தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுடைய முகத்தில் இருக்கும் பருக்களை நகத்தால் கீறி கொண்டிருக்கிறாளோ என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.ஐஸ்வரிய நந்தினி, அவளது முகம் முழுவதுமே பிக்மென்டேஷன் எனப்படும் சரும குறைபாடு. அதாவது சாதாரண முகப்பருவை காட்டிலும் அதிக வலியைத் தரக்கூடியது. அளவிலும் 1 சென்டிமீட்டர் இருக்கும். முகத்தில் ஆங்காங்கே என்றால் பிரச்சனை இல்லை.முகம் முழுவதுமே இப்படி ஒரு சென்டி மீட்டர் அளவு கொண்ட பெரிய பெரிய பருக்களால் நிறைந்திருக்க பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?நெற்றி, கன்னம்,நாசி, உதடை சுற்றி,ஏன் கழுத்தில் கூட சிலது இருக்கிறது. வெயிலில் சென்றாலோ வேர்க்கடலை அல்லது எண்ணெய் பதார்த்தங்களை விரும்பி உண்டாலோ இருக்கும் முகப்பரு பத்தாது என்று இன்னும் வந்து சேரும்.வலி பொருக்க முடியாமல் சிலதை அவளே நகத்தை வைத்து கீறி விடுவாள்.