கடந்த ஒரு வாரமாக சர்வேஸ்வரனை தொடர்ந்து உற்று கவனித்ததில் அவனுக்கு அந்த வீட்டில் நடக்கும் அநியாயம் முல்லைக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது..
இதில் தன் வாழ்வும் இணைந்து இருப்பதால், இப்போது தன்னையும் அதில் பகடைக் காயாக உபயோகித்து, சர்வேஸ்வரனின் வாழ்விலிருந்து விலக்கிவிட்டு,
அவனின் முழு உழைப்பின் பலனையும் அனுபவிக்க பேராசைபடும் குடும்பத்தினரின் உண்மை முகம் விகாரமாக வெளிப்பட்டிருக்கிறது...
ஒருபுறம் சர்வாவிற்காக பரிதாபபட்டாலும், இன்னொரு பக்கம் தன் வாழ்வைப் பற்றி சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி அவர்கள் அழிக்க நினைப்பது கோபத்தை தீ கங்குகளாக உள்ளத்தை எரித்தது..
இப்போது முல்லைக்கு இரண்டு வாய்ப்பு கண் முன்னே இருந்தது...
ஒன்று அவன் குடும்பத்தின் உண்மை முகத்தை சர்வாவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி,
அவனுடன் தன் வாழ்வை மாற்றி சந்தோஷமாக வாழலாம்...
ஆனால் இப்போதும் சர்வாவின் மீது முழு கோபம் வடிந்து விட்டதா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் பதில் கிடைக்கும்...
ஏனெனில் இந்தக் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஓரளவிற்கு புரிபட்டாலும், அதில் சர்வாவின் மீது பரிதாபம் அதிகரித்திருந்தாலும்,
தன் திருமணத்தில் அவன் நடந்து கொண்ட முறையில் அவன் மேல் அவளுக்கு இன்னும் கசப்பு மீதி இருந்தது....
எனவே இரு வேறு மனநிலையில் அவள் தத்தளிக்க..
சர்வாவோ இது எதையுமே அறியாமல் அலுவலக செல்வதும், வருவதுமாக இயந்திரத்தனமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.
சர்வா, முல்லையின் வாழ்வில் முக்கியமானதொரு திருப்பம் அன்று நிகழ்ந்தது..
அன்று சர்வாவின் இளைய தம்பி கதிர்வேலன் வெளியே சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை...
அவன் அப்படி பல சமயங்களில் நேரமாகி வீட்டிற்கு வருவதும், அதைப்பற்றி வீட்டிலிருப்பவர்களிடம் பொறுப்பாக பதில் கூறுவதும் இல்லை...
சர்வாவின் தாயோ பலமுறை அவனை கண்டித்துப் பார்த்துவிட்டு, அவனின் குணம் சிறிதும் மாறாததால் அவன் போக்கில் விட்டுவிட்டார்...
அவன் மனைவிக்கோ கை நிறைய பணமும், செலவு செய்ய பொழுதுகளும் இருந்தால் போதும்..
மற்றபடி குடும்பத்தை பற்றி, தன் கணவனைப் பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவள் இல்லை..
அப்படியிருக்க இளையவனுக்கு கட்டுப்பாடு விதிக்க யாரும் இல்லாததால் தான்தோன்றித்தனமாக சுற்றுத் திரிந்தான்..
வீட்டில் கெடுபிடி, கண்டிப்பு எதுவும் இல்லாததால் குறைந்த நாட்களாக அவனை போக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது...
கூடா நட்பில் சிக்கி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தான்..
இன்று போதை அதிகமாகி அவனுக்கு சொந்தமாக சர்வா உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் ஒன்றை சூதாடி தோத்து விட்டான்..
அன்று இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்து அதை பற்றி தன் மனைவியிடம் சொல்லி புலம்ப...
அவளுக்குமே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை...
போதையில் சூதாடி தோற்கும் சொத்தை வேறு ஒருவருக்கு எழுதி வைக்க எந்த கட்டாயமும் இல்லை..
ஆனால் கதிர்வேலன் எழுதிக் கொடுத்தவனோ அந்த ஊரிலேயே மிக மோசமானவன்..
மறுநாள் பொழுது விடிந்தால் நிச்சயமாக அவன் வீட்டிற்கு நேராகவே வந்து சர்வேஸ்வரனுக்கு முன்பாகவே பிரச்சனையை கிளப்புவான்...
இருவரும் கையை பிசைந்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து இருந்தனர்..
மறுநாள் பொழுது விடிந்தும் விடியாத வேளையில் அன்னையின் அறைக்குச் சென்று இப்பிரச்சனையைப் பற்றி பேச,
முதலில் தன் மகனின் இந்த பழக்கங்கள் பற்றி திகைத்தவர்..
மறுநொடியே இந்த உண்மைகள் தன் மூத்த மகனுக்கு தெரிந்தால் அதன் மூலம் விளையப்போகும் விளைவுகளைப் பற்றி மட்டுமே கவலை கொண்டார்..
மனிதன் ஒரு சுயநலமான மிருகம் என்பது பல இடங்களில் நிரூபிக்கப்படும் உண்மை..
இங்கு அந்த தாயும் தன் வசதிகள் ஏதும் குறையுமோ என்றுதான் கவலை கொண்டாரே ஒழிய,
இந்த கெட்ட பழக்கத்தினால் தன் இன்னொரு மகன் பாதிக்கப்படுவான் என்று அந்த நொடி புத்தியில் உரைக்காமல் போனது..
அவரை சொல்லியும் குற்றமில்லை..
விவரம் தெரிவதற்கு முன்பே திருமணம்.. அதுவும் மிக மோசமான ஒரு ஆளுடன்... குடும்ப பொறுப்பு இல்லாமல் சுற்றி திரிந்த ஒரு நபர்...
திருமணத்திற்கு பின்பு திருந்துவார் என்ற அருத பழசான நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட திருமணம்...
அடுத்தடுத்து நான்கு குழந்தை பிறப்பு என்று அவரின் வாழ்க்கை ஆரம்ப காலங்களில் இருந்து கஷ்டத்தை மட்டுமே துணையாக கொண்டு நடந்ததால்,
இன்று தான் அனுபவிக்கும் வசதிகள் மட்டுமே பிரதானமாக தெரிகின்றது அவருக்கு...
அவர்கள் அனைவரும் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாக வந்த முல்லையின் காதுகளில் அவர்களின் பேச்சு தெளிவாக விழுந்தது..
கதிர்வேலன் செய்த தவறும், அதை அவர்கள் மூடி மறைக்க போடும் திட்டங்களும் அப்பட்டமாக அவளுக்குத் தெரிய வர...
சர்வாவை இவர்கள் இந்த முறை ஏமாற்றாமல் எப்படியேனும் காப்பாற்ற முடியுமா என்று சிந்திக்கலானாள்...
இது சர்வாவின் மீது இருக்கும் அக்கறையா..? என்று கேட்டால்,
அதை முழுமனதாக ஒத்துக் கொள்ளாமல் தன் கண் முன்னே நடக்கும் தவறை தடுத்து நிறுத்துவதாக தானே ஒரு நியாயம் கற்பிப்பாள்...
சர்வேஸ்வரன் வீட்டிற்கு வருவதற்காக ஒவ்வொரு நொடியும் காத்திருந்தாள்...
திருமணத்திற்குப் பிறகு தன் கணவனுககாக முதன்முதலாக காத்திருப்பதை உணராமல் போனாள்...
சர்வேஸ்வரனிடம் கூறுவதற்காக அவர்கள் ஏகப்பட்ட பொய்களை தயார் செய்து வைத்திருக்க..
இந்தப் பக்கமோ அவன் மனைவி அவனிடம் உண்மையை உரைத்து,
இந்த முறையாவது அவன் ஏமாறாமல் தடுக்க வேண்டும் என்ற பரிதவிப்போடு நின்றிருந்தாள்..
சர்வேஸ்வரன் வீட்டிற்குள் நுழைய இதுவரை தவிப்பாக நின்றிருந்தவள்.. அவனைக் கண்டவுடன் வேகமாக நெருங்கி "உங்ககிட்ட பேசணும்.." என்றாள் ஹஸ்கி வாய்ஸில்...
சர்வேஸ்வரனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இதுவரை திருமணம் ஆன நாள் முதல் அவளாக அவனிடம் பேசும் முதல் வார்த்தை இது...
ஆனால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாதபடி அவளின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கண்டு, "சரி வா.." என அவர்கள் அறை நோக்கி நடக்கலானான்...
முல்லையும் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து தங்கள் அறைக்கு செல்ல,
"ஏப்பா சர்வா வந்துட்டியா..?" என்றொரு குரல்..
ஐயோ எப்படியாவது இவர்கிட்ட நம்ம தான் முதல்ல உண்மைய சொல்லணும் என்று மனதிற்குள்ளாக ஜெபம் போல் மறுபடியும், மறுபடியும் அதே வார்த்தைகளை கூறி சர்வாவின் முகத்தை பதட்டத்தோடு பார்த்து நின்றாள்...
யாருடைய முயற்சி பலித்தது..? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...