அத்தியாயம் -1
மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சென்னையில் எங்கோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று வீட்டில் யாருமே எதிர் பார்க்கவில்லை... இன்னும் அரை மணி நேரத்தில் அவளுக்கு திருமணம்.. அவளாலும் நடக்கப்போவதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. சில நேரங்களில் கனவோ என்று கூட நினைத்தாள்.. மும்பையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் ருத்ரன்..அவன் தான் இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு கணவனாக போகிறான். அதை நினைத்து அவளுக்கு சந்தோஷப்படுவதா பயப்படுவதா என்றே தெரியவில்லை.. ஏனென்றால் அவளுக்கு இங்கு ஏதோ புரியாத புதிர் இருப்பது போல் ஒரு உள் உணர்வு சொன்னது.. தான் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இருக்கிறோமோ இல்லையோ தன் குடும்பத்தில் இருக்கும் அப்பா, அம்மா, தம்பி தங்கை, அண்ணன் அத்தனை பேரும் இவளது திருமணத்தில் மிகப்பெரிய ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு முகத்தையும் பார்த்து சந்தோஷப்பட்டாள் சிவன்யா..தனக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதால் அவர்கள் குடும்பத்திற்கு விடிவுகாலம் வரும் என்பது அவர்களது எண்ணம்.. அவர்களின் முகத்தில் சந்தோஷத்தை கண்டு தன்னை திருப்திப்படுத்திக் கொண்டாள் சிவன்யா..சிறு வயதில் இருந்தே அவளது ஆசைகள் மிகவும் குறைவு.. வசதியே இல்லாத குடும்பத்தில் பிறந்தவளால் ஓரளவுக்கு மேல் எந்த ஆசையும் அவளால் வளர்த்துக் கொள்ள முடியவில்லை.. வளர்த்துக் கொள்ளவும் அவள் விரும்பவில்லை.. தனக்கு கிடைக்கும் உணவைக்கூட தம்பி தங்கைகளுக்கு முழுவதையும் பிரித்துக் கொடுப்பவள் சிவன்யா..அவர்களுக்கு இந்த திருமணத்தில் சந்தோஷம் என்றால் அதைவிட தனக்கு வேறென வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த திருமணத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.. திருமண நேரமும் நெருங்கியது.. ஐயர் மணவரையிலிருந்து பெண்ணை அழைத்து வாருங்கள் என்று குரல் கொடுக்க ஓடிவந்து தன் அக்கா சிவன்யாவின் கையை பிடித்துக் கொண்டாள் சிவாங்கினி பத்தாம் வகுப்பை அப்போதுதான் முடித்திருக்கிறாள்.. இப்போது அவளுக்கு கோடை விடுமுறை. தன் அக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளை மேலிருந்து வைத்த கண் வாங்காமல் சிவண்யா வை பார்த்தாள். அக்கா நீ இப்போ எப்படி இருக்க தெரியுமா ? அந்த பாகுபலில வர்ர இளவரசி அனுஷ்கா மாதிரியே இருக்க.. அவ்வளவு அழகா இருக்கே அக்கா நீ.. உன் கழுத்துலையும் உன் காதுலையும் கைலயும் போட்டு இருக்குற வைர நகைகள் அப்படி ஜொலிக்குது தெரியுமா? என்று தன் அக்காவை பார்த்து ஆனந்தத்தில் கூத்தாடினாள் சிவாங்கினி.. தன் தங்கையை ஆசையோடு பார்த்த சிவன்யா அவளை அன்பாக அணைத்து கொண்டாள் கவலைப்படாதடி... உனக்கும் கல்யாணம் ஆகும்போது மாமா கிட்ட சொல்லி இது எல்லாமே உனக்கும் போட சொல்றேன் சரியா என்று சொன்னவளை பார்த்து, போக்கா உனக்கு எப்பவும் கிண்டல் தான்.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. பெரிய படிப்பு படிச்சு பெரிய பிசினஸ் பண்ண போறேன் என்று கண்களில் கனவு மின்ன சொன்னாள்.. அதைக் கேட்டவளுக்கு பெருமையாக இருந்தது.. இந்த காலத்தில் பெண்கள் காதல் உலகத்தில் மிதக்க தன் தங்கை படிப்பு மட்டுமே கதியாக இருக்கிறாள்.. தனக்கு வேறு என்ன வேண்டும் என்று நினைத்தவள் தன் தங்கையை ஆசையுடன் கட்டிக்கொண்டாள்.
அப்போது அங்கு வந்த அபினவ், அக்காவையும் தங்கையையும் பார்த்து முறைப்படி, அக்கா அங்க உன்னை மணவரைல கூப்டுட்டிட்டு இருக்காங்க. நீ இங்க இவ கூட நின்னு வாயடிச்சுட்டு இருக்கியா? என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவளுடன் சண்டைக்கு நின்றான் சிவன்யாவின் தம்பி அபிநவ். அவனை பார்ப்பதற்கு சிவன்யாவுக்கு சற்று சிரிப்பாக கூட வந்தது.. ஏனென்றால் அவன் இப்போதுதான் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருக்கிறான்.. அந்த பருவத்திற்கே உண்டான சிறிய சிறிய அரும்பு மீசையுடன் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டியில் கம்பீரமாக நின்று கொண்டு அவள் தன்னை விரட்டுவது பார்ப்பதற்கு சிறு குழந்தை அவளை விரட்டுவது போல் இருந்தது.அருகில் இருந்த ஷிவாங்கினி, அவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தபடி,, டேய் அபினவ் ஒட்டடைக்குச்சிக்கு வேஷ்டி கட்டுன மாதிரி இருக்கடா நீ. ஜிம்முக்கு போய் கொஞ்சம் உடம்பு சரி பண்ணன்னு சொன்னா கேக்கறியா ? இப்படி மானத்தை வாங்கறியே... பார்த்துடா உன் வேஷ்டி அவுந்துட போது என்று கிண்டல் செய்தாள் சிவாங்கினி.. தன் தங்கையின் அருகில் வந்து ஓங்கி அவள் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான் அபினவ்.. வாயாடி அக்காவ பிடிச்சு வச்சுட்டு இப்படி வாய் அடிச்சிட்டு இருக்கியே..அங்க எல்லாரும் திட்டுறாங்க கூட்டிட்டு வா என்று விரட்டியபடி அவன் முன் செல்ல தன் அக்காவை அழைத்துக் கொண்டு சிவாங்கினி மணவறைக்கு வந்தாள். திருமண பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் மணவறைக்கு வந்த சிவன்யா அங்குள்ள யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மெதுவாக கால் எடுத்து மணவறைக்குள் செல்ல நினைக்க, அருகில் இருந்த அவள் தங்கை சிவாங்கினி.. அக்கா நீ இதுவரைக்கும் மாப்பிள்ளை பார்த்ததே இல்ல தானே.. இப்பவாவது கொஞ்சம் நிமிர்ந்து பாருக்கா. நாங்களே இங்க வந்து பாத்து அசந்துட்டோம்.. எவ்வளவு அழகா இருக்கார் தெரியுமா? நிமிர்ந்து பாருக்கா என்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.. ஆனால் இத்தனை பேர் முன்னிலையில் எப்படி மாப்பிள்ளையை பார்ப்பது என்று தயங்கிய சிவாங்கினி தலை நிமிராமலேயே நின்று இருக்க, அவள் அருகில் வந்த சிவன்யாவின் தாய் ருக்மணி சிவன்யாவின் காதில் அவள் பங்குக்கு கிசுகிசுத்தாள்.. மாப்பிள்ளையை இப்பவாவது பாரு சிவன்யா.. இவ்வளவு நாளும் அவங்க போட்டோவ கூட நம்மளுக்கு கொடுத்ததே இல்லை. மாப்பிள்ளை எப்படி ஜம்முனு இருக்காரு தெரியுமா? நாங்க கூட போட்டோவே குடுக்கலயே மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ ன்னு ரொம்ப பயந்தோம்.. பணத்தை மட்டும் காட்டி நம்மளை ஏமாத்திடுவாங்களோன்னு நினைச்சோம். ஆனா மாப்பிள்ளைக்கு ஒரு குறையும் இல்ல. நல்லா ஜம்முனு இருக்காரு..ஆனா என்ன முகம் மட்டும் தான் கடுவன் பூனை மாதிரி கடு கடுன்னு வெச்சுருக்காரு.. ஏதோ கல்யாண டென்ஷன் போல இருக்கு..பாரு சிவன்யா என்று தன் தாய் அவளது காதில் கிசுகிசுக்க மெல்லமாக விழிகளை மட்டும் மேலே ஏற்றி மாப்பிள்ளையை பார்த்தாள் பார்த்த வினாடி அதிர்ந்து போனாள்..இவன்... இவன்... இவனா? ஒருவேளை சைடாக பார்த்ததில் அவன் உருவம் போல் தெரிகிறதோ என்று நினைத்தவள் கண்களை இறுக மூடி மீண்டும் நன்றாக திறந்து பார்த்தாள். அக்னி குண்டத்தில் ஐயர் மந்திரம் சொல்ல ஏதோ பொருட்களை அக்னி குண்டத்தில் போட்டபடி அவளை மெல்ல திரும்பிப் பார்த்தான் அவன்... அதே முகம்.. அவனே தான்..அவன் முகம் அவளுக்கு நன்றாகவே நினைவு இருந்தது.. அவனது கண்கள் புலியின் கண்கள் போல சீற்றத்தோடு அவளை முறைத்து பார்த்தது.. விட்டால் அங்கேயே விழுங்கி விடுவான் போல முறைத்தான்.. அவனே தான்.. ஐயோ அவனே தான் என்று நினைத்தவளுக்கு கை காலெல்லாம் உதற ஆரம்பித்தது..கழுத்தில் உள்ள மாலையை இறுக பற்றிய படி உதட்டை கடித்துக் கொண்டு நின்றாள். இப்போது என்ன செய்வது ? இன்று மிரண்ட பார்வையுடன் அவனைவே பார்த்துக் கொண்டிருக்க மணவரையில் அமர்ந்திருந்த ருத்ரன் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தான்... அந்த சிரிப்பு அவள் வயிற்றில் நெருப்பு பந்தை போட்டது போல் இருந்தது.. தொண்டையில் இருந்து எச்சில் விழுங்கவே கடினமாக இருந்தது.. இப்போது என்ன செய்வது என்று சுற்றிப் பார்த்தாள்.. அவள் தாய் அருகில் இருந்தபடி அவளை மணவரைக்குள் இழுக்க அவளால் அந்த இடத்தை விட்டு நகர்வை முடியவில்லை. கால்கள் உள்ளே செல்லவே மறுத்தன.. என்ன ஆயிற்று இவளுக்கு என்று நினைத்த ருக்மணி சிவன்யா என்ன மாப்பிள்ளையை பார்த்து அப்படி பிரம்ம பிடிச்சு போய் நின்னுட்ட.. வா வா டைம் ஆச்சு பாரு.ஐயர் சத்தம் போடுறாரு என்றபடி அவளை இழுத்தாள். அவளும் தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்று எண்ணியபடி மணவறையை சுற்றிப் பார்த்தாள். அங்கு அவள் அண்ணன் மிதுன் அனைவருக்கும் ஜூஸ் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தான்.. வியர்வை வழிய அவன் வேலை செய்வதை பார்த்துவளுக்கு மனம் கசங்கி போனது.. இவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே..படித்து முடித்து இன்னும் வேலை இல்லாமல் இருக்கிறான்.. இப்போது என்ன செய்வது? இந்த திருமணத்தை நிறுத்தினால்? ஏதாவது விபரீதம் நடக்குமா? இந்த அப்பா எங்கே என்று நினைத்தபடி மீண்டும் பார்வையை சுழற்றினாள்.. அங்கு அவள் தந்தை பாலசுந்தரம் , யாரோ மாப்பிள்ளையின் சொந்தக்காரருடன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்..அவரை உற்று கவனித்தாள் சிவன்யா.தனது கடன்களை எல்லாம் அடைத்த சந்தோஷத்தில் அவர் முகம் பளீர் என்று இருந்தது..அப்படி என்றால் தன் தந்தையின் கடனை அடைத்தவன் இந்த ருத்ரனா? என்று மீண்டும் ருத்ரனை திரும்பி பார்த்தாள்.. இவன்தான் தன் அப்பாவின் நிதி நிலைமையை கவனித்து தன் காயை நகர்த்தியுள்ளான்.. கடைசியில் அவன் சொன்னதை செய்தே விட்டான் என்று நினைத்தபடி கண்கள் கலங்க நின்றவளை ருக்மணி கவனித்தாள்.. ஒருவேளை தங்களை பிரியப் போகிறோம் என்ற எண்ணத்தில் அழுகிறாளோ என்று நினைத்தவள், ஏய் சிவண்யா.. கண்ணத்தொட.. எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க பாரு... போதும் வா மாப்பிள ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காரு. முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு என்று பலமாக அவளை இழுத்தாள்.. வேறு வழியில்லாமல் மணவறைக்குள் நுழைந்தவள், அந்த ராட்சசன் அருகில் அமர்ந்தாள்.. அப்படி அமரும்போது தன் தாய் தள்ளி விட்டதில் சற்று அவன் மேல் மோதி விட்டாள்.. உடனே யாரும் பார்க்காமல் அவளை பிடித்து தூரமாக மீண்டும் தள்ளிவிட்டுட்டு சற்று ஒதுங்கி அமர்ந்தான் ருத்ரன்.. அதில் திடுக்கிட்டு போனாள் சிவன்யா.. ஆரம்பமே இப்படி இருக்கிறதே..இனி போக போக என்ன ஆகுமோ? என்று நினைத்தவளால் தன் வாழ்க்கையில் வரப் போகும் நரகத்தை அவளால் நன்றாகவே இப்போது உணர முடிந்தது.. இப்படியே எழுந்து ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள்.. ஆனால் சுற்றி தன் குடும்பத்தினரின் முகத்தை கவனித்தவளுக்கு தன் குடும்பம் நன்றாக இருக்க அவள் பலியாவதை தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்தவள் அமைதியாக தலை குனிந்து அமர்ந்தாள். ஐயர் மந்திரம் சொல்ல, ருத்திரன்.. தன் கையில் தாலியை எடுத்தான்.. அனைவரும் அட்சதை போட அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான் ருத்திரன்.. மூன்று முடிச்சு போடும் தருவாயில் சிவன்யாவின் மனம் சொல்லவே முடியாத வேதனையில் புழுங்கியது.. முடிந்தது இனி அவளது வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.. எல்லாம் அழிந்து விட்டது.. தனது சந்தோஷம் அமைதி, நிம்மதி, காதல் எல்லாம் அழிந்து விட்டது..இனி வரப்போகும் அவளது வாழ்க்கையின் நாட்கள் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை போல் தான் என்று நினைத்தவள் உதட்டை கடித்த படி தலை குனிந்து மௌனமாக அமர்ந்திருந்தாள்.. அவளது முகத்தையே கூர்ந்து கவனித்தான் ருத்ரன் . அவன் கண்கள் நெருப்பு பந்து போல் சிவந்திருந்தது..
மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்💕