ninaikkatha neramethu - 31 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 31

Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

நினைக்காத நேரமேது - 31

நினைவு-31

வாழ்வாதாரத்திற்கு படியளக்கும் எம்.டி. ஆயிற்றே... நேரிடையாக கேட்க முடியாமல் ஜாடை‌ பேசிச் சென்றான் ராகவன். தன்னைப்‌போல் தான் மற்றவரும் என்ற துரியோதனன் எண்ணம்‌ கொண்டு.

அதைக் கேட்டு கையிலிருந்த பேனா பறந்து போய் சுக்கு நூறாய்ச் சிதறியது, சத்யானந்தன் சுவற்றில் வீசியடித்த வேகத்தில். 

இரு கைகளைக் கொண்டு தலை தாங்கிக் கொண்டான். ஈசன் தலை ஏறிய கங்கையென, மங்கை தான் அவன் தலையை விட்டு இறங்க மறுக்கின்றாளே! அவனுள் சகம் ஆகிப்போன சக்தி அவள் என்று இந்த பித்தனுக்குத் தான் தெரியவில்லையே! 

வெளியேறி வந்த திவ்யாவும் தன் இருக்கையில் சென்று அமரவும் இல்லை, வேலையத் தொடரவும் முயற்சிக்கவில்லை. நந்தினியிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு‌ வெளியேற எத்தனித்தாள்.

அப்போது அவ்விடம் வந்த ராகவனோ, "என்ன திவி? வண்டியை சர்வீஸ்க்கு விட்டுட்டீங்க போல!" அவனின் இரட்டை அர்த்தக் கேள்வியில், உள்ளம் தீப்பற்ற, அவனை முறைத்துப் பார்க்க, "இல்ல... பஸ்ல வந்து இறங்கினதைப் பாத்தேன்." வார்த்தைகளை பூசி மொழுகினான்.

"யார் எங்க போறாங்க, எதுல வர்றாங்கனு பாக்குறதை விட்டுட்டு, உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க ராகவன்! அதுதான் உங்களுக்கும் நல்லது. இல்லைனா ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல... மரியாதை கெட்டுறும்." என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

திரைவிலக்கி கண்ணாடிக் கதவு வழியாக சத்யா பார்க்க, திவ்யா முறைப்பதும், ராகவனின் கேவலமான இழிப்பும் தெரிய, அவன் ஏதோ வம்பு பேசுகிறான் என்பது தெள்ளெனப் புரிய கோபம் தலைக்கேறியது.

திவ்யா வேகமாகத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்புவதும் தெரிந்தது. நந்தினி அவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுவரை ராகவன் எது பேசினாலும் முறைப்போடு சொறிநாயைப் போல் பார்த்து விட்டுச் சென்று விடுவாள். இவ்வளவு கோபம் காட்ட மாட்டாள்.

அவள்‌ வெளியேறியதும், இருக்கையில் சென்று‌ அமர்ந்தான். சற்று நேரத்தில் ஏதோ யோசனையில் எழுந்தவன், அறையின் பின் ஜன்னலின் திரை விலக்கி சாலையை வெறித்தான். எதிர்புற பேருந்து நிறுத்தத்தில் திவ்யா நிற்பது தெரிந்தது.

வண்டியை சர்வீசுக்கு விட்டிருப்பதால் இரண்டு நாட்களாக பஸ்ஸில் தான் வந்து செல்கிறாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கைகொண்டு கண்துடைத்துக் கொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது. அவளது கண்ணீரைக் கண்டவனுக்கு கோபம் மேலும் அதிகமாகியது. இந்தக் கோபம் இப்பொழுது தன் மேலேயே!

அதற்கு மேல் அவனும் அங்கு‌ இருக்கவில்லை. தனது பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பார்க்கிங்கில் இருந்து தனது காரை எடுத்துக் கொண்டு வெளியேற, பேருந்து நிறுத்தத்தில் நின்றவள், பஸ் ஏறிச் செல்வது தெரிந்தது.

அடங்காத மனப்பொருமலுடன் வீட்டிற்கு வந்தான். தோட்டத்தில் தேவானந்தன் அமர்ந்திருக்க, மாமனாருக்கு மாலைநேரத் தேநீரை எடுத்துக் கொண்டு வந்தார் மருமகள். 

காலையில் இவர்களிடம் கத்திவிட்டுச் சென்றது நினைவிற்கு வர, சற்று நிதானித்தான். தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் சத்யானந்தன். பேரனின் அருகாமையில் சிறுபிள்ளையென முகம் திருப்பிக் கொண்டார் தாத்தா. அது என்னவோ பேரனைப் பார்த்தால் மட்டும் சிறுபிள்ளையாகிப் போகிறார். 

'தனக்குப் பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் சார் தன் சுயத்தைக் காட்ட முடியும்.' அன்றொரு நாள் திவ்யா அவனிடம் சொன்னது நினைவு‌வர, தாத்தனின் செய்கை சிரிப்பூட்டியது. 

சிறுவயதில் இருந்து கடமைக்கென மட்டுமே வாழ்ந்த மனுஷன். ஓஹோவென வாழ்ந்த காலத்திலும், மனைவியை இழந்த இளவயதிலும் மகனுக்கென கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவர். வெற்றி தோல்வி என பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து மகனையும் இழந்து, பேரனுக்காக என மீண்டும் நிமிர்ந்தவர். தன்னைப் பற்றி ‌யோசிக்காமல், எப்பொழுதும் தன்னை நம்பி‌ இருப்பவர்களுக்காகவே வாழ்பவர். 

'இவருக்காக நாம‌ என்ன செஞ்சுட்டோம்?' என மனம் கேள்வி கேட்க, 'அவர் ஆசைப்படுவது என்ன? பேரனின் திருமணம். நியாயமான ஆசை தானே! அதைக்கூட நிறைவேத்தி வைக்காம அப்படி என்ன வாழ்ந்து சாதிக்கப் போறோம்!' என நினைத்தவன், தாத்தாவிற்காகவும், திவ்யாவின் நினைவிலிருந்து தப்பிக்கும் நோக்கோடும் திருமணத்திற்கு‌ சம்மதிக்க முடிவெடுத்தான்.

"அம்மா, அவரு இப்ப கோபத்துல இருக்காரு. டீ எல்லாம் குடிக்க மாட்டாரு. எனக்குக் கொடுங்க!" என கொண்டு வந்த டீயை அவன் எடுத்துக் கொண்டான்.

“டேய் இது அவருக்கு போட்டது உனக்கு வேற எடுத்திட்டு வர்றேன். அவரை காக்க வைக்காதே!” என்று மங்கையர்க்கரசி சொல்வது காதில் விழுந்தாலும் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

"சரி...‌ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லாம்னு நினைச்சேன். அவருக்கு இப்ப கேக்குற மூடு‌ இல்ல போலம்மா.‌ இன்னொரு நாளைக்கு பேசிக்கலாம்." என அலுத்துக் கொள்ள,

"டேய் தம்பி! நீ இன்னும் அந்தப் பிள்ளைய பாக்கல. அதுக்குள்ள சம்மதம் சொன்னா எப்படிடா.‌.. உனக்குப் பிடிக்க வேண்டாமா?" என மங்கையர்க்கரசி வேகமாகக் கூற, இப்பொழுது சந்தேகமாகப் பார்ப்பது மகனின் முறையாயிற்று. 

பேரனின் சம்மதத்தில் வேகமாகத் திரும்பியவர், மருமகளின் கேள்வியில் சற்று சினம்‌ கொண்டார்.

"ஏம்மா அரசி! நான் என்னமோ அவனை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கப் பாக்குறேங்கற மாதிரி பேசுற... பொண்ணு யாரா இருந்தாலும் அவனுக்குப் புடிச்சா மட்டும் தான் கல்யாணம்." என்று கறாராகக் கூற,

'எனக்கு உங்களைப் பத்தி தெரியும் மாமா... ஆனா இவனைப் பத்தி தான் உங்களுக்கு முழுசா தெரியாது. தேவையில்லாம உங்ககிட்டயும் மறைச்சு பெரிய தப்புப் பண்ணிட்டேன் மாமா.‌ உண்மை தெரியற அன்னைக்கு என்ன நடக்குமோன்னு நினைச்சாலே இப்பவே என் ஈரக்குலை நடுங்குது.' என மாமனாரை நினைத்துப் பயந்து தனியாக ஒரு ட்ராக் மனதிற்குள் ஓட்டிக் கொண்டிருந்தார் மங்கையர்க்கரசி.

சத்யாவைப் பொறுத்தவரை இந்த சம்மதம் தாத்தாவிற்காகத் தான். அதனால் பெண் யாராக இருந்தாலும் ஓகே என்ற நிலமைக்கு வந்து விட்டான்.

"ம்மா! ராமநாதன் தாத்தா பேத்தி தானம்மா... தாத்தாவுக்கு தெரிஞ்ச ஃபேமிலி. எனக்கும் சம்மதம்மா! வேணும்னா சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்கு ஒருநாள் போயி பாத்துட்டாப் போச்சு. ஏன்னா அந்த‌ பொண்ணுக்கும் நம்மளப் பிடிக்கணும்ல." கேலியாய்க் கேட்க,

"ஏன்டா! உன்னையும் ஒரு‌ பொண்ணு வேண்டாம்னு சொல்லிருமாடா?"  என்று தேவானந்தன் பெருமை பீற்றிக் கொண்டார்.

"தாத்தா, நான் ஒன்னும் உங்க அளவுக்கு ஹேன்ட்சம் இல்ல. அந்தக் காலத்துல... பாட்டி கட்டுனா இவரைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னு உங்களைக் கட்டின மாதிரி என்னைய யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க..." 

"போடா படவா!" என்று பேரனின் கிண்டலில் தாத்தாவிற்கும் சிறு வெட்கம் இந்த வயதிலும்.

தாத்தா சற்று இயல்பாகியதில், "ம்மா! பேச்சுவாக்குல இவருக்கு டீ கொடுக்க மறந்துறாதீங்க...‌ அந்தக் கோபத்துல ஏதாவது ஒரு வத்தலோ தொத்தலோ புடிச்சு என் தலையில கட்டிறப் போறாரு!" என்று கூறிச் சிரித்தவன், டீ கொண்டு வந்து கொடுக்குமாறு அன்னைக்கு பணித்துவிட்டு உள்ளே சென்றான்.

மங்கையர்க்கரசி தான் இனி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். மாமனாரிடம் பேரனின் சிறப்பான வேலையைச் சொல்லவும் அவருக்கு தைரியமில்லை. இன்றைக்கும் மாமனாருக்கு அடங்கிய மருமகளாகவே இருந்தார்.

தனது‌ அறைக்கு வந்தவன், ஆயாசமாக உடையைக்கூட மாற்றாமல் கட்டிலில் படுத்து விட்டான். தாத்தாவிற்கென யோசித்து சம்மதம் தெரிவித்தவன், தனிமையின் பிடியில் சிக்க மறுபடியும் அவள் நினைவு‌ விஸ்வரூபம் கொண்டது.

அவன் கை பற்றிய இடையின்‌ மென்மையும், அந்த‌ மையல் கலந்த விழிகளும், அவனுக்கு புதிதாகத் தோன்றவில்லை. அவளின் வாசம் அவனின் உள் அமுங்கிய நேசத்தை சற்றே உசிப்பிற்று!

எந்தப் பெண்ணிடமும் தோன்றாத மயக்கமும், உணர்வுக்குவியலும் இவளைப் பார்த்தால் மட்டும் ஏன் பேயாட்டம்‌ போடுகிறது என்பதை யோசிக்க விடாமல், மாற்றான் மனைவி என்ற மரபுவேலிக்குள் அவன் சிக்கித் தவிக்க, அந்தக் கிரகமெல்லாம் எனக்கெதற்கு என்று மோகம் அவனை முட்டித் தள்ளியது.

உறங்கும் உணர்வுகள் அவளைக் கண்டதும் உயிர் பெறும் மாயமென்ன! நீச்சம் பெற்றிருக்கும் உணர்ச்சிகள் பாவையைப் பார்த்ததும் உச்சம் பெறும் உள்ளர்த்தம் தான் என்ன?

அவனது கட்டுப்பாடுகள் எல்லாம் கன்னியவளைக் கண்டதும் கோடைகாலக் குளமாக வற்றி விடுகிறதே! ஏனென்று தெரியாத குழப்பத்துடன் தவித்தான்.

காளையவனுக்கு அவளைக் கண்டவுடன் கந்துவட்டியாக எகிறும் காதல் உணர்வுகளால், இப்படியே போனால் மீட்க முடியாத அடமானப் பொருளாக மூழ்கிப் போவோம் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

ஏற்கனவே அவளிடம் ஆயுள்கைதியாகி அடிமை சாசனம் போட்டு விட்டது நினைவில்லாமல் தன்னைத்தானே எடைப் போட்டுக் கொண்டே இருந்தான்.

காதல் என்பது பட்டாம்பூச்சி பறபறக்கும் உணர்வு மட்டுமல்ல. அது உனக்குள் நான் வந்து விட்டேன் எனக்கூறும் அறிமுகப் படலம் மட்டுமே. அக்காதலுக்கு சுவை கூட்டுவது ஊடல் என்றால், காதலர்களிடையே ஊடலுக்கு இணையான மற்றொன்று... மிகவும் நுட்பமான விஷயமும் கூட. அது தான் விரகம். சற்றே இம்மி பிசகினாலும் விரசமாகிப் போகும் உணர்வது. காதலை இனிமையான இம்சையாக்குவது.

கண்டவர்கள் மீதும் தோன்றினால் அது காமம். தனக்கான‌ இணையால் மட்டுமே தூண்டப்பட்டால் தான் அது காதல். காதலில் காமம்‌ உண்டு. காமத்தில் காதல் இல்லை. (எல்லோரும் சொன்னதுதாங்க நானும் சொல்றேன்).

முதலது உள்ளத்தேவை. இரண்டாமது உடல் தேவை. இது சாப்பிட்டவுடன் அடங்கும் பசி போல. ஆனால் காதல் என்பது… முகர‌முகர மீண்டும் முகரத் தூண்டும் பூ‌வின் நறுமணம் போல. 

ராகவன் பேசியதும் சத்யாவிற்கு நினைவு வர, தேவையில்லாமல் ஒரு பெண்ணின் உணர்ச்சியோடு விளையாடுகிறோமோ என உள்ளம் குமைந்து போனான்.

உரசிய தீக்குச்சியின்‌ நிலமையே இதுவென்றால் தீப்பற்றிய மூங்கில் காட்டின் நிலமை!? சொல்லாமலே புரிந்து போனது.

எவ்வளவோ கடினப் பட்டு மனதை அடக்க நினைத்தும், அது கட்டவிழ்ந்த கன்றுக்குட்டியாய் மீண்டும் மீண்டும் தன்னவனையே தேட, அவளுக்குத் தான் கரக்காத பசுவின்மடியாக மனம் கனமேறிப் போனது. 

தொட்டவுடன் துவண்ட தன் உணர்வுகளால், சத்யாவின் பார்வையில் தான் எப்படிப்பட்ட பெண் என்ற எண்ணமும் தோன்ற, படுக்கையில் உழன்றவள் கடைக்கண், ஆற்றாமையில் கண்ணீர் உகுக்க, எவ்வளவு நேரம் அழுதாலோ அவளுக்கே தெரியாது.

இன்று தன்னவனின் நெருக்கமும் பழைய நினைவுகளைத் தூண்டி விட, கொண்டவன் துணை‌கொண்டு தானே காமனை வென்றாக வேண்டும். 

இவ்விளையாட்டை முக்கண்ணனிடமே நிகழ்த்தி எரிந்து சாம்பலாகிப்போன நினைப்பு சிறிதும் இல்லாமல், மன்மதனோ, ரதி உடனிருக்கும் மிதப்பில் இருவரையும் காதல் வதம் செய்து கொண்டிருக்கின்றானே!

கண்கள் தன்‌ வறுமையை உணர்த்த, எழுந்தவள் குளியலறை சென்று, என்ன நேரம் என்றுகூடப் பார்க்காமல், தண்ணீரைத் திறந்தவள் ஷவரின் அடியில் நின்று கொண்டாள்.

வெகுநேரம் கழித்து சூடு தணிந்து குளிரெடுக்கவும் தான், தன் சுயம் உணர்ந்தவள், வெளியே வந்து உடைமாற்றிக் கொண்டு, தனது அன்னையின் மடிதேடி பவளமல்லி திட்டிற்கு வந்து விட்டாள். 

இவளின் நிலை கண்டு லட்சுமிக்கு மனம் ஆறவில்லை. இனித் தாமதம் செய்வதும் சரியில்லை. என்ன செய்து இவளை கரையேற்றுவது எனவும் புரியாமல், விடிந்ததும் தன் கணவனிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தார். 

***