதாட்டம்… அதுல நீங்க அவருக்காக எழுதிக் கொடுத்த ஏதோ ஒரு சொத்தை தோத்துப் போய் எழுதி கொடுத்துட்டு வந்துட்டாரு.. அத லீகலா ரெஜிஸ்டர் பண்றதுக்காக அந்த ஆள் நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்கான்…”
“ஆனா அந்த ஆள் வர்றதுக்குள்ள உங்க வீட்டுல இருக்கிறவங்க அதை வேற விதமா உங்ககிட்ட சொல்லி, அந்த சொத்தை பிரச்சனை இல்லாம எழுதிக் கொடுக்க நினைக்கிறாங்க…”
“உங்ககிட்ட பொய் சொல்லணும்னு நினைக்கிறாங்க… இந்த விஷயத்துல நீங்க ஏமாற கூடாதுன்னு தோணுச்சு…”
“இப்பவும் சொல்றேன் நான் சொல்றது உண்மையா..? பொய்யா..? அப்படின்னு உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் அதை நிரூபிக்க என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை..”
“நீங்க இந்த விஷயத்துல ஏமாற கூடாதுன்னு தான் உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்…”
தான் சொல்ல வந்ததை கூறி முடித்ததும் அவனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அவனின் முகத்தை ஆவலாக பார்த்திருந்தாள்…
அவனும் நிதானமாக அவள் முகத்தை அளவிட்டவன் “இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும்… ஏன் இதை என்கிட்ட சொல்லணும்னு நினைச்ச..?”
இப்படி ஒரு பதில் வரும் என்று அவள் நினைக்கவே இல்லை... நம்பாமல் கேள்விகள் கேட்டால் பரவாயில்லை..
நம்புகிறேன் என்று விட்டு இப்படி கேள்வி கேட்டது முல்லைக்கு சற்று அதிர்ச்சி அளித்தது…
பதில் கூற முடியாமல் தடுமாறி விட்டு "அதான் சொன்னேனே நீங்க ஏமாற கடாதுன்னு நினைச்சேன்..."
"அது எனக்கு புரியுது... ஆனா நான் ஏமாற கூடாதுன்னு மட்டும் நினைச்சு அதுக்காக காத்திருந்தியா..?"
"இல்ல உன் மனசுல என் மேல அக்கறையை தாண்டி எதுவும் இருக்கா..? அதை நீ தான் யோசிக்கணும்..."
இதற்கு அவள் என்ன பதிலளிப்பாள் என்று கேட்க கேட்காமல்,
தான் கூற வேண்டியதை கூறி முடித்ததும் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
ஒரு வேளை அவளுக்கு வேண்டிய நேரம் கொடுத்தால், இதைப்பற்றி யோசிப்பாள் என்று சர்வாவிற்கு தோன்றியிருக்கலாம்...
அவன் கொடுத்த நேரத்தை வைத்து அவள் யோசித்தாளா என்பது இனி வரும் அத்தியாயங்களில்...
((என் கதை பிடிச்சிருந்தா தொடர்ந்து படியுங்க... என்ன என் பேஜை ஃபாலோ பண்ணுங்க... கமெண்ட் பண்ணுங்க... ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...))