The grandson you came looking for...?? - 2 in Tamil Love Stories by vaanya books and stories PDF | தேடி வந்த பேரன்பே....?? - 2

The Author
Featured Books
Categories
Share

தேடி வந்த பேரன்பே....?? - 2

வாழ்க்கை என்பது எப்போதுமே ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒரு பேழை..


அந்த பேழைக்குள் இருக்கும் ஆச்சரியங்களை சராசரி மனிதனால் கணிக்க இயலாது...

அந்தப் பேழையிலிருந்து வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ஒரு ஆச்சரியம் சர்வேஸ்வரனுக்கு காத்திருந்தது அன்றைய இரவு..

ஆம், அவன் உலகை வெறுத்து தனிமையாக உணவு எடுத்துக் கொள்ளவதாக நினைத்து மனவலி கண்டது போல் அவன் தனிமையில் இருக்கவில்லை..

அவன் உணவு உண்ணும் நேரத்தையும், அவன் முகத்தில் வந்து போகும் பாவனைகளையும், அவனின் தனிமையின் வலியையும் கணித்தபடி அங்கு இரு விழிகள் அவனை கண் சிமிட்டாமல் பார்த்தபடி ஊன்றி கவனித்தது..

அவன் தனிமை வலியை உணர முடிந்தது.. முல்லைக்கு மனதின் ஓரம் ஏதோ ஒரு உணர்வு காலமாக அவளை ஊடுருவி அசைத்துப் பார்த்தது...

அதற்காக உடனே மனம் சமாதானமாகி அவனிடம் சென்று பேசுவோம், அவனுக்கு உணவு பரிமாறவும் மனம் முன்வரவில்லை...

ஆனால், ஏதோ ஒரு உந்துசக்தியால் அவனின் நடவடிக்கைகளை உற்று கவனித்தவாறு அமைதியாக அந்த இரவில் நின்றிருந்தாள்... 

இதுவரை அவன் எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருகிறான்..? என்ன சாப்பிடுவான்..? எந்த ஒரு சின்ன கவனிப்பும் அவளிடம் இருந்ததில்லை...

இன்று அந்த இரவின் தனிமை அவளுக்கு ஏதேதோ செய்திகளை கூறின...

சர்வேஸ்வரன் உணவை முடித்துக் கொண்டு, தன் அறைக்கு சோர்ந்த நடையுடன் திரும்பிச் செல்வதை, கடைசி வரை பார்த்திருந்தவள்.. 

இப்போது தான் தங்கியிருக்கும் அறைக்கு அமைதியாக திரும்பி தன் தூக்கத்தை தொடர்வதற்கு முயற்சித்தாள்.

ஒரு நாளில் ஓர் இரவில் அனைத்தும் மாறி விடுவது சாத்தியமில்லை.. 

ஆனால் சர்வேஸ்வரனை பற்றிய முதல் வித்து அவள் மனதில் ஆழமாக விழுந்தது.. 

மறுநாள் எல்லோருக்கும் அது சாதாரண விடியலாக இருந்தாலும், 

சர்வாவிற்கும் அன்றைய தினம் மிக அழுத்தமான நாளாக விடிந்தது.. 

இதுவரை இல்லாத வெறுமையும், தனிமையும் தன்னை சூழ்ந்துள்ளதாக மனச்சோர்வுற்றவன்.. 

அதை நீக்கும் வழி தெரியாமல் நிதானமாக அலுவலுக்கு கிளம்பினான்..

எப்போதும் அவன் முகத்தில் இருக்கும் கம்பீரம், அவன் செயல்களில் இருக்கும் நிதானம் மனதளவில் அவன் என்ன கவலைப்பட்டாலும், சோர்வுற்றிருந்தாலும் அது வெளியே தெரியாத அளவிற்கு கவசமாக காத்திருந்தது... 

இன்றும் அப்படி அவன் கிளம்பி வர, "அண்ணா நைட் எப்ப வந்தீங்க..? என்னை எழுப்பி இருக்கலாம்ல்ல..?" தேன் தடவிய அந்த வார்த்தைகளும், அக்கறையான அந்த மொழியும் 

தன் தம்பியின் மனதிலிருந்து கிடைப்பவை அல்ல என்ற எண்ணம் எப்போதும் போல் மனதில் கசப்பை உருவாக்க, வலுக்கட்டாயமாக புன்னகைத்து.. 

"கொஞ்சம் லேட் ஆயிடுச்சு டா.. நான் வரும்போது நீங்க எல்லாரும் தூங்கிட்டீங்க..." 

குரலில் ஏற்ற இறக்கமின்றி யாரையும் குற்றம் சாட்டும் தோரணையும் இன்றி, கூறி முடிக்க.. 

"ஆமாண்ணா நேத்து நிறைய வேலை... ரொம்ப டயர்ட்... நான் வந்ததும் சாப்பிட்டுத் தூங்கிட்டேன்.. வாங்கண்ணா.. இப்ப சாப்பிட போகலாம்.." 

அவன் முதல் தம்பி கார்த்திகேயன் அந்த வீட்டிற்கு தானே ஏதோ உரியவன் போல் மிடுக்கும், அலட்டலுமாக உணவறைக்குச் சென்றான்..

இதோ இதுதான் இவர்களின் பாசத்தின் எடுத்துக்காட்டு...

பின்னால் திரும்பி அண்ணன் வருகிறானா..? இல்லையா..? என்று கூட நின்று பார்க்க நேரமின்றி விரைந்தான்...

அங்கு சர்வேஸ்வரன், கார்த்திகேயனைத் தவிர அவர்களின் மொத்த குடும்பமும் காலை உணவிற்கு குழுமி இருந்தனர்..

ஒவ்வொருவரையும் கண்களால் கூர்ந்து கவனித்தபடி தன் இடத்தில் வந்தமர்ந்தான்..

அந்த நீள்விருக்கையான உணவு மேஜையில் நடுவில் இருக்கும் ஒற்றை நாற்காலியில்.. 

அந்த வீட்டின் தலைவன் என்ற பதவியை பிரதிபலிக்கும் விதமாக சர்வேஸ்வரனுக்கு அளிக்கப்படும் போலி மரியாதைகளில் ஒன்று அது..

அந்த இடத்தில் கம்பீரமாக அமர மற்றவர்களும் அவரவர் இருக்கையில் அமர்ந்து காலை உணவிற்காக ஆயத்தமாகினர்..

சர்வேஸ்வரனுக்கு வலதுக்கை பக்கத்தில் அவன் முதல் தம்பி கார்த்திகேயன், 

அவனுக்கு அடுத்து அவன் மனைவி சரோஜினியும் அதற்கு அடுத்து அவர்களின் இரு பிள்ளைகளும் தனுஷ், பிரனேஷ்..

இருவரும் அமர்ந்து தங்களுக்குள் பேசி, சிரித்தபடி விளையாட்டுடன் சாப்பிட்டபடி இருந்தனர்..

சர்வேஸ்வரனுக்கு இடது பக்கம் அவன் இரண்டாவது தம்பி கதிர்வேலனும், அவனுக்கு அடுத்த இருக்கையில் அவன் மனைவி கங்காவும், அவர்களின் ஒரே அதற்கு அடுத்து அவர்களின் ஒரே புதல்வி அனுஷாவும் தங்கள் உணவை மட்டுமே கவனம் செலுத்தியபடியே.. 

அதற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த சர்வேஸ்வரனின் அம்மா தங்கம்மாள் 

தற்காலிகமாக கண்களில் அன்பை பொழிந்தபடி "நைட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சாய்யா...? ரொம்ப நேரம் உனக்காக கண்ணு முழிச்சிருந்தேன்யா.. ஆனா இந்த எழவெடுத்த மாத்திரைய போடுறதுனால தூக்கம் வந்திருச்சு... சாப்டியாய்யா நைட்டு..?"

"இங்க வீட்ல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் நீ தான் படி அளக்குற‌‌.. ஆனா நீ சாப்டியான்னு கேட்கத்தான் இங்கே ஆள் இல்ல... உன்னை கேட்பாள்னு நெனச்சு நாங்க ஒருத்தியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்.. அவ.. ஹ்ம்ம்ம்...?"

அதாவது அவன் அம்மாவின் கூற்றுப்படி,  முல்லை ஒருத்தி மட்டுமே சர்வேஸ்வரனின் அனைத்து தேவைகளுக்குமானவள்..

மற்றபடி மற்றவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லை என்பதை நாசுக்காக எடுத்துரைத்தார். 

அதாவது அவன் இரவு நேரங்கழித்து வந்து சாப்பிடும் போது 

தான் அதற்காக முழித்திருக்க தேவையில்லை...

அதை நீ என்னிடம் எதிர்பார்க்காதே என்பதை மறைமுகமாக கூறுவதாகவே அவன் உணர்ந்து கொண்டான்.

நாக்கிலிருந்து தொண்டை வரை ஏதோ ஒன்று கசப்பாக இறங்க 

"சாப்பிட்டேன்மா.." ஒற்றை வார்த்தையில் பதில் வர,

அவன் அம்மாவிற்கு தான் காண்பிக்கும் பாசம் அவன் மனதை தொடுகின்றதா..? இல்லை அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவே இல்லையா என்ற குழப்பம் எப்போதுமே உண்டு... 

இப்போதும் அதே குழப்பத்தோடு அவன் முகத்தை ஓரிரு வினாடிகள் கூர்ந்து கவனித்து விட்டு, 

அப்படியே அவன் தன்னை என்ன நினைத்தால் என்ன..? என்பது போன்ற அலட்சிய பாவத்தோடு தன் உணவின் மீது மொத்த கவனத்தையும் திருப்பி இருந்தார்... 

திருமணமான நாளிலிருந்து ஊராருக்காக தன் மனைவியாக இருப்பவளின் நடமாட்டத்தை மனதில் ஓரம், 

கணவனாக அவனின் எதிர்பார்ப்பு அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாக இருக்கும்...

இப்போதும் மற்றவர் கவனிக்காத போது விழிகளை சுழற்றி முல்லை எங்கேனும் தென்படுகின்றாளா என்று பார்க்க முற்பட்டான்...

ஆனால் அவளோ அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்து தூரத்திலிருந்து அவனின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்தபடி இருந்தாள்..

தான் உருவகப்படுத்தி இருந்த சர்வேஸ்வரன் என்ற நபருக்கும்,

வீட்டிலிருக்கும் தன் கணவன் சர்வேஸ்வரனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை கண்கூடாக உணர ஆரம்பித்தாள்.. 

அவளின் இந்த கவனிப்புகள் சர்வேஸ்வரன் இழந்த அனைத்து அன்பினையும் மீட்டுத் தருமா அடுத்து வரும் அத்தியாயங்களில்.....