மான்யா.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி ஊரைக் கூட்டி எங்களை அசிங்கப் படுத்தனும்னு எத்தனை நாள் நீ காத்துக்கிட்டு இருந்த. உன்னை கேட்டு தானே இந்த நிச்சயத்துக்கு ஏற்பாடு செஞ்சோம். அப்படி இருக்கும் போது இப்போ திடீர்னு வந்து இந்த நிச்சயத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றார் நிச்சயமாக இருந்த மான்யாவின் சித்தி வெண்ணிலா.
சித்தி.. என்னால இப்போ எதையும் விளக்கி சொல்ல முடியாது. வீட்டுக்கு போனதும் நானே உங்ககிட்ட உண்மையான காரணத்தை சொல்றேன். இப்போதைக்கு இந்த நிச்சயம் மட்டும் எனக்கு வேண்டாம். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்றாள் மான்யா கலக்கத்துடன்.
என்னத்த புரிஞ்சுக்கனும். இதுல நீ மட்டுமா சம்மந்தப்பட்டு இருக்க. உன்னோட தம்பியும் இதுல சம்மந்தப்பட்டு இருக்கான். இன்னைக்கு அவனுக்கும் தானே நிச்சயம் பண்ண போறோம். இப்போ நீ இந்த நிச்சயம் வேண்டாம்னு சொன்னா என்ன பண்றது. உன்னால அவனோட நிச்சயமும் நின்னு போகனுமா என்றார் உறவுக்கார பெண்மணி ஒருவர்.
அவர் கூறியதைக் கேட்டு மான்யாவிற்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் அதற்காக இந்த நிச்சயத்திற்கு சம்மதம் கூறி தனது வாழ்க்கையை இழக்க அவள் விரும்பவில்லை.
அவனோட நிச்சயம் வேணும்னா நடக்கட்டும். ஆனால் எனக்கு இந்த நிச்சயம் வேண்டாம் என அவள் பழைய பல்லவியை பாட என்னம்மா நீ எல்லாம் புரிஞ்சு தான் பேசுறியா. உன் தம்பி கட்டிக்கப் போற பொண்ணோட அண்ணன் தான் உனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை. இப்போ நீ நிச்சயம் வேண்டாம்னா அந்தப் பொண்ணு அவுங்க அண்ணன் நிச்சயம் நின்ன சோகத்தோட எப்படி உன் தம்பியை நிச்சயம் பண்ணிக்கும் என்றார் கூட்டத்தில் இருந்த பெரியவர்.
மான்யா என்னம்மா இது.. நல்லது நடக்க போகும் நேரம் இப்படி பண்றியே இது நல்லாவா இருக்கு சொல்லு. உன்னால நம்ம குடும்ப மானமே போகுது. ஒழுங்கா இந்த நிச்சயத்துக்கு சம்மதம் சொல்லு என்றார் மான்யாவின் தந்தை முத்து.
அவக்கிட்ட என்னப்பா பேசிட்டு இருக்கிங்க. எனக்கு நல்ல வாழ்க்கை அமையப் போறது அவளுக்கு புடிக்கலை. அதனால தான் இப்படி இந்த நிலமையில வந்து இந்த நிச்சயம் வேண்டாம்னு சொல்லிட்டு நிக்குறா. இவளுக்கு எப்போதுமே இவள் மட்டும் நல்லா இருக்கனும். இவள் நினைச்சது தான் எப்போதும் நடக்கனும். நான் நல்லாவே இருக்க கூடாது. நான் நினைச்சது நடக்க கூடாது அது தான் இவளோட எண்ணம் என்று வெறுப்புடன் கூறினான் மான்யாவின் தம்பி கார்த்தி.
உன் தம்பி வாழ்க்கையை நினைச்சாவது நீ உன் முடிவை மாத்திக்க கூடாதா என கூட்டத்தில் ஒருவர் கேட்க இப்போது என்ன செய்வது என அவள் கையைப் பிசைந்தபடி நிற்க அவளை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தனர் அவளது மொத்த குடும்பமும்.
சொல்லும் அளவிற்கு அவ்வளவு பெரிய குடும்பம் ஒன்றும் இல்லை தான். ஆனால் அவளுக்கு அது தான் குடும்பம்.
மான்யா இருபத்து மூன்று வயது இளம் பெண். அவள் பிறக்கும் போதே பிரசவத்தில் அவளது தாய் இறந்து விட கைக் குழந்தையான மான்யாவை வைத்துக் கொண்டு அவளது தந்தை முத்து சிரமப்படுவதால் சொந்தங்கள் அனைவரும் சேர்ந்து முத்துவிற்கு வெண்ணிலாவை திருமணம் முடித்து வைத்தனர்.
வெண்ணிலா ஒன்றும் குறை சொல்லும்படி இல்லை. கைக் குழந்தையான மான்யாவை அவர் நன்றாகவே பார்த்துக் கொண்டார். மான்யாவிற்கு ஒரு வயது ஆகி சில மாதங்கள் கடந்த பின் வெண்ணிலாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் தான் மான்யாவின் தம்பி கார்த்தி.
முத்துவும் வெண்ணிலாவும் இரு குழந்தைகளையும் ஒரே மாதிரியாக தான் வளர்த்தனர். வெண்ணிலா இந்த விசயத்தில் நல்லவள் தான். சினிமா திரைப் படங்களில் வருவது போலவும் கதைகளில் வருவது போலவும் மான்யாவை சித்தி கொடுமை எல்லாம் செய்யவில்லை. அவளையும் தனது பிள்ளை போல தான் வளர்த்தார். மான்யாவிற்கே அவள் தனது தாய் இல்லை என்பது அவளது ஐந்து வயதில் தான் தெரிந்தது.
சாதாரணமாக திருமணமான ஒரு சில பெண்களுக்கு பெண் குழந்தையை விட ஆண் குழந்தையை தான் அதிகம் பிடிக்கும். அனைத்திலும் ஆண் குழந்தைக்கு தான் முதல் உரிமை என்று கூறுவார்கள். ஆண் பிள்ளை தவறே செய்து இருந்தாலும் அதனை சரியென கூறி சரிகட்ட பார்ப்பார்கள். தவறே செய்யா விடிலும் பெண் பிள்ளைகளை சிறு கண்டிப்பு அதட்டலுடன் எப்போதும் ஒருவித கட்டுப்பாட்டுடன் வளர்ப்பார்கள். அந்த வகை பெண்களில் வெண்ணிலாவும் ஒன்று. வெண்ணிலாவுடன் இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாலோ என்னவோ முத்துவும் அதே மன நிலைக்கு மாறிவிட்டார்.
வெண்ணிலா பிள்ளைகளை வளர்ப்பதை பார்த்து அந்த ஊரே அவரை மெச்சியது. அடுத்தவ பெத்த புள்ளையை இப்படி நல்லபடியா வளர்க்குறது எல்லாம் ரொம்ப பெரிய விசயம். உனக்கு ரொம்ப பெரிய மனசு என்று பாராட்டுவார்கள்.
ஊரார் பாராட்டும் அளவிற்கு வெண்ணிலாவிற்கு மான்யாவை பிடிக்குமா என்று அவரிடம் கேட்டால் அதற்கான பதில் அவருக்கு தெரியாது என்று தான் கூறுவார்.
வெண்ணிலா ப்ராடிகல் வாழ்க்கையை வாழ நினைப்பவர். படிப்பு அறிவு இல்லாத போதும் சில விசயங்களில் தெளிவாக யோசிக்கும் திறன் உடையவர். மான்யாவை சித்தி கொடுமை செய்து நமக்கு என்ன கிடைக்க போகிறது. அதற்கு பதிலாக அவளிடம் சாதாரணமாக நடந்து கொண்டாள் நமக்கு நல்லது நடக்கும் என்று எண்ணியே அவர் மான்யாவை சாதாரணமாக பார்த்துக் கொண்டார்.
அவர் சாதாரணமாக மான்யாவை திட்ட செய்தாலும் அதனை மிகப்பெரிய சித்தி கொடுமையாக பார்க்கும் இந்த உலகம். அதே போல மான்யாவிற்கு அவர் செய்யும் சிறிய விசயத்தை கண்டு அவரை பாரட்ட செய்தனர்.
வெண்ணிலாவின் நினைப்பு எல்லாம் ஒன்று தான். தனது வாழ்வுக்கும் தனது பிள்ளையான கார்த்தியின் வாழ்வுக்கும் மான்யா எந்தவித பிரச்சனையும் செய்யாத வரை அவரும் மான்யாவிற்கு எந்தவித பிரச்சனையும் செய்ய மாட்டார்.
அந்த கண்டீஷனால் இத்தனை வருடமும் வெண்ணிலாவின் கொடுமையை பார்க்காது தப்பித்து வாழ்ந்து வந்தாள் மான்யா. ஆனால் இன்று மான்யா எடுத்த ஒரு முடிவால் வெண்ணிலா சிவப்பு கொம்பு வைத்த ராட்சசியாக உருமாறி இருந்தார்.
வெண்ணிலா வளர்ப்பில் மான்யா நல்ல தைரியமான குணமுள்ள பெண்ணாக வளர்ந்து இருக்க அவளது தம்பி கார்த்தியோ அவளுக்கு அப்படியே ஆப்போசிட்டாக வளர்ந்து இருந்தான்.
மான்யா கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு ஐடி கம்பனியில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தாள். வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்களில் பணி உயர்வு பெற்று இப்போது டீம் லீடாக இருக்கிறாள்.
அவளது தம்பி கார்த்தி கல்லூரியில் வைத்த அனைத்து அரியர்களையும் ஒவ்வொன்றாக முட்டி மோதி தட்டு தடுமாறி முடிக்கவே மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன்பின் பல பேரின் சிபாரிசில் ஒரு வேலைக்கு சென்றவன் மூன்றாவது மாதத்திலேயே தன்னுடன் வேலைப் பார்க்கும் பெண்ணை விரும்புவதாகவும் அவளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வந்து நின்றான்.
கார்த்தி காதலிக்கும் பெண்ணான ரேவதியோ பெரிய பணக்கார வீட்டு பெண். அவளை திருமணம் செய்து கொண்டால் நமது மகனின் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று எண்ணிய வெண்ணிலா கார்த்தியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட அந்த கல்யாணத்திற்கு தடையாக வந்து நின்றாள் மான்யா.
கார்த்தியை விட ஒரு வயது மூத்த பெண் மான்யா திருமணம் ஆகாது வீட்டில் இருக்கும் போது தம்பிக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியாக இருக்காது என்று எண்ணிய வெண்ணிலா மான்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.
மாப்பிள்ளை பார்த்த ஆரம்பித்த உடன் முதல் வேலையாக வெண்ணிலா செய்தது மான்யாவிடம் வந்து அதற்கு சம்மதம் வாங்கியது தான்.
உன் மனசுல கல்யாணத்தை பத்தி எதாவது ஆசை இருக்கா. இல்லை... நீ யாரையாவது விரும்புறியா. எதுவா இருந்தாலும் தயங்காம மனசுல உள்ளதை சொல்லு. உன் விருப்பப்படியே கல்யாணத்தை செஞ்சிடலாம் என வெண்ணிலா கேட்க அவரது வார்த்தையில் உண்மையில் மனம் நெகிழ்ந்து போனாள் மான்யா.
சில இடங்களில் பெற்ற தாயே பெண்ணிடம் இது போல கேட்டு திருமணம் செய்வது இல்லை. அப்படி இருக்க சித்தியாக வந்தவர் நம் மனதில் உள்ளதை கேட்டு அதன்படி நடக்க நினைப்பது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.
எனக்கு எந்த ஆசையும் இல்லை சித்தி. நீங்க எனக்கு நல்ல பையனா பார்த்து கட்டி வைப்பிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால உங்க விருப்பம் போல பாருங்க என்றாள் முழு மனதுடன்.
அவளது சம்மதம் கிடைத்தவுடன் அவளுக்கு ஏற்ற பொருத்தமான வரன்களை பார்க்க ஆரம்பித்தார் வெண்ணிலா.
எப்படியோ தள்ளி விட்டால் சரியென அவர் மாப்பிள்ளை தேடவில்லை. மான்யாவின் படிப்பிற்கும் அழகுக்கும் இந்த குடும்பத்திற்கு தகுந்தது போல ஒரு மாப்பிள்ளையை அவர்கள் தேட அப்படி வந்த வரன் தான் கார்த்திக் விரும்பும் ரேவதியின் அண்ணன் ராகுல்.
ராகுலுக்கு வயது இருபத்தி எட்டு. படித்து முடித்து தந்தையின் தொழிலை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறான். நல்ல அழகு.. நல்ல உடல்வாகு கொண்டவன். மான்யாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது அறிந்த ரேவதியின் பெற்றோர் ராகுலுக்கு மான்யாவை பேசி முடிக்கலாம். பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று முடிவு செய்து அதனைப் பற்றி வெண்ணிலாவிடம் பேசினர்.
முத்து மற்றும் மான்யாவிடம் இதனைப் பற்றி கலந்துரையாடிய வெண்ணிலா அவர்களின் சம்மதம் கேட்க இருவரும் அதற்கு சம்மதம் கூறினர்.
இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்து விட இரு குடும்பமும் அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகளை செய்ய ஆரம்பித்தனர். இரு திருமண ஜோடிகளுக்கும் ஜாதகம் பார்க்கப்பட கார்த்தி ரேவதி ஜோடிக்கு பொருத்தம் உள்ளது என்றும். மான்யா ராகுல் ஜோடிக்கு சிறு தடங்கல்கள் இருப்பதாக ஜோசியர் கூறினார்.
அதற்கு என்ன செய்வது என கேட்க இருவரும் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அந்த பரிகாரங்கள் நல்லபடியாக முடிந்தால் இவர்கள் திருமணத்தில் உள்ள தடை நீங்கும் என்றார்.
மான்யாவிற்கு இதில் பெரிய ஈடுபாடு இல்லை என்ற போதிலும் வெண்ணிலா கூறிய வார்த்தைக்காக அந்த ஜோசியர் கூறிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் சரியாக செய்து முடித்தாள். ஆனால் ராகுலுக்கு இது போன்ற விசயங்களில் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்பதால் ஏதோ கடமைக்கு என அனைத்தையும் தப்பும் தவறுமாக செய்தான்.
இந்த பரிகாரங்கள் முடிந்து அடுத்து இரு வீட்டினரும் ஒருவர் மாற்றி மற்றொருவர் பெண் பார்க்க வந்து பூ வைத்துவிட்டு சென்றனர். அதன்பின் நிச்சயத்திற்கு தேதி குறித்து நிச்சய வேலைகள் அனைத்தும் நல்ல முறையில் நடந்தது.
இன்று நிச்சயத்திற்கு வீட்டில் இருந்து மண்டபத்திற்கு கிளம்பி வந்த போது கூட மான்யா சந்தோஷமாக தான் இருந்தாள். நிச்சயம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு சில விசயங்கள் மான்யாவிற்கு தெரிய வந்தது. அதனை அறிந்து கொண்ட அடுத்த நொடியில் இந்த திருமணம் வேண்டாம் என்ற உறுதியான முடிவுக்கு வந்தாள் மான்யா.
ஆனால் அவளது இந்த முடிவால் அந்த குடும்பம் மட்டும் அல்ல. அவளது வாழ்வே மாறப்போவதை அவள் அப்போது அறியவில்லை.
தொடரும்...
மறக்காம கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ் 😍😍😍😍😍😍😍.