ninaikkatha neramethu - 20 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 20

Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

நினைக்காத நேரமேது - 20

நினைவு-20

காருண்யா பல்நோக்கு மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காத்திருப்போர் வரிசையில் சண்முகம், கண்ணன் மற்றும் திவ்யா பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே டாக்டர் நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது.

‘அவர் என்ன கூறப் போகிறார்?’ என்ற பதற்றம் சண்முகம் முகத்தை விட, மற்ற இருவர் முகத்திலும் அதிகமாகத் தெரிந்தது. 

ஏற்கனவே அவரை சந்தித்து, அவரது பரிந்துரையின் பேரில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டோடு, அவரை சந்திக்க இப்பொழுது காத்திருக்கின்றனர்.

"கண்ணன்!" மணியடித்து பெயர் அழைத்தவுடன் மூவரும் உள்ளே சென்றனர்.

டாக்டர் நாராயணன்... அறுபதுகளைக் கடந்த படிப்பும் அனுபவமும் கற்றுத் தந்த, நிதானம் நிறைந்த முகம். அறைக்குள் வந்தவர்களை ஆழ்ந்து பார்த்தார்.

மூவருக்கும் இருக்கையைக் காட்டியவர், ரிப்போர்ட்டை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார். சில நிமிட பார்வையிடலுக்கு பிறகு நிமிர்ந்தவர், 

"இன்னும் கண்ணனோட குடும்ப விபரம் எதுவும் தெரியலையா சண்முகம்?" அவனின் முந்தைய விபத்து விபரம் தெரிந்தவராகக் கேட்க,

"இன்னும்‌ எதுவும் தெரியல டாக்டர்! ஏன் எதுவும் பிரச்சினையா? ரிப்போர்ட்ல‌ என்ன இருக்கு டாக்டர்?" சண்முகம் சற்று பெரிதான பதற்றத்துடன் கேட்க, திவ்யாவின் நிலைமையோ அதற்கு மேலாக இருந்தது. ஏதாவது விபரீதமாக இருக்குமோ என்ற பயம் நிமிடத்திற்கு நிமிடம் கொத்தித் தின்பது அவளுக்குத் தானே தெரியும். 

"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா... சின்னதா ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருக்கும். பிரைன்ல சின்னதா ஒரு ப்ளட் க்ளாட் இருக்கு. சீக்கிரம் பண்ணிட்டா நல்லது." எனக்கூற,

"சர்ஜரி பண்ணிட்டா பழைய ஞாபகம் வந்திருமா டாக்டர்?" என திவ்யா ஆர்வமுடன் கேட்க,

"சான்சஸ் இருக்குமா! ஆனா அது சர்ஜரி பண்ணினாத் தான் தெரியும். மூளைங்கறது ரொம்ப சென்சிடிவ் பார்ட்மா! மருத்துவ உலகத்துல இன்னுமே நிறைய விஷயங்கள் விடை தெரியவே தெரியாத மர்மங்கள். அதுல மூளை சம்பந்தபட்டதும் ஒன்னு," என்று அவர் கூற,

"புரியுது டாக்டர்!" என்றாள்.

இவ்வளவுக்கும் கண்ணன் அமைதியாகவே இருந்தான். 

"அம்னீஷியாவுக்கு தெரபி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம். அது கொஞ்சம் பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க யூஸாகும். அதுக்கு சைக்யாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணனும்.” என்று மேலும் அவர் கூற, மேலும் பல விபரங்களை கலந்தாலோசித்து விட்டு மூவரும் வெளியே வந்தனர்.

அங்கேயே உள்ள மருந்தகத்தில் அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டனர். அதுவே ஆயிரத்தைத் தாண்டியது. மருத்துவர் கட்டணம், ஸ்கேனிங் மற்றும் மருந்து செலவு என்று கணிசமானதொரு தொகை செலவழிந்து இருந்தது.

கண்ணனுக்கு அதுவே உறுத்தலாக இருந்தது. திவ்யா பெற்றோரை இழந்து, அவர்களது சேமிப்பே அவளுக்கு ஆதாரம். சண்முகமும் அத்தனை பிள்ளைகளின் பொறுப்போடு, கொசுறாக சொத்துவழக்கு செலவையும் தாங்கிக் கொண்டிருக்கிறார். இதில் தானும் அவர்களுக்கு சுமையாக இருப்பதாக எண்ணினான். 

அவனது தெளிவற்ற முகத்தைப் பார்த்தவள், "என்ன கண்ணன் யோசனை பலமாயிருக்கு?" எனக் கேட்க, தன் மனதில் உண்டான குற்ற உணர்வுகளை தயங்காமல் கூறி முடித்தான்.

"அட! இதுதான் உங்க கவலையா? இப்ப உங்களை ஒவ்வொரு டாக்டரா கூட்டிட்டுப் போறது எதுக்குனு நினைச்சிங்க?"

"எதுக்கு… எனக்கு, நான் யார்னு தெரியணும்னு தானே?"

"அது மட்டுமில்ல கண்ணன்... அப்ப தானே உங்க சொந்தகாரங்களையும் கண்டுபிடிச்சு, உங்களுக்கு செலவு பண்ணின காசெல்லாம் வட்டியோடு வசூல் பண்ண முடியும். அதுவும் மீட்டர் வட்டியோட வசூல் பண்ணிடுவோமாக்கும். நோட்டு போட்டு எழுதி வச்சுட்டு வர்றோம். நயாபைசா விடாம வசூல் பண்ணிருவோமாக்கும்." என்று கூற, அதைக் கேட்டு சண்முகம் சிரித்து விட்டார்.

"என்னம்மா இப்படி சொல்ற?"

"அப்புறம் என்ன அங்கிள்? இவரைக் காணாம யார் யார் வருத்தத்துல இருக்காங்களோ? இவங்க என்னடான்னா காசு கணக்கு பாக்குறாங்க!" என்று கூற அதைக் கேட்டவனோ,

"யாரெல்லாம் என்னை காணாம தவிக்கறாங்கனு தெரிஞ்சுக்கறதுல ரொம்ப ஆர்வமாக இருக்கிற மாதிரி தெரியுதே!" என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான், அவளது எண்ண ஓட்டத்தை அளவிட்டுக் கொண்டே.

அவளுக்கும் அதுதான் மனதில் உறுத்திக் கொண்டிருப்பதும். அவளுக்கு அடுத்தவர் உடைமை மேல் ஆர்வம் வைப்பதாக ஒரு எண்ணம். அவன் மீது வரும் ஈடுபாட்டை விலக்கவும் முடியாமல், விலகவும் முடியாமல், இருதலைக்கொல்லி எறும்பாக அவளது நிலைமை.

அதே எண்ணத்தோடு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். லட்சுமியிடம் மருத்துவமனை சென்று வந்த விபரத்தை கூறிக் கொண்டே சாப்பாட்டு வேலையை முடித்தனர்.

சாப்பிட்டு முடிக்க, அவனது மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.

"என்னம்மா… இவ்வளவு மாத்திரையா?" என‌ லட்சுமி‌ கேட்க, 

"ஆமா ஆன்ட்டி! ஆப்ரேஷன் செய்ற வரைக்கும் சாப்பிடணும்னு டாக்டர் சொன்னார்."

"வயிறு என்னத்துக்கும்மா ஆகுறது? புண்ணாகாது!"

"ஓ! அதுதான் சாப்பிட்டவுடனே வயிறு வலிக்குதா?" என்றான். ஏற்கனவே உட்கொண்ட மாத்திரைகளின் விளைவாக வயிறு புண்ணாகி இருந்தது.

இதைக் கேட்டவள், "இதை ஏன் முதல்லயே சொல்லல? காரம் கம்மியா சமைச்சிருக்கலாமே!" என்று கேட்க,

"அதனால் தான் சொல்லலை... ஒருத்தனுக்காக எல்லோரும்‌ ஏன் உப்புசப்பு இல்லாம சாப்பிடணும்."

"ஏன் எல்லோரும் சாப்பிடப் போறோம்? உங்களுக்கு மட்டும் தனியா செஞ்சுட்டா போச்சு." சட்டென்று இலகுவாய் கூறியவள்,

"ஆன்ட்டி நீங்க எப்படி சமைக்கறதுனு சொல்லுங்க. உள்கிட்சன்ல இவருக்கு மட்டும் கொஞ்சமா செஞ்சுக்கலாம்." என்று லட்சுமியிடம் கேட்க,

"அதெல்லாம் ‌ஒன்னும் வேண்டாம்." அவசரமாய் மறுத்தான் கண்ணன்.                           

"இவங்க இப்படித்தான் சொல்லுவாங்க ஆன்ட்டி... நீங்க சொல்லுங்க!" என்று அடமாய் நின்று கேட்டுக் கொண்டவள், அவனுக்காக எளிமையாக, காரமில்லா உணவுகளையும், வயிற்றுப்புண்ணுக்கான கீரை வகைகளையும் கேட்டு சிறுகச்சிறுக சமைக்க ஆரம்பித்தாள்.

"எப்படி இருக்கு என் சமையல்?" புருவம் உயர்த்தி அவள் கேட்க,

"அதுதான் நான் வான்டடா வந்து சிக்கின எலியாச்சே திவ்யா... இதுல‌ ஒரு விஷயம் கவனிச்சியா? உப்பில்லை, உரப்பில்லைனு சொல்லவே முடியாது. எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாரேன்?" என்று அப்பாவியாய் கேட்க, திவ்யா சிரித்து விட்டாள்.

“நல்லா பேசுறீங்க கண்ணன்...” என்று மகிழ்ந்தாள்.

எனினும் அதில் தெரிந்த அவளது அக்கறையில் பத்தியச் சாப்பாடும் அவனுக்கு நாவின் ருசியாக இல்லாமல் வேறு வகையாக ருசித்தது. இது நிரந்தரமாக வேண்டுமென மனதும் ஏங்கியது. ஏனெனில் இங்கு அவள்‌ சமையலின் ருசி வயிற்றுக்கு வஞ்சனை செய்து விட்டு நெஞ்சத்தை நிறைத்தது தான் காலத்தின் அழகிய விளையாட்டு.

 **********

கடையில் வேலையாக இருந்த சண்முகத்தின் அலைபேசி அழைக்க, எடுத்துப் பேசியவர், உடனே‌ கண்ணனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அழுத முகமாக இருந்த லட்சுமி சண்முகத்தைக் கட்டிக்கொள்ள, சண்முகமும் அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார்.

எத்தனை வயதானாலும் தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றல்லவா? ஏற்கனவே படுக்கையில் கிடந்த, லட்சுமியின் தாயாருக்கு, மகளின் கவலையும் சேர்ந்து கொள்ள நிம்மதியைத் தேடி, மரணத்தை துணைக்கு அழைத்துக் கொண்டார்.

விபரம் அறிந்த கண்ணனும், அங்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தான். டாக்ஸி வரவழைத்தவன் தானும் வருவதாகக் கூற,

"வேண்டாம் கண்ணா! அங்க என் அண்ணன் பிள்ளைக தேவையில்லாம ஏதாவது பேசுவாங்க. பிரச்சினை வேண்டாம். அப்புறம் பிள்ளைகளும் ஸ்கூல்ல இருந்து வந்துருவாங்க. பாக்க ஆளு வேணும்." என்று கூறியவர்கள் பொறுப்பை கண்ணணனிடமும் திவ்யாவிடமும் ஒப்படைத்து விட்டு அவசரமாய் கிளம்பிச் சென்றனர்.

"எப்படிப்பா… எல்லா பிள்ளைகளையும் சமாளிச்சிருவிங்களா?" என்று லட்சுமி சந்தேகமாகக் கேட்க,

"அதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்மா! நீங்க கவலைப்படாம கிளம்புங்க." என்று கூறினான்.

லட்சுமி தான் அவர்கள் வீட்டின் ஒரே பெண்வாரிசு. மச்சான் முறையெல்லாம் சண்முகம்தான் செய்ய வேண்டியிருக்கும். அதனால் திரும்பி வர எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும் எனக் கூறிச் சென்றனர்.

பள்ளி விட்டு வீடு திரும்பிய பிள்ளைகள் தத்தமது வேலைகளைப் பார்க்க, லட்சுமியைத் தேடிய சிறு பிள்ளைகளை திவ்யா கவனித்துக் கொண்டாள். விபரம் தெளிந்த பெரிய பிள்ளைகள் சூழ்நிலை புரிந்து சமத்தாக நடந்து கொண்டனர்.

இரவு சாப்பாடு முடித்து விட்டு கண்ணன் பிள்ளைகளை ஒன்று கூட்டினான். 

"குட்டீஸ்! சின்னதா ஒரு கேம் விளையாடுவோமா?” என்று உற்சாகத்துடன் கேட்க, குழந்தைகளும் அதே உற்சாகத்துடன் சரி என்றனர்.

“நாம இப்ப மூனு டீமா பிரியப் போறோம். ஒவ்வொரு டீமுக்கும் ஒரு லீடர். எந்த டீம் அவங்கவங்க வேலைய ஒழுங்கா செய்றாங்களோ... அவங்களுக்கு சன்டே அன்னிக்கி ஒரு பரிசு இருக்கு." என்று கூற,

"ஹேய் ஜாலி…!” என்று பிள்ளைகள் குதூகலமாயினர். வயதில் பெரிய பிள்ளைகள் மூவரைக் தேர்ந்தெடுத்தவன், ஒவ்வொருத்தரின் பொறுப்பில் நான்கு பிள்ளைகள் எனப் பிரித்து விட்டான். அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான். இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள் திவ்யா.

பிள்ளைகளை படுக்கைக்கு அனுப்பியவன்… அவள்புறம் திரும்பி, "என்ன கேட்க நினைச்சியோ இப்ப கேளு!" என்று கூறினான். இத்தனை நேரம் அவளது யோசனையான முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் எண்ணத்தின் போக்கும் சற்றே பிடிபட்டிருந்தது.

"இல்ல… கேம்னு சொன்னிங்க... இதுல கேம் எங்கேயிருக்கு?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

"ஏன் திவ்யா? பிள்ளைகளே ஒத்துகிட்டு போயிட்டாங்கள்ல... அவங்களப் பொறுத்த வரைக்கும் சேந்து எது செஞ்சாலும் விளையாட்டு தான்." என்று அழகாய் விளக்கம் கொடுத்தான்

"அதெப்படி வின் பண்ற ஒரு டீம்க்கு பரிசுனா பிள்ளைக மத்தியில போட்டியும், அதைத் தொடர்ந்து பொறாமையும் வராதா?"

"ஒரு டீம்க்கு மட்டும் பரிசு கொடுத்தா தானே அந்த பிரச்சினை வரும்." என்றவனை அவள் புரியாமல் பார்க்க,

"இப்ப நமக்கு தேவை பிள்ளைங்க எல்லாரும் சமத்தா அவங்கவங்க வேலையப் பாக்குறதது தானே?"

"ஆமா!"

"இந்த டிவி ஷோ எல்லாம் பாத்திருக்கியா?"

"எதுக்கு? இப்பவே எனக்கு பிபி ஷுகர் எல்லாம் வர்றதுக்கா? அதெல்லாம் நான் பாக்கறதில்லை."

"நான் சீரியல்ஸ் சொல்லல. அவார்டு ஃபங்ஷன் பாத்திருக்கியா? அவங்க சேனல்ல போடுற நிகழ்ச்சிகளுக்கு அவங்களே அவார்டு கொடுப்பாங்களே! அதுமாதிரிதான் இதுவும்." என்று கண்ணன் சொன்னது திவ்யாவிற்கு சுத்தமாய் விளங்கவில்லை.

அவள் புரியாமல் பார்க்க, "அதாவது ஏதாவதொரு கேட்டகிரில எல்லா நிகழ்ச்சிகளுக்குமே, ஏதாவது ஒரு அவார்டு கொடுத்திருவாங்க... அது மாதிரி ஒவ்வொரு க்ரூப்க்கும் ஏதாவது ஒரு ப்ரைஸ் போற மாதிரி கொடுத்துட்டாப் போச்சு!" என்று விளக்கம் கொடுக்கவும்,

"சூப்பர் கண்ணன்! பிள்ளைகளும் ஏமாற மாட்டாங்க. வேலையும் ஒழுங்கா நடக்கும்." அவள் பாராட்டைப் தெரிவிக்க,

"பாராட்டோட எனக்கும் ஏதாவது பரிசு கொடுத்தா நல்லாயிருக்கும்." குறும்புக் கண்ணனாய் கேட்டு ஓரப் பார்வை பார்த்தான்.

"ம்ம்… இன்னைக்கு ஸ்பெஷல் கீரை சூப் செஞ்சு வச்சிருக்கேன். வந்து குடிங்க!" என்று சீண்டலுடன் திவ்யா கூற,

"நான் உண்ணாவிரதம்." என்றான் முகம்‌ சுழித்து.

"அதை சாப்பிட்டு முடிச்சு ஒன்பது மணிக்கு சொல்லக்கூடாது கண்ணன்."

"நான் நாளையில இருந்து சொன்னேன்."

"அதை நாளைக்கு பாக்கலாம். இப்ப போயி சமத்துப் பிள்ளையா படுங்க!" என்று உத்தரவாகக் கூறிவிட்டு நகன்றாள்.

***