ninaikkatha neramethu - 8 in Tamil Love Stories by EKAA SREE books and stories PDF | நினைக்காத நேரமேது - 8

Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

நினைக்காத நேரமேது - 8

நினைவு-8

கணவனும் மனைவியும் செய்வதறியாது நின்றது ஒரு நிமிடம்தான். பின்னர் லட்சுமி ஜாடையாக, ‘பேசிப் புரிய வைங்க’ என்று கோடிட்டுக் காட்டவும் தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் சண்முகம்.

“கோபப்படாதே திவிம்மா!”

“இது கோபம் இல்லை அங்கிள், என்னோட அதிர்ஷ்டம். அவங்க சுயநலம் இத்தனை சீக்கிரமா வெளிவந்ததுல நான்தான் தப்பிச்சேன்.” என்று பெருமூச்செறிந்தாள் திவ்யா.

"சரி, அவங்கள விடு... உன் மேல அவங்களுக்கு அக்கறை இல்ல. எங்களுக்கு இருக்கா, இல்லையா!?"

"இல்லைன்னு சொல்லுவேனா?"

"அப்படினா, எப்பப் போய் நாங்க பேசட்டும்?" சண்முகம் கேட்க

"ஏன் அங்கிள்? இப்ப நான் போனா அவங்க அம்மா என்னைய ஏத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?"

"அவங்க அம்மா உன்னைய ஏத்துக்கறதாம்மா பிரச்சனை?"

"கண்ணா மேல சந்தேகமா அங்கிள்?"

"கண்டிப்பா கண்ணா மேல இல்லம்மா... சந்தேகம் எல்லாம் சத்யானந்தன் மேல தான். ஆனா எடுத்து சொன்னோம்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார் திவிம்மா!"

"நானும் அதையே தான் அங்கிள் சொல்றேன். எடுத்துச் சொல்லி கடமைக்காக வாழ்ற வாழ்க்கை வேணாம். காதலோடு வாழுற வாழ்க்கை தான் வேணும். நான் அவர் மீது கொண்ட காதலை விட, அவர் என் மீது கொண்ட காதல் அதிகம். அதே காதல் இப்பவும் வேணும்னு மனசும் பேராசைப்படுது." என்று லேசாகக் குரல் கமற திவ்யா கூறக் கேட்ட லட்சுமிக்கும் லேசாகக் கண்கள் கலங்கியது.

"சரிம்மா! இப்ப என்ன பண்ணலாம்... இப்படியே கனவுலயே வாழ்ந்தரலாம்னு இருக்கியா? குழந்தை குட்டினு வாழ வேண்டாமா?" லட்சுமியின் கேள்வியில் நியாயம் இருக்கவே செய்தது.

"கண்டிப்பா ஆன்ட்டி! அவர் பக்கமும் கண்ணா ஒரே பிள்ளை. நானும் இங்கே ஒரே பிள்ளை. அதனால நாங்களாவது குறைஞ்சது நாலஞ்சாவது பெத்துக்கணும் ஆன்ட்டி. ஒத்தப் பிள்ளையான என் அலும்பே தாங்க முடியாம, எங்க அம்மா கரண்டியும்‌, கையுமாக அலைவாங்க...

நானும் அது மாதிரி கரண்டியத் தூக்கிட்டு எம் பிள்ளைங்க பின்னாடியே சுத்தணும். அவரும் எங்க அப்பா மாதிரி பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு எங்கூட சண்ட போடணும்." என்று கண்களில் கனவு மின்னக் கைகளை ஆட்டிப் பேசியவளைப் பார்த்து,

"எங்கண்ணு! நீ நினைச்சது எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும் கண்ணு." என்று நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார் லட்சுமி.

"இன்னொரு விஷயம் அங்கிள்!"

"என்னம்மா?"

"'நாதன் அன்ட் கம்பெனிய வாங்கி இருக்கறது யாரு தெரியுமா?"

"யாரும்மா!?"

"ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் தான் அங்கிள். இன்னைக்கி ரெஸ்டாரன்ட்ல அவங்க தாத்தாவத் தான் மீட் பண்ணினோம்"

"இவ்ளோ நாளா உனக்குத் தெரியலயா திவ்யா!?" ஆச்சரியத்துடன் லட்சுமி கேட்க,

"இல்ல ஆன்ட்டி! ஃப்ரெண்டு, ஃப்ரெண்டுனு சொன்னாரே ஒழிய, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ்னு சொல்லலயே ஆன்ட்டி." என்று பாவமாய்‌ முகம் வைத்து சொன்னவளைப் பார்த்து சண்முகம் சிரித்து விட்டார்.

"இப்ப என்னம்மா பண்ணப் போற!?"

"தெரியல அங்கிள்! சில சமயங்கள்ல அடுத்து என்ன செய்றதுனு தெரியாதப்ப, அந்தப் பிரச்சினையை விட்டு வெளிய வந்துறணும். என்ன நடக்குதுனு கையக் கட்டி வேடிக்கை மட்டும் பாக்கணும். தீர்வைப் பிரச்சினை கையிலேயே விட்டுறணும். அப்பா அடிக்கடி இதைத்தான் சொல்லுவாரு அங்கிள்."

"ஆனா, நாங்க அப்படி விட முடியாது திவிம்மா! சாயங்காலம் நம்ம குட்டியம்மா கேட்ட மாதிரி கேஸ் ஒரு முடிவுக்கு வந்துட்டா, நாங்க எங்க வீட்டுக்குக் கிளம்ப வேண்டியிருக்கும். அதுக்குள்ள உன்ன, உன் கண்ணாகிட்ட‌ சேத்துரணும்."

"கேஸ் எந்த அளவுல இருக்கு அங்கிள்?'

"கோர்ட்டு, கேஸுனு அலஞ்சா வேலைக்காகாது. யாராவது முக்கியஸ்தர்கள வச்சுப் பேசிப் பாக்கலாம்னு இருக்கேம்மா!"

"கட்டப் பஞ்சாயத்து மாதிரியா அங்கிள்?"

"ஆமாம்மா! நானும் மரியாதையா முடிச்சுக்கலாம்னு பாத்தேன். ஆனா இவங்களுக்கு அது சரிப்பட்டு வராது."

வழக்கு பற்றிய பேச்சு வரவும் லட்சுமியின்‌ முகம் வாடுவதைப் பார்த்த சண்முகம், பேச்சை மாற்ற எண்ணினார்.

"லட்சுமி! நாளைக்கு ஆஃபிஸ் போகும் போது திவ்யாவுக்கு, பெட்ஷீட்டும் ஒரு தலகாணியும் கொடுத்து விட்டுரு!"

"எதுக்குங்க?" புரியாமல் லட்சுமி வினவ,

"அடுத்த கம்பெனிக்கே நேரங்காலம் பாக்காம இந்தப்பிள்ள ஓடும். இனிமே அம்மணி கம்பெனியே கதின்னுல கிடப்பாங்க!" என்று சண்முகம் கேலி பேசினார்.

"போங்க அங்கிள்!" என்று சிறு வெட்கத்தோடு அவள் தலையாட்டி சொன்னது, பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது இருவருக்கும்.

"சரிம்மா! ரொம்ப‌ லேட்டாயிருச்சு. போய்த் தூங்குமா!'

"ஓ.கே அங்கிள்!" என்று இருவருக்கும் பொதுவாக, 'குட்நைட்' சொல்லியவள் தன் அறை நோக்கிச் சென்றாள்.

அவர்களும் மாடிக்கு தங்களின் அறைக்குச் சென்றனர்.

உரிமைப் பட்டவளை அறியா நிலையில் உடமைப் பட்டவனின் மனம் இருக்க, தன்னவனின் ஆழ்மனக் காதலை வெளிக் கொணரும் வழி அறியாமல் உரிமைப் பட்டவளின் மனம். விதி வலியது என்பதும் இதைத்தானோ!

***

முதல்நாள் இரவு சண்முகம், லட்சுமியிடம் கூறித் தன்னைக் கேலி ‌பேசியது நினைவுக்கு வர, புன்னகையுடனே, அலுவலக லிஃப்டிற்குள் நுழைந்தாள் திவ்யா.

அலுவலகம் வந்தவளுக்கு ஒரு இனம்புரியாத சொந்தம் மனதில் தோன்றத்தான் செய்தது.

"ஹலோ மேடம், என்ன உங்க முகம் நகைக்கடை விளம்பரம் மாதிரி ஜொலிக்குது?"

தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளைப் பார்த்து நந்தினி கேட்ட கேள்வியில், நினைவுக்கு வந்தவள்,

"ஹாய் நந்தினி! குட்மார்னிங்!" என்றாள் திவ்யா.

"குட்மார்னிங் திவி... ஆனா, நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல!"

"என்ன கேள்வி கேட்ட?"

"நான் கேட்டதே காதுல விழுகலையா? அப்படி எந்தக் கனவு லோகத்துல இருந்த நீ? ஆமா... நேத்து ஏன் நீ ஆஃபிஸ்க்கு வரல?" என அடுத்த கேள்விக்குத் தாவினாள்.

'அப்பாடா… மொதக் கேட்டத மறந்துட்டா... என்ன சொல்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு,

அடுத்த கேள்வியைக் கேட்க, தப்பித்தோம் என்ற உணர்வு திவ்யாவுக்கு வந்தது.

"என்னை மிஸ் பண்ணுனியா நந்தினி?" பாவமாய் கேட்க,

"என்னைய விட இங்கு வேறொரு ஆள் உன்னைய மிஸ் பண்ணுனாங்க!"

இதைக் கேட்டவளின் மனதில், உள்ளே நுழையும் பொழுது இருந்த இதம் மறைய, நெஞ்சம் முழுதும் எரிச்சல் மண்டியது.

அதை வெளிக்காட்டும் எண்ணமின்றி, "நேத்து நம்ம புது எம்.டி-ய மீட் பண்ண, நம்ம நாதன் சாரும், நானும் ரெஸ்டாரண்ட்டுக்குப் போயிருந்தோம் நந்தினி."

"அப்படியா! யாருப்பா அது?" தனது அடுத்த எம்.டி-யைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நந்தினி வினவ,

"ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ் தான் நந்தினி!”

"வாவ்! சூப்பர் திவி... போன‌ வாரம் கூட அவரப் பத்தி பிஸினஸ் மேகஸின்ல எழுதியிருந்தாங்க தானே?"

"ஆமா... ஆனா, நமக்கு இங்க எம்.டி-யா வரப்போறது அவரோட தாத்தா தேவானந்தன் சார்."

‘வட போச்சே’ பாவனையில் இருந்த நந்தினியின் முகம் பார்த்த திவ்யாவிற்கும் சிரிப்பு வந்து விட்டது.

"குட்மார்னிங் திவி!" குரல் கேட்டு நிமிர்ந்தவள்,

பதிலுக்கு, "குட்மார்னிங் சர்!" என்றாள் வேண்டாவெறுப்பாக...

"உங்களுக்கு எத்தன தடவ சொல்றது திவி... என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க... இந்த சர், மோர் எல்லாம் வேண்டாம்னு."

"நானும் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லிட்டேன் சர்… என்னை முழுப்பேர் சொல்லிக் கூப்பிடுங்கனு… நீங்க கேக்கறீங்களா?" என்றாள் நிதானமாகவே.

வம்படியாக இவளோடு பேச்சை வளர்க்கும் இவன் ராகவன். இந்தக் கம்பெனியில் சூப்பர்வைசர். ஆனால், மேற்பார்வை என்னவோ, எப்பொழுதும் பெண்களின் மீது தான். ஓநாய்ப் பார்வை.

இந்த மாதிரி மனித ஜந்துக்கள் எல்லா இடங்களிலும் ஊடுருவித்தான் இருக்கின்றன. பணியிடங்களில், சில தருணங்களில் இந்த மாதிரி ஆட்களைக் கடந்து தான் செல்ல‍ வேண்டி இருக்கிறது. 

"முழுப்பேர் சொல்லிக் கூப்பிடக் கஷ்டமா இருந்தா, மேடம்... இல்லைனா சிஸ்டர்... இந்த மாதிரி கூப்பிடுங்களேன்!" என்று நந்தினி கூற,

"உங்கள யாரும் இங்கு தீர்ப்பு சொல்லக் கூப்பிடல." என்றான் ராகவன்.

"உங்களையும் யாரும் இங்க கூப்பிட்ட மாதிரி தெரியலயே சர்." என்றாள் திவ்யா நிதானமாகவே.

"நேத்து நீங்க வரலியே... அதான் விசாரிக்கலாம்னு வந்தேன்."

"அதை நான் யார்கிட்ட சொல்லணுமோ... அவங்க கிட்ட சொல்லியாச்சு சர்." என்றாள், ‘இது உன் வேலை இல்லை’ என்பதாய்.

இதற்கு மேல்‌ இங்கு நிற்பது வீண் என்றவாறு இடத்தைக் காலி செய்தான். இருந்தும் அவன் பார்வை பெண்களை மேல் பார்வை பார்த்து விட்டுத்தான் சென்றது.

திவ்யா இங்கு வந்த சில நாட்களிலேயே ராகவனின் பார்வையில் வித்தியாசத்தைக் கண்டு கொண்டாள். மேனியில் புழு ஊறும் பார்வை அது. பெரும்பாலும் இது போன்றோரின் பார்வைக்கு எதிர்வினை புரியாமல் இருப்பதே உத்தமம் என விலகி விடுவாள். நேரிடையான பேச்சுக்களின் போதும் கூட, அவளுடைய பதில்... முகத்தில் கோபம் காட்டாமல் நிதானமாகவே இருக்கும்.

‘அதற்காக நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் உன் பார்வையை அங்கீகரிக்கின்றேன்.’ என்று அர்த்தமில்லை, 'எட்டி நில்!', என்பதாய் இருக்கும் அவளுடைய பதில். 

"பார்வையைப் பாரு, அப்படியே துச்சாதனன் பார்வை. கண்ணுல மிளகாப்பொடிய அள்ளிக் கொட்டலாம் போல இருக்கு." என்று நந்தினி பொருமிக் கோண்டிருந்தாள்.

"நீ தானே நந்தினி சொன்ன... ரசிக்கிறது தப்பு இல்லைன்னு, அந்த மாதிரி ரசிச்சுட்டுப் போக வந்திருப்பாரா இருக்கும்."

"அடிப்பாவி, நான் சொன்னதும், அவன் பாக்குறதும் ஒன்னா?"

"என்ன வித்தியாசம் சொல்லு?"

"பூ அழகா இருக்கேன்னு ரசிக்கிறது என்னோட ரசனை. அழகா இருக்கே, கசக்கி முகர்ந்து பாத்தா என்னனு பாக்கறது அவனோட பார்வை."

இது திவ்யாவிற்கும் தெரியும். நந்தினி போன்றோரின் பேச்சு நானும் ரவுடிதான் வகைப் பேச்சு. வெறும் வாய்ஜாலம்‌ மட்டும் தான். கல்மிஷம் இருக்காது. சகவயது தோழியிடம் பேசும், நத்திங் வகையறாப் பேச்சுக்கள். 

ஆனால் ராகவன் போன்றோரின் பேச்சுகளும், பார்வையும் சந்தர்ப்பம் தேடுபவை. இந்த மாதிரி ஆண்களுக்குப் பயந்து வேறு இடம் தேட‌ முடியாது. அங்கும் இதே மாதிரி இன்னொருத்தன் இருக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அதற்காக மீண்டும் பெண்கள் வீட்டிற்குள் முடங்கவும் முடியாது. ஒவ்வொரு இடமாக ஓடவும் முடியாது. முடிந்த அளவிற்கு ஒதுங்கிப் போகத் தெரியவும் வேண்டும். முடியாத பட்சத்தில் தற்காத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். 

‘நான் ஏன் ஒதுங்கிப் போக வேண்டும்?’ என்று வரிந்து கட்ட முடியாது. ஏனென்றால் இன்னும், 'நாலு பேர் நம்மளைப் பற்றி என்ன நினைப்பார்களோ?' என்ற எண்ணத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒழுக்கம் என வரும் பொழுது, இன்றளவும், 'அவன் ஆம்பிளை எப்படி வேணும்னாலும் இருப்பான்.' என்ற வாக்கியம் ஆண்களுக்கு உதவுகிறது.

இன்றளவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது பெண்களின் ஒழுக்கம் மட்டும்தான். ஆண்களுக்கு மட்டும் தான் இந்த சுதந்திரமா? நாங்களும் அப்படித்தான் என்று, இன்று பெண்களும், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பதை வேறு வகையில் காட்ட முற்படுகின்றனர்.

கட்டவிழ்த்து விட்டக் கன்றுக்குட்டி, சிறிது தூரம் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிப் பிறகு தான் ஒரு நிலைக்கு வரும். 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது மட்டுமல்ல. மேடைப்பேச்சும் சில சமயங்களில் எதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

இந்தக் கோட்பாடுகளுக்குள் சிக்கித் தவிப்பது, நடுத்தர வர்க்கம் மட்டுமே. மிகவும் கீழ் மட்டத்திலும் இல்லை. மிகவும் மேல் வர்க்கத்திலும் இல்லை. ஏனெனில் இந்த நாலுபேர் கீழ்‌மட்டத்தைக் கண்டு கொள்வதில்லை. மேல் வர்க்கத்தைக் கண்டு கொள்ளும் துணிச்சல் இல்லை.

 ***